ஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

பாண்டித்துரை


ஏழாவது ஆண்டின் நிறைவுக்கவிமாலை திருஷ்டி கழித்து ஆரம்பிக்கப்பட்டது

சிங்கப்பூரின் கவிதைக்கான கவிமாலை அமைப்பு இன்று (26.05.2007) தனது ஏழாவது ஆண்டு நிறைவை கொண்டாடி எதிர் வரும் மாதத்தில் வெற்றிகரமான எட்டாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது.

ஏழாவது ஆண்டு நிறைவை கொண்டாடி எட்டாம் ஆண்டில் அடியெடுத்துவைப்பதாலோ என்னவோ நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் சற்று சூடாகவே ஆரம்பித்தது. சூடாக ஆரம்பித்தது என்று நான் சொன்னதுங்க நிகழ்சியின் ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட சிற்றுண்டி விருந்தில் கவிஞரும் கவிமாலையின் தோற்றுவிரப்பாளரில் ஒருவருமான கவிஞர் பிச்சினிக்காட்டு இளங்கோ அவர்கள் காபியை சுவைத்துக்கொண்டிருக்க எதிர்பாரவிதமாக நான் அவர்மேல் மோத சூடான காபி அவரின் முகத்தில் கொட்டிவிட்டது. இந்திகழ்வு எனக்கு ஏழு ஆண்டு நிறைவின் திருஷ்டியை கழித்ததாகவே மனதில்பட்டது. பின் காபி கொட்டியதும் சிலர் பதறி முதல்உதவி பண்ணியதும் முகத்தில் காபிகொட்டியதால் ஏற்பட்டிருக்ககூடிய அந்த வலியை கவிஞர் அவர்கள் காட்டிகொள்ளாதுமாக நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

ரசித்த பிடித்த வாசித்த அங்கத்தில் முதலாவதாக நான் எழுந்துசென்று கடந்த மார்ச்மாதம் குழுதம் தீராநதியில் வெளிவந்த கவிஞர் எழுத்தாளர் ஞானக்கூத்தனுடனான நேர்காணலில் சொல்லப்பட்ட மரபுக் கவிதையில் பயிற்சி இல்லாத பிராமணர்களால் உண்டாக்கப்பட்ட வடிவம்தான் புதுக்கவிதை என்று சொல்லப்படுகிறதே என்ற கேள்வியையும் அதற்கான பதிலையும் கூறிவிட்டு என்னுடைய கண்ணோட்டத்தில் மாற்றங்கள் வரவேற்கப்படவேண்டும் மாற்றங்களை விரும்பாமால் ஒருசிலர் அடம்பிடிப்பதாகச் சொல்லி புதுக்கவிதையில் இருந்து நான் சற்று விலகி நவீனம் சார்ந்த தேடலில் இருப்பதாக சொல்லி அப்படி நான் எழுதிய கீழ்காணும் கவிதையை படித்துவிட்டு அமர நான் சொன்ன கருத்துக்களின் மீதும் என் கவிதைமீதும் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது.

நான் சொல்லிச்சென்ற கவிதை உங்களுக்காக
அது ஒரு
வானாந்திரம்,
அங்கே
வால் இல்லாத
குரங்குகள்தான் அதிகம்.
மரம் ஏறும் போது
மற்ற குரங்குகளை சந்திக்கின்றன.
சந்தோச துள்ளலில்
அங்கும் இங்கும் ஓடத்துவங்குகிறது,
அதன் சப்தங்கள்
வெகு தூரம் வரை விரவுகிறது,
குரங்குகள் எல்லாமும் ஓர் இடத்தில் குழுமத்தொடங்குகிறது
புரிபடாத பாவனைகளை
வேடிக்கை பார்க்க தொடங்குகின்றன
கையைத்தட்டியும்
தலையைச்சொறிந்தும்
தங்களின் இருப்பை வெளிப்படுத்துகின்றன
ஒரு சில குரங்குகள்
யாருக்கும் தெரியாமல்
பக்கத்து குரங்குகளை பயமுறுத்த பார்க்கிறது
பதிலுக்கு அக்குரங்கு புன்னகைக்கிறது
உச்சிவெயிலில் உரத்தசப்தங்களுடன்
குரங்கு கூட்டம் கலைகிறது
மீண்டு வரும் குரங்குகளுக்கோ
ஒரு வித வெறி ஏற்படுகிறது
விடுபடவேண்டிய தவிப்புகளுடன்
தன் பார்வையை சுழற்றுகிறது
கிடைக்கும் சந்தர்ப்பத்தில்
அதற்கான மரம்தாவி
தத்தமது சேஷ்டைகளுடன்
விடைபெறுகிறது என்று சொல்லிமுடித்து அமரபோக

கவிஞர் பிச்சினிக்காட்டு இளங்கோ அவர்கள் எல்லோரும் உங்கள் கவிதையை புரிந்துகொள்வது என்பது சிரமம் ஆகவே என்ன கண்ணோட்டத்தில் இந்தகவிதை உருவாக்கப்பட்டது என்று வினவ அதற்கு நான் கல்லூரி வாழ்க்கையை ஒப்பீடாக காட்டிஉள்ளேன் என்று கூறி அமர்ந்தேன்.

அதன் பின் கவிஞரும் நண்பருமான அகரம் அமுதா அவர்கள் மரபுசார்ந்து அவரது பார்வையில் பேசிவிட்டு ஒரு கவிதையை மனப்பாடம் செய்யாமல் கையில் பேப்பர் வைத்துகொண்டு படித்துவிட்டு அதுவும் அந்தகவிதை எப்படி உங்களால் ரசிக்கப்பட்டது பார்க்கப்பட்டது என்றுகூட சொல்வதில்லை உங்களின் ரசிப்புதன்மையற்ற இந்த ரசித்த பிடித்த வாசித்த அங்கம் தேவையா அவரது அர்த்தப்பார்வையில் சொல்லி அமர்ந்தார். இந்நேரத்தில் அங்கே கொஞ்சம் இறுக்கமான சூழல் நிழவியது. பின் பேசிய தன்முனைப்பு பேச்சாளர் கண்டனூர் சசிக்குமார் மற்றும் கவிஞர் பாலுமணிமாறன் அவர்களின் பார்வையிலான விவாதங்கள் எங்களை மகிழ்சியின் எல்லைக்கு அழைத்து சென்று இறுக்கமான சூழலை தளர்தியது என்றே கூறவேண்டும்.

மேலும் நவீன கவிதைபற்றிய உங்களின் பார்வை ரசிப்புதன்மை என்ன என்றுவேறு கவிஞர் அகரம் அமுதா வேறு சொல்லிவிட

கவிஞர் பாலுமணிமாறன் அவர்கள் அன்று நான் படித்த
அது ஒரு
வானாந்திரம்
அங்கே
வால் இல்லாத
குரங்குகள்தான் அதிகம்

என்ற கவிதையையே மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை வார்க்கும் கவிஞர்களுக்கான ஒப்பீடாக எனக்கு தோன்றுகிறது என்று அவரின் பார்வையில் கூறி
யாருக்கும் தெரியாமல்
பக்கத்து குரங்குகளை பயமுறுத்த பார்க்கிறது
பதிலுக்கு அக்குரங்கு புன்னகைகிறது

என்ற வரியில் புன்னகைகிறது என்பதை நான் நிராகிப்பதாக எடுத்துக்கொள்கிறேன் என்று அவரது பார்வையை தெளிவாக சொல்லி அமர்ந்தார்.

பின் தமிழ் அகராதியை நன்கு படித்த கவிஞர் அகரம் அமுதா தமிழ் அகராதியில் புன்னகைகிறது என்பதற்கு நிராகரித்தல் என்று பொருள் எங்கும்இல்லை என்று கூறி அமர்ந்தார். பின் கவிதைபற்றி கவிஞர்கள் இனியதாசன் கோவிந்தராசு இறைமதியழகன் திருமதிகலையரசி என்று அவர்களின் ஆரோக்கியமான கவிதைபற்றிய விவாத கருத்துக்களை கூறிச்சென்றனர். இடையிடையே கவிஞர் பிச்சினிக்காட்டு இளங்கோ அவர்களும் விவாதம் ஆரோக்கியமாக செல்ல அவரது கருத்துக்களை சொல்லி வழிநடத்தினார்.

பின் சிங்கப்பூர் சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் கவிஞர் எழுத்தாளர் கேசவன் அவர்கள் சங்ககாலத்தில் தமிழ் பண்பாடு எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வின் கடைசியாக இந்த மாத கவிமாலையின் போட்டித்தலைப்பான மெழுகுவர்த்தி எனும் தலைப்பில் கவிஞர்கள் கோ.கண்ணன், கருணாகரசு, திருமதி மலர்விழி இளங்கோவன், திருமதி மாதங்கி உள்ளிட்ட பல கவிஞர்கள் தங்களின் கவிதையை படைத்தனர்.

கவிஞர்கள் கோ.கண்ணன், இனியதாசன், மற்றும் தங்கச்சிமடம் மகேஷ்குமாரின் கவிதைகள் சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் அவாகளின் கரத்தால் பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

பின் கவிஞர் பாலுமணிமாறன் அவர்கள் கவிஞர் அகரம் அமுதாவிடம் தனிப்பட்ட முறையில் புன்னகைகிறது என்பதை நான் எப்படி நிராகரித்தலாக எடுத்துக்கொண்டேன் என்று பின்வருமாறு கூறினார்.

பக்கத்து குரங்குகளை பயமுறுத்த பார்க்கிறது
பதிலுக்கு அக்குரங்கு புன்னகைகிறது
இது கவிதை வரி
1. எல்லாபுன்னகைகளும் அன்பின் அங்கிகரிப்பல்ல. அது நிராகரிப்பின் மொழியாகவும் இருக்கலாம்.
2. எல்லாப் புன்னகைகளும் சிநேகத்தின் அரவணைப்பல்ல. அது வெறுப்பின் விரல்களாகவும் நீளலாம்
3. புன்னகைக்கும் மொழியுண்டு அது மொழிபெயர்ப்பவனை பொறுத்து அர்த்தம் மாறுபடுகிறது.
4. பயமுறுத்துவரைப் பார்த்து எப்படி புன்னகையிருக்கும். பயமறியா மரம் தாவும் குரங்குகள்?

என்று புரியவைத்தார்.
நான் என்தாயின் கருவறையில் இருந்தே கற்க ஆரம்பித்தேன் இன்று வரை அந்த கற்றல் என்னுடையதேடல் இச் சமுகத்தில் நான் சந்திக்கும் மனிதர்களிடம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பார்க்கையில் கவிதைமேல் கவிஞர்கள் மேல் எடுத்துக்கொள்ளும் கவிஞர் பாலுமணிமாறன் அண்ணனின் அக்கறை அவரிடம் நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய ரகசியங்கள் இருப்பதாகவே சொல்கிறது.

மேலும் கவிஞர் பாலுமணிமாறன் அவர்களின் கருத்து நம் கவிஞர்கள் ஆரோக்கியபூர்வமான கருத்து செரிவுள்ள இன்றைய மாதந்திர கவிமாலை போல எதிர் வரும் கவிமாலையும் அமையவேண்டும் என்றார். கவிஞர்களும் அவரவரின் கவிதை தேடல்களில் வளர்ந்திருப்பதாக கூறினார்.

இன்றைய விவாதத்திற்கு பிள்ளையர் சூழி போட்டவன் நான். விவாதங்கள் ஆரோக்கியமாக சென்றது. இருந்தாலும் அங்கு நடந்த விவாதத்தின் அடிப்படையில் ஒரு சில கருத்துகள் என் கவிநண்பர்கள் ஒரு சிலரையாவது பாதித்து இருக்க கூடும் அவர்களுக்காக என் வருத்தத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.

எதிர் வரும் கவிமாலை 85வது கவிமாலை எட்டாவது ஆண்டின் முதல்கவிமாலை. கவிதையை கவிஞர்களை நேசிக்க கூடிய அமைப்பு கவிமாலை. என்னை பொருத்த வரையில் ஒரு அமைப்பை ஆரம்பிப்பது என்பது மிகச்சுலபம் ஆனால் வெற்றிகரமாக ஆரோக்கியமா தொடர்ந்து நடத்துவது என்பது?

கவிமாலைபற்றி பெரும்பாலன ரசிகர்கள் சொல்வது அந்த அமைப்பாப்பா ரொம்ப நல்லா இருக்குமே, சிறப்பாக செய்வார்களே என்பார்கள்.

கவிமாலையின் இன்றைய வளர்சிக்கு அன்றே வித்திட்டவர்கள் கவிஞர்கள் பிச்சினிக்காட்டு இளங்கோ புதுமைத்தேனீ அன்பழகன் ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் அவர்கள். அவர்களுக்கு என் நன்றியையும், கவிமாலையின் எட்டாவது ஆண்டிற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நட்புடன் பகிர்வது: பாண்டித்துரை

Series Navigation

பாண்டித்துரை

பாண்டித்துரை