சுந்தர ராமசாமி / கனவும் வாழ்வும்

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

எம். கோபாலகிருஷ்ணன்



‘இந்த மண்ணில் உன்னதங்கள் எதுவும் முளைக்காது என்று ஒரு விமர்சனப் பார்வை உண்டு. சகல உன்னதங்களையும் இந்த மண்ணில் முளைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான். காலங்காலமாக தாழ்வுற்றுக் கிடந்த சமூகங்கள் மிகக் குறுகிய காலப்பொழுதில் அறிவின் கூர்மைகளோடும், கலைகளின் வீச்சுகளோடும் சிலிர்த்துக் கொண்டு எழுந்து வந்திருக்கின்றன. இதுபோன்ற கலை எழுச்சிகளையும் அறிவுப் புரட்சிகளையும் சரித்திரங்கள் துல்லியமாகப் பதிவு செய்திருக்கின்றன. அங்கு பள்ளங்கள் நிரம்பி அவற்றின்மீது கோபுரங்கள் எழுந்திருக்கின்றன. உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு உன்னதம் சாத்தியம் என்றால் அதே உன்னதத்தை இங்கும் எழுப்பிக்காட்ட முடியும். நமக்குக் கனவுகள் வேண்டும். அந்தக் கனவுகளை மண்ணில் இறக்க அசுர உழைப்பு வேண்டும். பரஸ்பரம் தொடை தட்டிக்கொள்வதை விட்டு. ஆக்கத்தை நோக்கி நகரும் மன விகாசம் வேண்டும். பொது எதிரிகளைக் கிழிக்கும் நெஞ்சுரம் வேண்டும். சவால் வேண்டும். தீர்க்க தரிசனம் வேண்டும். அப்போது இங்கும் பள்ளங்களை நிரப்ப முடியும். கலைக் கோபுரங்களையும் எழுப்ப முடியும்.’

என்று கனவு கண்டவர் சுரா. தொடர்ந்து தன் ஆக்கங்களின் வழியாக இக் கனவையும் அதை மண்ணில் இறக்கத் தேவையான காரியங்களையும் வலியுறுத்திக் கொண்டிருந்தார். தமிழ்ச் சமூகம் ஒரு எழுத்தாளனின் குரலுக்கு செவி சாய்ப்பதெல்லாம் இன்றளவும் கனவுதான்.
1

இலக்கிய சூழலின் ஒவ்வொரு காலகட்டமும் ஏதேனும் ஒரு ஆளுமையின் ஆகப் பெரும் தாக்கத்தை ஏற்றுக் கொண்டபடியே முன்னகர்ந்திருக்கிறது. அந்த ஆளுமையின் தாக்கமென்பது படைப்பின் பல்வேறு அம்சங்களிலும் அச் சூழலின் வெவ்வேறு கருத்தாக்கங்களிலும் பூமாலையை கோர்த்து மறைந்திருக்கும் நாரைப் போல உள்ளோடிக் கிடக்கும். குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் இயங்க நேரும் படைப்பாளிகள் அந்த ஆளுமையின் பாதிப்புக்கு ஆளாவதென்பது தவிர்க்கமுடியாதது. தமிழ் இலக்கியச் சூழலின் கடந்த ஐம்பதாண்டு கால கட்டத்தில் அப்படியொரு ஆளுமையாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர் சுரா. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, உரையாடல், மொழிபெயர்ப்பு என்று அவரது ஆளுமையின் நிழல் நீண்டுகொண்டேயிருக்கிறது.

தன் முதல் படைப்பிலிருந்தே சூழலின் கவனத்தை ஈர்க்க முடிந்த ஆளுமை கொண்ட படைப்பாளிகளை காண முடிவது அபூர்வமான ஒன்றே. பிரசுரம் பெற்ற முதல் படைப்பிலிருந்தே சுந்தர ராமசாமியின் இந்த ஆளுமை உரம்கொள்ளத் தொடங்கியிருப்பதை இப்போது நம்மால் உணரமுடிகிறது. எழுதத் தொடங்கிய காலகட்டத்திலேயே சுராவின் படைப்புகள் கூர்ந்த கவனம் பெற்றிருந்தன. அவரது இலக்கிய வாழ்வு முழுக்கவே பிரசுரமாகும் அவரது எந்தவொரு படைப்புமே, அது அவர் எழுதிய சிறுகதையாக இருந்தாலும் சரி அல்லது வாசகர் கடிதமாக இருந்தாலும் சரி, சூழலின் கவனத்தை திசை திருப்பும் தன்மையைக் கொண்டிருந்தது. தமிழின் இன்றைய முக்கிய படைப்பாளிகளில் பலரையும் 80களில் தீவிர இலக்கியத்தை நோக்கித் திசை திருப்பியது சுராவின் எழுத்துக்களே. நாகர்கோவில் அன்றைய இளம் வாசகர்கள் சென்றடையும் இடமாகத் திகழ்ந்தது. சுராவின் எழுத்துக்கள் தந்த உத்வேகத்துடனும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற மயக்கத்துடனும் அங்கு வந்து சேரும் அந்த இளைஞர்களுக்கு சுரா ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வழி நடத்தினார். தமிழ் இலக்கியத்தில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த பலரும், எதிர்முகாமை சார்ந்தவர்கள் என்றாலும், அவர்களது படைப்புகள் பற்றி சுரா என்ன சொல்கிறார் என்பதற்கு முக்கியத்துவம் தந்தனர். அவர் வாழ்ந்த காலம் முழுக்க படைப்பு சார்ந்தும், தமிழ் சமூகம் சார்ந்தும், சமகால நிகழ்வுகள் சார்ந்தும் மனம் திறந்த விவாதங்களின் வழியாக தமிழ் இலக்கியச் சூழலோடும், சமூகச் சூழலோடும் தொடர்ந்து உறவு கொண்டிருந்தார். தன்னையும் தன் ஆக்கங்களையும் விரிவான விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உட்படுத்தியவர். தொடர்ந்து விவாதங்களின் மையமாக அவர் இருந்துகொண்டிருந்தார். இலக்கிய விமர்சனங்களின் வழியாக புதிய படைப்புகளையும் படைப்பாளிகளையும் உற்சாகப்படுத்தினார். எழுத்தும் விமர்சனமும் வெவ்வேறானதல்ல என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்பிக்கை தரும் இளம் தலைமுறையினரை அடையாளம் காட்டினார். தமிழ் சமூகத்தில் ஒரு எழுத்தாளனுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் உரிய கெளரவத்தை மீட்டெடுக்க குரல்கொடுத்தபடியே இருந்தார்.

மகாமகப் படுகொலை, ஜெயேந்திரர் விவகாரம், மரண தண்டனை ஒழிப்பு என்று சமகால நிகழ்வுகள் குறித்த தன் கருத்துக்களை பதிவுசெய்திருந்தார். இந்த எதிர்வினைகளின் வழியாக தமிழ்ச் சமுதாயத்தின் சீரழிவுகள் குறித்தும் அவற்றை களைய செய்யவேண்டிய காரியங்கள் குறித்தும் தொடர்ந்து எழுதினார். ஒரு எழுத்தாளனின் சமரசமற்ற சமூகப் பொறுப்பை அவரது குரலும் காரியங்களும் வலியுறுத்தி நின்றன.

‘மதிப்பீடுகள் சீரழிவது ஒன்று. சீரழிந்த மதிப்பீடுகள் போற்றப்படுவது மற்றொன்று. சீரழிந்த மதிப்பீடுகளை சமூக அங்கீகாரம் பெற்று கலாச்சாரத் தளத்தின் அடிப்படைத் தர்மமாக உருவாக்கிவிடுவது நமக்கு மட்டுமே உரிய தனிப்பிரச்சனையாகும்’ (தர வேற்றுமையைத் தேடி)

‘அடிப்படையான மதிப்பீடுகளைக் காப்பாற்றுவதற்கான போராட்டங்கள் இன்று தமிழகத்தில் இல்லை. சீரழிவில் பங்குபெற மறுக்கும் சுதந்திரச் சிந்தனையாளர்களின் குரல் தமிழ் வாழ்வின் பெருங்குரலாக ஒலிக்காத காலம் வரையிலும் தமிழ் வாழ்வின் இன்றைய அவலத்தைச் சாதாரண மக்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும்’ ( மகாமகப் படுகொலைகள் )

கலை, கலாச்சாரம் ஆகியவற்றின் மேன்மைகளுக்கு அடிப்படையானது தரமான கல்வி என்ற அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கல்வித் திட்டம் குறித்து கவலையும் கரிசனையும் கொண்டிருந்தார். ‘வாழ்க்கையை முன்கூட்டி மதிப்பிட உதவும் கலை என்று கல்வியைச் சொல்லலாம். மதிப்பிடல் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்வதும், மாறி வரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் சமன்நிலையைக் காப்பாற்றிக் கொள்வதும் சாத்தியமாகிறது’ என்று கருதிய அவர் சுய கல்வியின் தேவையை வலியுறுத்தினார். கல்வியாளர் திருமதி. வசந்திதேவியுடன் ‘தமிழகத்தில் கல்வி’ என்ற பொருளில் அவர் நிகழ்த்திய உரையாடல் தமிழகத்தில் இன்றைய கல்வி நிலையையும் அவற்றை சீர்படுத்தவேண்டிய அவசியத்தையும் முன்மொழிந்தன. இரண்டு வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பொது அக்கறையுடன் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதென்ற ஆக்கபூர்வமான இந்த முயற்சி தமிழக அறிவு தளத்தில் நிகழ்ந்த ஒரு முக்கியமான சந்தர்ப்பம்.

இலக்கியவாதிகள் பிற அறிவுத் துறைகளுடன் தொடர்ந்து உறவுகொண்டிருப்பதன் அவசியத்தை சுரா தொடர்ந்து வலியுறுத்தினார். கல்வி, ஓவியம், சினிமா, மானுடவியல், உளவியல், தொல்லியல் என்று பிற அறிவுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் குறித்த பிரக்ஞை ஒரு படைப்பாளிக்கு முக்கியம் என்று எண்ணத்தின் பேரிலேயே அவர் பாம்பன்விளை கூட்டங்களை ஏற்பாடு செய்தார். வெவ்வேறு துறைசார்ந்த அறிஞர்களுடன் இலக்கியவாதிகளும் வாசகர்களும் உரையாடும் பொது மேடையாக பாம்பன்விளை கூட்டங்கள் அமைந்தன. அவர் தொடங்கி நடத்திய ‘காலச்சுவடு’ இதழிலும் பிற அறிவுத் துறைக்காக கணிசமான பக்கங்களையும் அமைத்துத் தந்தார். தகவல் தொழில் நுட்பமும் அச்சுத் தொழில் நுட்பமும் கோலோச்சி பதிப்புத் துறையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தி வரும் இன்றைய சூழலில் பிற அறிவுத் துறையுடனான உரையாடல் என்பது விரிவான அளவில் வாய்த்திருக்கிறது. ஆனால், இந்த உரையாடலை இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிவைத்தவர் சுரா என்பது முக்கியமானது. இன்றைய சிற்றிதழ்களில் இலக்கியத்துக்கான பக்கங்களைக் காட்டிலும் பிற அறிவுத் துறைக்கான பக்கங்கள் கூடுதலாக இருப்பதை நாம் கவனிக்கலாம்.

