அழகிய சிங்கரின் கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

வெங்கட் சாமிநாதன்


தேவி காளியின் தாம்பூலத்தமிழ்து உண்டு தான் கவிதை பிறந்தது என்று யாருமின்று சொல்வதில்லை. தேமாங்காயும் புளிமாங்காயும் கூட எங்கே என்று யாரும் கேட்பதில்லை. யாப்பு படிச்சிருக்கியாய்யா என்று கூட யாரும் இப்போது அடித்துக் கேட்பதில்லை. பயமுறுத்துவதற்கே கேட்கப்பட்ட இது போன்ற கேள்விகளைக் கேட்பது கேட்பவருக் கே ஆபத்தாக முடியக் கூடும். பாட்டாளிகளின் போர் முழக்கத்திற் காக முரசு கொட்டுவதாக யாரும் சொல்வதில்லை. அவர்கள் எல்லாம் சினிமாவில் குத்தாட்டத்திற்கு பாட்டெழுதப் போய்விட்டனர். உவமைக் கவிஞரெல்லாம் ஒரு பொன்னாடை போர்த்தி மறக்கப்பட்டு விட்டனர். படிமங்கள் பெய்து எழுதுவதும் சிரமமும் பழசுமாகிப் போனது. ஆக, கவிதையை இப்படிப்பட்ட வெளித்தெரியும் சீருடைகள் கண்டு இனங்காண்பது சிரமமாகிப் போகவே, கவிஞர்கள் எந்தவித ஒதுக்கீட் டையும் மீறி பேட்டைக்குப் பத்துப் பேராக அமோக விளைச்சல் காணத் தொடங்கிவிட்டனர். இப்போது அதிகாரம், அரசியல் சார்பு, சினிமா, பத்திரிகை முதலாளித்துவம், குழுச் சார்பு எல்லாம் கவிதைக்கு அங்கீ காரம் தருவனவாக பரிணாமம் பெற்றுவிட்டன. பழங்காலம் பொற்காலம் தான். புலவர் பட்டம் பெற்று வாழ்த்துரை வழங்க வெண்பா இயற்றி கவிஞரான காலமே தேவலாமாகத் தோன்றுகிறது. இப்போதெல்லாம் பரிசில் வாழ்க்கை தலைமைக்கு மிக நெருங்கிய அடப்பைக் காரர்களுக்குத் தான் சாத்தியமாகியுள்ளது.

கவிதைப் பிரசுரம் மக்கள் நாயகப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் இப்போது அதிகம் பிரசுரம் பெறுவது அறுபது பக்கங்களுக்குள் சொந்தச் செலவில் அடங்கிப் போகும் கவிதைத் தொகுப்புகள் தாம். சீரழிந்து தான் போயிற்று காலம். நிலாவையும் காதலையும் பாடியது போய், பாட்டாளி புரட்சிக்கு கோஷம் இட்டது போக, உலகத்தைப் புரட்ட நெம்புகோலைத் தேடியது போக, ஸ்டுடியோ தூதுவன் கொடுத்து விட்டுப் போன CDயைப் போட்டு கேட்கும் ஒலித்தடத்தில் வார்த்தைகளை இட்டு நிரப்பும் வேலைக்கு வந்தாயிற்று. இருப்பினும் பாராட்டுக்களுக்கும் பொன்னாடைகளூக்கும் குறைவில்லை. இருப்பினும் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். தலைவர்களைப் பார்க்கச் செல்லும் போது அவர்களுக்குப் போர்த்த பொன்னாடைகள் தேவைப்படும்.

இவ்வளவு களேபரங்களுக்கு இடையில் கல்யாண மண்டபத்தில் செருப்பு தொலைந்தது பற்றி, தினம் அலுவலகம் செல்வது பற்றி, குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொள்வது பற்றி என தனது அன்றாட உப்பும் சப்புமற்ற அவஸ்தகளையெல்லாம் பற்றி கவிதை எழுதுகிறேன் என்று கிளம்பியுள்ள அழகிய சிங்கர் செய்வது கவிஞர் சமூகத்தையே கேலிக் கூத்தாக்குவது போலிருக்கிறது.

அதிலும் அவர் எழுதும் தோரணை இருக்கிறதே! ‘சின்ன தப்பும் பெரிய தப்பும்’ என்று ஒரு கவிதை: அது இப்படி ஆரம்பிக்கிறது:

“என் பால்ய காலத்தில் நான்
செய்த பல சின்ன சின்ன தப்புகளை
நினைத்து இப்போதெல்லாம்
வெட்கப்படுவதுண்டு…. என்று. தொடங்கியது

இப்ப சொல்லுங்கள் நான் செய்த பெரிய தப்பு
இது தான். இது தான். என்று முடிகிறது.

சின்ன வயதில் செய்த அனேகம் தப்புகள் விரும்பிச் செய்தது, தப்புகள் என்று எல்லோரும் ஒப்புக் கொள்வது, மறக்கப்படுவது, அதிக பாதகம் இல்லாதது. ஆனால் கடைசியில் செய்த பெரிய தப்பு, தப்பு என்று சொல்லப்படாதது, பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், சமூகம் எல்லோரும் செய்யத் தூண்டும் ஒன்று கவிஞருக்குத் தப்பாகத் தோன்றுகிறது. அதிலிருந்து மீளும் வழியில்லை. அன்றாட வாழ்க்கையின் இந்த விடம்பனம் இது. எல்லோரும் செய்வது, அதிக பாதகமற்றது தப்பு என்று சொல்லப்படுவது ஆனால் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து செய்து வரும் தப்பு, மீள முடியாத தப்பு, எல்லோரும் கொண்டாடும் லக்ஷ¢யமாக, போற்றப்படும் விஷயமாக, கடமையாக தீர்மானிக்கப்பட்டாயிற்று. தப்பு என்ற ஞானோதயம் ஏற்பட்டுவிட்டபோதும் அது தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. மிக நீண்ட விவரப்பட்டியல் தான் இந்த கடைசி தப்பின் முழுவிவரணையும். கொஞ்சம் அலுப்பூட்டும் விவரணை தான். மூன்று நிமிடம் இதைப் படிக்க நமக்கு அலுப்பாக இருந்தால், 54 வருடங்கள் இப்படியே வாழ்க்கையைக் கழிப்பவருக்கு அது எவ்வளவு அலுப்பாக இருக்கும். அந்த அலுப்புணர்வு கேட்பவருக்கு கொஞ்சமாவது உறைக்க வேண்டாமா?கவிஞரின் 54 வருஷங்களாக அனுபவித்து அலுத்ததை உங்களுக்கு மூன்று நிமிஷ சுவாரஸ்ய வாசிப்பாக்கிச் சுருக்கமாகச் சொல்லுமய்யா என்று கேட்பது இரக்கமற்ற காரியம். ஆனால் ஒரு விஷயம். இந்த கவிதையின் அடியோட்ட உணர்வு, அலுப்பல்ல. அது வெளித் தோற்றம். உண்மையில் கவிஞர் தன்னையே ஏளனம் செய்து கொள்ளுகிறார் என்று சொல்ல வேண்டும். சுய எள்ளல் என்பது மிகப் பெரிய விஷயம். நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத குணம். அந்த சுய எள்ளல், உண்மையும் சுவாரஸ்யமும் ஆகும்.

கணிசமான கவிதைகளில் விவரப் பெருக்கத்தைக் காண்கிறோம். ‘செருப்புகள்’, ‘குழந்தை’ ‘வலது கையே’, ‘துயரத்தின் குரல்’, ‘நாலு சக்கர மோட்டார் வண்டிகள்’, ‘கும்பகோணத்துப் பாஸஞ்சர்’, ‘வேண்டும் மழை’, ‘கர்ப்பஸ்த்ரீ’ இப்படி பல. எல்லாவற்றையும் நான் பட்டியலிடத் தேவையில்லை. கோடி காட்டினால் பொதும் தான். தான் எழுதிய கவிதைகள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தொகுக்கும்போது இப்படி ஆகிப் போகும் தான். அதே சமயம், வெற்று விவரப் பெருக்கம் என்று நான் சொல்லும் கவிதைகளில் நான் காணாத ஒரு த்வனி, விவரங்களை மீறி எழுந்துள்ளதை வேறு யாரும் காணலாம் தான். என் கருத்துக்களுக்கு ஏதும் சாந்நித்யம் கிடையாது. இப்படி நான் சொல்லக் காரணம் உண்டு. உதாரணமாக, நான் மேலே குறிப்பிட்ட ‘துயரத்தின் குரல்’ கவிதை கூட, ‘துயரத்தின் குரலை நீங்கள் அறிந்த துண்டா?’ என்ற தொடக்க வரியும், ‘மரணமும் சொற்களில் தங்கி விட்டதோ?” என்ற கடைசி வரியும் மிக சக்தி வாய்ந்தவையாக எனக்குப் பட்டன.

