குரு என்னும் சுடர் : பேராசிரியர் ஜேசுதாசன் நினைவில்….

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

ஜெயமோகன்


ஒரு மாமியார் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மருமகள் சீதனமாகக் கொண்டுவந்த செம்புப்பானையை மாமியார் கையில் வாங்கிப் பார்த்தார்களாம். தலைகீழாக. அதன் மேல்பகுதியை தடவிப்பார்த்து ‘இதென்ன , ஒரு பானை என்றால் அதற்கு வாய் இருக்கவேண்டாமா? எப்படி த்ண்ணிஈரை உள்ளே விடுவது, இப்படி மூடியிருக்கிறதே என்றாளாம்’ அதன் பின் அடிப்பகுதியை தடவிப்பார்த்து ‘ சரி அப்படி விட்டோமென்றால்கூட இவ்வளவு பெரிய ஓட்டை அடியில் இருக்கும்போது எப்படி தண்ணீர் உள்ளே நிற்கும்?” என்றாளாம்

பலசமயம் திறனாய்வாளர்கள் படைப்புகளை அடையாளம் கண்டு விவாதிப்பது இதேபாணியில்தான் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் எதை விவாதிக்கவேண்டும் என்பதை முன்னரே முடிவுகட்டி விடுகிறார்கள், அதற்கேற்ப அப்டைப்பை படிக்கிறார்கள். தங்கள் நோக்கத்துக்கு ஏற்ப அவர்களால் படைப்பை என்னவேண்டுமானாலும் செய்ய முடியும்.

தன் படைப்பைப் பற்றிய விமரிசனங்களைக் கவனித்தால் படைப்பாளி குழம்பித்தான் போவான். ஒரு படைப்பை அவனது மிகச்சிஆந்ர்க படைப்பு என்று ஒரு விமரிசகர் சொல்வார். அதே படைப்புதான் அவனது மிகப்பெரிய சறுக்கல் என்று இன்னொரு விமர்சகர் சொல்வார்.பொரு இடம் மிகச்சிறப்பாக இருந்தது என்று ஒருவர் சொன்னால் அது சரியில்லை என்று இன்னொருவர் சொல்வார்

வாசக அபிப்பிராயமும் இதேபாணியில்தான் வரும். வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அகவயமான அணுகுமுறைதான் இருக்கும். இந்தப் படைப்பு எனக்கு பிடித்திருக்கிறது, காரணம் இது என் குடும்பக் கதை போல் உள்ளது. இந்தப் படைப்பு எனக்கு பிடித்திருக்கிறது, இது எங்கள் ஊரின் கதை. இதே போல ஒரு விஷயம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆகவே இந்தப் படைப்பு எனக்கு பிடித்திருக்கிறது,. இப்படி இருக்கும் வாசக அபிப்பிராயங்கள்.

ஆனாலும் நம் சூழலில் ஒரு நூல் வந்து சில மாதங்களுக்குள் அதன் இலக்கிய மதிப்பு எப்படியோ நிர்ணயமாகி விடுகிறது. பெரும்பாலும். எப்படி என்பது ஓர் அற்புதம்தான். ஆத்மார்த்தமான வாசக அபிப்பிராயங்கள் பதிவுபெறாமல் காற்றில் வலம் வருவது இதற்கு முக்கியமான காரணம்

ஒரு எழுத்தாளன் பொருட்படுத்தவேண்டிய வாசக அபிப்பிராயம் எது? நம் மரபின் பதி ‘சான்றோரின்’ அபிப்பிராயம் என்பதே. கற்றவர்களின் கருத்து அல்ல, சான்றோரின் கருத்து.

என் நோக்கில் ஒரு சான்றோர் நான்கு அம்சங்களைக் கொண்டவராக இருப்பார். ஒன்று,கல்வி, இரண்டு அழகியல் உணர்வு. மூன்று அறச்சார்பு. நான்கு நயத்தக்க நாகரீகம்.

வெறுமே இலக்கியக் கல்வியைக் கொண்டு ஒருபோதும் இலக்கியப்படைப்புகளை மதிப்பிட முடியாது. அது பெரும்பாலும் மேலோட்டமான ஆய்வாகவும் அகங்கார வெளிப்பாடாகவுமே விளங்கும். இலக்கியம் அழகியல் உணர்வினால் அறியபப்டவேண்டியது. ஆனால் வெறுமே இலக்கிய அழகியலினால் படைப்புகளை மதிப்பிட்டால் அது வடிவம் சார்ந்த விவாதமாக மட்டுமே எஞ்சும்

இலக்கியத்தின் சாரம் அற உணர்வேயாகும். நீதிசார்ந்த மன எழுச்சியே பெரும் படைப்புகளை உருவாக்குகிறது. அந்த சாரம் நோக்கிச்செல்லக்கூடிய மனம் கொண்டவர்களே இலக்கியப் படைப்பின் உண்மையான மதிப்பை கண்டறிய இயலும். அவர்களின் ரசனையும் மதிப்பீடும் உயர்ந்த அறத்தேடலின் அடிபப்டையிலேயே அமைந்திருக்கும். அவர்களையே நாம் சான்றோர் என்கிறோம்.

அம்மதிப்பீட்டை சான்றோர் ஒருபோதும் கசப்புடனோ சினத்துடனோ எள்ளலுடனோ முன்வைப்பதில்லை. அவர்கள் படைப்பை ஒருபோதும் அவமதிப்பதில்லை. மென்மையாகவும் புண்படுத்தாத நகைச்சுவை உணர்வுடனும் கூறுவார்கள். அத்தகைய சான்றோரின் கருத்துக்களே இலக்கியப் படைப்பாளிக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.

அத்தகைய சான்றோர் என்றும் நம் மண்ணில் உள்ளனர் என்பதே நம் பண்பாட்டின் வலிமை. பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களில் ஒருவர்.

*

நான் பத்மநாபபுரத்தில் வசிக்கையில் அவரை அறிமுகம் செய்துகொண்டு பழகும் வாய்ப்பைப் பெற்றேன். அதற்கு நான் வேத சகாய குமாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

பேராசிரியர் பெரும் கல்வி கொண்டவர் என்பதை அவருடனான ஒவ்வொரு சந்திப்பிலும் உணர முடியும். அவரே தன் கல்வியை வெளிக்காட்டும் தருணங்கள் குறைவு. நாம் கேள்வி கேட்கையில் அவர் அதற்கான சிறிய ஆனால் கச்சிதமான விளக்கத்தை அளிப்பார்.

உதாரணமாக கைலாசபதி பழந்தமிழ் மரபை வீரயுகப் பாடல்கள் என்று சொன்னதை சரி என்று ஒப்புக்கொள்ளலாமா என்று கேட்டேன். பேராசிரியர் அதற்கு இவ்வாரு பதில் சொன்னார். அப்படி மேலைநாட்டு பகுப்புகளை போட்டுப் பார்த்தோமென்றால் அவை குத்துமதிப்பாகவே இருக்கமுடியும். சங்க காலத்தில் பாடாண் என்னும் திணை உள்ளது. வெற்றி பெற்ற வீரனை வாழ்த்திப்பாடும், பாடு+ ஆண் திணை அது. அதன் நீட்சியாகவே பின்னால் காப்பியங்கள் வந்தன

ஆனால் அந்தப் பாடல்களை கூர்ந்து நோக்கினால் எப்போதும் மன்னர்கள் மட்டுமே பாடப்பட்டுள்ளார்கள். சாதாரண வீரனின் வீரம் பாடப்படவில்லை. வீரம் முக்கியமான விழுமியமாக இருந்தால் சாதாரண மனிதனின் வீரமும் பாடப்பட்டிருக்குமே?

வீரர்களுக்கு நடுகல் நாட்டி வணங்கும் வழக்கம் இங்கே இருந்திருக்கிறது. அவ்வழக்கம்மூலம் நாட்டுப்புற காவல்தெய்வங்கள் பல உருவாயின. அவர்களின் வீரகதைகள் நாட்டுப்புறப்பாடல்களாக உள்ளன. அவ்வழக்கம் அன்றும் நாட்டுப்புற மரபில் இருந்திருக்கலாம். ஆனால் நம் சங்ககாலச் செவ்விலக்கியங்களில் வீரவழிபாடு சரியான பொருளில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

ஆகவே அது வீரயுகமா என்று கேட்டால் அப்படியும் பொருள்கொள்ளலாம் என்றுதான் சொல்லமுடியும். வீரத்தைவிட குலமுறைகளுக்குத்தான் அப்போது மதிப்பு அதிகம் என்றும் சேர்த்துச் சொல்லவேண்டும்.

இதுதான் அவரது பானி. சரியான பதில் அதை அவர் ஏற்கனவே யோசித்து வைத்திருப்பார். கேட்டால் தெலிவாக விளக்குவார். அதேசமயம் அதிரடியாக ஏதும் சொல்லவும் மாட்டார். அவர் எப்போதும் ஆசிரியர். அவரது பேச்சு எல்லாமே வகுப்புகள் தான்

அவரை நாங்கள் எடுத்த பேட்டியைப்பற்றி அசோகமித்திரன் எழுதும்போது ‘ஒரு பெரும் ஆசிரியரின் சிறந்த வகுப்பு போல் உள்ளது. பேட்டி எடுத்தவரும் கொடுத்தவரும் மிக உயர்ந்த நிலையில் இருந்தபோது நிகழ்ந்த உரையாடல்’ என்று குறிப்பிட்டார்.

அவரது அழகியல் உணர்வு நுண்ணியது. ஆகவேதான் அவரால் கம்பனையும் புதுமைப்பித்தனையும் ஒரே சமயம் ரசிக்க முடிந்தது. அன்றெல்லாம் ஒரு பக்கத்தை ரசிப்பவர்கள் மறுபக்கம் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதுதானே வழக்கம்? பேராசிரியர் அப்படி அல்ல.

அவரது அழகியல் நோக்கு என்ன? நான் எடுத்த ஒரு பேட்டியில் அவரிடம் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பு கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டேன். ‘ராஜரத்தினம் பிள்ளை மேதை. காட்டருவிபோல சங்கதிகளாக கொட்டுவார். எனக்கு அதேயளவுக்கு திருவெண்காடு சுப்ரமணியம் வாசிப்பும் பிடிக்கும். அந்த அளவுக்கு மேதமை கிடையாது. அவர் அடக்கமான மனிதர். நாதசுரத்தை தம்பூரா சுருதிக்கு வாசிப்பார். இனிமை அதிகம். தன் இயல்புக்கு ஏற்ப தன்னுடைய கலையை மாற்றி தனக்கென ஒரு பாணியை உருவாகிக் கொண்டார். அதுதான் கலையில் முக்கியமானது’ என்றார்.

இலக்கியக் கலையில் இதுதான் சிறந்தது என்று கிடையாது என்பது அவரது கொள்கை. ஒரு கவிதை மென்மையான அழகிய சொற்களால் ஆனதாக இருக்கும். இன்னொரு கவிதை வன்மையான சொற்களால் ஆனதாக இருக்கும். ஒன்று அழகாக இருக்கும் ஒன்று கொடூரமானதாக இருக்கும். பொருத்தப்பாடு அல்லது ஒத்திசைவு [conformity] தான் முக்கியம். அக்கலைபப்டைப்பு அது சொல்லும் விதத்திற்குரிய மொழியைக் கொண்டிருக்கவேண்டும். அதன் எல்லா கூறுகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போக வேண்டும். அதற்கும் அதன் ஆசிரியரின் ஆளுமைக்கும் ஒத்திசைவு இருக்கவேண்டும் என்று சொன்னார் ஒருமுறை.

அவரது வாழ்க்கை நோக்கின் மையமே அறம்தான். அவர் கம்பனில் இருந்து பெற்றுக்கொண்டதே அந்த அறநோக்குதான். வான்மீகியின் ராமன் வஞ்சினம் உரைக்கும்போது தந்தை சொல்லை மீறினேன் என்றால் எனக்கு பிராமணர்களை கொன்ற பாவம் சேர்வதாக, வேள்வியை அழித்த பாவம் சேர்வதாக என்று சொல்கிறான். ஆனால் கம்பனின் ராமனோ ஊர் உண்ணும் ஊருணியை அழித்த பாவம் என்னைசேர்வதாக என்றுதான் சொல்கிறான் என்றார் பேராசிரியர்.

கம்பனின் சிறப்பாக அவர் சொல்வது அவன் குல நீதியை அல்லது அக்காலகட்டத்தின் நீதியை எக்காலத்திற்கும் உரிய மானுட நீதி என்ற இடத்துக்குக் கொண்டுசெல்கிறான் என்பதைத்தான். ”அறத்தை ஒரு தனி இருப்பாகவே அவன் காட்டுகிறான் . ராமனை ‘அறத்தின் மூர்த்தியான்’ என்கிறான். ‘தர்மம் பின் இரங்கி ஏக’ என்று சொல்கிறான்.” என்று அவர் சொல்லும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கிய காட்சி நினைவில் நிற்கிறது

மானுட அறத்தின் ,கருணையின் அடையாளமாகவே அவர் கிறிஸ்துவைக் கண்டார். ஆகவே மதவெறி அவரை தீண்டவில்லை. அந்த அற உணர்வுதான் அவரை கம்பனையும் ஆண்டாளையும் ரசிக்கவைத்தது.

தன் கருத்துக்களை தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் முன்வைத்தவரல்ல அவர். அதிகமாக எழுதவில்லை. பேச்சிலும் வகுப்பிலும் சொன்னவையே அதிகம். அவர் சொல்லும் கருத்துக்களை எப்போதும் தெளிவாகச் சொல்வார், ஒருபோதும் கூர்மையாகச் சொல்வதில்லை. கூர்மையை தணிக்க லேசாக நகைச்சுவையைக் கலந்துகொள்வார். [ அந்தவகையில் அவரது மாணவர் வேதசகாயகுமார் நேர் எதிர்]

பேராசிரியருக்கு சமகால எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமி முக்கியமானவர். புளியமரத்தின் கதையும் பிரசாதம் தொகுப்பில் உள்ள கதைகளும் ரசனையும் வடிவச்செறிவும் உண்மையான அனுபவப் பின்புலமும் கொண்டவை என்று அவர் சொல்வதுண்டு.

ஆனால் ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ நாவல் அவரை கவரவில்லை. அதை நாசுக்காக இப்படிச் சொன்னார் ”ஆயுர்வேத உழிச்சிலில் மூன்று நிலைகள் உண்டு. எலும்புக்குப் படும்படி தடவுவது, சதைக்கு படும்படி தடவுவது, தோலுக்கு மட்டும் படும்படி தடவுவது. குழந்தைகள் ஆண்கள் பெண்கள் நாவல் ‘தொலிப்பதம்’ தான்’

ஓர் உண்மையான குருவிடம் நாம் கற்றுக்கொள்பவை நமக்கு வயதாகும்தோறும் மேலும்மேலும் ஆழமாகப் புரிய ஆரம்பிக்கும் என்று எனக்குப்படுகிறது. நானே பேராசிரியரிடம் நிகழ்த்திய உரையாடல்களின் சாரம் எனக்கு அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்து இப்போதுதான் புரிய ஆரம்பிக்கிறது.

மண்மறைந்த குருவிற்கு என் அஞ்சலி

[22.3.07 அன்று மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட பேராசிரியர் ஜேசுதாசன் நினைவுக்கூட்டத்தில் ஆற்றிய உரை]


jeyamohanb@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்