ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

நாகூர் ரூமி


அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே எழுத வந்திருப்பதற்காக மகிழ்கிறேன். கடந்த நவம்பர் 12ம் தேதியில் தொடங்கி 36 நாட்கள் கடுமையாக உழைத்ததன் காரணமாக, ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதையான

In the Line of Fire என்ற நூலை தமிழாக்கம் செய்து முடித்தேன். இது ஆதாரப்பூர்வ மொழிபெயர்ப்பு.
காலை 11 மணிக்கு மடிக்கணிணி முன் அமரும் நான், இடையில் சாப்பிட உட்காரும் நேரம் போக, மறுநாள் காலை 3 மணி வரை எழுதுவேன். பின்பு ஓய்வெடுத்துவிட்டு, காலை பத்து மணி வாக்கில் எழுந்து பின் மறுபடியும் 11 மணிக்கு உட்கார்ந்து விடுவேன். இப்படியாக 36 நாட்கள்! 511 பக்கங்கள்!

நூலுக்கு நான் எழுதிய, நூலில் சேர்க்கப்படாத சிறு குறிப்பபை இங்கே தருகிறேன்:

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

கொஞ்சம் ஹாலிவுட் த்ரில்லர், கொஞ்சம் அரைத்த மாவு, ‘ரின்’ சோப்புப் போட்டுத் துவைத்தால் மல்யுத்தப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுவிடலாம் என்பது போன்ற மிகைப்படுத்தல்கள் கொஞ்சம், பாடல்களோ இசையோ இல்லாத பாடகனைப் பற்றிய ஒரு திரைப்படம் பார்த்த மாதிரி கொஞ்சம் — இப்படி ஒரு கலவையாகத்தான் பாகிஸ்தானின் வரலாறு — ஆமாம், தன் சுயசரிதையை ஜெனரல் முஷர்ர·ப் அப்படித்தான் வர்ணிக்கிறார் — இருக்கிறது. ஆனாலும், ஒரு சாதாரண மனிதனுடைய சுயசரிதைக்கும், ஒரு நாட்டின் அதிகாரத்தில் இருக்கும் ராணுவத் தலைமையதிகாரியின் சுயசரிதைக்கும் பாரதூரமான வித்தியாசங்கள் உண்டு என்பது இந்த நூலை வாசிப்பவர்களுக்கு நிச்சயம் விளங்கும். இதில் சொல்லப்பட்டிருக்கும் சில உண்மைகள் சுடும். சில உண்மைகள் உப்புச் சப்பில்லாமல் இருக்கும். சில உண்மைகள் அதிர்ச்சியளிக்கும். சில ஆச்சரியமளிக்கும். எப்படிப் பார்த்தாலும் வித்தியாசமான, பயனுள்ள ஒரு அனுபவமாக இது இருக்கும்.

நூலில் அடைப்புக்குறிகளுக்குள் இருப்பதெல்லாமும் ஜெனரல் பர்வேஸ் முஷர்·ப் சொல்வதுதான். விளக்கம் தேவைப்படும் என்று நான் கருதிய ஒரு சில இடங்களில் மட்டும் சில விளக்கக் குறிப்புகளை அடைப்புக்குறிகளுக்குள் ‘மொழிபெயர்ப்பாளர்’ என்ற சொல்லுடன் கொடுத்திருக்கிறேன்.

இந்த அரிய நூலை தமிழாக்கம் செய்யும் வாய்ப்பை எனக்குக் கொடுத்த கிழக்கு பதிப்பகத்தாருக்கும், குறிப்பாக நண்பர்கள் பத்ரி, ராகவன் ஆகியோருக்கும், பல சமயங்களில் எனக்காக நூலை படித்துக் காண்பித்து நான் கணிணியில் உள்ளிட உதவிய என் மூத்த மகளுக்கும், மற்றும் என் மனைவிக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.

நாகூர் ரூமி

கிழக்கு பதிப்பகம் தனது வலைத்தளத்தில் உள்ளிட்டிருக்கும், இந்த நூலைப்பற்றிய வர்ணணை (நூலின் பின் அட்டையிலும் இதுவே உள்ளது)

:

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃபின் இந்த சுயசரிதை நமக்கு எடுத்துக்காட்டும் உலகம் பயங்கரங்களால் ஆனது. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத தேசமல்ல என்று அவர் நூறு முறை எடுத்துச் சொன்னாலும், மத அடிப்படைவாதிகள் தொடங்கி, மண்ணை ஆண்ட மனிதர்கள்வரை அங்கே புரிந்திருக்கிற திருவிளையாடல்கள் குலைநடுங்கச் செய்பவை. இதனை முஷரஃப் விவரிக்கும் சம்பவங்களின் மூலமே புரிந்துகொள்ளமுடியும்.

தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட உலகு தழுவிய யுத்தத்தில் பாகிஸ்தான் பங்கெடுக்க நேர்ந்ததன் பின்னணியை வெகு நேர்த்தியாக விவரிக்கிறார் முஷரஃப். உண்மையில் அல் காயிதாவால் அமெரிக்கா பாதிக்கப்பட்டதைக் காட்டிலும், பாகிஸ்தான்தான் அதிகம் அவதிப்பட்டிருக்கிறது என்கிறார்.

ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் அவர் பயணம் செய்த விமானத்தை பாகிஸ்தான் பிரதமரே கடத்தச் சொல்லி உத்தரவிட்டு நடத்திய நாடகம், விமான எரிபொருள் தீர்ந்துகொண்டிருந்தபோது வானவெளியில் அவர் அனுபவித்த விவரிப்புக்கு அப்பாற்பட்ட பதற்றம், மண்ணுக்கு வந்தபோது நிகழ்ந்திருந்த மாபெரும் ராணுவப் புரட்சி..

முஷரஃப் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராகவும் இந்நூலின் மூலம் அறிமுகமாகிறார்.

பிரச்னைக்குரிய காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் அதிபர் என்ன சொல்கிறார்?

காஷ்மீரை முன்வைத்து, கார்கில் வரை நடந்துள்ள ஒவ்வொரு யுத்தத்திலும் பாகிஸ்தான் ராணுவம்தான் மகத்தான வெற்றிகளைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார் முஷரஃப்.

இந்திய ராணுவமும் இந்திய அரசும் உண்மைகளைத் திரித்துச் சொல்வதாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல.

அவரது ராணுவ வாகனத்துக்குத் தீவிரவாதிகள் வைத்ததாகச் சொல்லும் குண்டுகளைக் காட்டிலும் வீரியம் மிக்க குண்டுகளை இந்த நூலில் முஷரஃப் வைத்திருக்கிறார்.

இதைவிட சர்ச்சைக்கிடமான ஒரு புத்தகம் 2006ம் ஆண்டு வெளியாகவில்லை

விலை: ரூ.250

ISBN

எண்: 81-8368-252-9
சென்ற ஜனவரி 9ம் தேதி சென்னையில் ஹோட்டல் டெக்கன் ப்ளாசாவில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் இயக்குனர் பி.எஸ்.ராகவன், மத்திய அரசின் முன்னாள் கூடுதல் செயலாளர் பி.ராமன், ஓய்வு பெற்ற ராணுவ புலனாய்வு அதிகாரி கர்னல் ஆர்.ஹரிஹரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். திலகவதி ஐ.பி.எஸ். போன்ற பல அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் விழாவுக்கு வந்து சிறப்பித்தனர்.

மின்னஞ்சல் :

ruminagore@gmail.com
வலைத்தளம்:

www.tamiloviam.com/rumi

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி