தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்

This entry is part of 37 in the series 20070329_Issue

லதா ராமகிருஷ்ணன்


எந்த ஒரு மொழியின் அளவிலும் சரி, ஒரு மொழியின் மொழியியல்சார் வளர்ச்சி மேம்பாட்டிற்கும் அதன் , இலக்கிய, சமூக அளவிலான வளர்ச்சி- மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு காலங்காலமாக் முக்கியப் பங்காற்றி வந்திருக்கிறது; பங்காற்றி வருகிறது. இலக்கியம் சார்ந்த, சாராத பிரதிகள் நம் மொழியிலிருந்து பிற மொழிகளுக்குச் செல்வதன் மூலமும், பிறமொழிகளிலிருந்து நம் மொழிக்கு வருவதன் மூலமும் நமக்கு உலக மக்களைப் பற்றியும், அவர்களுக்கிடையே உள்ள அடிப்படையான ஒற்றுமைகளை பற்றியும், தனித்துவங்களைப் பற்றியும் ஏராளமான விவரங்கள் தெரிய வருகின்றன. இன்று ஒளி-ஒலி ஊடக, கணிப்பொறி முதலியவற்றிலும் மொழிபெயர்ப்பின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய நலன்களைப் பேணவும், தரமான மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கவும் 2004ம் ஆண்டு சென்னையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு நடந்தேறி, அதன் விளைவாய் 2005ல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் உருவாகி பதிவு பெற்ற அமைப்பாக இன்று இயங்கி வருகிறது. இதன் தலைவர் பேராசிரியரும்- மொழிபெயர்ப்பாளருமான திரு. கோச்சடை . செயலர் தமிழின் குறிப்பிடத்தக்கமொழிபெயர்ப்பாளர் களில் ஒருவரான அமரந்த்தா. காரல் மார்க்ஸின் காலத்திற்குமான அரிய படைப்பை தமிழில் மூலதனமாக மொழிபெயர்த்திருக்கும் தியாகு முதலிய பலர் இந்தச் சங்கம் தோன்றியதிலிருந்து இதில் முனைப்பாக அங்கம் வகித்து வருகிறார்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முன்முயற்சி காரணமாக ”மொழிபெயர்ப்புக் கலை – இன்று என்ற நூல் தமிழின் ஏறத்தாழ இருபது மொழிபெயர்ப்பாளர்களின் கட்டுரைகளோடு மொழிபெயர்ப்பாளர்களின் விவரக் குறிப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வரும் பதிப்பகங்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய அளவில் வெளியாகியது. பாவை பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு உதவியது. தமிழின் மூத்த மொழிபெயர்ப்பாளர்களைக் கௌரவிப்பதையும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் தனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.

இந்த வருடம் 11.2.07 அன்று சென்னையிலுள்ள ‘இக்ஸா’ மையத்தில் முழுநாள் நிகழ்வாக நடந்தேறிய ‘தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்க இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் மூத்த மொழிபெயர்ப்பாளர்களான திரு.ம.லெ.தங்கப்பா, திரு.தியாகு, திரு. எம்.எஸ். வெங்கடாசலம், திரு. கே.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் நினைவுக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். காலை அமர்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் சென்னையைச் சேர்ந்த எத்திராஜ் மகளிர் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, மாநிலக் கல்லூரி, இந்துக் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலிருந்து மாணாக்கர்களும், ஆர்வமுள்ள வேறு சி¢லருமாக ஏறத்தாழ 30 பேர் பதிவுக் கட்டண்ம் ரூ.100 கட்டி கலந்து கொண்டனர். அவர்கள் மொழிபெயர்த்தவைகளை வல்லுனர் குழுவாக இயங்கிய ‘தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்’ சிலர் ஆய்ந்தலசினர். முன்னதாக, திரு.தியாகுவும், திரு. ம.லெ.தங்கப்பாவும் மொழிபெயர்ப்பு குறித்து பயிலரங்கப் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினர். பயிலரங்க நிகழ்வுகளை மாநிலக் கல்லூரிப் பேராசிரியரும், கா•ப்காவின் ‘உருமாற்றம்’, ஜோனதான் கெல்லரின் ‘இலக்கியக் கோட்பாடு’ உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவருமான திரு. ஆர்.சிவகுமார், சமூக ஆர்வலரும், சமூக மாற்றத்திற்கான விஷயங்களை மொழிபெயர்ப்பதில் ஆர்வமுள்ளவருமான திரு. த.வெ.நடராஜன் ஆகியோர் முன்னின்று ஒழுங்கமைத்தனர். பயிலரங்கில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி மாணவப் பிரதிநிதிகள் சிலர் அவையோரிடம் பகிர்ந்து கொண்டனர். பயிலரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு அகராதியும், சான்றிதழும், மற்றும், சந்தியா பதிப்பகமும், என்.சி.பி.ஹெச் பதிப்பகமும் மனமுவந்து அளித்த நூல்களும் வழங்கப்பட்டன. ஞானாலயா என்ற நூலகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க இலக்கிய, சமூகப் பணியாற்றி வரும் திருமதி. டோரதி. கிருஷ்ணமூர்த்தி, திரு.அரணமுறுவல், திரு.சிசு.சதாசிவம் முதலியோர் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