இதே போல அனேகம் கவிதைகள் விவரப்பட்டியல் என்பதற்கு மேல் எழுந்து, நம்மை அதிரச் செய்துவிடுகின்றன. ‘ஜாடி’ என்று ஒரு கவிதை. பாட்டி மாவடு வைத்திருந்த ஜாடி பற்றி கதை கதையாய்ச் சொல்கிறது கவிதை. இப்படி ஒரு பாடு பொருளா? என்று திகைக்கலாம். ஆனால் கவிதையின் கடைசி வரிகள்,
‘பழக்க தோஷத்துடன் கை ஜாடியில் நுழைய
பழைய ஞாபகம்,
மாவடு வாசனையில்
பாட்டியும் தென்பட்டாள்
மாவடு கலைந்தது போல
நாட்களும் கரைந்து போயிற்று.
இத்தைகைய அனுபவங்கள் எங்கு எதிர்ப்படும் என்று சொல்ல முடியாது. அப்போது பாட்டியும், மாவடு ஜாடியும் கூட விஸ்வரூபம் எடுக்கும், நம்மை அறியாமலேயே. இப்படித் தான் அழகிய சிங்கர் கவிதை என எழுதித் தந்துள்ளவை எல்லாமே எழுதிய தோரணை. தன்னை ஏதும் கம்பனுக்கும் காளிதாசனுக்கு இன்றைய வாரிசாக பாவனை செய்துகொண்டு செய்த காரியங்கள் இல்லை. தன் வெகு சாதாரண வாழ்க்கையை அலுத்தோ சலித்தோ, அவ்வப்போது தனக்கே இளப்பமாகத் தோன்றுவதை இளப்பமும் சாதாரணமும் தொனிக்க, பொய் பாவனைகள், முழக்கங்கள் அற்று எழுதியது அனேகம் நமக்கு அவற்றின் உண்மை காரணமாக கவிதையாகியுள்ளதைத் தான் உணர்கிறோம். இதைப் பல கவிதகளில் காணலாம். உதாரணமாக சில: ‘ஓ’, ‘என் பாக்கெட்டில் சீப்பு இல்லை’, ‘எலி(கள்) புராணம்’, ‘எனக்கு இன்று பிறந்த நாள்’, ‘சுதந்திர தினம்’, ‘இருந்ததில்லை பொறுமை’, ‘பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு’, இப்படி பல.

இருக்கின்றவர்களும் இல்லாதவர்களும் என்று ஒரு கவிதை. மிக அழகாகத் தொடங்குகிறது. பத்து பதினைந்து வரிகள் தள்ளி,

நாமும் இல்லாமல் போவோமென்று
இருக்கின்றவர் அப்போது நினைப்பதில்லை.

என்ற வரிகளோடு முடிந்திருந்தால் சொல்ல வந்தது சொல்லப்பட்டு முடிந்திருக்கும். அதற்கும் மேல் சென்று உபதேசங்கள் செய்யத் தொடங்கி விடுகிறது கவிதை.

‘திரும்பவும் பூனைகள்’ என்று ஒரு கவிதை. இரண்டு பக்கங்கள் நீளும் இக்கவிதையில்

‘பூனைகள் குறுக்கே போனால்,
நடக்காது காரியம் என்பர்
நடக்காத காரியங்கள்
நம்மிடம் அதிகம் தேங்கியிருப்பதால்
குறுக்கே போகட்டும்,
நடக்காவிட்டால் ஒன்றுமில்லை

போன்ற சில வரிகள் விவர அடுக்கலிடையே கிடைக்கின்றன.

தன் அலுப்புத்தட்டும் அன்றாட வாழ்க்கை தான் என்றில்லை. அதை மீறியும் சமூக விமர்சனம், அரசியல் கண்டனம் என்றும் அவர் கவிதைகள் தம்மையறியாது பேசிவிடுகின்றன. நமது தொலைக்காட்சிகளின் அபத்தமும் பாமரத்தனமுமேயான ‘சீரியல்கள்’ எந்த நெம்புகோல் கவிதைக்காரரை,. எந்த கவிக்கோவை, கவிப் பேரரசுகளை உறுத்தியிருக்கின்றன? தன் கவிதைகள் பற்றியே அழகிய சிங்கருக்கு கேலி தான். இந்தக் கேலியும், சுய எள்ளலும் மிக ஆரோக்கியமானவை. கவிஞர் எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல தமிழர் எல்லோருக்கும் தான். நகைப்பிடமாகாதது நம்மிடம் ஏதாவது இருக்கிறதா?, தெரியாது.

