கோவை ஞானி தந்த அங்கீகாரம்!

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

தாஜ்


வலைத் தளங்களின் வழியே, தமிழின் நவ இலக்கியத்தை தரிசனம் கொள்ள ஆர்வம் காட்டும் என் நட்புக்குறிய இளைஞர்களிடம்
‘உங்கள் எத்தனைபேர்களுக்கு கோவை ஞானியைப்பற்றி தெரியும்?’ என்று நான் கேட்க கூடுமென்றால், தொன்னூறு சதவிகிதம்
சாதகமான பதில் வர வாய்ப்பில்லை.

தமிழ் இலக்கியம் என்பது இங்கே நம் படித்த தமிழர்களாலேயே பல்வேறு தினுசுகளில் அனுகப்படுகிறது. கம்பனின் ராமாயணத் தையும், வில்லிப் புத்தூராரின் பாரதத்தையும், இளங்கோவின் சிலப்பதிகாரத்தையும் பலரால் இங்கே தாண்டிவரவே முடியாது, அது கூடவும் கூடாது என்கிற கல்லூரி பேராசிரியர்களும் நம்மில் உண்டு என்றால் பலரால் நம்புவது கஷ்டமாக இருக்கும். நாங்கள் சுத்த தமிழர்கள் வள்ளுவம்தான் உலகை வாழ்விக்க வந்த வேதம், இலக்கியம் எல்லாம். திருக்குறளை மட்டும் பேசலாமே என் போறும் நம்மிடம் இல்லாமல் இல்லை. நம் வார இதழ்களில் வரும் கதைகள்தான் நம்மின் இன்றைய இலக்கியம் என்று நம்பும் விடலைகளும் இருக்கிறார்கள். இவர்களை தாண்டிவரும் சிலரில் சுஜாதா, ஜெயக்காந்தனோடு முற்றுப் புள்ளி வைத்துக் கொள்பவ ர்களும் ஏராளம்.

தீவிர இலக்கிய வட்டத்துக்குள் வந்து நின்று… எதையும் எப்படியும் எழுதலாம் என்பது ஒரு கட்சியாகவும், இப்படித்தான்… பயந் தரும்… வகையில்தான்… எழுதனும் அதுவும் இடதுசாரி சிந்தனைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது இன்னொரு கட்சி. முதல் வகை சுத்த இலக்கிய நாடிகள் என்றால், இரண்டாம் வகை கலை இலக்கிய இரவுகளை நடத்திக் கொண்டிருக்கும் ‘முற்போ க்கு கலை இலக்கிய’ வாதிகள்.

திரு. ஞானி அவர்கள் இடது சாரி மனோபாவக்காரர்தான். சுத்த மார்க்சிய பார்வைக் கொண்டவர்தான் ஆனால் இவர் இலக்கியத் தில் சுற்றமாக நினைத்தவர்கள் எல்லாம் சுத்த இலக்கிய வாதிகளைத்தான். ‘நிகழ்’ என்று இவர் நடத்திய சிற்றிதழ், தமிழில் வெளி வந்த சிற்றிதழ்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்று. தமிழ்த் தளத்தில் பல்வேறு விதமான ஆய்வுகளை இந்த சிற்றிதழ் நிகழ்த்தி கட்டு ரைகளாக ஆக்கித் தந்ததை தமிழ் இலக்கிய உலகமும், அது சார்ந்த நெஞ்சங்களும் மறக்க முடியாது. ஆ.மார்க்ஸ், இன்றைய சட் டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஜெயமோகன், போன்றோர்கள் கோவை ஞானியின் ‘நிகழ்’வில் பட்டுத் தெறித்தவர்கள்தான். இவர் களது பிரபல்யமே அதன் பிறகானதுதான். கோவை ஞானிக்கு பல வருடங்களாக கண்பார்வை குறைந்து போனது. அந்த சிரமத் தோடேயேதான் ‘நிகழ்’வென்ற இந்த சாதனையை நிகழ்த்தினார்.