காலவோட்டத்தில் இலக்கியத்திலும் மொழியிலும் ஏற்பட்ட மாற்றங்களை வளர்ச்சியின் படிநிலைகளாகவும், வரலாற்றுத் தேவைகளாகவும் காணும் பக்குவம் சுராவிடம் இருந்தது. தான் இயங்கிய காலகட்டம் முழுக்க இலக்கியப் போக்கிலும் நோக்கிலும் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களையும் பரிசோதனைகளையும் திறந்த மனதுடன் ஒரு புதிய படைப்பாளிக்குரிய உத்வேகத்துடன் சவாலுடன் உள்வாங்கிக் கொண்டதோடு அவற்றுக்கேற்ப தன் படைப்பு பாணியையும் கூர்படுத்திக்கொண்டவர் அவர். அடுத்தடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த எல்லா படைப்பாளிகளுடனும் உரையாடவும் இணக்கமான உறவைப் பேணவும் ஆர்வம் கொண்டிருந்தார். புதியவைகளையும், புதியவர்களையும் தனக்கும் தன் இருப்புக்கும் போட்டியாகக் கருதாத இந்த மன முதிர்ச்சியும் அதன் வழியாக உருக்கொண்ட கனிவுமே இளைஞர்கள் அவர்பால் கொண்டிருந்த ஈர்ப்புக்கான காரணங்கள். அவரது இந்த மன அமைப்பையே பிற்காலத்தில் அவர் தேர்ந்தெடுத்த உடைகள் வெளிப்படுத்தின.

2

சுந்தர ராமசாமி எழுத்தின் எல்லா வகைமைகளுக்கும் பங்களித்திருப்பவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதத் தொடங்கிய காலகட்டத்திலேயே ஒரு முழு நாவலையும் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தப் பன்முகத் தன்மை அவரது எழுத்திற்கு பெரும் சாதகங்களை சாத்தியப்படுத்தியிருக்கிறது. அடிப்படையில் அவர் ஒரு கவிஞர். மொழியின் உச்சபட்ச சாதனைகளுக்கு இடமளிக்கும் கவிதைக்கான பயிற்சியின் காரணமாகவே அவரது பிற எழுத்துக்களிலும் அபாரமாக கவித்துவமிக்க வரிகளை எழுத முடிகிறது. மொழி சார்ந்த பிரக்ஞையும் அதன் வழியாக அடைய நேர்கிற வடிவ நேர்த்தியும் கவி மனம் கொண்ட கலைஞனால் மட்டுமே முடியும் என்பதை அவரது எழுத்துக்களைக் கொண்டு உறுதிப்படுத்த முடியும்.

சுரா மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். முதல் நாவலான புளியமரத்தின் கதை 1966 ல் எழுதப்பட்டது. அந்த காலகட்டத்தில் வெளியான தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’, செல்லப்பாவின் ‘ஜீவனாம்சம்’, ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ க.நா.சுவின் ‘பொய்தேவு’ போன்ற நாவல்களிலிருந்து ‘புளியமரத்தின் கதை’ தனித்த கவனம் பெற்றது. காரணம், நாவலின் கூறுமுறையும், அங்கதத் தன்மையும். நாவலின் மையமாக ஒரு முச்சந்தி புளியமரத்தை அமைத்து அதைச் சுற்றிய சமூக நிகழ்வுகளையும், மனிதர்களின் சுயநல, வியாபாரப் போக்கையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கிய இந்த நாவல் இன்றளவும் தமிழின் முக்கிய நாவல்களின் வரிசையில் இடம் பிடிக்கும் தகுதியைக் கொண்டிருக்கிறது.

ஒரு நாவல் ஒரு இலக்கியத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்கித் தந்தது என்ற வரலாற்றுச் சிறப்பு சுராவின் இரண்டாவது நாவலான ‘ஜே.ஜே. சில குறிப்புக’ளுக்கு மட்டுமே உண்டு. 80களின் தொடக்கத்தில் இந்த நாவல் வெளிவந்த காலகட்டம் தொட்டு இன்று வரை தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்றைய ஒரு புதிய வாசகனுக்கும்கூட தீவிர இலக்கியத்திற்கான நுழைவாயிலாக ஜே.ஜேவே இருக்கிறது. தமிழ் நாவல்களின் வடிவத்தையும் மொழியமைப்பையும் களத்தையும் திசைதிருப்பும் வகையில் ஜே.ஜே அமைந்திருந்தது. புதிய வாசிப்பு அனுபவத்தையும் சாத்தியப்படுத்திய இந்த நாவல் அதுவரையிலான வாசக அணுகுமுறையில் ஒரு பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. செறிவும் கவித்துவமும் கொண்ட நாவலின் மொழியே வாசகர்களை வசீகரப்படுத்தியமைக்கு முதல் காரணி. கலைஞனை வாழ்விலிருந்து அந்நியப்படுத்தும் சூழலை எவ்வாறு புரிந்துகொள்வது, வாழ்வு குறித்த நம் தீர்மானங்களை எந்தவிதத்தில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்பது போன்ற கேள்விகளை தீவிரமாத்தோடும் அங்கதத்தன்மையுடனும், முக்கியமாக அதுவரையிலான நாவல் வடிவிலிருந்து வேறுபட்டு முற்றிலும புதிய உத்தியில் முன்வைத்ததும் இந்த நாவலின் முக்கியத்துவத்துக்கு காரணங்களாக அமைந்தன. நவீன தமிழ் உரைநடையில் ஜே.ஜேவின் பாதிப்பை இன்றும் நம்மால் உணரமுடியும்.

நீண்ட இடைவெளிக்குப் பின் 1998ல் சுரா எழுதி வெளிவந்த நாவல் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’. அவரது முந்தைய இரண்டு நாவலுடன் ஒப்பிடும்போது பக்க அளவில் பெரிய நாவல் இது. சுராவின் நாவல் மொழியிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இந்த நாவலில் காண முடியும். ‘புளியமரத்தின் கதை’யில் அனுபவப்படும் அங்கதம் இளையோடும் இயல்பான மொழி நடைக்கும் மாறாக, ‘ஜே.ஜே’வில் காண முடிந்த துல்லியமும், கூர்மையும் கொண்ட மொழி நடைக்கும் மாறாக இந்த நாவலின் மொழிநடை சரளத் தன்மையையும் உணர்ச்சிப்பெருக்கின் வழிஅமையும் கட்டற்ற தன்மையையும் கொண்டிருந்தது. குடும்ப உறவையும், மனிதர்களுக்கிடையிலான உறவையும் மையமாகக் கொண்ட இந்த நாவல் முந்தைய இரண்டு நாவல்களைப் போல வாசகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை. இந்த நாவல் வெளியான காலகட்டத்தில் தமிழ் நாவலின் இலக்கணங்கள் தலைகீழ் மாற்றத்துக்கு உள்ளாகியிருந்தன. ஒற்றைப் படையான, தட்டையான தளத்திலிருந்து தமிழ் நாவல் நகர்ந்து பன்முகத் தன்மையையும், தரிசனம் சார்ந்த விகாசத்தையும் வலியுறுத்தி நின்றது. இந்த சந்தர்ப்பத்தில் வெளியான சுராவின் நாவலை ஒரு குடும்ப நாவலாக மட்டும் சுருக்கிப் பார்த்ததன் விளைவாகவே ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ அதற்குரிய வரவேற்பை பெறவில்லை என்று கூறலாம்.

இந்த நாவல்களுக்கு அடுத்தபடியாக பெரும் வாசக கவனத்தையும், திசை மாற்றத்தையும் ஏற்படுத்தியவை சுராவின் கட்டுரைகள். அவரது படைப்பிலக்கியத்துக்கு நிகரான தரத்தையும், தாக்கத்தையும் கொண்டவை அவரது கட்டுரைகள். கட்டுரைகளின் வழியாகவே அவர் இலக்கிய வாசகர்கள் அல்லாத பிற பொது வாசகர்களுடன் உறவுகொண்டிருந்தார். தமிழ்ச் சமூகம் சந்தித்திருக்கும் சீரழிவுகளையும், அவை சார்ந்த தன் கவலைகளையும், அச் சீரழிவுகளை சரிப்படுத்தவேண்டி செய்ய வேண்டிய காரியங்களையும், மேன்மையான தமிழ்ச் சமூகம் குறித்த தனது கனவுகளையும் இக்கட்டுரைகளின் வழியாகவே அவர் பதிவு செய்தார். சுராவின் நாவல்களிலும் சிறுகதைகளிலும் தொடக்க காலக் கவிதைகளிலும் நாம் உணர நேரும் அங்கதம் அவர் சுட்டி நிற்கும் கேள்விகளின் தீவிரத் தன்மையை சற்றே உரம் குறைத்துக் காட்டியிருக்கும். ஆனால் கட்டுரைகளில் இந்த அங்கதத் தன்மையை அறவே தவிர்த்துவிட்டு சொல்ல வந்த விஷயத்தை மனக்கொதிப்போடும் ஆதங்கத்தோடும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாசகனின் மனவெளியை நேரடியாகத் தொடும் இத் தன்மை அவரது கட்டுரைகளுக்கு கூடுதல் முக்கியத்துவத்தைத் தருகிறது.

பசுவய்யா என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கவிதைகளின் எண்ணிக்கை 110. ( கடைசியாக எழுதிய, பிரசரிக்கப்படாத சில கவிதைகளைத் தவிர்த்து ). ‘நடுநிசி நாய்கள்’ அவரது முதல் தொகுப்பாகும். அதிக அளவில் அங்கதத் தன்மையும், உரையாடல் தன்மையும் கொண்டிருந்த இத் தொகுப்பு அப்போது தோன்றியிருந்த புதுக்கவிதை மரபின் வழியில் அமைந்திருந்தது. இத்தொகுப்பில் இடம் பெற்ற ‘நடுநிசி நாய்கள்’. ‘நகத்தை வெட்டி எறி’, ‘மந்த்ரம்’ ஆகிய கவிதைகள் பெரும் கவனம் பெற்றன. இரண்டாவது தொகுப்பு ‘யாரோ ஒருவனுக்காக’. மொழியின் அழகும், வடிவ நேர்த்தியும் ஒருங்கே அமைந்த பல கவிதைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. ‘இல்லாத போது வரும் நண்பன்’, ‘சவால்’, ‘உன் கவிதையை நீ எழுது’ என்று இத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் அந்த காலகட்டத்தின் கவிதைப் போக்கை தீர்மானிப்பவையாய் இருந்தன. ‘107 கவிதைகள்’ என்ற தலைப்பில் 1996 ம் ஆண்டு வெளியான தொகுப்பில் முந்தைய இரண்டு தொகுப்பின் கவிதைகளையும் சேர்த்து 107 கவிதைகள் இடம் பெற்றிருந்தன. புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதை என்ற தளம் நோக்கி நகர்ந்திருக்கும் தமிழக் கவிதையின் மொழியையும் வடிவக் கச்சிதத்தையும் ஆக்கித் தந்ததில் கணிசமான பங்கு பசுவய்யாவின் கவிதைகளுக்கு உண்டு. மொழியின் ஆகத் துல்லிய அலகு கவிதை என்றால் அந்தக் கவிதையின் ஆகத் துல்லிய சொற் தேர்வையும், வடிவ நேர்த்தியையும் அமைத்துக் காட்டியவை அவரது கவிதைகள்.

சுராவின் முதல் சிறுகதை பிரசுரமானது 1951ல். அவரது தொடக்ககாலச் சிறுகதைகளில் பொதுவுடமையின் தாக்கம் வெகுவாக இருந்தது. ஆனால் இந்தப் போக்கு காலவோட்டத்தில் மறைந்து வாழ்வின் மீதான அவதானிப்புகளாகவும் அதன் கணக்கற்ற சித்திரங்களின் சூட்சுமங்களை எழுத்தில் வடிக்கும் நுட்பங்களாகவும் விரிவடைந்தது. கதை மொழி கச்சிதம் பெற்று நுட்பமான விவரணைகளுக்கும் மனித மனதின் விநோதங்கள் குறித்த அபாரமான சித்தரிப்புகளுக்கும் வழிவகுத்தது. தொடக்கத்தில் உரையாடல்களால் கதையை நகர்த்தியிருந்த போக்கை மாற்றிக்கொண்டு மனித வாழ்வு குறித்த ஆழ்ந்த விசாரணைகளாக கேள்விகளாக கதைப்போக்கை அமைத்துக்கொண்டார். இதனால் கதையின் வடிவ எளிமை திரிந்து இறுக்கமும் நுட்பமும் பெற்றது. யதார்த்தமான சித்தரிப்பினு¡டே வாழ்வின் ஏதோவொரு கணத்தின் விநோதத்தை அல்லது கோணலைக் கதையாக்கிய சுந்தர ராமசாமி அந்தக் கதையின் வழியாக திரட்டித் தரும் ஒளிச் சரட்டைக் கொண்டு வாசகன் வாழ்வின் அநேக ரகசியங்களையும் திறந்திடவேண்டும் என்ற வகையில் வாசகனுக்கான வெற்றிடத்தையும் அனுமதித்திருந்தார். வடிவம் சார்ந்த பரிசோதனைகளையும் அவர் மேற்கொண்டார். இவை பரிசோதனைகளின் பொருட்டு எழுதப்பட்ட சொற்கூட்டங்களாக இல்லாமல் சொல்லவந்த கதைகளுக்குப் பொருத்தமாகவும், வாசிப்புத் தன்மையை விட்டுக்கொடுக்காத குணத்தோடும் இருந்தன. தன் இறுதிக் காலத்தில் அவர் எழுதிய சிறுகதைகளும்கூட வடிவ நேர்த்தியோடும் நவீன சிறுகதைகளுக்கான பன்முகத் தன்மையோடும் அமைந்திருந்தன. தனக்கு கைவந்திருக்கும் ஒரு எழுத்து முறையைக் கொண்டே காலத்தைக் கடத்திவிடாது இலக்கிய வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப தன் எழுத்தை சீர்படுத்திக் கொள்ளும் ஆற்றலும் மன விசாலமும் அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்தது.

எழுதுவதற்கு இணையாக மொழிபெயர்ப்பிலும் அதிக கவனம் செலுத்தியவர் சுரா. தீவிரமாக எழுதுவதற்கு முன்பாகவே, தமது இருபதாவது வயதில் அவர் தோட்டியின் மகனை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழை அப்போதுதான் எழுதக் கற்றுக் கொண்டிருந்த சமயம் அது. எழுத்தின் வழியாக தன்னை நிறுவிக்கொள்ளவேண்டும் என்ற உறுதியும், பதற்றமும் ஆட்கொண்டிருந்த காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு அவருக்கு தமிழில் தன்னால் எழுதமுடியும் என்ற பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. ‘தோட்டியின் மகனை மொழி பெயர்க்கும் நேரத்தில் என்னை ஒரு கலாச்சார ஏழை என்றுதான் சொல்லிக்கொள்ள வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியான ஒரு மன நிலையிலிருந்து தமிழில் தொடர்ந்து எழுதுவதற்கு ஒருவகையில் அந்த மொழிபெயர்ப்பு அவருக்கு உத்வேகம் அளித்திருக்கவேண்டும். அவர் மொழிபெயர்த்த இன்னொரு முக்கியமான மலையாள நாவல் தகழியின் செம்மீன். படைப்பிலக்கியத்தோடு சுரா தொடர்ந்து மொழிபெயர்ப்புகளிலும் கவனம் செலுத்தினார். தான் படிக்க நேரும் நல்ல உலகக் கவிதைகளை அவர் தொடர்ந்து மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். காலச்சுவடு இதழிலும் தொடர்ந்து மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்திருந்தார்.

