புனைவின் கோடுகள் – ராணி திலக்கின் “காகத்தின் சொற்கள்” – ( கவிதைத்தொகுப்பு அறிமுகம் )

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

பாவண்ணன்


தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய முக்கியமான கவிஞர்களில் ஒருவர் ராணி திலக். சமீப காலமாக உரைநடைக் கவிதைகள் எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஆர்வமாக இயங்கி வருபவர். 52 உரைநடைக் கவிதைகளைக் கொண்டதாக இந்தப் புதிய தொகுப்பு வெளிவந்திருக்கிறது.

தொகுப்பை வாசித்துமுடித்ததும் இக்கவிதைகளுக்கு இந்த உரைநடை மொழி ஏன் தேவைப்பட்டிருக்கிறது என்கிற கேள்வி மிதக்கத் தொடங்குகிறது. வழக்கத்தைவிட அதிக அளவில் புனைவுகளைச் சார்ந்து இக்கவிதைகளைக் கட்டியெழுப்ப விரும்புகிறார் ராணிதிலக். இறுக்கமும் சொற்செட்டும் இணைந்த கவிதைமொழி புனைவின் வசீகரத்தைக் குறைத்துக் காட்டிவிடக்கூடும் என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கக்கூடும். சற்றே நெகிழ்ச்சியும் கூடுதலான மயக்கத்தன்மையும் பொருந்திய புனைவுச் சித்தரிப்புகளை உருவாக்குவதற்கு உரைநடைமொழி உதவக்கூடும் என அவர் நம்பியிருக்கக்கூடும்.

சிறுகதைக்குரிய புனைவம்சத்துடன் கூடிய “ஏழு குதிரைகள்” இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. தொட்டியில் மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும் காட்சி ஒருபுறம். அஸ்தமன வேளையில் மேற்குவானில் சூரியன் சரிந்துகொண்டிருக்கும் காட்சி இன்னொரு புறம். தொல்கதை மரபு சூரியனின் பயணத்தை ஏழு குதிரைகள் பூட்டிய தேரின் பயணமாக உருவகிக்கிறது. எதார்த்தக் காட்சியையும் தொல்கதையின் புனைவம்சத்தையும் இணைத்துக்கொண்டதும் கவிமனம் எழுச்சி கொள்கிறது. சூரியன் மறையும் தருணத்தில் தேரும் மறைகிறது. அப்போது ஏழு குதிரைகள் என்ன செய்யும் என்பது ஆர்வத்தை ஊட்டும் ஒரு கேள்வி. கவிதையின் புனைவம்சம் இப்புள்ளியில்தான் தொடங்குகிறது. அந்த ஏழு குதிரைகளும் மீன்களுக்குத் தெரியாமல் தொட்டியில் இறங்கி நீந்திக் களிக்கின்றன. ஏற்கனவே நீந்திக்கொண்டிருந்த மீன்கள் யாருக்கும் தெரியாமல் அக்குதிரைகளை விழுங்கிவிடுகின்றன. சூரியன் மறைந்ததும் இரவு கவிந்துவிடுகிறது. உலகெங்கும் கவிந்த இரவு மீன் தொட்டியிலும் படர்கிறது. காணாமல் போன குதிரைகளைத் தேடி நீரில் நீந்திக்கொண்டிருக்கிறது இரவு. கவிதையின் காட்சி இத்துடன் நிறைவுபெற்றாலும் கவிதையில் நெய்யப்பட்டிருக்கும் புனைவு இன்னும் வெகுதொலைவுக்கு நம்மை அழைத்துச் செல்லும் சக்தியுடையதாக இருக்கிறது. அந்தியின் இறுதிக்கணத்தில் தேரை ஒருபக்கமாகவும் குதிரைகளை இன்னொரு பக்கமாகவம் ஓய்வெடுக்கவைத்துவிட்டு மறுநாள் அதிகாலையில் அதே தேரில் அதே குதிரைகளைப் பூட்டி அனுப்பவேண்டிய பொறுப்பு இரவுக்கு இருக்கிறது. குறிப்பிட்ட தினத்தில் மீன்கள் விழுங்கிய குதிரைகளைக் கண்டடையமுடியாமல் கடமை தவறிய குற்ற உணர்ச்சியில் இரவு உணரக்கூடிய பதற்றத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. விடியல் நெருங்கிவரும் ஒவ்வொரு கணமும் அதன் பதற்றம் பெருகிக்கொண்டே போகிறது. இப்போது தேரை எப்படி அனுப்புவது? சூரியத்தேர் நகராமல் போவதால் நிகழக் கூடிய விளைவுகள் என்னென்ன? ஆதிகாலம் முதல் ஒருநாளும் நிகழாத பிசகு கவனம் சிதைந்த ஏதோ ஒரு கணத்தில் நேர்ந்துவிட்டது. இரவின் துக்கம் எப்படி நீங்கப் போகிறது என்னும் ஆர்வம் அதிகரிக்கிறது. சூரியனின் வருகை இனி ஒருபோதும் நிகழப்போவதில்லை என்னும் நிலையில் பூமியில் என்னென்ன மாற்றங்கள் நேருமோ என்னும் கவலையும் படர்கிறது.

“அலைந்து திரியும் மேகம்” கவிதையில் நிகழ்த்தப்பட்டுள்ள புனைவுக் காட்சியும் கற்பனையாற்றல் மிகுந்த ஒன்றாகும். ஒருவன் மது அருந்தும் காட்சியிலிருந்து தொடங்குகிறது கவிதைச் சித்தரிப்பு. நிரப்பப்பட்ட மதுக்கோப்பைக்குள் நிலவு மிதக்கிறது. நிலவை மாந்தும் ஆவலில் அம்மதுவை உறிஞ்சிப் பருகுகிறான் அவன். பாவத்தின் நாக்கு மதுவிலும் அதன்மூலம் நிலவிலும் நனைந்து புனிதமாகிறது. அவன் நரம்புகளில் கதகதப்பான நதி பாய்கிறது. ஒரு பறவையைப்போல, மீனைப்போல, பூமியெங்கும் பாதைகளைத் தானாக உருவாக்கியபடி கனவுவெளியில் மிதக்கிறான் அவன். கோப்பை தீர்ந்துபோகும்போது நிலவு காணாமல் போய்விடுகிறது. ஆனால் அது வழங்கிய போதை கண்ணிமைகளில் பொதிந்திருக்கிறது. இரவு மறைந்து, பொழுது புலர்ந்து சூரியன் நகரத் தொடங்கிய பிறகும் போதை சற்றும் குறையவில்லை. இமைகளுக்குள்ளேயே ஒரு பாதையைக் கட்டியெழுப்புகிறது. எப்போதும் தானாக பாதையை உருவாக்கித் திரியும் மனம் சற்றே மேலெழும்பி ஒரு மேகமாக மாறி மிதக்கத் தொடங்குகிறது. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான பயணத்தின் ரகசிய வழியன்று மதுவின் சாரத்தால் மனத்துக்கு வசப்படுகிறது.

“புராதன நகரம்” கவிதைச் சித்தரிப்பில் இரண்டு நண்பர்கள் இடம்பெறுகிறார்கள். ஒருவர் அந்த நகரத்திலேயே வசிப்பவர். இன்னொருவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நகரத்துக்குத் திரும்பிவரக்கூடியவர். நகரத்தில் உருவாகியிருக்கும் மாற்றங்கள் அவருக்குக் கசப்பைத் தருகின்றன. மாறிவிட்ட நகரத்தில் மாறாத புராதனத் தன்மையுடன் இருப்பது மதுவிடுதி மட்டுமே. அந்த விடுதியில் இருவரும் மதுவருந்துகிறார்கள். மதுவின் உல்லாசத்தில் அவர்கள் மனம் அந்த நகரத்தின் பழைய காட்சிகளை மீண்டும் கட்டியெழுப்பிக் காட்டுகிறது. சிறுகச்சிறுக உருவான காட்சிகளால் பழைய நகரமே போதையில் எழுந்து நிற்கிறது. வெளியே நகரத்தின் புதிய தோற்றம். நினைவுகளில் அதே நகரத்தின் புராதனத் தோற்றம். அதைப் போதையில் கண்டெடுத்துவிட்ட உற்சாகத்தில் இரண்டு நண்பர்களும் ஒருவரையருவர் கட்டித் தழுவிக்கொள்கிறார்கள். முத்தமிட்டுக்கொள்கிறார்கள். அந்த முத்தம்கூட அவர்களுக்கு அந்தப் புராதன நகரத்தின் அரவணைப்பாக இருக்கிறது.

“தற்கொலை” கவிதையின் புனைவு ஓர் அதிர்ச்சியைக் கண்டடைந்த தருணத்தைப் பதிவு செய்கிறது. ஓர் அறையின் தனிமையுடன் தொடங்கும் அக்கவிதை அத்தருணத்தில் உருவாகும் அச்சத்தைப் போக்கிக்கொள்ள மனம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் செயல்களைப் பட்டியலிடுவதாக நகர்கிறது. அறையின் உத்தரத்தில் பதிக்கப்பட்டிருக்கிற கொக்கியின்மீது தற்செயலாக கவனம் பதிகிறது. அந்தக் காட்சி உடனடியாக தற்கொலை உணர்வை உருவாக்குகிறது. மெல்லமெல்ல அது வலுவடையத் தொடங்கும்போது மனம் தற்கொலைக்குத் தேவையான ஒரு தூக்குக் கயிற்றை வளர்த்தெடுக்கிறது. பிறகு அக்கயிற்றுக்குப் பொருத்தமான மனிதத்தலையை வரைய முற்படுகிறது. வரையப்பட்ட தலை சில சமயங்களில் தன்னுடைய தலையைப்போலவும் சில சமயங்களில் தனக்கு அறிமுகமானவர்களின் தலைகளைப்போலவும் தோற்றம் தருகிறது. உடனே மனத்தின் சமநிலை குலைகிறது. சமநிலையைச் சாத்தியப்படுத்திக்கொள்ள வேண்டி உடனடியாக அறையைவிட்டு வெளியேற நேர்கிறது. ஒருகணம் நிம்மதி. தன்னைப்போலவே தன்னந்தனியாக ஏராளமான எண்ணிக்கையில் நடமாடுகிறவர்களை மறுகணம் பார்க்கிறான். அத்துடன் கவிதை வரிகள் முடிவடைந்தாலும் அது விட்டும் செல்லும் கேள்வி முடிவுறாமல் தொடர்கிறது. மனத்தில் படரத் தொடங்குவது நிம்மதியல்ல, மாபெரும் துயரம் என்பதை மனம் கண்டடைகிறது. நடமாடுகிறவர்கள் அனைவருமே ஏதோ ஒரு பீதியிலிருந்து அல்லது தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட விரும்பியவர்களோ என்ற தோற்றத்தை உருவாக்குகிறது அக்காட்சி. அதிர்ச்சிமிகுந்த வகையில் அக்காட்சி வாசிப்பவர்களிடம் ஒரு கேள்வியாக உருமாறித் தங்கிவிடுகிறது. நடமாட்டம் என்பது தற்கொலைக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாக சுருங்கிவிடின் இந்த வாழ்க்கைக்கு என்னதான் பொருள் என்னும் கேள்வி திரண்டெழுந்து நிற்கிறது.

புனைவம்சத்தையே முதன்மை விருப்பமாகக் கொண்டு படைக்கப்படும் படைப்புகளுக்கே உரிய வெற்றிதோல்விகள் ராணிதிலக்கின் கவிதைகளிலும் காணப்படுகின்றன. புனைவம்சம் புகையின் கோடுகளாகப் பிரிந்து பிறகு ஏதோ ஒரு தற்செயலின் விளைவாக ஒருங்கிணைந்து ஒரு சித்திரமாக மாறும்போதுமட்டுமே கவிதைகள் உவகை தருவதாக உள்ளன. மேலே குறிப்பிட்ட கவிதைகளை அவ்விதத்தில் வகைப்படுத்திக்கொள்ளலாம். ஒன்றிணையாத தருணங்களில் அவை வெற்றியடையாத முயற்சிகளாக நின்றுவிடுகின்றன. பாறை, மீன் மற்றும் அரசன், நகரம் என்பவைபோன்ற கவிதைகளை அப்படி தேங்கிவிட்ட படைப்புகளாகச் சொல்லலாம்.

( காகத்தின் சொற்கள் -கவிதைகள். ராணிதிலக். வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை. விலை ரூ.40)


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்