தமிழரைத் தேடி – 3

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

பிரகஸ்பதி



தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மை வாய்ந்த செவ்வியல் கூறுகள்

பண்பாட்டு மானுடவியல் அறிஞர் பக்தவச்சல பாரதி, பண்பாடு பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“பண்பாடு என்பது மிகவும் இணக்கமுற்ற, ஒருங்கிணைந்த ஓர் ஒன்றியமாகும். அதனுள் உள்ள கூறுகள் அனைத்தும் செயல் நிலையில் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு கூறும் பண்பாடு எனும் முழுமைக்குள் மிகவும் ஏற்ற நிலையில் பொருத்தப்பட்டிருக்கிறது.” – பண்பாட்டு மானுடவியல், பக்.175.

மாலினோஸ்கி என்ற அறிஞர் பண்பாடு எனும் முழுமையை அவற்றுள் உள்ள கூறுகளின் செயல்பாடுகளின் மூலம் புரிந்து கொள்ளமுடியும் எனக் கூறுவார். சங்க கால தமிழ்ச் சமூகததின் மூலச் சிறப்புமிக்கப் பண்பாட்டுக் கூறுகளை விவரிப்பதன் மூலம் அச்சமூகத்தின் தனித்தன்மை வாய்ந்த செவ்வியல் பண்புகளை அறிந்துகொள்ளலாம்.

தமிழில் அறநெறிக் கோட்பாடுகள் (தர்ம சாத்திரங்கள்) எழுத்தில் இல்லாதது, சமயங்களும் அவை தொடர்பான தத்துவங்களும் புராணங்களும் இல்லாதது போன்றவை தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெருங் குறைகளாகக் கூறப்படுகின்றன. இதுபோன்ற இல்லாமைகளே தமிழ்ச் சமூகத்தின் சிறப்புத் தன்மைக்கான காரணியாக இருப்பதை நுணுகி ஆராய்ந்தால் புரிந்துகொள்ளமுடியும். பண்பாட்டு மானுடவியலில் முற்றிலும் புதிய கோட்பாடு ஒன்று இங்கு முன்வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தமிழரின் சிறப்புத் தன்மைகள் விவரிக்கப்படுகின்றன.

பண்பாட்டு வளர்ச்சியையும் இயங்கியலையும் புரிந்து கொள்வதற்கு இதுவரையிலும் கூறப்பட்டுள்ள கொள்கைகளில் அமெரிக்க மானுடவியல் அறிஞர் ¦?ன்றி மார்கனும் (1818-1881), பிரிட்டிஷ் மானுடவியலறிஞர் பர்னெட் டைலரும் இணைந்து தோற்றுவித்த ஒருவழிப் பரிணாமக் கொள்கை ஏற்புடையதாக உள்ளது. இக்கொள்கையை அடியொற்றி மார்க்சிய சிந்தனையாளர்கள் முதலாளித்துவத்துக்கு முந்தைய பண்பாட்டுக் கட்டங்களை கீழ்க்கண்டவாறு பகுத்துள்ளனர்:

(1) ஆதி பொதுவுடைமைச் சமூகம், (2) ஆண்டான்-அடிமை சமூகம், (3) நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு.

இம்மூன்று பண்பாட்டுக் கட்டங்களும் ஐரோப்பியச் சமூகத்தின் பண்பாட்டுப் பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டு பகுத்துக் கூறப்பட்டுள்ளன. தொல்லியல் அறிஞர் சைல்டு என்பவர் ஒருவழிப் பரிணாமக் கொள்கையை, பரவுதல் கோட்பாட்டுடன் இணைத்து அதனைப் புத்தாக்கம் செய்தார். அவரது கருத்தின்படி வரலாற்றுக்கு முற்பட்டகாலத்தில், தென்மேற்கு ஆசியாவில் சமுதாய அமைப்பில் படிப்படியாக வளர்ச்சிகள் ஏற்பட்டு அவ்வளர்ச்சிப் படிநிலைகள் ஒவ்வொன்றிலுமுள்ள பண்பாட்டுக் கூறுகள் ஐரோப்பாவிற்குப் பரவியதைத் தொல் தடயங்கள் மூலம் நிறுவமுடியும்.

உண்மையில், மேற்காசியாவில் பூர்விகமாக வாழ்ந்து வந்த கருப்பின மக்கள் ஆதி பொதுவுடைமைச் சமுதயாத்திற்கும் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் பல பண்பாட்டுப் படிநிலைகளைக் கடந்து வந்துள்ளதை நமக்குக் கிடைத்துள்ள தொல் எச்சங்களைக் கொண்டு ஆராயும்போது அறியமுடிகிறது. மேற்காசியச் சூழலில் மனிதகுலம் கடந்து வந்த பண்பாட்டுக் கட்டங்களை தொல் தடயங்கள் மற்றும் புராணக் குறிப்புகளின் துணை கொண்டு இக்கட்டுரைத் தொடரில் விரிவாக விவாதிக்க இருக்கிறோம். இங்கு முன்வைக்கப்படும் கோட்பாட்டினை விளக்குவதற்கு, இப்பண்பாட்டுக் கட்டங்களின் பட்டியல் அவசியமாகிறபடியால், சுருக்கமான விளக்கத்துடன் அவை கீழே பட்டியலிப்பட்டுள்ளன.

(1) இரத்த உறவுக் குடும்ப அமைப்பு

சகோதர – சகோதரிகள், கணவன்-மனைவியர் உறவுகொண்டு வாழ்ந்த ஒரு கூட்டுக்குடும்பமே ஒரு கூட்டமாக வாழ்ந்த நிலையை இரத்த உறவுக் குடும்ப அமைப்பு என்று கூறுவர். தற்காலத்தில் உலகில் வாழும் எந்த மனிதக் கூட்டமும் இப்பண்பாட்டு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. எனினும் இப்பண்பாட்டு நிலையில் மனித குலம் வாழ்ந்ததற்கான எச்சங்களை ஐரோப்பிய சமூகத்தின் உறவுப் பெயர்களில் காணமுடிகிறது. சகோதர – சகோதரிகளிடையேயான மண உறவுகளை ஐரோப்பியர் தொடர்பான பல புராணங்களிலும் காணமுடிகிறது.

(2) இனக்குழுச் சமூகம்

இன்று உலகில் வாழும் பல பழங்குடிகள் இப்பண்பாட்டுக் கட்டத்திலேயே வாழ்கின்றன. மேற்காசியாவில் கி.மு.10000த்தில் தோன்றிய நடூ*பியன் பண்பாடு இக்கட்டத்தின் வளர்ந்த வடிவத்தை எட்டியது. பண்பாட்டுப் பரிணாமத்தின் இக்கட்டம் வரையிலும் இனக்குழு உறுப்பினர்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இருக்கவில்லை. எனவே இவ்விரு கட்டங்களையும் சேர்த்து ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயம் என ஒரே கட்டமாகக் கூறலாம். எனினும் இவ்விரு கட்டங்களிலும் மாறுபட்ட அரசியல் அமைப்பு உள்ளதனால், நுண்ணிய வேறுபாட்டை எடுத்துக் காட்டுகின்ற விதத்தில் இரண்டாகப் பிரித்துக் கூறப்படுகின்றது. இனக்குழுச் சமூக அமைப்பில் பல தாய்வழிக் கணங்கள் இணைந்து ஒரே இனக்குழுவாகப் பரிணமித்ததும் புதிய அரசியல் (சமூக) அமைப்பைத் தோற்றுவித்ததும் மனிதகுல வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளாகும்.

(3) சமுதாய ஒப்பந்தம் (நகர – கிராம சமூக அமைப்பு)

பண்டைய துருக்கியில் இருந்த சாட்டல் குயுக் நகர – கிராம சமூக அமைப்பு இப்பண்பாட்டுக் கட்டத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். பல கணங்கள் இணைந்து இனக்குழுவாகப் பரிணமித்த பொழுது மனித குலம் சமாதான சகவாழ்வு அடிப்படையில் அமைந்த அரசியல் அரிச்சுவடியைத் தோற்றுவித்தது. சமுதாய ஒப்பந்தக் காலத்தில் இருவேறு பண்பாட்டுப் படிநிலைகளில் வாழ்ந்த குடிகள் பண்டமாற்று வணிகத்தின் அடிப்படையில் சமாதான சகவாழ்வு வாழ்ந்த புதிய அரசியல் பண்பாட்டு வளர்ச்சி தோன்றி நிலைபெற்றது.

இப்பண்பாட்டுக் கட்டத்தின் மிக வளர்ந்த பொருளியல் நிலையில் சிந்துவெளி நாகரிகம் இருந்ததாகக் கூறலாம். இந்நகரக் குடிகள் கிராமக் குடிகளை மேலாண்மை செய்வதற்குத் தேவையான போர்க் கருவிகளைக் கொண்டிருக்கவில்லை என்பது தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது. நன்கு வளர்ந்த பண்டமாற்று வணிகத்தைக் கொண்டிருந்த சிந்துவெளி நகர மாந்தருக்கும் கிராம சமுதாயத்தினருக்குமான இணக்கம், சமுதாய ஒப்பந்தத்தின் மூலமாகவே சாத்தியமாகி இருக்க வேண்டும் என நாம் யூகிக்கலாம்.

(4) ரிஷி (அறிவர்) தலைமைக் குடிகளும், ரிஷி குலக்குருக் குடிகளும்

மேற்காசியாவில் கி.மு.6000-கி.மு.5000 காலகட்டத்தில் தோன்றிய ஹசுனா, ஹலா·பியன் மற்றும் சமாரன் பண்பாடுகளை, போர்த் தளபதி தலைமையில் அமைந்த ரிஷி குலக்குருக் குடிகளாகக் கூறலாம். ரிக் வேத ஆரியர் இப்பண்பாட்டுக் கட்டத்தின் மிக வளர்ந்த பொருளியல் வாழ்க்கையைக் கொண்டிருந்தனர்.

யுகோஸ்லேவியாவில் லெபன்ஸ்-கி-வீர் இல் தோன்றிய புதிய கற்கால நகர சமூகம் ரிஷி தலைமைச் சமூகமாகும். மேற்காசியாவிலிருந்து சென்ற கருப்பின ரிஷிகள் (அறிவர்கள்) பண்படாத வெள்ளை இனக் குடிகளுக்குத் தலைமையேற்று அவர்களை மானாவாரி விவசாயம், கால் நடை வளர்த்தல் மற்றும் பண்டமாற்று வணிகத்திற்குப் பயிற்சி அளித்தனர். இவ்வாறு தலைமையேற்ற ரிஷிகளுக்குப் பிரபுத்துவம் கிடைக்காததால் இவ்வியக்கப்போக்கு அதிகரித்து, வெகுவிரைவிலேயே புதிய கற்கால மேய்ச்சல் வாழ்க்கை ஐரோப்பா முழுவதும் பரவிற்று. உலகம் முழுவதும் புதிய கற்காலப் பண்பாட்டைப் பரவச் செய்த ரிஷி தலைமைக் குடி என்ற அரசியல் நெறி மனித குல மேம்பாட்டிற்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

(5) உலோக கால நகரங்கள்

மேற்காசியாவில் கி.மு.5000 – கி.மு.4300 வரை நிலவிய உபெய்துப் பண்பாடு உலோக கால நகரப் பண்பாடாகும். கி.மு.6000 த்தில் தோன்றிய சமாரன் குடிகள் மருத நில வாழ்க்கையை மேற்கொண்டிருந்தன. இக்குடிகள் கி.மு.5500 லிருந்து உலோகக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக, விவசாய விரிவாக்கம் மெசபடோமியாவை நோக்கி நகர ஆரம்பித்தது. கூடவே, பொருளுற்பத்தி பன்முகத் தன்மையடைந்து பண்ட மாற்று வணிகம் சிறப்பாக நடைபெறத் தொடங்கியது. பண்டமாற்று வணிகத்தின் மூலம் உபரி செல்வத்தை அதிகமாகப் பெற்ற மருத நிலக் குடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நிலையான குடியிருப்புகளைத் தோற்றுவித்தனர். இத்தகைய நிலையான குடியிருப்புகளை நகரங்கள் என்றே தொல்லியல் அறிஞர் குறிப்பிடுகின்றனர். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிற பழமொழிக்கேற்ப, சங்க காலத்திலிருந்தே ஊருக்கொரு கோயில் கட்டி வாழ்ந்த தமிழரின் மரபு அதன் தொடக்கத்தை உபெய்துப் பண்பாட்டில் கொண்டிருந்தது.

சாட்டல் குயுக் நகர அந்தணக் குடிகள், கிராமக் குடிகளை எழுதப்படாத ஒப்பந்தத்தின் மூலம் சுரண்டி வாழ்ந்தனர். பின்னர் நகரக்குடிகள் கலைந்து தனிநபர்கள் (ரிஷிகள்) கிராமக் குடிகளுக்குத் தலைமையேற்கத் தலைப்பட்டனர். பொருளுற்பத்தியில் ஈடுபட்டு பண்டமாற்று வணிகத்தை மேற்கொண்டு வந்த நகரக் குடிகள் ஒரு இனக்குழுவாகவும் மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்டு நகரக் குடிகளுடனான பண்டமாற்று வணிகத்தைச் சார்ந்து வாழ்ந்த கிராமக் குடிகள் வேறு இனக்குழுவாகவும் இருந்த நிலை, சாட்டல் குயுக் நகர – கிராம சமூக அமைப்பில் நிலவிற்று. உபெய்துப் பண்பாட்டில் ரிஷிகள் தலைமையிலான நகரக் குடிகள் பொருளுற்பத்தியிலும் விவசாயம் மற்றும் போர் நடவடிக்கைகளிலும் ஒருசேர ஈடுபட்ட நிலை தோன்றியது. இத்தகைய நகரக் குடிகளின் தோற்றமானது மனித சமூகத்தை வீரயுக அரசியல் அமைப்பை நோக்கி வளரச் செய்தது.

(6) வீரயுக அரசு

மேற்காசியாவில் கி.மு.4300 இல் தோன்றிய ஊருக் பண்பாடு உலகின் முதல் வீரயுக அரசுகளைத் தோற்றுவித்திருந்தது. கி.மு.800 லிருந்து நிலவிய ஆரியரின் கிரேக்க நகர அரசுகள் வீரயுக அரசியலைக் கொண்டிருந்தன. வடஇந்தியாவில் கி.மு.600 இல் நிலவிய ஜனபதங்களின் அரசியல் வீரயுகப் பண்பாட்டு மட்டத்தின் தொடக்க கட்டத்தில் இருந்தது.

பண்டமாற்று வணிகத்தின் அடிப்படையில் தோன்றிய சமாதான சகவாழ்வு அரசியல் உபெய்துப் பண்பாடு வரையிலும் நீடித்தது. ஊருக் காலத்தில் சுமேரியப் பகுதிக்குள் புதிதாகக் குடியேறிய கட்டுப்பாடற்ற ஐரோப்பியக் குடிகளை வாளின் வலிமையைக் கொண்டு ஏவல் மரபினராக மாற்றிய புதிய பண்பு தோன்றியது. இதன் விளைவாக இதுவரை இனக்குழுச் சமூகத் தன்மையிலிருந்த அரசமைப்பு விரிவடைந்து புதிய பரிணாமத்தைப் பெற்றது. இக்கட்டத்தில் பண்பட்ட கருப்பினக் குடிகள் பண்படாத வெள்ளை இனக் குடிகள் மீது பலாத்காரப் பிரயோகம் செய்து ஏவல் மரபினராக மாற்றியது, புதிய காட்டுக் குடிகளால் சமாதான சக வாழ்வுக்குப் பாதகம் ஏற்படாமல் தடுப்பதை அடிப்படையாக் கொண்டே தோன்றியது.

(7) ஆரம்பக்கட்ட நிலப்பிரபுத்துவ அரசமைப்பு

கி.மு.3200 இல் ஏற்பட்ட சுமேரியப் பெருவெள்ள அழிவுக்குப் பின்னர் அங்கு ஆரம்பக்கட்ட நிலப்பிரபுத்துவ அரசமைப்பு தோன்றியது. பெருவெள்ள அழிவுக்குப் பின்னர் கட்டுப்பாடற்ற செமிடிக் கூட்டங்கள் பேரளவில் சுமேரியாவை நோக்கிக் குடியேறின. இந்நெருக்கடிச் சூழலில் வலுவான நகர அரசுகளின் தலைமையை, பிற நகரங்கள் ஏற்றுச் செயல்பட்டன. கூடவே அரசர்களின் மூத்த மகன்கள் அரசுரிமைக்குரியவராகிய மரபும் தோன்றியது. கி.மு.2354 இல் சார்கோனின் அக்காடியன் அரசு தோன்றியதிலிருந்து நிலமானிய முறை தோன்றியது. முன்பு சுதந்திரமாக நகரைச் சார்ந்து வாழ்ந்த குறிஞ்சி, முல்லை மற்றும் நெய்தல் நில சார்புக் குடிகளைக் கட்டுப்பாட்டில் வைக்கின்ற நோக்கில் போர்த் தளபதிகளைப் பிரதிநிதிகளாக நியமிக்கின்ற வழக்கமும் தோன்றியது.

சங்க கால தமிழ் வேந்தர் குடியினரின் அரசமைப்பு, சுமேரியாவில் தோன்றிய ஆரம்பக்கட்ட நிலப்பிரபுத்துவ அரசமைப்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒருவழிப் பண்பாட்டுப் பரிணாமமும் தேங்கிய மற்றும் திரிந்த பண்பாடுகளும்

