புத்தகங்கள்: வாங்குவது அதிகமாகி வாசிப்புக் குறைந்து போனது எதனால்?

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

தேவமைந்தன்



நாளது என்று முந்திய கால அழைப்புகளில் போடுவார்கள். ‘Dated’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுதான் நாளது என்று வெகுநாள் நம்பிக் கொண்டிருந்தேன். தஞ்சாவூருக்கு ஒருமுறை போயிருந்த பொழுது நாகசுரக் கலைஞரும் வயசாளியுமான ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது, நாளது என்பதற்கு ஆழமான பொருள் ஒன்றிருப்பது புலனாயிற்று. அவர் சொன்னார்: “..தம்பீ! எங்களப் போன்ற திருவிழாக் கலைஞர்களுக்கு நாளதுவரையிலே என்ன மதிப்புக் கெடச்சது சொல்லுங்க! எங்கனாச்சியும் ஊருல மாரியம்மன் திருவிழா’ன்னா கூப்புடுவாங்க.. நாலு காச’ப் பா(ர்)ப்போம்! முருகன் திருவிழாக்களுக்கெல்லாங்கூட இப்ப எங்களக் கூப்புடறதில்லே! அவங்கள்’ளாம் வசதி ஆயிட்டாங்க..”

அவருடைய குமுறலில், சாதிக்கும் வழிபாட்டுக்கும் உள்ள சமூகவியல் உறவு முதற்கொண்டு என்ன என்னவோ நியாயங்கள் என் மூளையில் உறைத்தபொழுதும் ‘நாளது வரையில்’ என்ற தொடரின் பயன்பாடு நினைவிலேயே தைத்து விட்டது.

ஆமாம். நாளது வரையில் புத்தகங்கள் மதிக்கப்பெற்றமை வாசிப்பினாலா? – என்ற சந்தேகத் தொனியில் அமைந்த கேள்வி மனமேடையில் நடனம் புரியத் தொடங்கி விட்டது. புத்தக விற்பனை குறித்த ‘ஆரோக்கியமான சர்வே’க்களும் தென்படத் தொடங்கின. நெய்வேலியிலும் சென்னையிலும் நடத்தப்படுகின்ற புத்தகக் காட்சிகளில் புத்தகங்கள் பெரும் எடுப்பிலான எண்ணிக்கையில் வாங்கப்படுவது குறித்த தொ.கா. விளம்பரங்கள், வார-மாத இதழ்களின் கட்டுரைகள், புத்தகப் பதிப்புத் தொடர்பான இதழ்கள் வெளியிடும் புள்ளி விளக்கங்கள் என்று இன்னும் பலவற்றைக் கண்டும் கேட்டும் வியந்தேன்; மகிழ்ந்தேன். “விதியே! விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?” என்ற பாரதிய ஏக்கம் போனது. விதியே! பார்! எம் தமிழச்சாதி புத்தகக் காட்சிகளுக்குச் சென்று புத்தகங்களை மலைபோல வாங்கிக் குவிக்கிறது பார்! – என்று மனத்துக்குள் மாந்தோப்புக் குயிலாய்க் குரலெடுத்துக் கூவினேன்.

அடுத்த நாள், நண்பர் ஒருவரின் இல்லத் திருமணத்திற்குப் போகவேண்டி வந்தபோது, மணமகனுக்கும் மணமக்களுக்கும் வாழ்த்திக் கொடுக்கப்பெற்ற புத்தகக் குவியலைக் காட்டி என் நண்பர் சொன்ன சேதி நெஞ்சுக்கு பாரம் ஆயிற்று. “பாருங்க முஸ்சியே!(பிரஞ்சுத் தமிழ்: ‘ஐயா’ என்று பொருள்).. என்னமா’ பொஸ்தகங்களக் கொண்டுவந்து குடுத்துகினு ஜம்ப’மா பந்திக்குப் போறானுவ பாத்தீங்களா?”.. அடுத்து அதை ஒட்டி நான் கேட்ட கேள்விக்குப் பதிலாக இரண்டு நாள்கள் கழித்து, தன் வீட்டுக்கு என்னை அழைத்துப் போய் அந்தப் புத்தகக் குவியலைக் காட்டினார் அவர். “வேணும்’கிறதெ எடுத்துக்குங்க.. கூச்சப்படாதீங்க முஸ்சியே!.. கண்ணாலமான புள்ளைங்க எங்கே இதையெல்லாம் படிக்கப்போவுதுங்க.. என்னா.. கண்டுபுடிச்சீங்களா?(புரிந்து கொண்டீர்களா? என்று பொருள்)” என்றார். சொல்லிவிட்டு எனக்குத் தனிமை வேண்டுமென்பதால் அறைக் கதவைச் சாத்திவிட்டுப் போய்விட்டார்.

அந்தக் குவியலிலிருந்த புத்தகங்களைப் பொருள்(subject) அடிப்படையில் வகைப்படுத்திப் பார்த்தேன். சிலர் எழுதிய புதுக் கவிதைகளை சுரத்தில்லாமல் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த தடித்த அட்டைப் புத்தகம் மட்டும் தனித்து விடப்பட்டது. திருக்குறளுக்கு அவரவர் உரையெழுதி இருபது, இருபத்தைந்து ரூபா விலையிட்ட புத்தகங்கள், மற்றவர்களால் முதல் வெற்றுத்தாளில் வாழ்த்தெழுதி “வழங்கப்பட்ட’வை – அவற்றுள் அதிகம். புத்தக வெளியீட்டு விழாக்களில் விலை பெற்றுத் திணிக்கப்பட்டவையாக இருக்கலாம். புரட்டிப் பார்த்தால் எங்கே அழுக்குப் படிந்து விடுமோ என்ற அச்சத்துடன், கருக்கழியாமல் காக்கப்பெற்றவை, திருமணத்தில் ‘மொய்’ எழுதுவதற்குச் சுணக்கப்பட்டு ‘வழங்கப் பெற்று,’ ஒரு இலைக்குப் பண்டமாற்று ஆனவை. கை மாறிக் கொண்டே போய் ‘ரீசைக்கில்’ ஆவதன்மூலம் வீடுபேறடைபவை. எஞ்சியவை, டெமி 1/4 அளவு முதலான சிறுவர் கதைகள். சிறுவர் கதைகளை ஏன் திருமணப் பரிசுகளாகக் கொடுக்கிறார்கள்? முதலாவது, கொடுத்தவரே எழுதியதாகவும் இருக்கலாம்; அவர் எழுதிய புத்தகங்களிலேயே அதுதான் அழகானதாகவும் இருக்கக் கூடும். இரண்டாவது காரணம், மணமக்கள் விரைவிலேயே பிள்ளை பெற்று அது வளர்ந்து படிப்பதற்காகவும் இருக்கலாம். தொலைநோக்கு!

ஆளுக்காள் புத்தகம் போடும் இக்காலத்தில் அவரவர் புத்தகங்களை அடுத்தவரோடு, பல்வேறு வழிகளைச் சிந்தித்து அல்லது உருவாக்கிக் கொண்டு, அவ்வப்பொழுது அவமானமும் பட்டு – அதை உடனே துடைத்துக் கொண்டு, தத்தம் கையிலிருந்து கடத்திவிடத்தான் அவரவருக்கு நேரம் கிடைக்குமே தவிர, பொறுமையாக அமர்ந்து வாசிப்பதற்கு எங்கே நேரம்? இப்பொழுதெல்லாம் கல்லூரிப் பேராசிரியர்கள் (எல்லாரும் அல்லர்) கொடுத்து வைத்தவர்கள். அவர்களின் புத்தக வெளியீட்டு விழாக்களில் அவர்களுடைய முனைவர்-இளமுனைவர் ஆய்வுப்பட்ட மாணவ மாணவியரும் பட்டமேற்படிப்பு மாணவ மாணவியருமே மேடைக்கு வந்து வரிசையாக நின்று புத்தகங்களை விலை கொடுத்து (சிலர், தாங்களே ஏற்பாடு செய்த ‘போட்டோ’வுக்கு நின்று) ‘மனநிறைவு’டன் செல்கிறார்கள். அவர்களின் பெற்றோர், கீழே, அவையில், பின்வரிசையில் அமர்ந்து ‘குசுகுசு’ என்று பேசிக் கொள்கிறார்கள்.. “என்ன..நம்ம புள்ளைக்கு டிகிரி வாங்கிக் குடுத்துருவார் இல்ல?..!”

சுஜாதா எழுதிய விஞ்ஞானச் சிறுகதைகளைத் தொகுத்து 2002இல் ‘உயிர்மை’ பதிப்பித்த கனமான புத்தகம். விலை 225 ரூபாய். நன்றாக விற்றிருக்கும். சந்தேகமில்லை. ஆனால் அதன் வாசிப்பைப் பற்றி, எழுதியவர் விசாரித்திருப் பாரோ என்னவோ? உறுதியான சுஜாதா வாசகர்கள் எல்லோரும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நேரடியாக 225 ரூபாய், அல்லது புத்தகக் காட்சிகளில் 10% தள்ளுபடியுடன் வாங்கி முழுவதும் வாசித்திருப்பார்களா? பொதுவாக இதுபோன்ற புத்தகங்களை நூலகத்தில் எடுப்பவர்கள் வேண்டுமானால் உரிய காலத்தில் வாசித்துக் கொடுத்து விடுவார்கள். சொந்தமாக வாங்கி வைப்பவர்கள் சில பக்கங்களைப் புரட்டிவிட்டு “அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!” என்று வைத்து விடுவதே வாடிக்கை. “எதையுமே சொந்தமாக்கிக் கொள்ளும் வரைதான் ‘த்ரில்..’ ‘அப்பறமேல்பட்டு’ அது சலிப்புதான்!” என்றார் நண்பர். சலிப்பையே தங்கள் இயல்பான உணர்த்துதலாகக் கொண்டவர்களை, “சலிப்பு சுந்தரம்” என்று சொல்லுவார் கி.ரா. என்று நண்பர் நாயகர் கூறியிருக்கிறார். நாமும் சலிப்பு சுந்தரங்களாக மாறிவிடாமல் தற்காத்துக் கொள்ள ஒரே வழிதான் உண்டு.

வாங்குகிற புத்தகங்களை வாசித்துவிட்டுத்தான் மறுபடியும் புத்தகங்களை வாங்க நினைக்க வேண்டும். அல்லது நமக்கு வாசிக்கத் தோதான புத்தகங்களை மட்டுமே வாங்க வேண்டும். புத்தக வெளியீட்டு விழாக்களில் சிறப்புப் பேச்சாளரும் மற்ற பேச்சாளர்களும் என்னதான் நம்மைச் சாதுரியமாக சொற்களால் சுழற்றினாலும், ‘ஒத்து வராத’ புத்தகங்களை வாங்கவே கூடாது.(எதிர்காலத்தில், இவர்கள் தங்களின் புத்தக வெளியீட்டு விழா நடக்கும் மண்டபத்தின் அத்தனைக் கதவுகளையும் பூட்டிவிட்டு அடியாட்களை வைத்து மிரட்டி, வந்தவர்களைப் புத்தகம் வாங்க வைக்கவும் கூடும்!)

புத்தகங்களை அன்பளிப்பாகத் தரும் புத்திசாலிகள் சிலர், வெறுமனே ‘அன்புடன்’ என்று எழுதித் தங்களின் கையெழுத்தைப் போட்டுத் தருகின்றனர். அவ்வளவு நம்பிக்கை! நாளது பின்னால் அந்தப் புத்தகம் பழைய புத்தகக் கடையில் இருந்து, தாங்களும் அதைப் பார்க்கவேண்டி வந்தால், யாருக்குத் தாங்கள் அந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தோம் என்று தெரிந்து கொண்டு மனம் வருந்தாமல் இருக்கவே இந்த முன்னேற்பாடு.

இங்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு, அல்லையான்ஸ் பிரான்சேஸில் நிகழ்ந்த திரைப்படத் திருவிழாவில் துருக்கித் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் தன் கிராமத்திலிருக்கும் பொருளெரிப்பவர்(incinerator) ஒருவரிடம் சென்று சிறுவன் கூறுவான்: “இந்தப் புத்தகங்களை எல்லாம் நீங்கள் எனக்காக எரிக்க வேண்டும்..” அவர் கேட்பார்: “தம்பீ! இந்தப் புத்தகங்களெல்லாம் உனக்கு உண்மையிலேயே தேவையில்லையா?” அவன் சொல்வான்; “ஐயா! இந்தப் புத்தகங்கள் எல்லாம் எனக்கு மறுமையிலும் தேவையில்லை!” சட்டென்று ஏதோ நினைத்துக் கொண்டு அவர் கேட்பார்: “தம்பீ! இவையெல்லாம் உன்னுடையவைதானே?” சளைக்காமல் சிறுவன் சொல்வான்: “பாருங்கள்! அவற்றில் என் பெயரை எழுதி வைத்திருக்கிறேன். மெய்யாகவே அவை இப்பொழுது நான் படித்துக் கொண்டிருக்கும் வகுப்புக்கான பாடப் புத்தகங்கள் ஐயா!..” அவன் இவ்வாறு சொன்னவுடன் அவர் சிரித்துக்கொண்டே எரியில் அவற்றைப் போடுவார். அவன் அவரை மரியாதையுடன் நோக்குவான். ‘ஐயா!’ என்று அவன் அவரை அழைக்கும்பொழுதே நமக்குத் தெரிந்து விடும் – அவனுக்குத் தன் பாடப் புத்தகங்களின்மீதும் ஆசிரியர்மேலும் உள்ள மரியாதை என்னவென்று.