‘பாரதி 125, புதுமைப்பித்தன் 100, சுந்தர ராமசாமி 75’ விழாவுக்காக சென்ற ஆண்டு டிசம்பரில் நான் கோவைக்கு போய் இருந்த போது, கோவை ஞானியை விழா அரங்கில் வைத்து சந்தித்து கைகளைப் பற்றி ‘நான் தாஜ்’ என்று அறிமுகமானேன்.என் பெயரை நான் கூறியதுதான் தாமதம்… “யார்.. இந்த கவிதையெல்லாம் எழுதுவிங்களே அந்த தாஜா..!” என்றார். ஆமாம் என்று அவரது கரங்களை இன்னும் அழுந்தப் பற்றிக்கொண்ட நான்.. இன்னொருப் பக்கம் வியந்தேன். பார்வையற்ற இந்தப் பெரியவர் இத்தனை சுலபத்தில் நம்மை அறிந்துக் கொண்டாரே என்று. அந்த அளவுக்கா நாம் கவிதைகள் எழுதிவிட்டோம்?

திரு.கோவை ஞானியின் இந்த அறிதல்தான், இன்றைய வரையிலான எனக்கு கிடைத்த அங்கீகாரங்களிலேயே மிக சிறந்த அங்கீ காரமாக கருதுகிறேன். இப்படி சொல்லிக் கொள்வதுக்கூட பொறுந்தாது. ஏனெனில் எனக்கு அதைத் தவிர அங்கீகாரம் வேறு எது வும் கிடைத்தது இல்லை. நண்பர்களின் பாராட்டுதல்களையும், திட்டல்களையும், நையாண்டிகளையும் பெரிய அங்கீகாரமாக கொள்ள முடியுமாயென்ன?

சமீபத்தில் என் பிளாக்கில், எனது கட்டுரைக்கும் கீழே உள்ள வாசகர் கமெண்ட் பகுதியில் ஒரு கமெண்ட் கண்டு சற்று நேரம்
சர்வநாடியும் ஒடுங்க திகைத்து விட்டேன். அந்த அளவுக்கு என்னை தமிழில் பொறுக்கியெடுத்த வார்த்தைகளால் நெய்திருந்த பாராட்டு அது! இந்த அங்கீகாரத்தை நான் பெரிய அளவில் எடுத்துக் கொண்டாலும்… திரு.கோவை ஞானி என்னை கண்டுக் கொண்டதைத்தான் முதல் அங்கீகாரமாக கருதுகிறேன்.

திரு.கோவை ஞானி அவர்களின் வாய்மொழி வடிவம் ஒன்றை 26.07.07 குங்குமம் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில்
நான் படித்ததில் குறிப்பிடத்தகுந்த கட்டுரை இது. ‘மார்க்சியத்தையும்’, ‘கடவுள் நிலையையும்’ ‘கடளைக் காண்பது குறித்தும்’ அவர் எத்தனை சுலமாக விளக்கியுள்ளார் என்பதை புதிய இலக்கிய வாசகர்கள் அறிய வரும்போது திரு.கோவை ஞானியின் விசேசம் உங்களுக்குப் புரியும்.

*******

நான் கோவை ஞானி.
———————————

– கோவை ஞானி

நான்தான் கடவுள். நானே கடவுள்! அதைத்தான் ‘அத்வைதம்’னு சொல்றாங்க. எனக்கு சின்ன வயசிலேர்ந்தே கடவுள் என்ற காரு த்தாக்கத்தின் மீது நிறைய கேள்விகள் உண்டு. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிச்சிக்கிட்டிருந்தப்போ தியானத் துல ஆர்வம் வருது. சதா சர்வ காலமும் தியானத்துல உட்கார்ந்திருக்கேன். நாட்கள் போகப் போக ஆழ்ந்த இடத்துக்கு போறே ன். கண்களை மூடினதும் கண்ணுக்கு முன்னாடி கூசச் செய்ற ஒளி தோன்றுது. தலையில லேசா ஏதோ ஒருவகையான திரவம் சுர க்குது. அது சுரக்கும்போது உள்ளுக்குள்ள இன்னதுன்னு சொல்ல முடியாத பரவச உணர்வு ஏற்படுது.

சிதம்பரம் கோயிலுக்கு போறேன்…. என்னால கும்பிட முடியலை, சும்மா பார்த்துக்கிட்டு நிற்கிறேன். அப்போ திடீர்னு ஒரு உண ர்வு…. ‘நீயே கடவுள்தானே?’னு கேள்விகேக்குது. உடனே அந்த இடத்தை விட்டு வெளியே வர்றேன். கிட்டத் தட்ட மூணு மாசம் இனம்பிரிக்க முடியாத இந்த உணர்வு என்னை வாட்டியெடுக்குது. நாய்க் குட்டிகள் விளையாடறதைப் பார்த்தா நானும் அதுக ளோட சேர்ந்து விளையாடற மாதிரி இருக்குது. நான் நிறைய படிக்கிற ஆள், ஆனா அந்த சமயத்துல ஒண்ணையும் படிக்க முடி யலை. வகுப்புல நடக்கிறதை கவனிக்க முடியலை. படிக்கட்டுகள்ல ஏறப்போனா எல்லா படிக்கட்டுகளும் சமதளமா தெரியுது!
மூளையும் உடம்பும் ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்துழைக்காமபோயிகிட்டிருக்கு.

சின்ன வயசிலே எனக்கு பலகீனமான உடல். இருமினதும் ரத்தமா வருது. பிறகு என் அப்பா வந்து டாக்டர்கிட்ட அழைச்சுகிட் டுப் போய் காட்டினாரு. ‘டி.பி.’ -ன்னாங்க. எட்டுமாதம் சிகிச்சையில் இருந்தேன். யோசிக்கும்போது எனக்கு இந்த இனுபவம் ஏன் ஏற்பட்டதுன்னே தெரியலை.

ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு வில்லியம் ஜேம்ஸ்னு ஒரு உளவியலாளர் எழுதிய ‘வாய்ஸ் ஆஃப் ரிலிஜியன் எக்ஸ்பிரஷன்ஸ்’
புத்தகத்துல இதுக்கான விளக்கம் கிடைச்சது. அதாவது சின்ன வயசிலேர்ந்து என்னென்ன விஷயங்கள் நமக்குள்ள திணிக்கப்ப டுதோ, அது ஆழ்மனதுல பதிந்துபோய் தியானம் மாதிரியான, மனதை ஒரு முகப்படுத்தும் செயல்கள் மூலமா திணிக்கப்பட்டு, உணர்வுகள்மயமா மாறுவீங்க. கடவுள்கிட்ட பேசறது, உணர்றது எல்லாம் இதுதான். ஆனா நான், நானே கடவுள்னு தெரிஞ்சு
கிட்டேன்.

நான் யார்? நிலம், நீர், ஆகாயம், காடு, மலை, சமூகம், என் ஆசிரியர்கள், பெற்றோர் – இவங்கதான் எனக்கான எல்லாத்தையும் கொடுத்தவங்க, இவங்க எல்லாமாகவும் நான் இருக்கேன். இதுதான் பிரம்மம்னு சொல்றாங்க. இதைதான் கடவுள்னு பேர் வைக்கி றாங்க. இதையே கொஞ்சம் விரிவாக்கிப் பார்த்தா எல்லோரும் சமதர்மம்னு வந்து நிக்கும். எல்லோரும் கடவுள்னு சொன்னா நீயும் நானும் சமம். அதுல வெள்ளை – கறுப்பு, கீழ சாதி – மேல் சாதிங்கிற வித்தியாசங்கள் அழிஞ்சு போயிடுது. கடைசியில் மார்க்சியத்துக்கு வந்து நிக்கிறேன். சமதர்மம்தான் நமக்கான வாழ்க்கை!

