‘கதைச்சொல்லி’யும், கதையும்

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

கே. ராமப்ரசாத்.


கதை சொல்லும் பழக்கம் உண்டா ? / கதை கேட்கும் பழக்கம் உண்டா ? என நான் என் நண்பர்களைக் கேட்பதுண்டு. இக்கேள்விக்குக் கிடைக்கும் பதில்கள் கதை என்பதன் பொருள் இன்று எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது என்ற வியப்பு எனக்கு ஏற்ப்பட்டது.

கதை என்ற சொல்லுக்கு நிகழ்ச்சி, செய்தி, நிகழ்ச்சி விபரம், விரிவுரை, விளக்கம், சென்ற கால வரலாறு, தோற்ற வளர்ச்சி விபரம், பத்திரிகைச் செய்தி, பத்திரிகைக் கட்டுரை, வாய்மொழிக் கூற்று, நம்ப முடியாதச் செய்தி, காலம் கடந்த செய்தி, கட்டுக்கதை, பொய், சுருக்கிக் கூறுவதானால் விவரங்களை விட்டு விட்டுக் குறிப்பாகப் புலப்படுத்துவது எனப் பல பொருள் இன்று உண்டு.

கதைச் சொல்லுபவர்களுக்குக் கதை கூறுவோர், கதைஞர், கதை எழுத்தாளர், கதாசிரியர், கதையளப்பவர், குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பல பொருள் உண்டு.

ஒரு கதைச்சொல்லி, ‘கதை’ என்பதற்கு பயன்படுத்தும் கட்டமைப்பு பொதுவாகப் பின் வரும் நான்கு நிலைகளில் அமையும்.

1. நிகழ்ச்சி
2. இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்வு செய்யவேண்டிய நிலை
3. விளைவாக உண்டான செயல் (காரண காரியத் தொடர்பு)
4. பலன். (உள்ளார்ந்த அல்லது வெளிப்படையான)

ஒரு நல்ல கதைச்சொல்லியை இனம் காண என் மனதில் தோன்றும் சில கேள்விகள்.

1. கதையின் பரிமாணம் என்ன ?
2. மாற்றம் என்பது கதையில் எங்கு எவ்விதம் சொல்லப்படுகிறது ?
3. தற்போதைய சூழ்நிலைக்கு இக்கதை எவ்விதம் பொருந்துகிறது ?
4. கதைச்சொல்லியின் நாக்கு இக்கதையைச் சொல்ல முடிவெடுத்தது எப்படி ?
5. இக்கதை கதைச்சொல்லியால் ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது ?
6. கதைச்சொல்லியின் புலனுணர்வு கதையில் வெளிப்படுகிறதா ?

கதை பொதுவாக கதை கேட்பவரின் வாழ்க்கைச் சூழ்நிலைகளை விவரித்துச் சொல்லப்படும் காலம் என்ன என்பதை உணர வைப்பது. கதை என்பது வாழும் காலத்தின் கலாச்சார சூழ்நிலைகளின் பிரதிபலிப்பு என்றும் சொல்லப்படுவதுண்டு.

ஒரு கருத்தாழமிக்க கதையைச் சொல்லிக் கதை கேட்போரைக் கவர்வது என்பது கதை சொல்பவர் உணர்ந்த தீர்வையும், முடிவையும், கதை கேட்பவரும் அதே அலைவரிசையில் உணரவைப்பதும், கதை கேட்பவரை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று செயலாற்றத் தூண்டும் சக்தி படைப்பதில் உள்ளது என்பேன்.

கம்ப்யூட்டரில் ஃபிளாஷ் / பவர் பாயிண்ட் பயன்படுத்திக் கதை சொல்லும் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சிறிய ஃபிளாஷ் வடிவில் தேர்ந்த ஒலி நயத்துடன் உருவாக்கப்பட்ட கதைகள் இணையத்தில் எங்காவது உண்டா ?

‘கதைச்சொல்லி’ கதையை வாய்விட்டுச் சொல்வதும், அதனைக் கேட்பவர் உடனே அதற்கு எதிர்வினையாற்றும்படியாக ஒரு சூழலும் இன்று இல்லை. அந்த வாய்ப்பு ஏன் குழந்தைகளுக்கு மட்டும் உள்ளது ?

நான் என் சிறு வயதில் வரலாறு பாடத்தில் வந்த ஒரு நிகழ்ச்சிக்குக் கேட்ட கேள்வி இன்றும் நினைவில் உள்ளது.
அசோகர் குளம் வெட்டினார், சாலையோரம் மரம் நட்டார் என்று வாய்விட்டுச் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம், குளம் வெட்டட்டும், மரம் நடட்டும் அதுக்கென்ன வந்தது ? இதிலென்ன விசேஷம் ? என்று கேட்ட கேள்விக்குப் புரியும்படியாகச் சரியான பதில் கிடைக்கவில்லை. அச்செயலுக்குப் பின் உள்ள பொருள் ஒன்றல்ல பல.

