பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

கரு.திருவரசு


பிழைதிருத்தம் – பிழைத்திருத்தம்

1970ஆம் ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் அச்சேறிவந்த நூல்கள் பெரும்பாலும் பிழைகளே இல்லாத பதிப்புகளாக வந்தன. அதன்பிறகு வரும் பல நூல்களின் இறுதிப் பக்கங்களில் வரிசை வரிசையாக அச்சுப்பிழைக்கான திருத்தங்கள் இடம்பெறுவதைக் காணமுடிகிறது.

முதல் வரிசையில் பிழையான சொற்கள், அடுத்த வரிசையில் திருத்தமான சொற்கள் என அமைந்த பக்கத்தின் தலைப்பு “பிழைதிருத்தம்” என்றும் “பிழைத்திருத்தம்” என்றும் இருவகையாக அச்சிடப்பட்டுள்ளது.

இதில் எது சரி?

பிழையைத் திருத்தும் பக்கத்தின் தலைப்பிலேயே பிழை. இதைக் கொடுமை என்று சொல்வது கடுமையான சொல்லன்று.

பிழை + திருத்தம் = பிழைதிருத்தம்.

பிழை என்பது தவறு, குற்றம், தப்பிப் பிழைப்பது என்றெல்லாம் பொருள்தரும். அப்பொருள்களில் நாம் இங்கே தவறு என்பதைமட்டும் எடுத்துக்கொள்வோம்.

திருத்தம் என்றால் ஒழுங்கு, மாற்றம், திட்டம், பிழை திருத்துகை என்றெல்லாம் பொருள்படும். இங்கே திருத்துகையை மட்டும் அதாவது பிழை திருத்துகையை மட்டும் கொள்வோம்.

நூலில் ஏற்பட்ட எழுத்துப்பிழை, சொற்பிழை போன்ற அனைத்துப் பிழைகளுக்குமான திருத்தம் போடுவோர் அதைப் ‘பிழைத்திருத்தம்’ என்று எழுதக்கூடாது. அப்படிப் போட்டால் செய்த திருத்தமும் பிழையென்றாகும்.

பிழையைத் திருத்துவது பிழைதிருத்தம்.

பிழைதிருத்தம் = பிழைக்குத் திருத்தம்.
பிழைத்திருத்தம் = பிழையாகிய திருத்தம்.


thiruv36@yahoo.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

கரு.திருவரசு



எழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்கள் இயற் பெயர்களிலேயே எழுதாமல், எழுதுவதற்காகவே வேறொரு பெயர் வைத்துக் கொள்வதுண்டு.

முத்தையா எனும் பெயர் கொண்டவர் கண்ணதாசன் எனப் பெயர் வைத்துக்கொண்டார். கருப்பையா எனும் பெயர் கொண்டவர் காரைக்கிழார் எனப் பெயர் வைத்துக்கொண்டார்.

இப்படி வேறு பெயர் வைத்துக்கொள்வதைப் ‘புனைபெயர்’ என்றும் ‘புனைப்பெயர்’ என்றும் எழுதுவதைக் காண்கிறோம். இரண்டில் எது சரி?

“புனை” என்பது பொலிவு, அழகு, சீலை, மூங்கில் எனப் பல பொருள்களைத் தரும் சொல்.

‘புனை’ என்பதை வினைச் சொல்லாகக் கொண்டு பொருள் சொன்னால், இயற்று, அழகுசெய், புனைந்துகொள் என்றெல்லாம் பொருள்படும்.

‘பெயர்’ச்சொல் என்றால் ஒரு பொருளுக்கு அல்லது ஒரு குழந்தைக்கு அதைக் குறிப்பிட்டுச் சொல்வதற்காக அல்லது அழைப்பதற்காக வைக்கப்படும் குறிப்புச்சொல்.

“புனை” என்பது “பெயர்” என்பதோடு சேரும் சொற்புணர்ச்சியால் மாறும் பொருள் மாற்றத்தைத் தெரிந்துகொள்வதே நம் நோக்கமாதலால் புனைதல், அல்லது புனைந்துகொள்ளுதல் என்னும் பொருளை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

ஒருவர் தான் புனைந்துகொண்ட பெயரைப் “புனைப்பெயர்” என்று எழுதுவதோ, பேசுவதோ தவறு. புனைப்பெயர் என்றால் புனையின் பெயர், புனையாகிய பெயர் என்று பொருள். புனைந்துகொண்ட பெயர் ஆகாது.