மன்னர்கள் இல்லாம நம்மால வாழமுடிகிறபோது முதலாளிகளும் நிலப் பிரபுகளும் இல்லாம வாழமுடியும். அறிவியல் துணை
கொண்டு மக்கள் அனைவருக்குமான வாழ்க்கையை நாம அமைச்சிக்க முடியும். 5 ஆயிரம் 10 ஆயிரம் வருட பாரம்பரிய வரலாறு நமக்கு இருக்கு. இலக்கியம், இசை, மருத்துவம், விவசாயம்னு எல்லாமே திராவிடர்கள் செய்ததுதான். இத்தனை பெருமை யான தமிழ்க் கலாசாரத்தையும் தமிழையும் இழக்க முடியாது!

தமிழனுக்குத் தேவையான இயக்கங்கள்ல திராவிட இயக்கமும் ஒண்ணு. அதேபோல சமத்துவத்தை சொல்ற மார்க்சியமும் திரா விட இயக்கமும் சேர்ந்து இயங்கினா சமுதாயத்துல நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும். தலித், பெண் விடுதலை – இங்க தேவையா இருக்கு. அதே போல தமிழ்வழிக் கல்வியை இங்க கொண்டுவரனும். இதைத்தான் நான் தொடர்ந்து பேசிக்கிட்டிருக் கேன், எழுதிக்கிட்டிருக்கேன்.

நான் ஒரு தமிழன். தமிழிலக்கியம் படிச்சவன். கிருஷ்ணசாமி, மாரியம்மா தம்பதிக்கு மகனா ‘சோமனூர்’ல பிறந்தவன். 28 வருட ங்கள் தமிழாசிரியரா பணியாற்றிவிட்டு, பார்வை இல்லாம ஆயிட்ட சமயத்துல விருப்ப ஓய்வு வாங்கினேன். நிறைய இலக்கிய நண்பர்கள் என்னை உற்சாகப் படுத்துறாங்க. எழுத்து, படிப்பு, நண்பர்கள், இலக்கியம்னு மன நிறைவா வாழ முடியும்னு தோ ணுது. அதற்குப் பிறகுதான் என் செயல்பாடுகள் தீவிரமாகுது. உதவியாளரை வச்சிகிட்டு அவர் மூலமா நிறைய படிக்கிறேன், எழுதுறேன். இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீடு விழாக்கள்னு வெளியில போறேன்.

‘நிகழ்’, ‘பரிமாணம்’னு சமூக – இலக்கிய இதழ்கள் நடத்தினேன். இப்போ ‘தமிழ் நேயம்’னு ஒரு இதழை முடிகிறபோது கொண்டு வர்றேன். ஒரு இயக்கம் மாதிரி இருக்கேன். மார்க்சிய பார்வையோடு தமிழ் இலக்கியத் திறனாய்வை மேற்கொள்கிறேன். பழைய இலக்கியத்தோடு புதிய இலக்கியத்தையும் படிக்கிறேன்.

மார்க்சியமும் பெரியாரியமும், நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும், தமிழ் வாழ்வியல் தடமும் திசையும். (மூன்றும் காவ்யா வெளியீடுகள்) – இப்படி வருஷத்துக்கு குறைந்தது ரெண்டு நூல்கள் எழுதுகிறேன்.

தத்துவம் சார்ந்த வாழ்க்கைதான் என்னுடைய மய்யம். வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதா இருக்கணும்னு நினைக்கிறேன். யாரும்
யாருக்கும் அடிமை இல்லை. எல்லோருக்கும் நல்லா இருக்கோணும்… அதுக்கு மார்க்சிய வழி சிறந்ததா இருக்குங்கிறது என் னோட ஆழமான நம்பிக்கை.

***************
எழுத்து வடிவம்: மு.வி.நந்தினி
நன்றி:குங்குமம்/26.07.07
திண்ணைக்கான…
வடிவாக்கமும்&தட்டச்சும்: தாஜ்

*****************
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்