புத்தக விமர்சனம் கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

விழியன்



வெளியீடு – Books For Children, பாரதி புத்தகாலயம்

பாரதி புத்தகாலயம் சார்பாக சென்ற ஆண்டு(2006) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஏராளமான புத்தகங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘கிறுகிறுவானம் ‘ என்ற சிறுவர் நாவலும் ஒன்று. இலக்கிய உலகில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தற்போதைய காலகட்டத்தில் பொதுஜன பத்திரிக்கைகளில் தீவிர இலக்கியத்தை அழக்காக புகுத்திவிட்ட வெற்றி எழுத்தாளர்.

நாவலின் களம் கிராமம். கதை சொல்வது ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஓட்டைப்பல்லு என்ற சராசரியான ஒரு சிறுவன்.தனக்கு ஏன் ஓட்டைப்பல்லு என்ற பெயர் வந்து என சொல்லத்துவங்கி, ஊரில்,வகுப்பில் படிக்கும் அனைவரின் சொல்லப்பெயர்கள் என்ன என சொல்லத்துவங்குகிறான். இது தான் இழை, இப்படியே தன் ஊர் எப்படிப்பட்டது,வீடு எப்படி இருக்கும் என அழகாக சொல்லிக்கொண்டே நம்மை அவனோடு அழைத்து செல்கின்றான்.கொஞ்ச நேரத்திலேயே ஓட்டைபல்லனின் உலகத்தில் சிறுவர்கள் சஞ்சரிப்பது உறுதி. எளிமையான வார்த்தைகள் உபயோகம் சிறப்பு. பேச்சு வழக்கில் குழந்தைகளுக்கான எழுத்து இருக்கலாமா என ஒரு பக்கம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மிகுந்த இலகுவாக பேச்சுத்தமிழில் நாவலை முடிந்திருக்கிறார்.

நாவலின் போக்கில் கிராம வாசனையே இல்லாத சிறுவர்களுக்கு கிராம வாசனை தரும் வண்ணமாக இருக்கும், அதே போல கிராமத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு தங்களை போன்ற கிராமத்தை பார்த்த உணர்வு இருக்கும். இடையிடையே கதை சொல்லும் பாங்கு நன்றாக வந்துள்ளது. இது கதையில் ஓட்டத்திற்கு எந்த பங்கமும் விளைவிக்கவில்லை. சாப்பாடும் கூப்பாடும் பகுதியினை படிக்கும் போது நிச்சயம் நமக்கு பசி எடுத்து ஒரு முறையாவது சாப்பிட்டு வந்துவிடுவோம். கிறுகிறுவானம் விளையாட்டு புதிதாக இருந்தது. ஓட்டைபல்லனின் வறுமையினை ஆங்காங்கே சொல்லாமல் படம்பிடித்து காட்டிய விதம் பாராட்டத்தக்கது.

மீன்பிடித்தல்,ராஜா ராணியை காண செல்வது, கோலம் போடுவது,வானத்தோடு பேசுவது,இப்படி பல இடங்களில் கவிதை போன்ற காட்சி விவரிப்பு குழந்தைகளை கவரும்.மனிதர்களை விடவும் ஓட்டைபல்லன் இயற்கைமீது பாசம் வைத்திருக்கிறான். ஓட்டைபல்லன் எழுப்பும் கேள்விகள் சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வைக்கின்றது. குழந்தையாகவே மாறி அந்த கேள்விகளை எழுப்பியுள்ளார் ஆசிரியர்.

கவனிக்கலாம்…

சுவாரஸ்யமாக துவங்கும் நாவல், கடைசியில் தொய்வை ஏற்படுத்துகின்றது. ஆசிரியர் வேக வேகமாக முடித்தது போன்று தோன்றுகின்றது. இடையிடையே பெரியவர்களை நக்கலடிப்பதை தவிர்த்திருக்கலாம். குழந்தைகள் நாவலுக்கு அவை அவசியமா என தெரியவில்லை. குழந்தைகளுக்கான நாவலில் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தவறில்லை என்றே தோன்றுகின்றது. எல்லோரையும் மரியாதையாக கூப்பிடும் ஓட்டைபல்லன் அம்மாவை “செய்யும்”,”அழுவா”,”எழுப்பும்”..போன்று கூப்பிடுகின்றான். அந்த ஊர் பக்கங்களின் அது தான் வழக்கா என தெரியவில்லை.

பேச்சுத்தமிழில் இருந்து ஆங்காங்கே உரைநடைக்கு தாவி மீண்டும் பேச்சுத்தமிழுக்கு வருகின்றது. குழந்தைகளுக்கு அந்த வித்தியாசம் தெரியாது. அமர்வதை “உக்காந்து” “உட்கார்ந்து” ( ப.எ 17) என்று அடுத்து அடுத்த வரிகளில் வருகின்றது.அதே போல தந்தையை “அய்யா” “அப்பா” என அடுத்தடுத்த வரிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது(ப.எ 65).நீண்ட வார்த்தைகளை உடைப்பது நலம்.(வெட்டிக்கிடுறதுன்னா,சொல்லிச்சிங்கிறதுக்கு). மிகச்சில எழுத்துப்பிழைகள். இத்தனை நுண்ணிப்பாக வாசித்ததற்கு காரணம் இவை போன்ற தரமான நாவல்களின் எந்த பிழையும் இல்லாமல் இனி வரும் எல்லா குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான நூலாக அமையவேண்டும் என்ற ஆசையினால் மட்டுமே.

“கிறுகிறுவானம்” போன்று இன்னும் பல குழந்தை புத்தங்களை எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும், குழந்தை இலக்கியத்தில் நிலவி வரும் மந்தப்போக்கின மாற்றிடவேண்டும்.

வெளியீடு

Books for Children

421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,சென்னை – 600018

விற்பனை உரிமை

பாரதி புத்தகாலயம்

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018


விழியன்
http://vizhiyan.wordpress.com

Series Navigation

விழியன்

விழியன்