கே.வி.ராமசாமி-சில நினைவுகள்

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

வெளி ரங்கராஜன்


கே.வி.ராமசாமியை நான் எழுபதுகளின் இறுதியில் ஒரு நாடக செயல்பாட்டாளாராகத்தான் முதன் முதலில் சந்தித்தேன். அப்போது நாடகம் குறித்த தீவிரங்கள் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டம். கசடதபற, ஞானரதம், அ·, பிரக்ஞை, படிகள், கணையாழி போன்ற பத்திரிகைகள் உருவாக்கிய சூழல் சார்ந்து இலக்கியம் குறித்தும் சமூக செயல்பாடு குறித்தும் புதிய கண்ணோட்டங்களும், புதிய செயலூக்கங்களுக்கான விவாதங்களும் பரவியாகிக் கொண்டிருந்த ஒரு நேரம். உரையாடுவதற்கும், செயல்திட்டங்களை விவாதிப்பதற்கும் எண்ணற்ற உத்வேகங்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது இலக்கியச் சூழலை ஆக்ரமித்த தனிநபர் தாக்குதல்களாலும், அபிப்பிராய மோதல்களாலும் தீவிரமான சார்புகளும் உருவாகிக் கொண்டிருந்தன. இலக்கியம் ஒரு புறம் நட்புகளை தீவிரப்படுத்திக் கொண்டிருந்த அதேநேரத்தில் பல கருத்து மோதல்களையும் உருவாக்கி இடைவெளிகளும், மனத்தளர்வுகளும் மிகுந்திருந்த நிலையும் இருந்தது. அவசரநிலை காலகட்டத்திற்குப் பிறகு சுத்த இலக்கியம் என்கிற அணுகுமுறை பலஅதிர்வுகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. பெங்களுரிலிருந்து வந்த படிகள் பத்திரிகை இலக்கிய உணர்வுகளும், சமூக மனநிலையும் இணைந்த புதிய கோட்பாட்டுப் புரிதல்களுக்கான தளத்தை உருவாக்கும் சில ஒருங்கிணைப்புகளை முன்னெடுத்தது. சார்த்தரின் இருத்தலியல் கோட்பாடுகளும், தனிமனித உளவியலை உள்வாங்கிய புதிய இடதுசாரி மதிப்பீடுகளும் அதிக கவனம் பெற்ற புதிய கோட்பாட்டுப் புரிதல்களுக்கான தளத்தை உருவாக்கம் சில ஒருங்கிணைப்புகளை முன்னெடுத்தது. சார்த்தரின் இருத்தவியல் கோட்பாடுகளும், தனிமனித உளவியலை உள்வாங்கிய புதிய இடதுசாரி மதிப்பீடுகளும் அதிக கவனம் பெற்ற புதிய இலக்கிய இயக்கங்களுக்கான உத்வேகங்கள் உரம் பெற்றுக்கொண்டிருந்த ஒரு சூழவ் உருவாகிக் கொண்டிருந்தது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ .இத்தகைய பார்வைகளால் உத்வேகம் பெற்ற நிலையில்தான் வீதி நாடக இயக்கம் உருவானது. இலக்கியப் பின்புலமும், ஒரு சம்பிரதாயமற்ற சுதந்திர இடதுசாரி மனோபாவமும் கொண்ட கே.வி.ராமசாமி போன்றவர்கள் அப்போது அந்த இயக்கத்தின் பின்னணியில் இருந்தார்கள். கிட்டத்தட்ட அதே மனநிலையில் அப்போது நானும் இருந்ததால் எங்கள் சந்திப்பு சுலபமாக நிகழ்ந்தது. இன்னும் பூமணி, பாரவி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களும் இந்த சந்திப்புகளுக்கு உரமூட்டினார்கள்.