3

சுரா தான் வாழ்ந்த காலத்தில் வணிகப் பத்திரிக்கையின் புகழ் வெளிச்சத்துக்கு ஒருபோதும் ஆசைப்பட்டவரில்லை . மாறாக அவற்றின் மீதான கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார்.

‘எனக்கு இவர்களுடைய ( பிரபல சஞ்சிகைகள் ) தாட்சண்யம் தேவையில்லை. கடந்த முப்பதாண்டு இலக்கியச் சரித்திரத்தில், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அர்த்தமளித்திருக்கும் எந்த சிருஷ்டிகர்த்தாவையும் உருவாக்குவதிலும் பிரபல பத்திரிக்கைகளுக்குப் பங்கில்லை என்பது ஆராய்ச்சி தேவைப்படாத ஒரு உண்மையாகும். வேறு மேடைகளில் அவன் தன் குரலை வெளிப்படுத்தித் தன்னை உருவாக்கிக் கொண்ட பின்னரே இவர்களுடைய கவனம் அவன் மீது கவியும். எந்த அடிப்படைக் குணங்கள் அவனிடம் தொழில்பட்ட காரணத்தால் அவன் சிரூஷ்டித் துறைக்கான தகுதியை ஏற்படுத்திக்கொண்டானோ, அவற்றையெல்லாம் அவன் காலப்போக்கில் இழந்துவிடுவதே அவர்களுடைய தொடர்பு அவனுக்கு அளிக்கும் பரிசாகவும் இருக்கும். சிருஷ்டியை அனுபவிக்க அக்கறை கொண்ட வாசகன் தன்னை அதற்கு ஏற்றாற்போல தயார் செய்துகொள்ள வேண்டுமே தவிர வாசகனின் தரத்தோடு சமரகம் செய்துகொள்வது இலக்கியகர்த்தாவின் நோக்கத்திற்கே நேர் எதிரானதாகும். பத்திரிக்கைகளோ வாசகர்களுடைய மேல்வாரியான தாகங்களைத் தீர்ப்பதற்காகத் தயார் செய்யப்படும் வியாபாரச் சரக்குகளே’ ( நானும் என் எழுத்தும் )

தீவிர இலக்கியத்தை மதிக்கத் தெரியாத வணிகப் பத்திரிக்கைகளை புறக்கணிப்பதன் வழியாகவே அவை நிகழ்விக்கும் கேடுகளை ஓரளவேனும் சுத்திகரிக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவற்றின் வணிக வேட்டையில் தீவிர எழுத்தாளன் பங்கெடுத்துக் கொள்வதை அவர் கறாராக நிராகரித்தார். வணிகப் பத்திரிக்கைகளின் வழிக்கு ஒருபோதும் ஒரு தீவிர எழுத்தாளன் பணிந்து போகலாகாது. தேவையெனில் அவை தம் போக்கை மாற்றிக் கொள்ளட்டும் என்ற அவரது தீவிரமான நிலைப்பாட்டின் விளைவாகவே இன்றைய வணிகப் பத்திரிக்கைகள் பலவும் தீவிர எழுத்தாளர்களை மதிக்கவும், அவர்களது ஆக்கங்களை வேண்டிப் பெற்று பிரசுரிக்கவும் செய்கின்றன. வணிகப் பத்திரிக்கையின் வாசகர்களுக்கிடையே சிறுபத்திரிக்கைகள் சார்ந்த தீவிர எழுத்து குறித்த அவ்வாறான விழிப்புணர்வை கொண்டுவந்ததில் சுராவின் காலச்சுவடு இதழுக்கும், அவர் தனது கட்டுரைகளின் வழியாக தொடர்ந்து வலியுறுத்தியமைக்கும் பெரும் பங்கு உண்டு. வணிகப் பத்திரிக்கைகளுக்கும் சிறுபத்திரிக்கைகளுக்குமான இடைவெளியை இல்லாமலாக்கவேண்டும் என்ற அவரது கனவின் ஒரு பகுதி இன்று நிறைவேறியுள்ளது என்றே இன்றைய இந்த மாற்றத்தை நாம் கொள்ளமுடியும்.

4

தகுதிவாய்ந்த எழுத்தாளர்களை எழுத்துக்கான விருதுகளிலிருந்து முடிந்த மட்டும் விலக்கி வைப்பது என்பது காலங்காலமாகத் தமிழ்ச் சூழலில் நடந்து வருவது. இலக்கியத்துக்கான எந்தவொரு உயரிய விருதுக்கும் தகுதிவாய்ந்த ஆனால் விருதுகளினால் கெளரவிக்கப்படாத தமிழ் எழுத்தாளர்களின் நீண்ட வரிசையில் சுராவுக்கும் இடமளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அப்படியொரு வரிசையில் தனக்கும் இடம் தரப்பட்டதையெண்ணி அவர் திருப்தியடைந்திருக்கக் கூடும். விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் இடம் பெறுவதைவிட புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர்களின் பட்டியலில் இடம் பெறுவதே தகுதிவாய்ந்தது என்ற எண்ணத்தை அவருமே முன்மொழிந்திருப்பார். அவருக்கு அளிக்கப்பட்ட ‘இயல்’ விருது, ‘கதா சூடாமணி’ விருது இரண்டுமே தனிப்பட்ட அறக்கட்டளையினாரால் தரப்பட்டவை. அரசு சார்ந்தவை அல்ல.

சாகித்ய அகாதமி தொடர்ந்து தமிழின் மூன்றாம் தரமான படைப்புகளுக்கும், தகுதியல்லாத படைப்பாளிகளுக்கும் பரிசளித்து வருவது குறித்து நிறைய எழுதியிருக்கிறார் சுரா. அவரது இந்த எதிர்ப்பை தனக்குக் கிடைக்காததின் வயிற்றெரிச்சல் என்றும்கூட விமர்சனங்கள் எழுந்ததுண்டு. ஆனால் அவரது குரல் தமிழின் தரமான படைப்பாளிகள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிரான ஒன்றாகவே இருந்ததேயொழிய சுயலாபத்துக்கான குமுறலாக இருந்ததில்லை. ‘காண்டமிருகங்களை ஈர்க்குச்சியால் குத்திக் காயப்படுத்த முடியாது’ என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார். ‘சாகித்திய அகாடமி பரிசு என்பது கலாச்சார மதிப்பீடுகள் சார்ந்து ஒரு குறியீடாகும். பரிசு அல்ல, பரிசை வாங்கித் தரும் மதிப்பீடுகள்தான் முக்கியம். எந்தெந்த மதிப்பீடுகளைக் கலைஞன் முன்வைக்கிறானோ அந்த மதிப்பீடுகளை அழிக்கும் ஸ்தாபனங்களிலிருந்து பரிசைப் பெறுவது தன்னையே அவன் காயடித்துக் கொள்வதாகும்’ என்று குறிப்பிட்ட அவர், சாகித்திய அகாதமியின் இந்தப் போக்கிற்கு எதிராக தமிழ் எழுத்தாளர்கள் செய்யவேண்டிய சில காரியங்களை சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் தமிழில் நடந்ததாகத் தெரியவில்லை.

‘அவரது மரணத்துக்குப் பிறகாவது சாகித்திய அகாதமி பரிசு அவருக்கு வழங்கப்படவேண்டும்’ என்று அவர் மீதும் அவரது எழுத்தின் மீதும் அபிமானம் கொண்டவர்கள் பலர் ஆசைப்படுகிறார்கள். அவருக்கு சாகித்திய அகாதமி பரிசு இனி தரப்படுமேயானால் அது அவருக்கு தரப்படும் உண்மையான கெளரமாக இருக்காது.

5

‘நான் செல்லும் பாதை என்னைக் கோவிலின் சன்னிதானத்திற்கு இட்டுச் செல்வதற்குள் நான் களைப்படைந்து போய்விடலாம். ஆனால் நடந்து செல்கிற பாதை சுத்தமான பாதையாக இருந்துவிட்டாலே போதும். அப்போது வழி நெடுகிலும் கோவில்கள்தாம். வழி நெடுகிலும் கோபுரங்கள்தாம்.’ ( நானும் என் எழுத்தும் )

அவர் களைப்படைந்து ஓய்ந்துவிட்டார். ஆனால் அவர் தனது பயணத்தில் தோள் மீது கைபோட்டு உரையாடிச் சென்ற இளைய தலைமுறைதான் அவரது பயணத்தை இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நடைப் பயணத்தின்போது சக எழுத்தாளர்களுடன், குறிப்பாக வாசகர்களுடன், அவர் சந்தோஷத்தோடு உரையாடிச் சென்றிருக்கிறார். அவரைத் தேடி எங்கிருந்தோ வந்த வாசகனுக்கு தமிழ் இலக்கியம் குறித்தோ, தமிழ் இலக்கியச் சூழல் குறித்தோ எதுவுமே தெரியாமல் இருக்கலாம். அவன் வாசித்த சுராவின் ஏதேனுமொரு எழுத்து அவனை அவரிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கும். அந்த வாசகனிடம்கூட சுரா ஆழ்ந்த அக்கறையுடன் உரையாடிக்கொண்டிருப்பார். உண்மையில் அவர் வாசகனை அதிகமும் பேசவைப்பார். அவருடன் இருக்கும் நேரங்களில் அவன் இயல்புடனும் சுதந்திரத்துடனும் இருக்கும்படியான சகஜதன்மையை உருவாக்கியிருப்பார். அந்த வாசகன் அவரை அதற்குப் பிறகு ஒருபோதும் சந்திக்க வாய்ப்பில்லாமல் கூட போய் விடும். ஆனால் அவருடன் இருந்த அந்தக் கணங்கள் அந்த வாசகனுக்கு மிக முக்கியமானவையாய் அமைந்துவிடும். அவரது தோளணைப்பும், கைகுலுக்கலும், அக்கறையுடன் அவன் சொல்வதைக் கேட்டிருந்ததும் அவனுக்கு பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கும். அப்படியான வாசகர்களுக்கு அவரது பாதையெங்கும் கோயில்கள்தான்.