மேலே விவாதிக்கப்பட்ட பண்பாட்டுக் கட்டங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக, இயல்பான வளர்ச்சிப் போக்கில் பரிணமித்துள்ளன. இவையனைத்தும் நெருக்கடிச் சூழலில் சமாதான சகவாழ்வினை அடிப்படையாகக் கொண்டு மனித குலம் தோற்றுவித்துக் கொண்ட பண்பாட்டுக் கட்டங்களாகும். ஏவல் மரபினரைத் தோற்றுவித்தது மனித குலப் பொதுப்பண்பிற்கு மாறானது என்றாலும், கட்டுக்கடங்காத காட்டுக் கூட்டங்களால் பண்பட்ட, வளர்ந்த சமூகம் அழிந்துவிடக்கூடிய சூழல் ஏற்பட்ட பொழுது இதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையிலேயே கைக்கொள்ளப்பட்ட ஒரு ஏற்பாடாகும். ஏவல் மரபினரின் கட்டுப்பாடற்ற தன்மையைக் கருத்தில்கொண்டே, அவர்கள் போர்க் கருவிகளையும், வாகனங்களையும் உடைமையாக வைத்துக் கொள்ளத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆரம்பத்தில் பலாத்காரப் பிரயோகத்தின் மூலம் அடியோராக்கப்பட்ட கூட்டங்களில், பண்பட்ட கூட்டங்களை வேளாண் வாயிலாகிய வினைவலராக மாற்றினர். வினைவலரிலும் பண்பட்ட குடிகளை நிலக் குடிகளாக (சங்க இலக்கியங்கள் கூறும் சிறுகுடிகளைப் போன்று) மாற்றி ஒப்பீட்டளவு சுதந்திரம் கொடுத்தனர். (மேற்காசியாவில் நிகழ்ந்த இவ்வியக்கப்போக்கு குறித்து பின்னர் விரிவாகக் காண்போம்.) இவ்வாறாக குறிப்பிட்ட ஒரு அரசியல் சூழலில் பண்படாத மக்கள் கூட்டங்களை அடியோராக மாற்றியச் செயல்பாடும் கூட ஒரு தற்காலிக ஏற்பாடாக அமைந்திருந்ததையே பின்னர் நிகழ்ந்த மாற்றங்கள் எடுத்துரைக்கின்றன.

ஆனால், வெள்ளை இனத்தவரால் எகிப்திலும் சுமேரியாவிலும் தோற்றுவிக்கப்பட்ட அடிமை முறை, மனித குலப் பொதுப் பண்பிற்கு முற்றிலும் புறம்பானதாகும். வரலாற்றில் இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது விளக்கப்பட வேண்டிய ஒன்று.

திரிந்த பண்பாடுகள்

(1) எகிப்தின் பாரோ மன்னர்களின் அரசமைப்பு, திரிந்த பண்பாட்டிற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகும். மேற்காசியாவில் தோன்றியிருந்த உலோக நாகரிகம் கி.மு.3000 த்துக்கு முன் எகிப்திற்கும் பரவியிருந்தது. சுமேரியாவின் ஊர் வம்சாவழி அரசுகளைப் போன்று எகிப்திலும் வம்சாவழி அரசர்களைக் கொண்ட பாரோ மன்னர்களின் அரசு தோன்றியிருந்தது. நன்கு வளர்ச்சியடைந்திருந்த அரசியல் அமைப்பையும் பொருளியல் வாழ்க்கையையும் கொண்டிருந்த பாரோ மன்னர்களிடையில் சகோதரர் சகோதரிகளை மணம் செய்யும் இரத்த உறவுக் குடும்ப அமைப்பு என்கிற மிகவும் கீழ் நிலைப் பண்பாட்டுக் கூறு வழக்கில் இருந்தது.

பண்பாடு என்பது எண்ணற்ற கூறுகள் ஒருங்கிணைந்த ஓர் ஒன்றியம் என்றும் அதனுள் உள்ள கூறுகள் அனைத்தும் செயல் நிலையில் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன என்றும் பண்பாட்டு மானுடவியலாளர் கூறுகின்றனர். சமூகம் கீழ் நிலையிலிருந்த மேல் நிலைக்கு முன்னேறுகின்றபோது குடும்ப அமைப்பும் கீழான வடிவத்திலிருந்து மேலான வடிவத்திற்கு முன்னேறுகிறது என மார்கன் கூறுகிறார். மிகச் சரியாகக் கூறப்பட்டுள்ள இந்த இலக்கணத்திற்கு முரணாக, வளர்ந்த அரசியல் அமைப்பைக் கொண்டிருந்த பாரோ மன்னர்களின் கீழான குடும்ப வடிவம் இருக்கின்றது.

எகிப்தில் பூர்விகமாக வாழ்ந்து வந்த, நன்கு வளர்ந்த பண்பாட்டினையும் அரசியல் அமைப்பையும் கொண்டிருந்த கருப்பின மக்களை, பண்பாட்டு வளர்ச்சியில் கீழ் நிலையிலிருந்த, புதிதாகக் குடியேறிய வெள்ளை இனத்தவர் ஆதிகம் பெற்று, கருப்பின மக்கள் வளர்த்திருந்த அரசியல் அமைப்பைக் கைப்பற்றிக் கொண்டபோது, அரசியல் அமைப்பின் வளர்ச்சிக்குத் தக்க அளவில் குடும்ப உறவுகள் மேம்படாத பாரோ மன்னர்களின் அரசு நிலைக்கொண்டது எனக்கொண்டால் மேற்கூறப்பட்ட முரண்பாடு நீங்கிவிடுகின்றது. வெற்றி பெற்ற பாரோ மன்னர்கள் தோல்வியுற்ற கருப்பினக் குடிகளை அடிமைகளாக்கி திரிந்த ஒரு அரசியல் பண்பாட்டைத் தோற்றுவித்து விட்டனர்.

(2) கீழ்நிலை பண்பாட்டுக் குடிகளாகிய செமைட்டுகள், ஆரம்பக் காலங்களில் பண்பட்ட சுமேரியரின் கீழ், அடியோராகவும், வினைவலராகவும், வினைஞராகவும், நிலமக்களாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒரு பிரிவினர் சார்கோன் என்ற வினைஞன் (அடைப்பக்காரன் -அகம்படி) தலைமையில் அக்காடியன் அரசைத் தோற்றுவித்து சுமேரியப் பண்பாட்டைத் தமதாக்கிக் கொண்டனர். இதன் விளைவாக அங்கேயும் பண்பாடு திரிந்து அடிமை முறை தோன்றிற்று.