காலை அமர்வாக இடம்பெற்ற பொதுக்குழு அரங்கம் சங்கத் தலைவர் திரு.கோச்சடையின் தலைமையில் நடந்தேறியது.சங்கத்தின் ஆண்டறிக்கையை சங்கத்தின் செயலர் அமரந்த்தா சமர்ப்பித்தார்., வரவு-செலவுக் கணக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.பிறகு சங்கத்தின் எதிகாலச் செயல்பாடுகள் குறித்த விவாதம் சீரிய முறையில் நடந்தேறியது. இலக்கியம் சாராத , சமூகப் பிரக்ஞை கூடிய மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும், விருதுகள் வழங்கப்பட வேண்டும் என் சாகித்திய அகாதெமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கும் மொழிபெயர்ப்பாளரான திரு.தி.சு.சதாசிவம் வலியுறுத்தினார். பல உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை அவையோர் முன் வைத்தனர். பல புதிய உறுப்பினர்களும் சங்கத்திற்குக் கிடைத்தனர்.

மதிய அமர்வில் ‘தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல் என்ற தலைப்பில் டாக்டர்.கே.எஸ்.சுப்பிரமணியன், இலக்கிய ரசனை மேம்பாட்டில் மொழிபெயர்ப்பின் பங்களிப்பு என்ற பொருளில் திரு.ஆர்.சிவகுமார், அரசியல்,சமூக தளங்களில் மொழிபெயர்ப்பின் பங்கு என்ற தலைப்பில் திரு.தியாகு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தவிர, இவ்வாண்டு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது பெற்ற ( வெறும் நினைவுக் கேடயம் மட்டுமே தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. மொழிபெயர்ப்பில் மெய்யான ஈடுபாடு கொண்ட புரவலர் யாரேனும் தொடர்ந்தரீதியில் பொருளுதவி செய்ய முன்வரும் பட்சத்தில் தமிழின் தரமான் மொழிபெயர்ப்பாளர்களை ரொக்கப் பரிசும் அளித்து மரியாதை செய்ய முடியும்.) திரு.ம்.லெ.தங்கப்பா, திரு. எம்.எஸ்.வெங்கடாசலம் ஆகியோரும் உரையாற்றினர்.

இந்த ஐந்து உரைகளையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிடலாம் என்ற கருத்தை முன்வைத்த போது என்.சி.பி.எச் நிறுவனம் உடனடியாக அந்த நூலை வெளியிட முன்வந்தது. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் மொழிபெயர்ப்பின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் வாழ்வு நல மேம்பாட்டிற்காகவும் தேவையான முன்முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு உருவாகியுள்ள அமைப்பு. இதன் முயற்சிகள் வெற்றி பெற தமிழ் ஆர்வலர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.

ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு தனது தாய்மொழியின் மீது மரியாதையும், அபிமானமும், தாய்மொழியில் தேர்ச்சியும் மிகவும்அத்தியாவசியம். அதேசமயம், மற்ற மொழிகளின்பால் வெறுப்போ, எதிர்ப்புணர்வோ, பிறமொழிகளைக் கீழாகப் பார்க்கும், பகுக்கும் மனப்பாங்கோ இல்லாமலிருப்பதும் இன்றியமையாதது.

*புகைப்படங்கள்:- 1/ திரு.தி.சு.சதாசிவம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் திரு.எம்.எஸ்.வெங்கடாசலத்திற்கு நினைவுக் கேடயம் வழங்குகிறார். அருகே உள்ளவர்கள் திருமதி ‘ஞானாலயா’ டோரதி, திரு.தியாகு.
2/ எழுத்தாளர் திரு.பா.செயப்பிரகாசம் திரு.கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு விருது வழங்குகிறார். அருகே உள்ளவர் திரு.தியாகு.
3/ திரு.தி.சு.சதாசிவம் திரு.ஆர்.சிவகுமாருக்கு நூல் வழங்கி கௌரவித்தல்

4/திரு.தியாகுவிடம் மூத்த மொழிபெயர்ப்பாளரான திரு.பாலகிருஷ்ணன் நினைவுக் கேடயம் வழங்குதல்.
5/ திரு.ம்.லெ.தங்கப்பாவுக்கு திரு.தி.சு.சதாசிவம் சங்கத்தின் சார்பில் நினைவுக் கேடயம் வழங்கி மரியாத செய்தல்

6/ திரு. எம்.எஸ்.வெங்கடாசலம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார். மேடையில் வீற்றிருப்போர்: திரு.தியாகு, திருமதி, டோரதி, சங்கச் செயலர் அமரந்த்தா, பேராசிரியர் ஆர்.சிவகுமார், மதிய அமர்வின் சிறப்பு விருந்தினர் திரு. அரணமுறுவல்

.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation