இலர் பலராகிய காரணம்

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

முனைவர் மு. பழனியப்பன்


செய்க தவம்; செய்க தவம்; தவம் செய்தால் எய்த நினைத்ததை எய்தலாம் என்பது பாரதியார் கூற்று. இங்கு தவம் என்ற சொல் காட்டிடை தனித்துறைதல், ஞானம் தேடி கோயில் குளம் சுற்றல், யாகம் இயற்றி இறைவனிடம் வேண்டுவன பெறுதல் என்ற பொருளில் பாரதியாரால் கையாளப்பெறவில்லை. மாறாக ஒரு பொருள் குறித்த சிந்தனை. அதன் செயல்வடிவம், பல்வேறு சூழ்நிலைகளிலும், இன்னல்களிலும் தான் கொண்ட சிந்தனையிலேயே கவனம் செலுத்தி வெற்றிபெறுதல் என்ற பொருளுடையதாகக் கையாளப்பெற்றுள்ளது. பாரதியாரின் இவ்வடிகள் வழியாக எய்த நினைக்கும் எதையும் தவம் முலம் பெறலாம் என்ற கருத்து பெறப்படுகின்றனது.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்(கு.எ.265) என்ற குறள் மேற்கண்ட பாரதியின் கருத்திற்கு விதையாகும். இக்குறளில் காட்டப்பெற்றுள்ள செய்தவம் என்ற சொல் வினைத்தொகையில் அமைந்து முக்காலத்திற்கும் உரியதாக விளக்குகிறது. முயலப்படும் என்ற வினையும் தவமுயற்சிகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கும்; வெற்றி அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துவதாக வள்ளுவரால் படைக்கப் பெற்றுள்ளது.
வேண்டியதை வேண்டியாணங்கு பெற உதவும் தவம், துறவறத்தார்க்கு மட்டுமே உரியது அன்று. தவம் செய்வோர் துறவிற்குக் கூறப்பெற்ற இலக்கண வரையறைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதாவது ஐந்துபுலத்தை விடல் வேண்டும் (கு.எ. 343)வேண்டின் உண்டாகத் துறக்க(கு.எ.342)? யான், எனது செருக்க அறுக்க வேண்டும்(கு.எ. 346) பற்றா;றhன் பற்றினைப் பற்ற வேண்டும் (கு. எ.350) என்ற இலக்கணணங்கள் தவம் செய்வோர்க்குத் தேவைப்படுவதில்லை. செய்பவர்- செய்பவராகவே? தன்னை எவ்விதத்திலும் மாற்றிக் கொள்ளாதவராக எதையும் குறைத்துக் கொள்ளாதவராக எவற்றையும் மிகுத்துக்கொள்ளாதவறாக தம் கருமம் செய்து முடித்தால் அதுவே தவமாகிறது.

தவத்திற்கான இலக்கணங்கள்

தவத்திற்கும் இலக்கணங்கள் உண்டு. அவை பின்வருமாறு. உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை(கு.எ.261) தன்னுயிர் தானறப் பெறல்(கு.எ.268) ஆகியன தவத்திற்கான இலக்கணங்கள் ஆகும்.
இராவணன் சங்கரனிடம் வாள் பெற்றதும், சூரபன்மன் வச்சிரகம்பம் ஏறி தன்னைத் துளாக்கி நின்றதும் சில தவமுறைகளாகும்.

கடிதின் உச்சிநின் றுருவியே வச்சிர கம்பத்து
அடித னில்சென்று சூரபன் மாவெனும் அவணன்
படிவ முற்றுநுண் துகளுற உளம்பதை பதைத்து
முடிய மற்றது கண்டனன் மடங்கல் மா முகத்தோன்.(கச்சியப்பர் கந்தபுராணம், பா.எ.2401)

என்பது சூரபன்மன் செய்த தவமுறையாகும். மேற்கண்ட இரு சான்றுகளும் தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டு தவமியற்றி வெற்றி பெற்றதற்கான இலக்கியச்சான்றுகள்;. தவம் என்பது தனக்கு உற்ற நோய் நோன்றல்- என்ற திருக்குறள் எல்லையைத் தாண்டி இவ்விரு செயல்களும் தனக்குத்தானே துன்பம் செய்து கொண்ட நிலைமையின.
தன்னுயிர்க்கு உறுகண் ஏற்பட்டால் அதைப் பொறுத்துக்கொண்டு பிற உயிர்களுக்கு உறுகண் செய்யாமல் இருத்தல் மிகச் சிறந்த தவமாகின்றது. இதன்முலம் வள்ளுவர் உயிர்ப்பலி செய்து யாகத்தால் அடையப்பெறும் தவத்தை ஏற்கவில்லை என்பது தெளிவு.
அண்ணல் காந்தியின் சத்தியாகிரகப் போராட்டம் தன்னை வருத்தி பிற உயிர்களைக் காக்கும் நிலைமைத்தது. ளூபிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொருபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின் மிகத் தாழ்மையான உயிரையும் தன்னைப்போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும் (காந்தியடிகள், சத்திய சோதனை ,ப.604) என்ற அவரின் கருத்து அப்படியே வள்ளுவரின் கருத்தினை வழி மொழிவதாக உள்ளது.
தவம் என்பது தன்னுயிர் அற மன்னுயிர் காத்தல் என்பது மற்றெhரு இலக்கணமாகும். ளதன்னுயிர் தனக்குரிமையானது அல்ல; அது பிறஉயிர்களுக்கானது என்ற நிலையில் இராமன் பதினான்கு ஆண்டு தவமியற்றி இராவணனைக் கொன்று வென்றான். அதனால் அவன் எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்? அளிவரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும்பத அமுதம் ஆனான்( கம்பர், இராமாயணம், மீட்சிப்படலம்,பா.எ. 319.)
இங்கு வள்ளுவரின் தவ இலக்கணணங்களுக்குச் சான்று காட்டப்பெற்ற அனைவருமே இல்லற நெறிப்பட்டோர் என்பது கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் இராவணன், சூரபன்மன் ஆகியோர் மறவழிப்பட்டோர் ஆயினும் அவர்களும் தவமியற்றினால் வெற்றிகாண முடியும் என்பதையும் அறிய வேண்டும். மேலும் இவ்விருவரும் தவம் வெற்றிபெற தன்னை அழித்துக் கொள்ள முன்வந்தவர்கள். அத்தவத்தால் வெற்றிபெற்றபின் மற்ற உயிர்களைத் துன்பப்படுத்த முனைந்தவர்கள்; அவர்கள் தொடர்ந்து தவவழியில் நின்றிருப்பார்களேயானால் அவர்கள் பிற உயிர்களைத் துன்புறுத்தி தமக்கு அழிவு தேடிக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதும் கருதத்தக்கது.
தவம் செய்யத் தகுந்தவர்கள்
தவம் செய்யத் தகுந்தவர்கள் இவர்களென வள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார். தவத்தினைத் துறவுடையோர் செய்யலாம். அவர்களின் தவம் பிறப்பு அறுக்கும் உயர்ச்சியது. இவர் தவிர மற்றவர்களும் செய்யலாம். ஆனால் அவர்களின் தவம் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடுவது. ஆனால் மற்றவர்கள் தவம் துறவறத்தார்க்கு மட்டுமே உரியது என அதனைச் செய்ய மறந்துவிட்டமை வருத்தத்திற்குரியது என வள்ளுவர் கருதுகின்றார். துரந்தார்க்குத் துப்புறவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள்(கு.எ.263) என்ற குறளில் தொனிக்கும் வருத்தத்தை இனி வாழும் இல்லறத்தாராவது களைய வேண்டும்.
தவமும் தவம் உடையவர்க்கே ஆகும். (கு.எ.2620) என்ற குறளடி தவம் என்பது ளதவமாகச் செய்வேன் என்ற தன்முனைப்புடையவருக்கே தவம் ஆகக்கூடியது என்பதைக்காட்டுவதாகும். நிலைத்த கொள்கை, நிலைத்த மனம் இல்லா மற்றவர்கள் தவம் செய்யப் புகுந்தால் அது அவமாக முடியும். எனவே தவம் செய்பவர்க்கு அவர் மனமே, அவர் கொண்ட கொள்கையே அவரை தவத்திற்கு உரியவராக ஆக்குகின்றது என முடிவு கொள்ளலாம்.
தவம் செய்பவர்கள் தாம் நினைத்த செயலை எச்சூழலிலும் தவறாது செய்யும் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் வெறும் தவம் செய்ய வேண்டும் என்ற ஆசை உடையவர்களே ஆவர். தவம் செய்வார் தம் கருமம் செய்வார்மற்று அல்லார் அவர் செய்வார் ஆசையுள் பட்டு(கு.எ.266) என்பது குறள்.
இதன்முலம் தவம் செய்வேன்ஸ்ரீ என்ற ஆசை அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. ஆனால் அத்தவத்தைச் சரியான முறையில் செய்பவர்க்கே தவம் தவமாக அமைகிறது. மற்றவர்களுக்கு அவமாக தவம் அமைந்துவிடும். எனவே தவம் செய்வோம் என்ற ஆசையை உறுதியாக்கி அதையே தவமாகச் செய்தால் தவம் அமையப்பெறும் என்ற வள்ளுவரின் கருத்து போற்றத்தக்கதாகின்றது.
தவத்தார் இயல்பு
தவத்தை ஏற்றுச் செய்ய எண்ணுபவர்கள் எவ்வகைத் துன்பம் தனக்கு ஏற்பட்டபோதும் கலங்காது செயலாற்றும் தீரம் மிக்கவர்களாவர். துன்பம் வர வர அவர்களின் தவம் மேலும் மேலும் உறுதியாகின்றது. சுடச்சுட ஒளிரும் பொன்போல அவர்கள் துன்பம் வர வர மேன்மேலும் தவத்தின்பால் ஈர்ப்பு கொள்ளுவர்; என்பது வள்ளுவரின் வாக்காகும்.(கு.எ.267)
தவத்தோர் வலிமை
மேற்கண்டவகையில் தவம் செய்வோர், தம் தவத்தால் பயன்பல பெறுகின்றனர். தவம் செயவோர் தம் தவவலிமையால் கூற்றுவனையும்கூட அஞ்சவைக்கமுடியும். கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப் பட்டவர்க்கு(கு.எ.269) என்பது குறள் நெறி.

தவமுடையவர்கள் மன்உயிர்கள் தொழத்தக்கப் பெருமையினர். தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்உயிர் எல்லாம் தொழும்.கு.எ.268) என்ற குறளடியும் இங்கு எண்ணத்தக்கது.
தவத்தார் தீயவரைத் தம் சொல்லால் செயலால் கண்டிக்கும் வல்லமையைப் பெற்றவர்கள். நல்லவரை மேன்மைப்படுத்தவும் அவர்களாலும் இயலும். ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணித் தவத்தான் வரும்(கு.எ.264) என்ற குறளடி மேற்கருத்தை எடுத்துரைக்கின்றது. இவையணைத்தும் தவத்தாரின் வலிமைகள் ஆகும்.
அறத்துப்பாலில் இடம்பெறும் தவம் என்னும் அதிகாரத்தில் மேற்கண்ட ஒன்பது குறட்பாக்களும் உரையாசிரியர்களால் ஒத்த பொருளுடையனவாகக் கருதப்பட்டுள்ளன. ஆனால் நிறைவு குறட்பாவான இலர்பலர ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் (கு.எ.270) என்பதற்கு பொருள் காணப் புகுகையில் உரையாசிரியர்கள் அவரவர்க்கு ஏற்ற வகையில்ஒவ்வொரு நோக்கில் பொருள் கண்டுள்ளனர். இக்குறள் உணர்த்தும் உண்மைப்பொருள் என்ன என்பதை அறிய உரையாசிரியர்கள் பலரது கருத்துக்களையும் ஒருங்கிணைத்து ஆராய வேண்டியுள்ளது. இதற்காகவே இக்கட்டுரை வரையப்பெறுகின்றது.
உரையாசிரியர்கள் கருத்துக்கள்
பரிமேலழகர்
இலர் பலராகிய காரணம்-உலகத்துச் செல்வர்கள் பலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின் நோற்பார் சிலர் நோலாதவர் பலர்- அது தவம் செய்வார் சிலராக அது செய்யாதார் பலராதல்.
செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது இன்மை இன்மைகளையும் குறித்து நின்றன. என்னை நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை பண்ண பணைத்த பெருஞ்செல்வம்என்றாராகலின்.( தண்டபானி தேசிகர்(தொ.ஆ) திருக்குறள் உரைவளம்(அறத்துப்பால்)?ப.358.)

மணக்குடவர்
பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவம் செய்வார் சிலராதல் அது செய்யாதார் பலராதல் என்றவாறு.
பருதியார்
பாக்கியவான்கள் சிறிதாக மிடியாளர் பெருத்ததாகிய காரியம் எது என்னில் தவம் பண்ணினவர்கள் அற்பம்தவம் செய்யாதார் பலராகையால் என்றவாறு.
காளிங்கர்
இவ்வுலகத்து இவ்வாறு தமது பேரிடர் நீங்கிப் பெரும்பயனுறுதலைப் பலரும் இலராதற்கு காரணம் யாதோ எனின் உலகத்தில் ஞானம் பெற நோற்பார் சிலர். மற்று நோலாதார் அளவிறந்தாராவர் என்றவாறு(மேலது)

கு. ச. ஆனந்தன்
துய்க்கும் பொருளின்றி அடிப்படைத் தேவைகளுக்கும்கூட வக்கற்றுத் துடிக்கும் வறிவயர்கள் சமுதாயத்தில் பல்கிப் பெருகிப் போனதற்குக் காரணம் சமதாயப் பயன் விளைவிக்கக் கூடிய பொதுக்கடமைகளை நிறைவேற்றுபவரும் தனக்கு வந்துற்ற துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு சமுதாயத்தில் எவ்வகை இடுக்கணையும் செய்யாதிருப்பவரே மெல்ல மெல்லக் குறைந்து இறுதியில் சிலராகத் தேய்ந்துவிட்டனர். தம் கடமையை மறந்து ஆசை என்னும் தன்னலத் தேட்டத்தினால் உந்தப்பட்டுத் தவம் செய்யாதவர் பலராகப் பெருகிவிட்டனர்( இரா. சாரங்கபாணி(தொ.ஆ)திருக்குறள் உரைவேற்றுமை?ப.405.).
ச. வே. சுப்பிரமணியம்
உலகில் வறுமையுடையோர் பலர் இருக்கக் காரணம் தவம் செய்தோர் சிலர் செய்யாதவர் பலர்.( ச.வே. சுப்பிரமணியம்(உ. ஆ),திருக்குறள் நயவுரை, ப.85.)

தமிழண்ணல்
உலகில் பலர் செல்வம் இல்லாதவர்களாய் இடர்ப்படுகின்றனர். காரணம் என்ன துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தம்கடமையைத் தவமாகச் செய்வார் சிலர்; அங்ஙனம் தாங்கிக்கொள்ளாதவர்களே பலர் ஆவர். அதனால் தான் பலர் வறுமையில் வாடுகின்றனர்.( தமிழண்ணல்?திருக்குறள் நுண்பொருளுரை? ப.129. )