மனித குலப் பொதுப்பண்பிற்குப் புறம்பான, அடிமை முறை ஐரோப்பியரால் மட்டுமே தோற்றுவிக்கப்பட்டதன் காரணிகள் ஆராயப்படவேண்டியனவாகும். கடைசி பனியுகத்தின் கடுமையான காலக் கட்டமாகிய கி.மு.20,000-கி.மு.10,000 வாக்கில் ஐரோப்பிய மக்கள் கூட்டங்கள் பனிப் பகுதிக்குள் சிக்கிக் கொண்டதால், உலகில் பிற மனிதக் கூட்டங்கள் இனக்குழுக்களாகப் பரிணமித்து, சமாதான சகவாழ்வுக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொண்ட வேளையில் அவை காட்டுமிராண்டி நிலையின் இரத்த உறவுக் குடும்ப அமைப்பைக் கொண்ட கூட்டங்களாகவே தேங்கி விட்டன. இத்தகைய காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்த மனிதக் கூட்டங்கள் பிற கூட்டத்தின் உறுப்பினர்களை தனது வாழ்க்கைப் பகுதிக்குள் அனுமதிப்பதில்லை. இனக்குழு என்ற சமூக அமைப்பு தோன்றியதில் இருந்துதான் சமாதான சகவாழ்வு என்ற புதிய பண்பு மனிதரிடம் கருக்கொண்டது. இதன்பின் பண்டமாற்று வணிகம் தோன்றி இப்பண்பு மேலும் வலுப்பெற்றது.

இனக்குழு என்ற சமூக அமைப்பு பெண் தலைமைக் கணங்களுக்குள் நடைபெற்ற மிக நீண்ட நெடிய போர்களுக்குப் பின்னரே தோன்றியது. அதன்பின் மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்ட குடிகளுக்கும் வேட்டுவக் குடிகளுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்த சண்டைகளுக்குத் தீர்வாகப் பண்டமாற்று வணிகத்தை அடிப்படையாகக் கொண்ட நகர – கிராம சமூக அமைப்பு தோன்றியது. இவ்வாறு ஒவ்வொரு பண்பாட்டுக் கட்டத்திலும் மிக நெடிய போராட்டங்களைச் சந்தித்து அதன் தீர்வாக, புதிய அரசியல் அமைப்பைத் தோற்றுவித்து, நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பு வரையிலும் கருப்பினத்தவர் முன்னேறியிருந்தனர்.

மனித குலத்திற்கே நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்ததாக ஒரு கற்பிதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஐரோப்பிய செமிடிக்குகளும், ஆரியர்களும் கி.மு.5000 வரையிலும் காட்டுமிராண்டி நிலையிலேயே வாழ்ந்திருந்தனர். மனித குலத்தின் மிகக் கீழான குடும்ப அமைப்பான இரத்த உறவுக் குடும்ப அமைப்பே அவர்களிடம் நிலவியது. மேற்காசியக் கருப்பின ரிஷிகளின் மூலம் மேய்ச்சல் வாழ்க்கைக்கும் பண்டமாற்று வணிகத்திற்கும் இக்குடிகள் பழக்கப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களிடம் சமாதான சகவாழ்வுக்கான உளப்பாங்கு (அரசியல் பக்குவம்) தோன்றவில்லை.

மேலும் நீண்ட காலம் பனிப் பகுதிக்குள் சிக்கிக் கொண்ட பொழுது சந்தித்த இடர்ப்பாடுகளின் விளைவாக இவ்வெள்ளையின மனிதக் கூட்டங்கள் ஒருவகையான குழு உளவியலினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் தோன்றுகிறது. வெள்ளை இனத்தவரின் அரசியல் பக்குவமின்மையும் குழு உளவியல் பாதிக்கப்பட்டிருந்த தன்மையுமே அடிமை முறை தோன்றுவதற்கானக் காரணிகளாக அமைந்துவிட்டன.

தேங்கிய பண்பாடுகள்

ஒருவழிப் பரிணாமக் கொள்கையினர் விலங்குகளின் பரிணாமம் போன்றே பண்பாடுகளும் சிறிய, எளிய நிலையிலிருந்து பெரிய, சிக்கலான நிலைக்கு வளர்ச்சி பெற்றுள்ளன என்றும் ஒவ்வொரு வட்டாரப் பண்பாட்டிலும் பண்பாட்டின் நிறுவனங்கள் தனித்தனியே வளர்ந்துள்ளன என்றும் கூறுவர்.

விலங்குகள் இயற்கைச் சூழலில் ஏற்பட்ட நெருக்கடியைச் சந்தித்தபொழுது உடல் கூறுகளில் தேவையான மாறுதல்களுக்கு உட்பட்டன. ஆனால், இயற்கையின் நெருக்கடிகள் மனிதனின் பொருளியல் வாழ்வைப் பாதித்தனவேயன்றி, சமூக வாழ்வில் (குடும்ப உறவுகளிலும் அரசியல் நிர்வாகத்திலும்) எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இருவேறு மனிதக் கூட்டங்கள் உறவுகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுதுதான் சமூக வாழ்வில் மாறுதல் ஏற்பட்டது. வேற்று மனிதக் கூட்டங்களை உறவு கொள்ள அனுமதிக்காத சமூகங்களும், வேற்றுப் பண்பாட்டுக் குடிகளையே சந்திக்காமல் ஒதுங்கிவிட்ட சமூகங்களும், பண்பாட்டில் ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை. இவ்வாறு தனித்து வாழ்ந்த மனித சமூகங்களை தேங்கிய பண்பாட்டினர் எனக் கூறலாம். மனித குலம் கடந்து வந்த ஒவ்வொரு பண்பாட்டுப் படிநிலையிலும் தேங்கிய பண்பாடுகளை அடையாளம் காட்டமுடியும்.

(1) கடைசி பனியுகத்தில் பனிப்பகுதிக்குள் சிக்கிக் கொண்ட வெள்ளை இனத்தினர் கடுமையான இயற்கை மாற்றத்தைச் சந்தித்த பொழுதும் தனிமைப்பட்டு விட்டபடியினால் வேற்று இனத்தவரைச் சந்திக்கும் இரத்த உறவுக் குடும்ப அமைப்பு முறையிலேயே நீடித்தனர்.