ஒருவர் புனைந்துகொண்ட பெயரை, புனையும் பெயரை, புனைந்துகொள்ளப் போகும் பெயரை “புனைபெயர்” என்றுதான் எழுதவேண்டும், சொல்லவேண்டும்.

புனைபெயர் = புனைந்த பெயர்
புனைப்பெயர் = புனையின் பெயர்


thiruv36@yahoo.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

கரு.திருவரசு


கடைபிடி – கடைப்பிடி

கடை என்பதன் பொருள் என்ன?

இதற்குப் பல பொருள்கள் இருந்தாலும் நாம் இங்கே காணும் சொற்புணர்ச்சிச் சொற்களின் விளக்கத்திற்காக ஒரு பொருளைமட்டும் காண்போம். அதாவது, பொருள் விற்கும் கடை, அங்காடி.

பிடி என்றால் என்ன? பிடித்தல், கைப்பற்றுதல்.

ஒருவர் தவறான வழிமுறையில் நடந்து கெட்டுப்போனால் “அவர் தவறான கொள்கையைக் ‘கடைபிடித்தார்’ என எழுதுவது தவறு.

கடைபிடித்தார் என்றால் பொருள் விற்கும் கடையை, ஓர் அங்காடியை வணிகம் செய்வதற்காக ஏற்றுக்கொண்டார் அல்லது வாங்கினார் என்றுதான் பொருள்படும்.

ஒரு கொள்கையை, வழிமுறையை ஏற்று நடந்தார் என்பதைச் சொல்வதானால் “கடைப்பிடித்தார்” என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டும்,

கடைப்பிடித்தார் எனச் சொல்லவேண்டும், எழுதவேண்டும்.

கடைபிடி = கடையை, அங்காடியைப் பிடி.
கடைப்பிடி = கொள்கையைப் பின்பற்று.


Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 7

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

கரு.திருவரசு


கைகுட்டை – கைக்குட்டை

கைகுட்டை, கைக்குட்டை என்ற சொற்களிலுள்ள ‘கை’ என்பதற்குச் சில வேறு பொருள்கள் இருந்தாலும் இங்கே நாம் மனிதக் கையைப்பற்றிச் சொல்கிறோம் என்பது தெளிவு.

“உடுக்கை இழந்தவன் கைபோல” என்பார் திருவள்ளுவர்.

“இதை உங்கள் காலாக நினைத்து வணங்குகிறேன்” என்று கையைப்பிடித்து நடிப்பார் ஒருவர்.

“வெறுங்கையால் முழம் போடுவது” தெரியுமா?

‘குட்டை’ என்பதற்கும் வேறு பொருளிருந்தாலும் இங்கே நாம் குறுகியது, சிறியது என்னும் பொருள்களில் மட்டுமே பார்க்கிறோம்.

கைகுட்டை என்றால் அந்த மனிதருடைய கை, பொதுவான அமைப்பை விட நீளக் குறைவானது என்று பொருள்.

கைக்குட்டை என்றால் சதுர வடிவத்திலான சிறு துணி.

கைக்குட்டையால்தான் நாம் முகம் துடைக்கிறோம்.

உங்கள் கைகுட்டை கீழே விழுந்துவிட்டது என்று சொல்லக்கூடாது, எழுதக்கூடாது. குட்டையான கையோ, நீளமான கையோ, அது எப்படிக் கீழே விழும்?

கைகுட்டை = நீளம் குறைந்த கை
கைக்குட்டை = சதுர வடிவச் சிறுதுணி


thiruv36@yahoo.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 6. வேலைதேடு – வேலைத்தேடு

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

கரு.திருவரசு


வேலை என்பதன் பொருள் என்ன?

இதற்குப் பல பொருள்கள் இருந்தாலும் நாம் இங்கே மேற்காணும் சொற்புணர்ச்சி விளக்கத்திற்காக ஒரு பொருளைமட்டும் காண்போம். அதாவது, செய்யும் பணி, தொழில்.

நான் படித்துவிட்டு இப்போது வேலைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என எழுதுவது தவறு.

வேலைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றால், வேல் எனும் பொருளை, ஈட்டியை, அதாவது ஓர் ஆயுதத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றுதான் பொருள்.

ஒரு பணியை, தொழிலை, வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்ல விரும்பினால் எப்படிச் சொல்லவேண்டும்?

“நான் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லவேண்டும், எழுதவேண்டும்.

வேலை தேடு = பணியைத் தேடு, வேலையைத் தேடு.
வேலைத் தேடு = வேல் எனும் ஆயுதத்தைத் தேடு.


thiruv36@yahoo.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு