அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்

This entry is part of 34 in the series 20070517_Issue

கவிஞர் புகாரி


அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம் இதோ இதோ வந்துவிட்டது…. மிகுந்த ஆவலோடு போட்டியில் பங்குபெற்ற அத்தனை கவிதை உள்ளங்களும் நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அதைவிட போட்டிக் கவிதைகளா, அவற்றை வாசிக்கக் கிடைக்கும் சுகமா, பரிசுக்குரிய கவிதை எது, அதை எழுதியவர் யார், தேர்வு செய்த நடுவர் யார், எப்படி அவர் தேர்வு செய்தார், ஏன் அதைத் தேர்வுசெய்தார் என்று அறியத் துடிக்கும் தவிப்புகளோடு அன்பர்களின் இதய இழைகள் சுழல்கின்றன.

http://groups.google.com/group/anbudan

அன்புடன் உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம். அது 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. இன்று இம்மடல் எழுதும் நேரம்வரை 758 அன்பர்கள் அதில் இணைந்துள்ளார்கள், 66,393 மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். அன்புடன் தமிழில் எழுதுவோருக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே அது இயங்குகிறது. தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகள் பலவற்றிலும் அங்கே மடலாடல்கள் நிகழ்கின்றன. எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு அன்புடன் ஒரு சேவையாகச் சொல்லித்தருகிறது.

அன்புடனின் இரண்டாம் ஆண்டு நிறைவினையொட்டி பல நிகழ்சிகள் தொடங்கப்பட்டன. அவை அனைத்தும் அன்பர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றியுடன் முடிந்தும் இன்னும் நடைபெற்றும் வருகின்றன. அன்புடன் சுடரோட்டம் – ஆளுனர் அன்பர் முபாரக் – நடந்துகொண்டிருக்கிறது. அன்புடன் தித்திப்பு யுத்தம் – நடுவர் அன்பர் ஆனந்த குமார் – நடந்து முடிந்துவிட்டது. அன்புடன் பட்டிமன்றம் – நடுவர் அன்பர் ரசிகவ் ஞானியார் – நடந்துகொண்டிருக்கிறது. அன்புடன் கவிதைப் போட்டிகள் – இதைப்பற்றித்தானே இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்

அன்புடன் ஆண்டுவிழாக் கொண்டாத்தின் தலைவராக கவிஞர் ப்ரியன் (விக்கி) பொறுப்பேற்று தன் பணிச்சுமைகளுக்கு இடையிலும் சிறப்பாகச் செய்துவருகிறார். துவக்கம் முதலே அனைத்துப் பணிகளையும் மிக மிக அக்கறையாக வெகு சிறப்பாக அன்புடனின் சேவைக்கரசி சேதுக்கரசி செய்து வருகிறார்.

போட்டி முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாக நடுவர்கள் யார் யார் என்று அறிவிக்க வேண்டாமா?

கவிதைப் போட்டிகளை ஐந்து வகையாகப் பிரித்துப் போட்டி வைத்தோம்.

1. இயல்கவிதை – வாசிக்கச்சுவை – கவிதையை யுனித்தமிழில் தட்டச்சு செய்து தரவேண்டும்.
2. படக்கவிதை – பார்க்கச்சுவை – கவிதையை கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஏற்ப எழுதித் தரவேண்டும்
3. ஒலிக்கவிதை – கேட்கச்சுவை – கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்
4. இசைக்கவிதை – பாடச்சுவை – கவிதையை பாடிப் பதிவு செய்து தரவேண்டும்.
5. காட்சிக்கவிதை – இயக்கச்சுவை – கவிதையை இயங்கும் காட்சி இணைப்போடு பதிவு செய்து தரவேண்டும்

எதிர்பார்த்ததைவிட கவிதைப் போட்டிக்கு ஏராளமான கவிதைகள் வந்து குவிந்துவிட்டன. படைப்பாளிகளிடமிருந்து சில சந்தேகங்களும் எழுந்தன. அவற்றுள் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு நான் இவ்வேளையில் பதில் தர விரும்புகிறேன். ஏன் மரபுக் கவிதைகளுக்கு என்று ஒரு பிரிவு ஏற்படுத்தவில்லை என்பதுதான் அந்தக் கேள்வி.

கவிதை என்றால் எனக்கு அனைத்து வகைகளும் ஒன்றுதான். கவிதைக்குள் கவிதை இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கும் கவிஞன் நான். கவிஞனிடமிருந்து கவிதையாய் மலர்ந்திருக்கும் கவிதை, களையாகிக் போன கவிதை முயற்சி என்ற இரு பிரிவுகள் மட்டுமே எனக்குக் கவிதைகளில் உண்டு. இந்த இரண்டுமே எனக்கு நிகழ்ந்தும் இருக்கிறது 🙂 மற்றபடி மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை, பின் நவீனத்துவகவிதை என்றெல்லாம் நான் பிரித்து போட்டி வைக்க வில்லை.
மேலும் மரபுக்கவிதைக்குள் வெண்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, கலிப்பா, சிந்து என்றெல்லாம் பல பிரிவுகள் பிரித்து போட்டி வைக்க விரும்புவதும் இல்லை.