(2) கி.மு.40,000 த்தில் ஆஸ்திரேலியாவை வந்தடைந்த பழங்குடிகள் கி.மு.25,000 த்தில் இறந்தவர் உடலைப் புதைப்பது, பாறை ஓவியங்கள் வரைந்து மதச் சடங்குகள் செய்வது போன்ற பண்பாட்டு வளர்ச்சியை, சமகால உலகின் பிற சமூகங்களுக்கு இணையாகப் பெற்றிருந்தனர். எனினும் இப்பழங்குடிகள், வேறுபட்ட பண்பாட்டுக் குடிகளுடன் உறவு கொள்ளாமல் தனித்து ஒதுங்கிய சமூகமாக வாழ்ந்து விட்டதனால், இன்றுவரையிலும் இனக்குழுச் சமூக அமைப்பின் ஆரம்ப வடிவத்தைத் தாண்டிய வளர்ச்சியைப் பெறாமல் உள்ளனர். (கி.மு.25,000 வாக்கில் இவர்களிடையே இனக்குழுச் சமூக அமைப்பு தோன்றியிருக்க வேண்டும்)

(3) ஜப்பானில் வாழ்ந்த குடிகள் கி.மு.9000 த்திலேயே மட்பாண்டங்கள் தயாரிக்கும் அளவிற்குப் பொருளுற்பத்தியில் முன்னேறியிருந்தன. இக் குடிகளும் உலோகப் பயன்பாட்டு மக்கள் குடியேறும் வரை வேற்று பண்பாட்டுக் குடிகளுடன் உறவு கொள்ளாமல் வாழ நேரிட்டதால், மேற்காசியக் குடிகளைப் போல் பண்பாட்டில் வளர்ச்சி பெற இயலவில்லை.

(4) தென் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கி.மு.4000 த்திலிருந்தே சிறு கற்காலப் பண்பாட்டுக் குடிகள் வாழ்ந்து வந்தன. கி.மு.800 – கி.மு.500 வாக்கில் இரும்புப் பயன்பாட்டுப் பெருங்கற்கல்லறைப் பண்பாட்டு மக்கள் இப்பகுதிக்குள் குடியேறும் வரை இக்குடிகள் பண்பாட்டு வளர்ச்சியில் சிறிதும் முன்னேறியிருக்கவில்லை.

(5) கி.மு.7000 – கி.மு.6000 காலக்கட்டத்தில் உலகில் தோன்றிய புதிய கற்கால நகரங்களில் ஜெரிக்கோ நகரமும் ஒன்றாகும். சமகாலத்தில் சாட்டல் குயுக் போன்ற நகரக் குடிகள் பண்டமாற்று வணிகத்தை அடிப்படையாகக் கொண்ட சமாதான சக வாழ்வுக்கான அரசியல் அறநெறியைத் தோற்றுவித்திருந்தன. ஜெரிக்கோ நகரக் குடிகளோ, பழைய இனக் குழுக் காலத்தியப் பண்பிலிருந்து மாறவில்லை. சாட்டல் குயுக் குடிகள் தங்கள் பொருள்களைக் கொள்ளையிட்டுத் தொல்லை கொடுத்துவந்த வேட்டுவக் குடிகளைப் பண்டமாற்று வணிகத்திற்குப் பழக்கியதன் மூலம் புதிய அரசியல் அறநெறியைத் தோற்றுவித்ததுடன் வேட்டுவக் குடிகளின் திருட்டுத் தொல்லையிலிருந்தும் விடுபட்டனர். ஜெரிக்கோ குடிகளோ, வேட்டுவக் குடிகளிடமிருந்து தங்கள் உடமைகளைக் காத்துக் கொள்ளும் பொருட்டு கண்காணிப்புக் கோபுரங்களுடன் கூடிய அரண் அமைத்து வாழ்ந்தனர். இவ்வாறு பிற குடிகளுடன் உறவு கொள்ளாமல் வாழ்ந்ததனால் கி.மு.1400 இல் யூதர்களால் இந்நகரம் எரியூட்டி அழிக்கப்படும் வரையிலும் ஜெரிக்கோ நகரக் குடிகள் நடூ*பியன் பண்பாட்டுக் கால சிறு கற்காலப் பண்பாட்டிலேயே தேங்கிவிட்டதை தொல் எச்சங்கள் காட்டுகின்றன. கி.மு.6500 இல் ஜெரிக்கோ குடியினருக்குச் சமமான பொருளியல் வாழ்க்கையைக் கொண்டிருந்த மேற்காசியாவின் பிறகுடிகள், மாற்றுப் பண்பாட்டுக் குடிகளுடன் தொடர்ச்சியான மோதலையும் உறவையும் மேற்கொண்டதன் விளைவாக கி.மு.1400 இல் உலோகப் பயன்பாட்டுடன் கூடிய நிலப்பிரபுத்துவ அரசமைப்பு வரை வளர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(6) கி.மு.6500 இல் சமுதாய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தோன்றியிருந்த நகர -கிராமக் குடியிருப்புப் பண்பாடு பலுசிஸ்தானத்தின் மெ?ர்கர் வரை பரவியிருந்தது. இப்புதிய கற்காலப் பண்பாட்டின் வளர்ச்சிப் போக்கில் சிந்து வெளி நாகரிகம் தோன்றியது. மேற்காசியாவில் தோன்றியதைப் போன்ற நெருக்கடிகள் சிந்துவெளியில் ஏற்படாததனால், அந்நகர அரசியல் அமைப்பு கடைசி வரையிலும் சமுதாய ஒப்பந்தம் என்கிற நிலையிலேயே தேங்கிவிட்டது. அதாவது நகரக் குடிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு வலுவான குடிகள் இப்பகுதிக்குள் குடியேறவில்லை. சிந்து வெளி நகர அகழ்வாய்வுகளில் போர் ஆயுதங்கள் எதுவும் கிடைக்காததும், அந்நகரங்களைச் சார்ந்து சுற்றிலும் பல கிராம சமூகங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதையும் கொண்டு இந்நகரங்களின் அரசியல் அமைப்பு சாட்டல் குயுக் அரசியல் அமைப்பினை ஒத்துள்ளதை அறிகிறோம்.

இன்று உலகில் வாழும் பழங்குடிகள் அனைத்துமே தேங்கிய பண்பாட்டுச் சமூகங்களுக்கான உதாரணங்களே.