இன்று கதை என்பது ஒலி/ஒளிபரப்பு மூலமாக, மென் நூல்/புத்தக வடிவில் வாசிக்க, இணையத்தளங்கள் மூலமாக என கேட்பவரின் பங்களிப்பு என்பதை பின் நகர்த்தி, சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போவதும், புரிந்து கொள் அல்லது தலையைச் சொரிந்து கொள் என்று பல நிலைகளில் உள்ளது.

நாம் கதைகள் சூழ்ந்த உலகில் வாழ்கிறோம். மறக்க முடியாத கதைகள் என்பது நம் வாழ்நாள் முழுவதும் நம் நினைவில் நீச்சல் அடிப்பவை. கதைகள் நாம் வாழும் சமூகத்தை நாம் அறிந்த அறிவிற்கு ஏற்றபடி புரிந்துகொள்ள உதவுபவை. நாம் கதைகளை முடிவெடுக்கவும், சண்டைச் சச்சரவிலிருந்து விடுபடுவதற்கும், வழிகாட்டுதலுக்கும் மேலும் சில தகவல்களை அறியவும் பயன்படுத்திக்கொள்கிறோம்.

‘கற்பனையைத் தூண்டுவது’ என்று கதைப் பற்றிக் சொல்வதைக் கேட்டு நான் யோசிப்பதுண்டு. கற்பனையைத் தூண்டி கனவுலகில் சஞ்சரிக்க ஒரு கதை உதவினால், அக்கற்பனை என்பது நல்ல கனவுகளை ஏற்படுத்தினால், அக்கனவு நல்ல செயலையும், அச்செயல் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே, கதை என்பது நல்லது, கெட்டது அல்ல. கெட்ட கனவும் ஏற்பட்டு தீமைகள் பலவும் நிகழ்வது யதார்த்தமான ஒரு உண்மை.

எனக்கு ஒரு கதை என்பது எப்போது(மே) எப்படி சிறப்பாகப் பயன்படுத்த முடியும், மேலும், ஏன் அவ்வாறு செய்ய முடிவதில்லை என்ற கேள்வி உண்டு.

கதைகள் சொல்லும் நீதி என்பது சிலவற்றில் வெளிப்படை. பலவற்றில் உள்ளர்த்தம். மேலும் பலவற்றில் இல்லவேயில்லை என்றும் சொல்லலாம்.

இந்தச் சூழலில் எந்தவிதமானக் கதையைக் ‘கதைச்சொல்லி’ சொல்ல வேண்டும் என்று கேட்டால், அது கதை கேட்பவரின் தகுதியைப் பார்த்து சொல்லாம் என்ற பதில் வரும்.

சொல்லப்பட்டக் கதையை ஒரு நபர் புரிந்து கொண்டு பயன் அடைவதற்கும், அக்கதையால் கேட்பவர்க்கு ஒரு பயனும் இல்லாமல் போவதற்கும் சரிசமமான வாய்ப்பு உண்டு.

ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா ?
வாழ்க்கைப் பற்றிய எந்தவித மதிப்பீடுகள் ஒருவரை உயர்த்தும்?
எனது இச்செயல் எனக்கு நற்பெயர் தருமா அல்லது கெட்ட பெயர் தருமா?
எனது தவறுகளுக்கு என்னால் பாதிக்கப்பட்டவரின் எதிர்வினை என்பது எப்படியிருக்கும் ?
மேலும் அதற்கு நான் என்ன செய்வது ?

போன்ற கேள்விகளுக்கு விடை தேட நான் கதை கேட்பதுண்டு.

எனக்குக் கதை சொல்லும் கதைச்சொல்லிகள், என்ன நடந்தது என்று மட்டும் சொல்லிவிட்டு என்ன செய்யலாம் என்பதை விவாதத்திற்கு விடும் காலம் ஒரு சவாலான இடம்.

நல்ல ‘கதைச்சொல்லியை’ இனம் காண்பது சற்று கடினம். நல்ல கதைச்சொல்லியும் கதையும் அமைவது நம் கையில் தான் உள்ளது. கதைச்சொல்லி என்பவர் நம்மைவிட வயதில் சிறியவரக இருக்கலாம், பல விதத்தில் நமக்கு இணையானவராக இல்லாமல் இருக்கலாம் ஆனால். அவரிடம் உள்ள கதையைச் சொல்ல வைக்கும் ஆற்றல் நம்மிடம் மட்டுமே உண்டு. அவராக வந்துச் சொல்வது என்பது இன்றைய காலத்தில் நடவாத காரியம்.


kramaprasad@gmail.com

Series Navigation

கே ராமப்ரசாத்

கே ராமப்ரசாத்