அன்றைய சூழ்நிலையில் இலக்கிய விவாதங்களாலும், எதிர்விவாதங்களாலும் பலவிதமான வேறுபாடுகளும், மனத்தளர்வுகளும் உருவாகிக் கொண்டிருந்த நிலையில் நாடகம் போன்ற உடனடி செயல்பாட்டுக்கான ஒரு செயல்தளம் அதிக ஊக்கத்தை வழங்குவதாக இருந்தது. அப்போது இலக்கியப் பின்புலத்துடன் செயல்பட்ட கூத்துப்பட்டறை, பரீக்ஷா போன்ற நாடக இயக்கங்களின் செயல்பாடுகளில் எங்களுக்கு வேறுபாடுகள் இருந்தன. நாடகத்தை அரங்கத்திலிருந்து விடுவித்து நேரடியாக மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு உத்தியை நாங்கள் சோதிக்க நினைத்தோம். அவ்வகையில் அப்போது வங்காளத்தின் பாதல்சர்க்கார் எங்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாக இருந்தார். பிரக்ஞை வீராச்சாமியின் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ந்த நாடகச் செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டின் வடிவமாக உருக்கொண்டதால் அவற்றுடன் இணைந்து கொள்வதில் எங்களுக்கு தயக்கங்கள் இருந்தன. தங்களுடைய சுதந்திரமான நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் விவாதத்துக்கும், ஏற்புக்குமான ஒரு புதிய வெளியை உருவாக்குவது என்ற வீதி நாடக அணுகுமுறை சுய இலக்கியச் சார்புகள் கொண்ட எங்கள் எல்லோருக்கும் அண்மைப்பட்டதாக இருந்தது. கே.வி.ராமசாமி இந்த முயற்சிக்கு ஊக்கம் அளிப்பவராகவும், பலதரப்பட்ட விஷயங்களை உரையாடுவதற்கும், விவாதிப்பதற்குமான திறந்த மனம் கொண்டவராகவும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பரிவான ஸ்பரிசத்தையும், கதகதப்பையும் வழங்குபவராகவும் இருந்தார். அவர் மட்டுமல்ல அவருடைய மனைவி குழந்தைகள் என அவருடைய வீடே இந்த உணர்வுகளுக்கான ஒரு திறந்த இல்லமாக இருந்தது. தன்னுடைய இலக்கியப் பகிர்வுகளின் பிரிக்க முடியாத அம்சமாக அவர்களையும் இணைத்து அவர் உருவாக்கியிருந்த அந்த இல்லம் ஒரு பெரிய புகலிடமாக இருந்தது. பல கருத்து வேறுபாடுகளின் வெப்பத்தை அது தணிக்கும் இடமாகவும் இருந்தது.

அப்போதெல்லாம் அவருடைய பழைய ஞானரதம் தொடர்புகள் பற்றி எங்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லை. நீண்ட காலமாக அவர் குடும்பத்தில் நிலவிய இலக்கியச் சூழல் காரணமாக பல இலக்கியவாதிகளுடன் அவர் ஏதோவிதமான செயல்பாடு கொண்டிருந்தார். இலக்கியம் சார்ந்து இயங்கிக் கொண்டே இருப்பது என்பதுதான் அவருடைய ஒரே நிலைப்பாடாக இருந்தது. ஆங்காங்கே சிதறிக் கிடந்த தன்னுடைய படைப்புகள் பற்றி அவர் அதிகம் பிரஸ்தாபிக்கவோ, உரிமை கொண்டாடவோ இல்லை. அவ்வப்போதைய தீவிரங்களுடனேயே அவர் அதிகம் வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போதைய நிலையில் நாடகம் சார்ந்தே எங்களுக்கு அவருடன் அதிக உறவு இருந்தது. வீதி நாடகங்கள் அனைவருடைய கூட்டு முயற்சியில் உருவானவை என்றாலும் பசி, வேலை, சடுகுடு, சுயம்வரம், கயிறு, அக்னிப்பிரவேசம் போன்ற நாடகங்கள் வடிவம் பெற அவர் அதிகம் பங்களிப்பு செய்தார்.