ஒரு ‘மினி இன்சினரேட்டர்’ கிடைத்தால் போதும்; 600 சதுர அடி ஃப்ளேட்(Flat)-இல் வாழும் நடுத்தர – வீட்டு நூலகம் வைத்திருக்கிற – வாங்குகிற சம்பளத்துக்கும் செய்ய வேண்டிய செலவுகளுக்குமிடையில் குய்யோ முய்யோ என்று அல்லாடுகிற -வாங்கிக் குவித்திருக்கிற ‘நன்றியில்லாத’ புத்தகங்களால் மனைவியின் ‘கற்கண்டு’ச் சொற்களுக்கு அவ்வப்பொழுது ஆளாகிற – ஆனால் தன்மானமுள்ள- மெய்யான வாசகன் தன் புத்தக ‘இருப்’பைச் சரிக்கட்டிக் கொண்டு போய்விடுவான்.

புத்தகம் வெளியிடுவோரும் சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நூலக நண்பர் ஒருவர் ‘ஆதங்க’ப் பட்டார். அவர், அவர்களுக்கு முன்வைக்க விரும்பும் முதன்மையான கோரிக்கைகள் இரண்டு:
1. புத்தகத்தின் முதுகிலும் அதன் தலைப்பை அச்சிடுங்கள். அப்படி அச்சிட முடியாத 5 பாரம் 6 பாரம் புத்தகங்களை தயவுசெய்து அச்சிடவே வேண்டாம்.
2. ஒரு கையில் ஏந்தி அல்லது இரு கைகளாலும் எளிதாக (வலி வராமல்) ஏந்தி வாசிக்க முடிந்த புத்தகமாக வெளியிடுங்கள். அல்லது அப்படி ஏந்தி வாசிக்கும்படியான கட்டமைப்புக் கொண்ட பகுதிகளாக அந்தத் தடிமனான புத்தகப் பிரதியைப் பிரித்து வெளியிடுங்கள். இல்லாவிட்டால் புத்தகம் கட்டுக் குலைந்துபோய், அதற்காகக் காத்திருக்கும் வாசகர் பலரை ‘இலவு காத்த கிளி’களாக்கி ஏமாற்றி, கட்டுமானப் பிரிவு(binding section)க்கு விரைவில் போய்விடும். விற்றுத் தொலைத்தால் போதும் என்றிராமல் பொது நூலகங்கள் – வாடகை நூலகங்கள் – வீட்டு நூலகங்களில் நிலவும் எதார்த்த நிலையையும் மனத்தில் கொண்டு புத்தகம் வெளியிடுங்கள். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய துப்பறியும் நாவல்களின் இன்றைய வெளியீட்டு முறை(அல்லையன்ஸ் புத்தக நிறுவனம்)யைப் பிறர் பின்பற்றலாம். (‘விஞ்ஞானச் சிறுகதைகள்’ புத்தகத்தை இருவர் எடுத்துச் சென்றுவிட்டுத் திருப்பியபின் மூன்றாமவர், “இது என்ன? இப்படிக் ‘கோணி’க்கொண்டிருக்கிறதே! பக்கத்திலே சாம்பார்க் கறை வேறே!” எடுக்க முகம் சுளிப்பார். என்ன சொல்ல முடியும்… அதை எடுத்துச் சென்ற பெண்மணிக்கு, புத்தகத்தின் கனம் காரணமாக, தன் அலுவலகத்தில் உணவு நேரத்தின் பொழுது சாம்பார் சாதத்தின் அருகே அதை மேசையில் வைத்துப் பிரித்து வாசிக்கத்தான் இயலும் என்று சொன்னால் ஏற்குமா?)

“இந்த வம்பே வேண்டாம் என்றுதான் இப்படிப்பட்ட புத்தகங்களையே விரும்பி வாங்குகிறேன்!” என்று புதுச்சேரியின் ஞாயிற்றுக்கிழமை அங்காடியில் மலிவாகப் புத்தகங்களை அள்ளிக் கொள்ளும் ஒருவர் சொன்னார்.(இதுபற்றி விரிவாக, ‘மலிவு ஆன வாசிப்பு’ என்ற கட்டுரையைத் ‘திண்ணை’யில் எழுதியிருக்கிறேன்). இன்று அள்ளிக் கொள்ளலாம்தான். அவற்றிலுள்ள பழைய வாடையும் சன்னத்தூசிகளும் ஒருசேர, பிற்காலத்தில் ஒருக்கால் ‘அலர்ஜி ஆஸ்துமா நிபுணர்’ எவரையாவது தேடிச் சென்று ‘டாக்டர் ஃபீ’ஸுக்கும் மருந்துச் செலவுக்கும் அவர் இப்பொழுது சேமித்த ‘மிச்சக்’ காசை ‘ஃபைன்’போட்டுக் கட்ட வேண்டியிருக்கும் என்று சொல்லத்தான் நினைக்கிறேன். இன்னும் சொல்லவில்லை.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்