இலர் பலராதல் என்பதற்கு மட்டும் பலர் மாற்றுரை கண்டுள்ளனர். அவை பின்வருமாறு.
மு. வரதராசன்.
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம்
நாமக்கல் கவிஹர் இராமலிங்கம் பிள்ளை
(அப்படிக் கூற்றம் குதித்தவர்கள்) பலபேர் இல்லாதிருப்பதற்குக் காரணம்
திருச்சி. கோ. வரதராசனார்
அறிவும் ஆற்றலும் இன்பமும் இல்லாதவர் பலராகவும் இவை உடையார் சிலராகவும் இருப்பதற்குக் காரணம்
நாகை. செ. தண்டபானியார்
உலகத்தில் ஞானிகள் சிலராக ஞானமில்லாதவர் பலராயிருத்தற்குக்காரணம்
முத்து
இலர் -வாழ்க்கையில் பெற வேண்டிய சிறந்த பேறுகளைப் பெறாதவர் பலராதற்குக் காரணம்
சாரங்கபாணி.
இலர் பலர் என்பதில் இன்மை பொதுவாகக் கூறப்பட்டிருத்தலின் உரையாசிரியர்கள் பல வேறுபட்ட இன்மைகளைக் குறித்துள்ளனர். இலர் என்பதற்குப் பேரிடர் நீங்கிப் பெரும்பயன் உறாதார் ஆற்றலில்லாதவர் அறிவும் ஆற்றலும் இன்பமும் இல்லாதார் வாழ்க்கையில் சிறந்த பேறுகளைப் பெறாதார் எனப் பலவாறு உரைகண்டுள்ளனர். ளஇன்மை என்பது மரபாக வறுமையைக் குறித்தலினாலும் சிறப்பாக அறிவின்மை இன்மையுள் இன்மை (841) என ஆசிரியர் கூறியிருத்தலினாலும் இவ்விரண்டு இன்மைகளையும் குறித்து எழுதிய உரைகள் சிறப்புடையன.( இரா.சாரங்கபாணி மேலது)
இவ்வாறு இலர் பலராதல் என்ற தொடருக்கு பழைய உரையாசிரியர்கள் முதல் இக்கால உரையாசிரியர்கள் வரை பலவகையில் பொருள் கண்டுள்ளனர். இவற்றை ஒப்புநோக்கி ஆராய்கையில் செல்வம் இல்லாமை, அறிவு இல்லாமை, ஞானம் இல்லாமை, ஆற்றல் இல்லாமை, புண்ணியம் இல்லாமை, காலனை வெல்லாமை, இன்பம் இல்லாமை ஆகிய இல்லாமைகளை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டியிருப்பது தெரியவருகின்றது. இவற்றுள் எது சிறப்பு என்பது இனி ஆராயத்தக்கது.
செல்வம் இல்லாமை
செல்வம் இல்லாமையே பல உரையாசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பெற்றுள்ளது. இதனை ஏற்கும் உரையாசிரியர்கள் பின்வருமாறு. பரிமேலழகர், மணக்குடவர், கு.ச. ஆனந்தன், ச. வே. சுப்பிரமணியன், தமிழண்ணல், சாரணங்கபாணி ஆகியோர். இவர்கள் இன்மை என்பது வறுமையைக் குறித்து வருவது மரபு என்பதால் செல்வ இன்மையைக் கருதினர். மேலும் உரையாசிரியர்களுள் முதன்மையானவரான பரிமேலழகர் நல்குரவைக் (வறுமையைக்) கூறினமையான் அதனைத் தொடர்ந்து வந்த உரையாசிரியர்கள் பின்பற்றியுள்ளனர்.
மேற்கண்டவர்களின் உரைகளைக் காணுகையில் தவம் செய்வார்க்கு செல்வம் தேவையா தேவையில்லையா; செல்வத்தைத் துறக்கவேண்டுமா வேண்டாமா என்பன தவ அதிகாரத்தின் ஒன்பது குறட்பாக்களில் சுட்டப்படாத நிலையில் வள்ளுவர் இலர் என்பதற்கு செல்வம் இல்லாமையைக் கருதியிருப்பாரா என்ற ஐயம் எழுகின்றது. மேலும் அறத்துப்பாலில் செல்வம் இடம்பெறத் தேவையுமில்லை.