இதெல்லாம் போகட்டும். சந்தேகமில்லாமல் மிக சிறப்பான கவிதைகள் இத்தொகுப்பில் நிறைய இருக்கின்றன. அதாவது என் பார்வையில். இதை நம் சூழலில் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது.

தெரு என்று ஒரு கவிதை. விதி என்றும் ஒரு கவிதை. எது சின்னது முழுதாக மேற்கோள் காட்ட?

‘விதி எல்லா இடங்களுக்கும் செல்லும்
கேளிக்கை அதன் நோக்கம்
துயரம் உள்ளவர்களைத் துன்புறுத்திப் பார்ப்பது,
அதன் எண்ணம் இல்லை
என்று முன்னால் நம் முன்னால் முணுமுணுக்கும்
துயரம் உள்ளவர்களுக்குத் தெரியும்
உண்மையில்லையென்று
நோயாளி மரணத்தை எதிர்பார்க்கிறானா
விதி விளையாடும்
மரணம் ஏற்பட்டால்
உயிரை இழுத்துக் கொண்டு போகும்
தொடரும் வாழ்வை
கனவுகளுடன் காணும் மானுடன்
வாழ்க்கையை அடித்துச் சிதைக்கும்

விதி
அதனைக் கேள்வி கேட்கும்
உரிமை உங்களுக்கில்லை.

இதைப் போன்று சொற்கள் உயிர்பெற்று தம் எல்லையை மீறி, நம் வாழ்க்கையின் எல்லை மீறி எங்கோ, நினைத்துப் பார்க்கும் தருணம் தோறும் நம்மை இழுத்துச் செல்லும் வல்லமை பெற்ற சொற்கள் தான் கவிதை என்னும் அனுபவத்தைத் தருகின்றன. ‘என்ன வென்று சொல்வது?”இது வரையில்’, சறுக்கு மரம்’, ‘கோபம்’, ஆயுதம்’, மரவட்டை’, ‘தோற்றம்’, ‘வேண்டாம் விவாதம்’, ‘அற்புதக் கிணறே’, ‘சப்தம்’, ‘கறுப்பு நாய்’, ‘நான், நீ, எல்லோரும்’, ‘எழுதுவதெல்லாம்’ ‘எனக்கு’ ‘பெரிய காரியங்களும், சிறிய காரியங்களும்’ ‘சுவர்’, ‘வாக்’, ‘அண்ணாவின் உருக்கம்’, ‘காத்திருப்பு’, ‘இடம்’, ‘கல் பட்ட காயம்’, ‘இனி என்ன?’, இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம். ‘தொகுப்பின் ஆரம்பத்தில் 1987-ல் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் தோரணைகள் ஏதுமின்றி வெகு இயல்பாக ‘என்னவென்று சொல்வது?’ என்று தொடங்கிய கவித்வ பயணமும் தொகுப்பும், 2006- ல் அப்பயணத்திற்கும் இத்தொகுப்பிற்கும் ‘எங்கள் வீரன்’ என்ற கவிதை ஒரு கட்டத்திய எல்லையாக இருக்குமானால், அது மிகவும் மகிழ்ச்சி தரும் ஒன்று. இதில் நம் மிகப் பழம் சங்கக் கவிதை எதனதும், குறிப்பாக, புறனானுற்றுக் கவிதை ஏதும் ஒன்றின், தொனியையும் உயிர்ப்பையும் உணரலாம். என்றென்றைக்குமான ஒரு வாழ்க்கை நிகழ்வு ஆயிரமாயிரம் கடந்து மீண்டும் எதிரொலிக்கிறது. கடந்து சென்று விட்ட காலம் மிகக் கொடூரமாக நம் வாழ்க்கையில் விளையாடிச் செல்கிறது. என்றென்றும் தொடரும் ஒரு சோகக் கதையின் பாத்திரமும் நாம். பார்வையாளரும் நாம் தான்.

வெங்கட் சாமிநாதன்


அழகிய சிங்கர் கவிதைகள்; பிரசுரம்: நவீன விருட்சம் 6/5, போஸ்டல் காலனி, முதல் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை-600 033 பக். 312: விலை ரூ. 150


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்