பிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு

This entry is part of 29 in the series 20070823_Issue

கரு.திருவரசு“வாய்பாடு” என்றால் என்ன?

தமிழ்க்கல்வி திண்ணைப்பள்ளி முறையில் நடந்தபோது, கல்விக்கு “எண்ணும் எழுத்தும்” இரு கண்கள் எனும் முறையில் எழுத்துக்கு அரிச்சுவடி, எண்ணுக்கு எண்சுவடி என இரு சுவடிகள் கொண்டுதான் தொடங்குவர்.

எண்களுக்கான எண்சுவடியின் கணக்குக் குறியீடுதான் வாய்பாடு.
3 x 1 = 3,
3 x 2 = 6, என்று தொடருமே அதுதான் வாய்பாடு. நம் (மலேசியா) தேசிய மொழியான மலாயில் சிபிர் (Sifir) என்று சொல்லப்படுகிறதே அதுதான் வாய்பாடு.

யாப்பிலக்கணம் படிப்பதற்கு “நேர் – நிரை, தேமா – புளிமா, கருவிளம் – கூவிளம் என்பன போன்ற சில காட்டுச் சொற்களை, குறியீட்டுச் சொற்களைச் சொல்லிக் கொடுப்பர்.

“வெண்பா என்றால் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிய வேண்டும் என்பது இலக்கணம். திருக்குறளில் நாள் என்னும் வாய்பாட்டில் 174 குறட்பாக்களும், மலர் என்னும் வாய்பாட்டில் 665 குறட்பாக்களும், காசு என்னும் வாய்பாட்டில் 200 குறட்பாக்களும், பிறப்பு என்னும் வாய்பாட்டில் 291 குறட்பாக்களும் முடிந்துள்ளன” என்பார் திருக்குறள் வாழ்வு வாழ்ந்த இரா. கனகசுப்புரத்தினம்.

பொதுவாக எதற்குமே முன்மாதிரியாகப் பயன்படும் சொற்களை வாய்பாடு எனலாம். ஆங்கிலத்தில் போர்முலா (Formula) என்பது போல.

“வாய்ப்பாடு” என்றால் என்ன?

பானையின் அல்லது குடத்தின் வாயிலுள்ள விளிம்பு. பானைக்கு அழகாகவும் அதைப் பிடித்துத் தூக்குவதற்கும் பயன்படும் அந்த விளிம்புதான் வாய்ப்பாடு.

பள்ளிக்கூடத்தில் படிப்பது வாய்பாடு. பானையின் மேல் விளிம்பு வாய்ப்பாடு.

வாய்பாடு = குறியீடு
வாய்ப்பாடு = பானைவாய் விளிம்பு


thiruv36@yahoo.com

Series Navigation