காலனியத்தின் குழந்தை மானிடவியல்: பக்தவத்சல பாரதியின் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ அறிமுகப்படுத்தும் கோட்பாடுகள்

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

தேவமைந்தன்


காலனியத்தின் குழந்தை மானிடவியல்: பக்தவத்சல பாரதியின் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ அறிமுகப்படுத்தும் கோட்பாடுகள்
– தேவமைந்தன்

“காலனியத்தின் குழந்தை மானிடவியல். இது உணர்வு சார்ந்த கூற்றல்ல; மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த மானிடவியலன் என்பதாலுமல்ல. இது வரலாற்றின் வரலாறாகும்” என்றவாறு இந்த நூலின் முன்னுரையே கருத்துச் செறிவின் முழுவீச்சோடு தொடங்குகிறது.

பலதுறை இணைவுப் போக்குடைய இன்றைய தமிழ்ப் புலமை வீச்சில் கோட்பாடு மையமிட்ட சொல்லாடல்கள் மேலும் செழுமைப் படுவதற்கு இந்நூல் ஒரு திறவுகோல் என்று பதிப்புரையில் மகரந்தன் மொழிவது மிகவும் சரி என்பது வாசிப்பனுபவத்தின் நிறைவில் தோன்றுகிறது. ஏற்கனவே ‘தமிழகத்தில் நாடோடிகள் – சங்க காலம் முதல் சமகாலம் வரை’(2003) என்ற, ‘வல்லினம்’ பதிப்பித்த மானிடவியல் நூல், ‘விளிம்பு நிலையிலிருந்து அதிவிளிம்பு மக்கள் குறித்த சொல்லாடல்களை விரிவுபடுத்தி அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்வதாகவும் அமைந்தது.’ உள்ளபடியே தமிழ் மொழியின் சமூக மானிடவியல் துறையின் அறிவார்ந்த விரிவாக்கத்துக்கு இத்தகைய நூல்களும் துகாராம் கோபால்ராவ் தமிழாக்கி வருகின்ற மார்வின் ஹாரிஸின் ‘பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ முதலான மொழியாக்கங்களும் பெரும் எடுப்பில் துணை செய்யும்.

கோட்பாட்டுப் பின்புலத்தில் மானிடவியல் கருத்தாடல்களை விரிவு படுத்த இது உதவும். தமிழில் மானிடவியல் துறையை விரிவான முறையில் பக்தவத்சல பாரதியின் ‘பண்பாட்டு மானிடவியல்’ அறிமுகம் செய்தது. ‘தமிழர் மானிடவியல்’ தமிழர் சமூகத்தின் சமூக-பண்பாட்டு முறைமையினை நுட்பமாக ஆராய்ந்தது.

இருபத்து நான்கு கோட்பாட்டு அணுகுமுறைகள் தனித்தனி இயல்களாக அமைக்கப்பெற்றுள்ளமை இதன் சிறப்புகளுள் ஒன்று. ஒவ்வொரு அணுகுமுறைக்குள்ளும் கோட்பாடுகள் பல உள்ளன. இவற்றை ஒருங்கிணைத்துப் பார்த்தால் ஏறத்தாழ ஐம்பது கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.

தமிழர்தம் பண்பாட்டு மரபிலிருந்தே மானிடவியலைப் பிழிந்து கொள்ளும் முயற்சியாக இந்நூல் விளங்குகிறது. ஒவ்வோர் இயலின் பின்பகுதியிலும் இடம் பெறும் ‘பின்னுரை’ என்ற ஒதுக்கம், வாசிப்பவர்களை, அவர்கள் அறிவு உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நூலின் புலத்துக்குள் இழுக்கும் – கோட்பாடுகளில் தம்மையும் விரும்பிப் பிணைத்துக் கொள்ளச் செய்யும் உத்தியாகவே ஆசிரியரால் பின்பற்றப்பட்டுள்ளது.

உட்கிடக்கை – சில செய்திகள்:

1985ஆம் ஆண்டு ‘இந்தியாவின் மக்கள்'(‘People of India’) என்ற பெரிய பணித்திட்டத்தை இந்திய மானிடவியல் அளவீட்டுத் துறை மேற்கொண்டது. அதன் தலைமை இயக்குநர் கே.எஸ்.சிங், தென்னிந்தியச் சமூகங்களில் மிகவும் பரவலாகக் காணப்பெறும் தாய்வழிச் சமூகங்களில் எஞ்சி வாழ்கிற மூன்று கூறுபாடுகளைப் பதிவிட்டுள்ளார். ‘தாய்வழி’ என்பது தம் தாயாதிகளின் வீடுகளாகக் கொள்வது ஆதிகாலத் தாய்வழிச் சமூக மரபு என்பார் அவர்.

1. தங்களின் தலைப்பிரசவத்தை மகளிர் தங்களின் தாய்வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். [தமிழ்நாட்டின் 364 சமூகங்களில்] சில சமூகங்களில் தங்களின் முதலிரண்டு மகப்பேறுகளையும் தாய்வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

2. ‘சாந்தி முகூர்த்தம்’ மணப்பெண்ணின் இல்லத்தில் நிகழ்த்தப் பெறுவதும் இந்தக் கருத்தாக்கத்தின் தொடர்ச்சியே.

3. பெண் குழந்தைகளுக்கு மொட்டை போடுதலும் தாய்வழி மரபின் எச்சம்தான்.

‘தகாப் புணர்ச்சி’ எனப்படும் ‘முறையற்ற பாலுறவு’(incest) என்பது உலகம் முழுதும் பெற்றோர்-பிள்ளைகள், உடன் பிறந்தோர் இடையில் பாலுறவைத் தடுப்பதாகவே உள்ளது. மற்ற உறவுகளுக்குள் விதிக்கப்படும் பாலுறவுத்தடைகள் இடத்திற்கு இடம் சமூகத்திற்குச் சமூகம் மாறுபடுகின்றன.

“தமிழ்க் கிளைக்கதை ஒன்றில் பார்வதி வினாயகரைப் பார்த்து யாரை நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று வினவ, அவர் ‘தாயே! உன்னைப் போன்ற ஒருத்தியைத்தான்! என்று பதிலளிக்கிறார். இத்தகைய தகாத ஆசை கண்டு ஆத்திரமுற்ற பார்வதி ‘என்றுமே பிரம்மச்சாரியாக இரு’ எனத் துரத்தி விட்டதால் இன்றுவரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். (இக்கதையில் வினாயகர் தாயின் மேல் ஆசைப்பட்டது வெளிப்படுகிறது)” என்று பக்கம் 107 இல் வரும் பின்னுரைப் பகுதி பிராய்டிசப் பாதிப்பாகவே படுகிறது. அதே பொழுதில் பிராய்ட் என்ன சொல்லியிருக்கிறார்? “தன் தாயின் தட்டிக் கேட்க முடியாத செல்லப் பிள்ளையாக எவர் திகழ்கிறாரோ அவர் வாழ்வெல்லாம் வெற்றி வேந்தராகவே தன்னை உணர்வார். அந்த வெற்றி நம்பிக்கைதான் உண்மையான வெற்றிக்கே அழைத்துச் செல்கிறது”(‘A man who has been the indisputable favorite of his mother keeps for life the feeling of a conquerer. That confidence of success that often induces real success’ -quoted by Richard Appignanesi, Freud, Writers and Readers Publishing Cooperative Limited, 9-19 Rupert Street, London W.1. Page 5). பிராய்டிச நோக்கில் தாய்-மகன் உறவை மிகவும் கவனமாகவே பரிசீலிக்க வேண்டும். பார்க்கவே பால்தொடர்பு போலத் தோன்றும் தாய்-மகன் சீண்டல்களை இயல்பாக உடைய அசல் நரிக்குறவர்[‘வாக்ரி போல்தி’ பேசுபவர்கள்] சமூகத்தின் பிள்ளைகள்(புற நிலையில் இயற்கையுடன் ஒன்றி வாழ்வது போலவே) பாலுறவு தொடர்பாக மட்டுமல்லாமல் இயல்பாகவே, நாகரிக(city-oriented) சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகளை விட நலம் மிகுந்த மனம் படைத்திருக்கிறார்கள் அல்லவா? [நூலாசிரியர் ‘பின்னுரை’களை இணத்திருக்கும் நோக்கமும் விவாதங்களுக்காகவே..]

மேற்குறிப்பிட்ட பின்னுரைப் பக்கத்திலேயே(107) குறிப்பிடப் பெற்றுள்ளதுபோல் தமிழர்களிடையே புழங்கும் வசைச் சொற்களை மட்டுமல்லாமல் ஆபாசச்(obscene) சொற்களையும் திரட்டிப் பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளர் ஆய்ந்து அகராதிப்படுத்தவும் வேண்டும். ஆங்கிலத்தில் ஏலவே இத்தகைய சொற்களின் விரிவான அகராதிகள் வந்து விட்டன. பொதுக் கழிப்பறைச் சுவர்களில் காணப்படும் ஆபாசச் சொற்கள், வாக்கியங்களை(scatalogie:graffiti/graffito)ஆய்ந்து பிரஞ்சு மொழியில் நூல் வந்தது.

‘திருமண முறைகள்’ என்ற இயலில் மதனி மணம், மைத்துனி மணம், ஆவிமணம் ஆகிய ஆண்வழிச் சமூக அமைப்பிற்கான திருமண முறைகளும் விரிவாகச் சொல்லப் பெறுவதுடன் மதனி மணம் மைத்துனி மணம் ஆகிய மணமுறைகள் வட இந்தியச் சமூகங்களில்தான் மிகுந்துள்ளன என்ற உண்மையும் எடுத்துக் கூறப்பெற்றுள்ளது.(பக்கம் 126)

‘சாதியம்: நவீனக் கோட்பாடுகள்’ என்ற இயலின் பின்னுரையில் ஆசிரியர் தலித்தியச் சொல்லாடலைப் பின்வரும் தளங்களில் நிகழ்த்த வேண்டும் என்று கோடி காட்டுகிறார். “ஒற்றை வழியில் எழுதப்பட்ட சாதிய வரலாறு மறு பிரதியாக்கம் செய்யப்பட வேண்டும். சாதிகள் கடவுளால் படைக்கப்பட்டன; இன்ன இன்ன உறுப்புகளிலிருந்து இந்த இந்தச் சாதிகள் தோற்றம் பெறலாயின போன்ற பல தொன்மங்கள் உடைக்கப்பட்டு குந்தால் கிராமத்தில் தோன்றிய தீண்டத்தகாத சாதிகளின் தோற்றம் போன்ற வரலாற்றுக் கூறுகளை உள்ளடக்கிய தொன்மங்களைப் பதிவு செய்து மாற்று முனையிலிருந்தும் சாதிய வரலாறு எழுதப்பட்டாக வேண்டும். இதில் இனவரைவியலில் இதுவரை பதிவு பெறாத புதிய பிரதிகள் முழுமையாகச் சேகரிக்கப்பட வேண்டும். இதன்வழி, திணைக்குடிகளின் சமூக அமைப்புகள் எவ்வாறான வேரினைக் கொண்டிருந்தன, அவை முடியாட்சிக் காலத்தில் பெற்ற மாற்றங்கள் என்ன என்பன போன்ற வரலாற்றை எழுத முயலுவது என்பது இன்றைய அடித்தளச் சாதிகளின் இருப்பையும் பெறுமானத்தையும் மாற்றி அமைக்கும்.

இதே பின்னுரையில், மேற்கூறிய கருத்தாடலுக்கு முன்னதாக, பிரஞ்சு அமைப்பியல்வாதியான துய்மோ(ன்) தனது சாதியம் பற்றிய அமைப்பியல் கோட்பாட்டுக்கு இணைப்பாக மொழிந்த பொருள்நிறைவாக்கல்(substantialization)கோட்பாட்டையும் ஆசிரியர் சுட்டியுள்ளார். அமைப்பிலிருந்து பொருளுக்கு ஒரு நிலைமாற்றம்; படிநிலைத் தகுதி முறையமைக்கப்பெற்ற சாதிகளுக்கிடையில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்ததற்குப் பதிலாக போட்டி போடும் நிலையை ஏற்றுக் கொள்வது போலுமொரு தோற்றம்; சாதியானது சமன்மையை ஏற்றுக் கொள்ளத் தலைப்பட்டுவிட்டதோ என்று எண்ணும்படியாக சாதியின் தற்பொழுதைய இருப்பு தோற்றமளிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், கருத்தியல் நோக்கிலிருந்து பார்க்கும் பொழுது பொருளுக்கு அமைப்பு அடிபணிகிறதோ என்று தோன்றுகிறது. தான் அல்லாத மற்ற தனிமனிதர்களை எதிர்கொள்ளும் தனிமனிதனைப்போல் ஒவ்வொரு சாதியும் ஆகிவருகிறதோ என்பதுதான். இங்கே “சாதிகளுக்கிடையே ஏற்றத் தாழ்வுகள் குறைந்து சமத்துவம் அதிகரித்து வருகிறது என்கிறார் துய்மோன்”[ப.351] என்று ஆசிரியர் சொல்வது பொதுப்பட உள்ளது. பிரஞ்சுத் தத்துவ ஞானியானாலும் சரி, அமைப்பியல்வாதியானாலும் சரி – சொற்களை மிக நுட்பமாகப் பயன்படுத்துவதில் தீராத காதல் கொண்டவர்களாக உள்ளார்கள். இதனால் பிரஞ்சிலிருந்து தமிழுக்குக் கருத்தைக் கொண்டு வருவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. துய்மோ(ன்) மொழிவதில் அமைப்பிலிருந்து பொருளுக்கு ஏற்படும் நிலைமாற்றமே முதன்மையானது. சாதியின் இருப்புநிலை மாற்றத்தை அந்த நோக்கில் காணுவதே துய்மோ(ன்) நோக்கம். சாதியத்தின் கட்டமைப்பு குலைந்து தனிமனிதர் இடைநிலை உறவுக்குச் சாதியம் சார்பாவதனையே இவர் தன் இணைப்புக் கோட்பாட்டில் முன்னிறுத்துவதாகப் படுகிறது. இது முற்றிலும் ஐரோப்பிய சமூகத்துக்கே பொருந்தும். தன் தொல்மரபுகளை இடைவிடாது இன்னும் பிடித்துக் கொண்டுள்ள தமிழ்ச் சமூகத்துக்குப் பொருந்தவே பொருந்தாது என்பதை ஆசிரியர் “…துய்மோனின் சொல்லாடலை ஆதரிப்பது என்பது தலித்தியத்திற்கான நிலைப்பாடாக இருக்க முடியாது. சாதியத்தின் அடிப்படையான நுண்விழைவுகள் மாற்று நிலைகளில் வடிவம் பெற்றுப் புதிய பரிமாணங்களில் நிலைபேறு கொள்கின்றன. இதனை மிக விரிவாக ஆய்வது இவ்வியலின் அமைப்பிலிருந்து விலகுவதாக அமைந்து விடும்”[ப.351] என்பதாகச் சொல்லி விடுகிறார். ஆக, நூல்கூட அமைப்பிலிருந்து விலகிப் பொருளில் நிலைகொள்ள முடியாது போய்விடுகிற அளவு மரபின் பிடி இறுகியுள்ளது.

‘சமஸ்கிருதவயமாதலும் மாற்றுக் கோட்பாடுகளும்’ என்ற இயலில் எம்.என்.சீனுவாஸ் அவர்கள் தனது ‘குடகு மக்களின் சமயமும் சமுதாயமும்’(1952) என்ற ஆய்வில் தொடங்கிவைத்த ‘சமஸ்கிருதவயமாதல்’ என்ற கோட்பாட்டை விரிவாக ஆசிரியர் ஆராய்ந்துள்ளார். “சம்ஸ்கிருதவயமாதல் கருத்தாக்கத்தை முன்வைத்த சீனுவாஸ் அதனால் சாதிப் படிநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை முன்வைக்காதது அவரது கருத்தாக்கத்தின் நிலைப்பாட்டை வலுவிழக்கச் செய்கிறது”[ப.363] என்று கூறுவதுடன் நம் சமூகம் போலல்லாமல் மேலைச் சமூகம் ‘திறந்த அமைப்பு”(open system) கொண்டுள்ளதால் கீழ்நிலையில் உள்ள வர்க்கத்தினர் மேல்நிலை வர்க்கத்திற்கு மாறிக் கொள்ள இயலும் என்றும் அங்கே தகுதிப்பெயர்வு என்பது[இங்கு போல் கிடைநிலை/horizontal அல்லாமல்] செங்குத்தானது[vertical] என்றும் குறிப்பிடுகிறார். இவ்வியலில் பின்னுரைக்குப் பதிலாக ‘திராவிட உயர்வுவாதம்’ என்ற கருதுகோள் முன்வைக்கப்படுகிறது. இது விரிவான விவாதத்துக்கு உரியது.

‘பின்னை நவீனத்துவமும் பண்பாட்டை எழுதுதலும்’ என்ற கடைசி இயல் பல்வேறு தளங்களில் இனவரைவியலை எடுத்துச் செல்லுகிறது. பின்னை நவீனத்துவக் காலமும் போக்கும் ஊடக – உலக இயல் செயல் இயக்கங்கள் நோக்கில் விளக்கப் பெற்றுள்ளன. இனவரைவியல் பனுவல் குறித்தும் பண்பாட்டை எழுதும் மொழிகுறித்தும் சொல்லும்பொழுது மொழியின் சார்பற்ற பண்பாட்டு வாழ்வியலில் நிகழும் பொருண்மைகளைக் குறித்துச் சிந்திக்கும் பொழுதும் ழாக் தெரிதா(பிரான்சு நாட்டின் தீவிரமான பின்னை நவீனத்துவக் கோட்பாட்டாளர்), லெவிஸ்ட்ராஸ், மேரி டக்ளஸ் ஆகியோரின் கருத்தாடல்கள் முன்வைக்கப்படுகின்றன. பொருந்தாக் கூறுகள் பொருந்தா உறவைச் சுட்டுகின்றன என்பதற்கு லெவிஸ்ட்ராஸ் கூறிய “ சில தொன்மங்களில் தேனைச் சமைத்துண்ணும் நிகழ்வுகள் வருமானால் அது தகாப் புணர்ச்சியைச் சுட்டுவதாக அமையும்” என்ற கருத்து சான்று காட்டப்படுகிறது. “தேனைச் சுடுவதும், புகையிலையைச் சுடாமலிருப்பதும் முறையற்ற உணர்வுகளின் வெளிப்பாடாகும்” என்றும் “கூறுகளின் பொருண்மையை அவற்றின் உறவுகளிலிருந்தே பெறமுடியும்” எனவும் தெளிவுபடுத்தப் பெறுகிறது. மொழியின் பயன்பாட்டை அமைப்பியலாரும் பின்னை அமைப்பியலாரும் அணுகுவதில் உள்ள வேறுபாடுகள் நன்றாக விளக்கப் பெறுகின்றன. இலக்கிய இனவரைவியல் அணுகுமுறையின் முதன்மைக்கு நாஞ்சில் நாடனின் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ என்ற படைப்பு சான்று காட்டப்படுகிறது. பண்பாட்டியலாருக்கு ஒரு வட்டார மொழிச் சமூகத்தின் தனிவரைவு(monograph) நூலாகவும் இலக்கியவாதிகளுக்கு ஒரு மாறுபட்ட படைப்பெழுத்தாகவும் விளங்கக்கூடிய அதன் படைப்பு நேர்த்தி பாராட்டப் பெறுகிறது. இனவரைவியல் எழுத்து, புனைவு பூச்சுகளின்றி களப்பரிசோதனைக்கு உட்பட்டாலும் எதார்த்தக் குறைவில்லாமல் திகழ வேண்டும் என்றும் வரையறுக்கப்படுகிறது.

இவைபோக களவு வழிப்பட்ட காதல் வாழ்க்கை, இயற்கை வழிபாடு, ஆவி வழிபாடு, உயிர்ப்பாற்றல்(animatism), ‘தமிழக மனா[manaism]’ எனத் தகும் ஆகூழ் (‘அதிர்ஷ்டம் என்னும் நம்பிக்கை உயிர்ப்பாற்றலின் திரிபே’ – ப.262) முதலான பலவற்றைக் கோட்பாட்டு அடிப்படையில் இந்நூல் ஆராய்ந்துள்ளது. பரிசப் பணம், வரதட்சணை ஆகியவற்றின் பெண்ணிய மானிடவியல் அடிப்படைகளும் நன்றாக அலசப்பெற்றுள்ளன.

சாரமாக, மனிதரின் சமூகமும் சிந்தனையும் நாகரிகமும் பண்பாடும் அமைப்பும் சமயமும் சாதியமும் மொழியும் மிக விரிவாக இந்நூலுள் ஆராயப்பெற்றுள்ளன எனலாம்.

நூல் விவரம்:
தலைப்பு: மானிடவியல் கோட்பாடுகள்
ஆசிரியர்: பக்தவத்சல பாரதி
பக்கம்: 448+xvi
விலை: ரூ.250/-

வெளியீடு:
வல்லினம்,
எண் 9, Y-பிளாக், அரசு குடியிருப்பு,
இலாசுப்பேட்டை,
புதுச்சேரி – 605008.

தொ.பே: 0413 2257151, 2252936.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்