பல இளம் படைப்பாளிகளுக்கு அவருடனான உரையாடல் புதிய வெளிச்சங்களைத் தந்திருக்கிறது. இளமைக்கே உரித்தான தலைகனத்துடனும், கற்றறிந்த மிதப்புடனும் இளம் படைப்பாளிகள் எதிரில் அமர்ந்து பேசுவதை அவருக்கேயுரிய சிறு புன்னகையுடன் அவர் கேட்டிருக்கும் காட்சி அவருடைய வீட்டில் பலமுறை அரங்கேறிய ஒன்று. காலவோட்டத்தில் இளம்படைப்பாளிகளின் தலைகனமிக்க வாதங்கள் அனைத்தும் உதிரந்துபோய்விட அவரது புன்னகை மட்டுமே நின்றிருக்கும். அவருடனான வாதத்தில் அன்று தான் வெளுத்துக் கட்டியதாய் மார் தட்டிக்கொண்டவர்கள் பலரும் பின்னாளில் அனைத்தையும் மறுக்காது கேட்டுக்கொண்ட அவரது பொறுமையும், பெருந்தன்மையுமே வாதிட்ட பொருளைவிட முக்கியமானது என்று உணர்ந்திருக்கிறார்கள்.

வாழ்நாள் முழுக்க எழுத்தாளர்களுடன், வாசகர்களுடன், சமூகத்துடன் அவர் நடத்திய தொடர்ந்த உரையாடல்கள், அவர் ஓய்ந்துவிட்ட இச் சூழலிலும் முடியாத அவரது பாதையாய் விரிகின்றன. தமிழ்ச்சமூகம் சார்ந்தும், தமிழ் எழுத்து சார்ந்தும் அவர் வலியுறுத்திய மதிப்பீடுகளை நோக்கிய அந்த உரையாடல்கள் காரியங்களாய் கனியும் காலமே அவரது பாதை அவரை ‘கோவிலின் சந்நிதானத்தற்கு இட்டுச்’ செல்லும்.

‘என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்பமானதுதான். எனினும், அந்தச் சொற்பமான கலை உணர்வையும் நான் பேணிச் சீராட்டி வளர்த்தேன். எனது அந்தரங்கத்துக்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக்கூடியதை நாலு வார்ததைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசிவரையிலும் நான் காப்பாற்ற முயன்றேன். எனக்குக் கிடைத்த மொழியை மலினப்படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னால் ஆன முயற்சி எடுத்துக்கொண்டேன்’ என்று தன் வாழ்வின் அந்திமதசையில் கூறிக்கொள்ள முடிந்தாலே போதும்’ என்று ஆசைப்பட்டவர் சுரா. அவர் இதை எழுதியது 1966ம் ஆண்டில். சரியாக நாற்பதாண்டுகள் கழித்து இன்று இதைப் படிக்கும்போது சுரா ஆசைப்பட்டபடியேதான் அவரது இலக்கியப் பணி நடந்திருக்கிறது என்று உணரமுடிகிறது.

தமிழ் இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பென சில முக்கிய விஷயங்களைக் குறிப்பிடலாம். ஒன்று, தமிழில் நவீனத்துவத்தை அடுத்த கட்டத்துக்கு மிகுந்த வீச்சுடன் கொண்டு சென்றது. இரண்டாவது, மொழியை அதன் உச்சபட்ச அழகுடனும் கச்சிதத்துடனும் கையாண்டதன் வழியாக படைப்பு மொழி குறித்த பிரக்ஞையை அடுத்து வந்த தலைமுறையிடம் ஏற்படுத்தியது. ‘ஜே ஜே. சில குறிப்புகள்’ மூலமாக தமிழ் நாவலை ஒரு புதிய திசை நோக்கித் திருப்பியதை அடுத்ததாகக் குறிப்பிடலாம்.

6

அரை நு¡ற்றாண்டு காலம் தமிழின் இலக்கிய மதிப்பீடுகளையும், கருத்தியல் தளத்தையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய ஆளுமையாக இருந்த சுந்தர ராமசாமி, தனக்கடுத்த இரண்டு தலைமுறை படைப்பாளிகளின் எழுத்தையும் பார்வையையும் பெருமளவு பாதித்திருக்கிறார். அவரது எழுத்தின் சாயலை இன்றைய படைப்பாளிகள் எல்லோரது எழுத்திலுமே நம்மால் அடையாளம் காண முடியும்.

அவர் விடைபெற்றுக் கொண்ட இன்றைய சூழலில் அவரது பங்களிப்பையும் படைப்பாளுமையையும் திரும்பிப் பார்க்கும்போது அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் மலைப்பை தருகின்றன. அவரது படைப்புகள் காலந்தோறும் அவரது எழுத்தாளுமையை பறைசாற்றும். ஆனால் அவரது கைகுலுக்கல்களும் தோளணைப்புகளும் முக்கியமாக ‘சுரா’ என்ற அழுத்தமான கையெழுத்துடன் நம்மை வந்தடையும் கடிதங்களும் இல்லாமல் உருவாகியிருக்கும் ஒரு வெற்றிடம் எதைக் கொண்டும் இட்டு நிரப்ப முடியாத ஒன்று.


Series Navigation

எம். கோபாலகிருஷ்ணன்

எம். கோபாலகிருஷ்ணன்