ஒருவர் தனக்குப் பிடித்த ஒரு வெண்பாவை எழுதி ஒரு படத்திற்குக் கவிதையாய் அனுப்பியிருக்கலாம். இன்னொருவர் ஒரு ஹைக்கூ கவிதையை வீடியோ காட்சி
அமைத்து காட்சிக் கவிதைக்கு அனுப்பியிருக்கலாம். எல்லாமும் சமமாகவே கருதி நன்றாக வந்திருக்கும் கவிதையைப் பரிசுக்குரியதாய் நடுவர்கள் தேர்வு செய்வார்கள்.
மேலும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், “காற்றுவெளியிடைக் கண்ணம்மா” என்ற கவிதையை பாரதி யுனித்தமிழில் தட்டச்சு செய்து மட்டும் அனுப்பி இருந்தாரானால் அது இயல் கவிதை பிரிவில் வெற்றி பெற்றிருக்கும். அதே கவிதையை தன் சொந்தக் குரலில் வாசித்து பதிவு செய்து அனுப்பி இருந்தாரானால் அது ஒலிக்கவிதை பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை அவர் ராகத்துடன் பாடி பதிவு செய்து அனுப்பி இருந்தாரானால் அது இசைக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை அன்புடன் அனுப்பிய பத்தாவது படமான கடற்கரையில் நிற்கும் காதல் ஜோடிக்கு அனுப்பி இருந்தாரானால் அது படக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அதே கவிதையை ஜெமினி கணேசனையும் சாவித்திரியையும் வைத்து காட்சிப் படமாக்கி அனுப்பி இருந்தாரானால் அது காட்சிக் கவிதைப் பிரிவில் வெற்றிபெற்றிருக்கும். அவ்வளவுதான். ஆனால் எழுதியது பாரதியார் என்று மட்டும் நடுவர்களுக்குத் தெரியவே தெரியாது 🙂 பாரதியார் மீசையை முறுக்கிக்கொண்டு வந்து பரிசு வாங்கும்போது மட்டுமே நடுவர்களுக்குத் தெரியவரும் 🙂

இதேபோல இந்த ஐவகைப் பிரிவுகளிலும் எவரும் மரபோ, புதுசோ, ஹைக்கூவோ, நவீனமோ, பின்நவீனமோ எழுதி இருக்கலாம். அன்புடன் அனைத்துக் கவிதைகளையும் அணைக்கும் அன்புடன்தான் இந்தப் போட்டிகளை அறிவித்தது. போட்டிக்குப் படைப்புகளை அனுப்பிவைத்த கவிஞர்கள் யார் யார் என்று எந்த நடுவருக்கும் தெரியாது. நடுவர்கள் யார் யார் என்று எவருக்குமே தெரியாது. அதைத் தெரிந்த மூவர்:

1. ஆண்டுவிழாத் தலைவர் ப்ரியன் என்கிற விக்கி
2. அன்புடனின் தொடர் சேவைக்கரசி சேதுக்கரசி
3. நான் (உங்கள் அன்புடன் புகாரி)

இப்போதும் நான் உங்களுக்கு இயல் கவிதைப் பிரிவின் நடுவர் மாலனை மட்டுமே அறியத் தந்திருக்கிறேன். அடுத்தடுத்த கவிதைப் பிரிவின் பரிசுக்கவிதைகளின் அறிவிப்பின் போதுதான் அந்தந்த நடுவர்களையும் முறையாக நாங்கள் உங்களுக்கு அறியத் தருவோம். படைப்பு மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே இதற்கான காரணம். ஆயினும் நாங்கள் தேர்வு செய்த அத்தனை நடுவர்களும் கவிஞர்களின் பெயர்களைத் தந்திருந்தாலும்கூட நடுநிலையாகவே தேர்வு செய்திருப்பார்கள்.

கவிதைப் போட்டிக்கு ஏராளமான கவிதைகள் வந்திருந்ததால் நடுவர் குழுவையும் அதற்கேற்றவாறு பல நடுவர்களாக நியமிப்பதே சரி என்று பட்டது. எழுத்தாளர் “திசைகள்” மாலனை நடுவராய் இருக்க அழைத்தோம். தன் பணிச்சுமைகளுக்கு இடையே அவர் அன்புடன் இயைந்தார். மாலனை அறியாதோர் இணையத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் புதியவர்களுக்காக மாலனைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்.

மாலன் ஒரு கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமரிசகர், கணிஞர் என்று பலமுகங்கள் கொண்டவர். நீண்டகாலம் இலக்கியம் மற்றும் அரசியல் அனுபவங்களை அழுத்தமாகப் பெற்றவர். இணையத்தில் அதிகம் எழுதும் முக்கிய எழுத்தாளர். முதன் முதலாக யுனித்தமிழில் வந்த இணைய சஞ்சிகையான திசைகளின் ஆசிரியர். மைக்ரோசாப்டின் விண்டோஸ் மொழி இடைமுகப் பொதி மற்றும் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி ஆகியவற்றின் திட்டங்களை முன்னின்று நடத்தியவர். இவரிடம் இயல்கவிதைப் பிரிவினைக் கொடுத்தோம். எண்ணிக்கையில் அவை மிக அதிகமாக இருந்தும் எங்கள் வேண்டுகோளை அன்புடன் ஏற்று இவர் மட்டுமே தனித்த நடுவராக இருந்து இயல் கவிதைப் பிரிவின் பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்திருக்கிறார். எனவே அன்புடன் முதலில் அறிவிக்கப்போகும் வெற்றிக் கவிஞர்கள் இயல்கவிதைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள்.

பரிசு பெற்ற கவிதைகள் தனியாக்வும், நடுவரின் தேர்வுரை தனியாகவும் வருகிறது. அவற்றையும் திண்ணையில் காணலாம்.

அன்புடன் புகாரி

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation