வாசிப்பின் எல்லைகள்

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

சுகுமாரன்



‘புத்தகம் வாசிப்பவர்கள் அருகி விட்டார்கள்’ என்ற பொதுவான புகார் கேரள இலக்கிய வட்டங்களிலும் பதிப்புத்துறையிலும் நிலவுகிறது.புகார் ஓரளவே உண்மை என்று எண்ணுகிறேன்.

இந்தியாவில் ஆகப் பெரிய வாசக சமூகத்தைக் கொண்டிருக்கும் கேரளத்தில் இன்று கிட்டத்தட்ட ஒரு டஜன் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் நாள்முழுவதும் ஒளிபரப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.முன்பு எப்போதும் இல்லாத வகையில் பொழுதுபோக்குக்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. சராசரி மலையாளியின் வாசிப்பு நேரத்தை இவை அபகரித்து விடுவதால்
வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பது மேற்சொன்ன உண்மைக்குச் சான்று.எனினும் ஒரு புத்தகம் உடனுக்குடன் மறுபதிப்பாக வெளியிடப்படுவதும் வருடம் முழுவதும் சிறிதும் பெரிதுமான நகரங்களில் கண்காட்சிகள் நடப்பதும் வார இதழ்களும் நாளிதழ்களின் வார இறுதிப் பதிப்புகளும் கணிசமான பக்க எண்ணிக்கையில் புத்தக மதிப்புரைகள் வெளியிடுவதும் மாநிலத்தில்
அங்குமிங்குமாக அநேகமாக எல்லா நாட்களிலும் புத்தக வெளியீடு நடைபெறுவதும் இந்த உண்மையை சந்தேகிக்கச் செய்கிறது. இந்தச் சந்தேகத்தை முன்னிருத்தி நடத்திய அவதானிப்புகளில் பிடிபட்ட முதன்மையான அம்சம் – வாசிப்பின் தேவையும் இயல்பும் மாறியிருக்கின்றன என்பதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை மலையாளியின் வாசிப்பு என்பது பெரிதும் இலக்கியம் சார்ந்த படைப்புகளாக மட்டுமே இருந்திருக்கிறது. இலக்கியவாதிகளே கலாச்சாரத் தாரகைகளாக போற்றப்பட்டிருந்திருக்கின்றனர்.இன்றைய வாசகர் மத்தியில் இலக்கிய வாசிப்புக்கான பங்கு குறைந்திருக்கிறது.எழுத்தாளன் மீதான ஆராதனை குறைந்திருக்கிறது.பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலாவின் வாழ்க்கைக் கதை பெற்ற வரவேற்பு என்னை இந்தத் திசையில் யோசிக்க வைத்தது.இந்த நூல் இரண்டு வடிவங்களில் பதிப்பிக்கப் பட்டது.(வெளியீடு டி.சி. புக்ஸ்,கோட்டயம்).முதல் வடிவம் நளினி ஜமீலாவுடன் கோபிநாதன் என்ற
பத்திரிகையாளர் நடத்திய உரையாடலிலிருந்து உருவானது.அந்த வடிவிலேயே அடுத்தடுத்து இரண்டு பதிப்புகளாக வெளிவந்தது.இரண்டு பதிப்புகளில் சுமார் நான்காயிரம் பிரதிகள் விற்பனையாயின.வரவேற்புடன் கிடைத்த விமர்சனம்
நூலின் இன்னொரு பதிப்புக்குக் காரணம்.தான் சொல்லாத தகவல்களை எழுதியவர் இட்டு நிரப்பி விட்டார் என்ற நளினி ஜமீலாவின் குறையை நிவர்த்திக்க அவராலேயே எழுதப்பட்ட புதிய வடிவத்தில் புதிய பதிப்பு வெளியானது.இதுவும் அதிக அளவில் விற்பனையானது.

பாலியல் தொழிலாளியான ஒருவர் தனது அனுபவங்களைப் பட்டவர்த்தனமாகச் சொல்லுகிறார் என்பதிலுள்ள ருசிகர அம்சம் பரபரப்பான விற்பனைக்கு ஒரு காரணம்.அது மட்டுமல்ல காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கதை,கட்டுரை,கவிதை போன்ற வழக்கமான வடிவங்களிலேயே நிகழ்ந்து கொண்டிருந்த வாசிப்பு அதன் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டிருக்கிறது என்று கருதுகிறேன்.இந்த பரிமாண மாற்றமே பதிப்புத் துறையிலும் புதிய திசைகளைத் திறந்து விட்டிருக்கிறது.மேற்சொன்ன மரபான வடிவங்களல்லாத நூல்கள் அதிகம் வெளியிடப்படுவது ஓர் அம்சம்.மொழிபெயர்ப்புகள் அதிகம் வெளியாவது இன்னொரு அம்சம்.இந்தக் கூறுகள் வாசிப்பனுபவத்தில் புதிய எதிர்பார்ப்புகளையும் படைப்பெழுத்தில் மாற்றங்களையும் வற்புறுத்துகின்றன.