மனித குல வரலாற்றில் வாழ்ந்து மறைந்த பல்வேறு பண்பாட்டு மக்களையும் இன்றுவரை வாழ்ந்து வருகின்ற மக்களின் பண்பாடுகளையும் இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள ஆறு பண்பாட்டுக் கட்டங்களில் ஏதோ ஒன்றிலோ அல்லது அவற்றின் திரிந்த அல்லது தேங்கிய பண்பாட்டு நிலைகள் ஏதோ ஒன்றிலோ பொருத்திப் பார்க்கமுடியும். இந்துப் புராண மரபு திரிந்த பண்பாட்டினரை அசுரர் என்றும் தேங்கிய பண்பாட்டினரை இராட்சசர் என்றும் குறிப்பிடுகிறது.

தமிழ்ச் சமூகத்தில் சட்டங்கள் எழுதப்படாமை

சங்ககாலத் தமிழ்ச் சமூகம் மேலே விவாதிக்கப்பட்டவாறு தேங்கிய சமூகமாக, திரிந்த சமூகமா அல்லது நிலப்பிரபுத்துவம் வரையிலும் ஒருவழிப் பண்பாட்டுப் பரிணாமத்தில் வளர்ச்சியடைந்த சமூகமாக என்பதற்கான விடையை தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மையுள்ள பண்பாட்டுக் கூறுகளை விளக்குவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

உலகின் அனைத்து சமூகங்களுமே தங்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஏற்ற சட்டங்களை மரபாகக் கடைப்பிடித்து வந்துள்ளன. ஒரு சமூகம், தானே தோற்றுவித்துக் கொண்ட மரபுகளை, சட்டங்களாக எழுதி வைத்துக் கடைப்பிடிக்கவேண்டிய தேவை ஒருபோதும் எழுவதில்லை. உதாரணமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட கணங்கள் (குலங்கள்) இணைந்து இனக்குழு என்கிற புதிய சமூக அமைப்பு தோன்றியபோது, கண உறுப்பினர்களுக்குள் நடைமுறையில் இருந்த அகமணமுறை தடை செய்யப்பட்டது. புதிதாகத் தோன்றிய இம்மரபு கடைப்பிடிக்கப்படா விட்டால் இனக்குழு என்கிற சமூக அமைப்பே தகர்ந்துபோய்விடும். எனவே நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் சமாதான சகவாழ்வை நோக்கமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இம்மரபு, அதனைத் தோற்றுவித்தவர்களாலேயே மீறப்படும் என்ற எண்ணத்திற்கே சிறிதும் இடமில்லை. ஒவ்வொரு புதிய சமூக அமைப்பும், ஒருவழிப் பாதையில் பரிணமித்த பொழுது தோற்றுவிக்கப்பட்ட மரபுகள் எத்தகைய சிக்கல் நிறைந்தவையாக இருப்பினும் அவற்றைத் தோற்றுவித்த சமூகங்களால் எளிதில் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டுவிடும். புதிய மரபுகளை எழுதிவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற தேவை அச்சமூகங்களுக்கு ஏற்படுவதில்லை.

சிக்கல்கள் நிறைந்த மரபுகளையும் பிறழாமல் கடைப்பிடிக்கக்கூடிய தன்மை ஒருவழிப் பரிணாமத்தில் வளர்ந்த சமூகங்களுக்கு மட்டுமே உண்டு. கீழ்நிலைப் பண்பாட்டினர், மேல்நிலைப் பண்பாட்டினர் மீது மேலாண்மை பெற நேரிட்டபொழுது சமூகம் திரிந்துவிடுகின்றது. திரிந்த சமூக அமைப்பில் கீழ்நிலைப் பண்பாட்டினர், வளர்ந்த பண்பாட்டின் கூறுகளைத் தமதாக்கிக்கொள்ள முயல்வர். பொதுவாக, இம்முயற்சியில் கீழ்நிலைப் பண்பாட்டினரால் வளர்ந்த பண்பாட்டுக்குரிய மரபுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க முடிவதில்லை. எனினும் புதிதாகச் சுவீகரித்துக் கொண்ட வளர்ந்த பண்பாட்டு நிலையில் அச்சமூகம் நீடிக்கவேண்டுமானால் குறைந்தபட்ச மரபுகளையேனும் கடைப்பிடிக்க வேண்டும். இப்பின்னணியில்தான் திரிந்த சமூகங்கள் தாங்கள் கடைப்பிடித்தாக வேண்டிய புதிய மரபுகளை எழுத்தில் பதிவு செய்து சட்டமாக்குகின்றன. சட்டங்கள் மீறப்படும் பொழுது கடுமையான தண்டனைகளும் இச்சமூகங்கள் வகுத்துக்கொண்டுள்ளன.

உதாரணமாக, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை, கீழ்நிலைப் பண்பாட்டினர் தமதாக்கிக் கொள்ளும் பொழுது, ஆணின் வாரிசுரிமையைச் சாத்தியமாக்கக்கூடிய பெண்ணின் கற்புநெறி குறைந்தபட்சத் தேவையாகிவிடுகிறது. பெண் கற்பு நெறியைக் கடைப்பிடிக்காவிடின், ஆணின் வாரிசுரிமைக்கு உத்தரவாதமில்லாமல் போய்விடும். இது தனியுடைமை சமூக அமைப்பை முற்றிலும் சீர்குலைத்துவிடும். எனவேதான், பண்டைய எழுதப்பட்ட சட்டங்கள் அனைத்தும் பெண்ணின் கற்பு நெறிக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன. இச்சமூகங்கள் கற்பு தவறிய பெண்களுக்குக் கடுமையான தண்டனைகளை வகுத்ததுடன், கற்பு தவறாமைக்கு மிகக் கடுமையான வழிமுறைகளையும் கைக்கொண்டன. அரேபியப் பெண்கள் உடலை முழுவதுமாக மூடிக்கொள்ளுதல், சில பண்டைய சமூகங்களில் அல்குல் பூட்டு பயன்படுத்தப்படுதல் போன்ற வழிமுறைகள் கற்புநெறியைக் கடைப்பிடிப்பதற்கென பின்பற்றப்பட்டன. கற்புநெறிக்கு இத்தகைய கடுமையான சட்டங்களையும், வழிமுறைகளும் கைக்கொண்ட பெரும்பாலான சமூகங்களில், மணவிலக்கிற்குப் பின்னரோ, கணவனின் மறைவுக்குப் பின்னரோ, பெண்ணின் மறுமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் இத்தகைய எழுதப்பட்ட சட்டங்களைக் கொண்டிராத தமிழ்ச் சமூகத்தில் பெண்ணின் கற்பு நெறி மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளதுடன், மறுமணமும் (மேலோர் மூவராகிய உயர்குலத்தில்) அனுமதிக்கப்படுவதில்லை. திரிந்த பண்பாட்டிலோ பெண்ணின் மறுமணத்தை அனுமதிக்காமல், சமூக ஒழுங்கினைக் காக்க முடியாது என்பதால் கற்பு நெறியில் சிறிது தளர்வு மேற்கொள்ளப்பட்டு மறுமணம் அனுமதிக்கப்பட்டது. கீழ்நிலைப் பண்பாட்டினர் புதிதாக மேல்நிலை பண்பாட்டை தமதாக்கிக் கொள்ளும் முன், அவர்களிடையே தாய் வழி சமூக அமைப்புக் கூறுகள் மேலோங்கியிருந்தால், மாறிய பண்பாட்டு சூழலில் மறுமணத்தை தடை செய்து வாழ்வதற்கு அச்சமூகத்தினரால் முடியாமல் போய்விட்டது என்பதே உண்மை.