வீதி நாடகத்தயாரிப்புகளின் அரசியல் தன்மை கண்காணிப்பு சக்திகளின் கவனங்களுக்கு இலக்காகி வெளிப்பாட்டு செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளைக் கோரிய போது எங்களிடையே பல வேறுபாடுகள் தலைதூக்கி நாடகச் செயல்பாடுகள் பின்னடைவு கொள்ள ஆரம்பித்தன. எல்லாத் தளங்களைவும் உபயோகப்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவில்லாமல் செயல்பாடுகள் முடங்கிப்போன நிலை உருவானது. அப்போதெல்லாம் கே.வி.ராமசாமி மிகுந்த புரிதல் மனத்துடன் எங்களுடைய கலைச்சார்பு நிலைப்பாடுகளுக்கு ஊக்கமும், ஆதரவும் அளிப்பவராக இருந்தார். அவருடைய வீடுதான் எல்லோருடைய பலவிதமான வடிகால்களுக்கான இடமாக இருந்தது. அங்கு அவர் உருவாக்கி இருந்த நெகிழ்வான சூழ்நிலைதான் தீவிரமான கருத்து வேறுபாடுகள் கொண்ட நண்பர்களைக் கூட அவருடன் உரையாடல் கொள்ள ஈர்ப்புகளை வழங்கியது.

அந்த சந்தர்ப்பத்தில்தான் ஞானரதம் சில இடைவெளிகளுக்குப் பிறகு அவர் பொறுப்பில் இயங்க ஆரம்பித்தது. அவருடைய வீடும் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்தது. அந்த வீடு இலக்கியச் சந்திப்புகளுக்கு மேலும் உகந்த இடமாக மாறியது- அந்தக் காலகட்டம் ஒரு உணர்வு வேகத்தில் வெளிப்பட்ட ஒருவகையான தீவிரச் செயல்பாடுகளை சீர் தூக்கிப் பார்த்து மீண்டும் வடிவமைத்துக் கொள்வதற்கான ஒரு நேரமாக இருந்தது. இலக்கியச் சூழலிலும் புதிய கருத்தோட்டங்களும், அணுகுமுறைகளும் வலுப்பெற்று எல்லா வகையான மறுபரிசீலனைகளும் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம். அவருடைய வீட்டில் தொடர்ந்து நடைபெற்ற இலக்கிய உரையாடல்களில் இதன் பல எதிரொளிகள் வெளிப்பட்டன. ஒரு தலைமுறை எழுத்தாளர்களைக் கடந்து அடுத்த காலகட்டத்தை உருவகிக்கும் புதிய தலைமுறை எழுத்தாளர்களின் குரல்கள் அந்தக் கூட்டங்களில் எதிரொலிக்க ஆரம்பித்தன. கே.வி.ராமசாமி ஒரு இளைஞரைப்போன்ற உற்சாகத்துடன் அந்தப் புதிய சூழலை வரவேற்கத் தயாரானார். எதிரெதிர் நிலைகள் ஒருவிதமாக சமனப்பட்டு ஒருபுரிதலும், நிதானமும் நிலவுவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். அந்த அணுகுமுறையையே பின்வந்த ஞானரம் இதழ்கள் பிரதிபலித்தன.

சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு நான் மீண்டும் சென்னை வந்து அவரை சந்தித்தபோது அவர் மேலும் கனிந்தவராக இருந்தார். இந்த இடைவெளியில் சூழல் பல மாற்றங்களை சந்தித்திருந்தது. கவிஞர் ஆத்மாநாமின் மரணம் பல நம்பிக்கைகளை சீர்குலைத்திருந்தது. தனி மனித பலகீனங்களாலும், உடனடிச் சூழலின் நிர்ப்பந்தங்களாலும் எல்லோரும் தனிமைக்குத் தள்ளப்பட்டு புதிய சந்திப்புகளுக்கான தளங்கள் வறண்டு காணப்பட்டாலும் கே.வி.ராமசாமி மட்டும் உற்சாகம் குறைந்தவராக இருந்தார். வெவ்வேறு காலகட்டங்களின் மாறிவரும் நிலைப்பாடுகளின் பின்புலத்தில் இருந்த இலக்கிய வேட்கைகளை இனம் கண்டு அவற்றுக்கான வரவேற்புடன் அடுத்த நகர்வுக்குக் காத்திருக்கும் ஒருவிதமான வெளிப்படைத்தன்மையும், அடிப்படைகளில் சமரசம் செய்து கொள்ளாத உறுதியும் திறந்த பரிசீலனைகளும் என்றும் அவருடைய பலங்களாக இருந்தன.

நான் நாடகத்துக்காக வெளி பத்திரிகை துவங்கியபோது ஒரு ஆழ்ந்த வாசகராக அதன் செயல்பாடுகளில் பங்கேற்று என்னுடைய ஈடுபாடுகளைப் பகிர்ந்துகொண்டார். வைத்திரத்தினம் என்ற பெயரில் அவர் எழுதிய ‘ஒரு கிராமத்து டீக்கடையில்’ என்ற முக்கியமான நாடகம் ‘வெளி’யில் பிரசுரமானது. படைப்புச் சூழலுக்கு உரமூட்டும் ஒரு ஆழ்ந்த செயல்பாட்டாளராகவே தோற்றம் கொண்ட அவர் படைப்பாளியாக வெளிப்பாடு கொண்ட தருணங்கள் குறைவாகவே இருந்ததால் அவை பதிவுகொள்ள வேண்டும் என்றே விரும்பினேன். அதேபோல் சதீஷ் ஆலேகரின் மராட்டிய நாடகமான ‘மகா நிர்வானம்’ அவருடைய சரளமான மொழியாக்கத்தில் கையெழுத்துப் பிரதியாக நீண்டநாள் என்னிடம் தங்கியிருந்தபோது அதைப் புத்தக வடிவில் கொண்டுவரமுடியாத நிலைமை ஒரு மன உறுத்தலாகவே இருந்தது. மிகவும் சமீபமாகவே தமிழினி பதிப்பகத்தால் அது புத்தக வடிவம் கண்டது. அதன் நாடகத் தயாரிப்பில் கே.எஸ்.ராஜேந்திரனுடன் இணைந்து நிகழ்வு வடிவமைத்ததில் அந்த உணர்வுக்கு நியாயம் வழங்க ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவே நினைத்தேன். தனக்கு முழுவதும் ஒப்புதல் இல்லாத சில நாடகங்களில் நண்பர்களுக்காக அவர் பங்கேற்றபோது தன்னுடைய சங்கடங்களைப் பகிர்ந்து கொள்ள அவர் என்னை நாடிய சந்தர்ப்பங்களும் இருந்தன.

பின்னாட்களில் வேலைப்பளு காரணமாகவும், குடும்ப நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் பல சங்கடங்கள் உருவாகி அவரிடம் பல கட்டுப்பாடுகளைக் கோரியபோது அவர் மிகுந்த குற்ற உணர்வு கொண்டார். வேலையிலிருந்து ஓய்வுபெற்ற மறுநாளிலிருந்து இந்த தொல்லைகளிலிருந்து விடுபட்டு வெளி பத்திரிகை மற்றும் பல நாடக செயல்பாடுகளுக்காக நாம் மீண்டும் இணைந்து வேலை செய்யலாம் என்று ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் கூறினார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் ஒரு அசந்தர்ப்பமான நாடகத் திருப்பம் போல் அகால மரணம் அவரை நிரந்தரமாகப் பிரித்துக்கொண்டது.


Series Navigation

வெளி ரங்கராஜன்

வெளி ரங்கராஜன்