மலையாள இலக்கியத்தில் ஆரம்பம் முதலே மொழிபெயர்ப்புகளுக்கான தேவையும் இடமும் விரிவானதாக இருந்துள்ளது. மலையாளிகள் லோகசஞ்சாரிகளாகவே இருப்பதனால் இந்த அவசியம் நிர்ந்தரமானதாகத் தொடர்கிறது. உலக இலக்கியங்களிருந்து உடனடியாக மொழிபெயர்ப்புகள் மலையாளத்தில் இடம்பெற இந்த சஞ்சார சுபாவம் உதவிகரமானதாகவும் இருக்கிறது.ஓர்
உதாரணத்தைச் சொல்லலாம்.இஸ்மயீல் கதாரே என்ற அல்பேனிய எழுத்தாளர் 2005 ஆம் ஆண்டு மான் புக்கர் பரிசைப் பெற்றார்.அந்தப்
பரிசைப் பெற்ற முதல் எழுத்தாளரும் அவர்தான்.அதுவரை அல்பேனிய மொழியைத் தாண்டி அவர் அறிமுகம் பெற்றிருந்தது பிரெஞ்சு மொழியில் மட்டுமே. ‘நொறுங்கிய ஏப்ரல்’ (BROKEN APRIL)என்ற நாவல் மலையாளத்தில் பெயர்க்கப் பட்டு கதாரே மான் புக்கர் பரிசைப் பெற்ற அதே தினத்தில் வெளியிடப்பட்டது (வெளியீடு ரெயின்போ புக்ஸ்,செங்ஙன்னூர்).அதன் பிறகுதான்அந்த நாவலின்
ஆங்கில மொழிபெயர்ப்பே இந்தியப் புத்தகச் சந்தையில் விற்பனைக்கு வந்தது. மலையாள பதிப்புலகின் உடனடி உற்சாகத்தின் அடையாளமாக இதைக் காணலாம்.இது ஒரு தொடர்ச்சி கூட.

காப்ரியல் கார்சியா மார்க்கேசின் முக்கியமான நாவல்கள் அனைத்தும் பதிப்புரிமை பெற்று மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. வியாபார தந்திரம்தான் இது. ஆனால் இதன் மூலம் படைப்பாக்கத்தின் இயல்பும் மாறியது.மார்க்கேசின் பாதிப்பு ஒரு கட்டத்தில் மலையாள இலக்கியத்தில் அழுத்தமாக இருந்தது. மார்க்கேஸ் ஏறத்தாழ மலையாள எழுத்தாளர்களுக்கு இணையாகப்
போற்றப்பட்டார்.இன்றும் அவரது இரண்டு நாவல்களின் மலையாள மொழி பெயர்ப்புகள் – ஒரு நூற்றாண்டுத் தனிமை(One hundred years of solitude), காலாரா காலத்தில் காதல் (Love in the times of cholera) -அதிக விற்பனையாகும் நூல்களின் வரிசையில் இருந்து வருகின்றன.