திரிந்த பண்பாட்டின் அறிஞர்கள், அதிகம் பண்படாத தங்கள் சமூகம், அதிக பட்சமாக கடைப்பிடிக்க முடியும் என கருதிய பழைய மரபுகளையெல்லாம் சட்டமாக்கி விடுகின்றனர். எனினும், புதிய பண்பாட்டு மட்டத்தில் கடைப்பிடித்தே தீரவேண்டிய மரபுகளைத் தவிர பிறவற்றிற்கு இச்சமூகத்தினர் அதிகம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே தான் பண்டைய சமூகங்களில் எழுத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்கும், நடைமுறைப்படுத்தப்பட்டவற்றுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருப்பதை காண முடிகின்றது.

வடஇந்தியாவில், மகாபாரதம் தொடர்பான புராண கால க்ஷத்திரியர் ஓரளவு பண்பட்ட சமூகத்தினராவர். பண்பட்ட தமிழ்ச் சமூகத்தின் மூல மரபுகளிலிருந்து அவர்கள் ஓரளவே திரிந்திருந்தனர். இவ்வரச வருணம், வட இந்திய அரசியல் அரங்கிலிருந்து மறையும் வரை அங்கு சட்டங்கள் எழுத்தில் கொண்டு வரப்படாமல் மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டன. இவர்கள் கடைப்பிடித்த மரபுகளை மகாபாரதம், மற்றும் இராமாயணம் மூலம் அறிய முடிகின்றது. கி.மு. 600க்குப் பின் சூரிய சந்திர குலத்தவரான புராண கால அரச குடியினரின் பணி மக்கள் (செவிலித்தாய், தோழி, பார்ப்பார் போன்ற வாயில் மரபினர்) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலம் வட இந்தியச் சமூகம் திரிந்து விடுகின்றது. இக்காலக் கட்டத்திற்குப்பின் தான் அங்கு தர்ம சாஸ்திரங்களும், அர்த்த சாஸ்திரம், மனுஸ்மிதி போன்ற பிற சட்ட நூல்களும் எழுதப்பட்டன. ஆனால் இவ்வெழுதப்பட்ட சட்டங்களுக்கும் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளதாக ரோமிலா தாப்பர் கூறுவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கி.மு. 600க்குப்பின் தோன்றிய திரிந்த பண்பாட்டினராகிய வடஇந்திய அரசவம்சத்தினரால் பண்டைய மரபுகள் முழுவதையும் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டதே இதற்குக் காரணமாகும்.

சட்டங்களை எழுதிவைத்துக் கடைப்பிடிக்கும் சமூகங்கள் வளர்ந்த பண்பாட்டு நிலையிலும், அறங்களை மரபாகக் கடைப்பிடிக்கும் சமூகங்கள் எளிய பண்பாட்டு நிலையிலும் உள்ளன என்கிற தவறான கருத்தோட்டம் ஆய்வாளர்களிடையே நிலவுகின்றது. சமூகங்களால் கடைப்பிடிக்கப்படும் எழுதப்படாத சட்டங்களை மரபுசார் சட்டங்கள் என பண்பாட்டு மானுடவியலாளர் கூறுவர். மரபுசார் சட்டங்களைக் கடைப்பிடிக்கும் சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயங்களுக்கு ஈடாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ சமுதாய ஒழுங்கு கட்டிக்காக்கப்படுவதாகப் பண்பாட்டு மானுடவியலாளர் கருதுவது கவனத்திற்குரியது.

சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட மரபுசார் சட்டங்கள் சமகாலத்தில் வடஇந்திய சமூகத்தினரால் எழுத்தில் கொண்டு வரப்பட்டு ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டச் சட்டங்களை விட சிக்கல்கள் நிறைந்ததாகவும், செவ்வியல் தன்மை கொண்டதாகவும் இருந்ததை மேற்கொண்டு விவாதிக்க போகும் தலைப்புகளில் காணலாம்.

[கடந்த வாரம் வெளியான ‘தமிழரைத் தேடி – 2’ இல் வேள் – தலைமை என்கிற துணைத் தலைப்பின் கீழ் இரண்டாவது பத்தியின் இரண்டாவது வரியில், “அரசர்களாகிய வேளாளரையும், வேளத்துப் பிள்ளைகளாகிய வேளாளரையும் ஒரே வகையினராக” என்பதை “அரசர்களாகிய வேளிரையும், வேளத்துப் பிள்ளைகளாகிய வேளாளரையும் ஒரே வகையினராக” என மாற்றிப் படிக்கவும். பிழைக்கு வருந்துகிறேன்.]

(கட்டுரை ஆசிரியர் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவன ஆய்வாளர்.)

brahaspathy@gmail.com

Series Navigation

பிரகஸ்பதி

பிரகஸ்பதி