இன்மை என்பதற்கு வறுமை நல்குரவு என்பது மரபின் வந்த பொருளாகலாம். ஆனால் இலர் என்பதற்கு வறுமையாளர் எனக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. இவ்வடிப்படையில் இலர் என்பதற்கு செல்வம் இல்லாதார் என்பது பொருந்தாததாகின்றது.
பிறஇன்மைகள்
இலர் என்பதற்கு அறிவின்மை என்பதாகப் பரிமேலழகரும் திருச்சி கோ. வரதராசனும் சாரணு;கபாணியும
புண்ணியமின்மை(பாக்கியமின்மை) என்பதாகப் பருதியாரும்
ஹhனமின்மை என்பதாக காளிணு;கரும் நாகை. செ. தண்டபாணியும்
ஆற்றல் இன்மை என்பதாக மு. வரதாரசனும் திருச்சி. கோ. வரதராசனும்
பேறு இன்பம் இன்மை என்பதாக முத்துவும் திருச்சி. கோ. வரதராசனும்
காலனை வெல்ல இயலாதமையாக- (இதற்கு முன் குறளை ஒட்டிய பொருளாக) நாமக்கல் கவிஞரும் பொருள் கண்டுள்ளனர்.
இப்படிப் பல சிந்தனைகள் விளைகின்றபோது அவரவர் கருத்து அவரவர்க்கு சிறப்பளிப்பதாகத் தோன்றும். இவ்வாறு பல இன்மைகளை உரையாசிரியர்கள் கூறும்போதே எந்த இன்மையும் இன்மையாகிவிடுகின்றது.
வள்ளுவரின் குறள் எவ்வித அடையும் இல்லாமல் இலரை இலராகவே காட்டுகின்றது. அதுவே இவ்வுரைமாறுபாட்டிற்கு பதில் ஆகும். இன்மை என்பது எவ்வின்மையும் இன்மைதான். மேற்சொன்ன எல்லா இன்மைகளையும் பொதுவாக இன்மை என்றே சுட்டிவிட்டால் எல்லா உரையாசிரியர் கருத்தும் ஏற்கப்பட்டதாகவும் ஆகிவிடும். குறளின் முலத்திற்கும் எவ்வித இணைப்பும் இல்லாமல் இயல்பானதாகிவிடும்.
இவ்வின்மைகளைப் போக்கத் தவம் செய்ய வேண்டும். தவம் செய்தால் எவ்வின்மையும் இல்லாமல் ஆகிவிடும். ஆனால் இவ்வின்மையைப் போக்கும் தவத்தை எவரும் விரும்பிச் செய்வதில்லை. அதனால் அவர்களின் இன்மை இறுதிவரை இன்மையாகவே தங்கிவிடுகின்றது.
தகுதி சிலருக்கு எதிர்பாராமல் வந்துவிடுகின்றது. அத்தகுதியான இடத்திற்கு வந்ததும் அவர்கள் அத்தகுதிக்கு ஏற்பத் தம்மை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அப்படித் தகுதிப்படுத்திக்கொள்ள இயலாதவர்கள் தோற்கின்றனர். தகுதிப்படுத்திக்கொள்ள முனைகின்றவர்கள் நோற்கின்றனர். இதுவே இக்குறளில் ஒளிந்திருக்கும் உண்மைப்பொருளாகும்.
தவம் என்பதை தம் கருமம் எனக் கொண்டால் அவரவர்க்கு அவரவர் கருமம், அவரவர் விரும்பிய கருமம் தவமாகிறது. தம் கருமத்தில் வெற்றி பெற தவம் அவசியமாகிறது. அத்தவத்தைப் பெற்றவர்கள் பலராக மாற இக்குறள் சிறந்த தூண்டுகோல்.


muppalam2003@yahoo.co.in
muppalam2006@gmail.com
manidal.blogspot.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்