மார்க்கேசுக்கு அடுத்தபடியாக இந்த வரிசையில் இடம்பெறுபவர் போர்ச்சுகீசிய எழுத்தாளர் யோசே சரமாகு.சரமாகுவுக்குக் கிடைத்த நோபல் பரிசு விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்பதை விட சொந்த மொழி மூலம் அந்நிய மொழி இலக்கியவாதியை நெருங்கும் வாய்ப்பை உருவாக்கியது என்பதே பொருத்தம். சரமாகுவின் மூன்று நாவல்கள் வெவ்வேறு பதிப்பாளர்களால் மலையாள
மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.’யேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்’ (Gospel according to Jesus Christ),’குருடு'(Blindness),கல் தெப்பம்
(Stone raft) ஆகியவை அந்த நூல்கள்.இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மறு பதிப்புச் செய்யப்படுவது விற்பனை சார்ந்து மட்டுமல்ல என்று கருதுகிறேன். புதிய ஓர் இலக்கியப் போக்கையும் மானுட அனுபவத்தையும் அறிந்து கொள்ள விரும்பும் வாசக மனப்போக்கின் அடையாளமாக இருக்கக் கூடும். 2004 ஆம் ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசு பெற்ற ஆஸ்திய எழுத்தாளர் எல்·பிரீட்
ஜெலினேக்கின் இரு நாவல்களும் – ‘தி பியானோ டீச்சர்’ (The piano teacher) ‘அற்புதம் அற்புதமான காலங்கள்’ (Wonderful,Wonderful Times)-சென்ற ஆண்டு நோபல் இலக்கியப் பரிசு பெற்றவரான ஓரான் பாமுக்கின் இரு நூல்களும் – ‘சிவப்பு என் பெயர்’ (My name is Red), ‘பனி’ (Snow)- உடனுக்குடன் மொழியாக்கம் பெற்றுள்ளன.வாசகனின் அனுபவ எல்லைகளை விரிவாக்கும் செயல்பாடாகவே இவற்றைக் கருதுகிறேன்.இந்த உற்சாகத்தைத் தமிழ்ச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கும்போது ஏற்படும் பெருமூச்சில் கொஞ்சம் ஆதங்கமும்
வருகிறது.

இலக்கியப் பரிசுகளின் பளபளப்பில்லாத பல நூல்களும் மொழியாக்கம் பெறுவது வாசிப்புலகின் பரப்பை விரிவாக்கும் செயலாகக் கருதப்படுவதுதான் சரி.அந்த நோக்கில் மலையாள வாசகனுக்கு அறிமுகமான பல எழுத்தாளர்களையும் தமிழ் வாசகன் பெயரளவில் கூடத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பில்லை என்பதைக் குறையாக உணர்கிறேன்.

அயல்மொழிகளிலிருந்து பெயர்க்கப்படும் நூல்களின் அதே எண்ணிக்கையில் பிற இந்திய மொழிகளிருந்தும் மலையாளத்துக்கு நூல்கள் மாற்றம் பெறுகின்றன. இதில் தமிழ் வறுமைக்கோட்டுக்கும் கீழே என்பது மலையாளிகளின் அறியாமையா
நம்முடைய கவனக் குறைவா என்பது விவாதிக்கப்பட வேண்டியது.கன்னட எழுத்தாளர்கள் யூ.ஆர்.அனந்த மூர்த்தி,ஸ்ரீகிருஷ்ண அலனஹள்ளி ஆகியோரின் எல்லா நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.அதேபோல வங்க எழுத்தாளர்களான பிமல் மித்ரா,ஆஷா பூர்ணாதேவி ஆகியோரது அனைத்து நூல்களும் மலையாளம் பேசுகின்றன.இதில் பிமல் மித்ராவின் நாவல்களுக்கு
சமூக,பண்பாட்டுத் தளங்களில் குறிப்பிடத்தகுந்த இடமுண்டு.சென்ற நூற்றாண்டின் எண்பதுகளில் வளர்ந்து வந்த இளந்தலைமுறையினர் பிமல் மித்ராவின் நாவல்களால் வெகுவாகக் கவரப்பட்டனர்.அந்த நாவல்களில் வெளிப்பட்ட இடது
சாரிக் கண்ணோட்டம் கணிசமான பாதிப்புகளை உருவாக்கவும் செய்தது. பிற இந்திய மொழிகள் மலையாள வாசிப்பனுபவத்தில் ஊடுருவியதன் அடையாளங்களாகவே இவற்றைக் குறிப்பிடுகிறேன்.விரிவாகப் பேசப்பட வேண்டிய அளவு இவற்றின் செல்வாக்கு இருந்தது;இன்றும் தொடர்கிறது.இந்த வீச்சுடன் தமிழ் இலக்கியம் மலையாளத்தில் ஊடுருவ முடியவில்லை என்பது வாசகனுக்கும்
பதிப்பாளர்களுக்குமே புதிராக இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள வாசகர்களைத் தவிர மலையாளத்திலேயே பொது வாசகர்களால் அதிகம் வாசிக்கப்படாத எழுத்தாளர் ஆனந்த்.ஆனந்தின் எழுத்துக்களில் மலையாளியின் வாழ்க்கை இடம் பெருவதில்லை.மாறாக இந்திய அளவிலான அனுபவங்கள் ஒரு மலையாளியின் பார்வையில் இடம் பெறுகின்றன.அவரை வாசித்துப் புரிந்துகொள்ள அடிப்படையான வரலாற்று
அறிவு அவசியமாகிறது.எனவே,அவருக்கான வாசக வரவேற்பு குறைவு.ஆனால் அவர் எழுதிய புனைகதையல்லாத இரண்டு நூல்கள் பெற்ற வரவேற்பு வியப்புக்குரியது.ஒன்று: ஜைவமனிதன்.இரண்டாவது: வேட்டக்காரும் விருந்துகாரும். மரபணுவிலிருந்து தொடங்கும் மனிதனின் வாழ்க்கை பற்றியது முதல் நூல். தீவிரவாத அமைப்புகளின் கோட்பாடுகலையும் நிலப்பாடுகளையும் வரலாற்றுப்
பின்புலத்தில் விவாதிப்பது இரண்டாவது நூல்.இந்த இரு நூல்களும் பல பதிப்புகள் வெளியாயின.தவிர ஒவ்வொரு பதிப்பிலும் ஆசிரியரால் திருத்தங்களும் சேர்க்கைகளும் செய்யப்பட்டன.ஒவ்வொரு பதிப்பும் விற்பனையில் முன்னணியில்
நின்றது ஓர் ஆச்சரியம்.இதன் காரணம் பதிப்பாளரின் சாமர்த்தியம் என்பதை விட வாசக மனப்போக்கு என்பதுதான் பொருத்தமாகப் படுகிறது.

பிற மொழிகளிலும் வாசிப்பின் எல்லைகள் இலக்கியத்தைக் கடந்து பிற துறைகளுக்கும் விரிவடைந்திருக்கிறது என்று காணலாம்.தொடர்ந்து இந்த மொழியில் வாசிப்பவன் என்ற தகுதியில் மலையாளத்தில் அதன் வீச்சை உணரமுடிகிறது.இலக்கிய
வாசிப்பு முற்றிலும் அருகிவிடவில்லை என்பது உண்மை.அதே சமயம் பரவலான வாசிப்பு முறைகளுக்கான நூல்கள் வெளியிடப்படுவதும் ஏற்றுக்கொள்ளப் படுவதும் நிகழ்கிறது.’நாட்டறிவு’ என்ற தொடரில் வெளியான நூல்களையும்
திரைப்படம் பற்றிய நூல்களையும் இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே கருதுகிறேன்.

இந்த மாற்றத்தின் காரணிகளை ஓர் ஆர்வலனாக பின்வருமாறு வகைப்படுத்த விரும்புகிறேன்.

1.கல்விப்புலம் சார்ந்து ஒரு புதிய தலைமுறை உருவாகி வந்திருப்பது.இந்தத் தலைமுறையின் தேவை முன் தலைமுறையிடமிருந்து மாறுபட்டிருப்பது.

2.நவீன தொழில்நுட்பம் அச்சியற்றும் கலையை ஜனநாயகப்படுத்தியிருப்பது.

3.வாசிப்பு என்பது வெறும் மனமகிழ்வுக்கான பழக்கமாக மட்டுமில்லாமல் ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகவும் ஏற்கப்பட்டிருப்பது.

நான் அணுக்கமாகப் பின் தொடரும் இரு மொழிகளில் ஒன்று மலையாளம் என்ற நிலையில் முன்வைக்கும் இந்த கருதுகோள்கள் தமிழ் வாசக அனுபவத்துக்கும் பொருந்தக் கூடியது.ஆனால் ஒரு சில ஆண்டுகளின் பின்னடைவு தமிழில் தென்படுகிறது என்பதுதான் இரு மொழிகளுக்குமிடையேயான வேறுபாடு.

சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்னர் க்ரியா பதிப்பகம் ஒரு நூலை வெளியிட்டது. அதுவரை இலக்கிய நூல்களாக வெளியிட்டு வந்த நிறுவனம் ‘நெல்சாகுபடி’ என்ற புத்தகத்தை வெளியிட்டபோது அதன் வாசகர்களின் இடையே பெரும் வியப்பு ஏற்பட்டது.கேலிப் பார்வையும் படர்ந்தது.வியாபார தந்திரம் என்ற விமர்சனமும் எழுந்தது.இன்று அதுபோன்ற விமர்சனத்தை முன்வைப்பவரே
கேலிக்குரியவராகக் கருதப்படும் சூழல் நிலவுகிறது.காரணம்.வாசிப்பின் எல்லைகள் மாறியிருக்கின்றன.


nsukumaran@gmail.com

18 மே 2007

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்