திருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

முனைவர். மு. பழனியப்பன்


தமிழரின் தத்துவக்கொடைகளுள் முதன்மை வாய்ந்தது சைவசித்தாந்தம் ஆகும். இலக்கியம் தோன்றியபின் இலக்கணம் வகுத்த மரபைப்போல தோத்திர நூல்களான திருமுறைகளுக்குப்பின், சாத்திர நூல்களான சித்தாந்த நூல்கள் தோற்றம் பெற்றன. திருமுறைகளில் முதன்மை பெறும் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரைப்போல மெய்கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தசிவம், உமாபதி சிவம் ஆகிய நால்வர் புறச்சந்தான ஆச்சாரியர்கள் எனப் போற்றப் பெறுகின்றனர். இவர்கள் குருபரம்பரையினர் ஆவர். மெய்க்குருவின் துணையுடன், பதியைப் பசு அடையும் நிலையே முக்தி என்பதால் குருபரம்பரையினர் தத்துவ உலகில் இன்றியமையாதவராகின்றனர்.
உமாபதி சிவம் – சித்தாந்த சாத்திரங்களில் செம்பாதிக்கு மேல் ஆக்கியவர் ஆவர். இவரது திருவருட்பயன் குறள் வெண்பாக்களால் ஆனது; பத்து அதிகாரங்களைக் கொண்டது. ஒரு அதிகாரத்திற்கு பத்துக் குறட்பாக்கள் வீதம் நூறு குறட்பாக்கள் இந்நூலுள் உள்ளன. திருக்குறளின் அமைப்பையும், சொற்செறிவினையும் இந்நூல் பெற்றள்ளது. இந்நூல் பதி, பசு பாசம் ஆகியவற்றின் இயல்பை தௌ¤வாகத் தருகின்றது.
பசு- என்பது உயிர் – இதன் இயல்பபை இந்நூல் ,
சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது அங்கண்இவை
உய்த்தல் சதசத்தாம் உயிர்(17)

என்று தத்துவமாக விளக்குகிறது. சத்து என்பது நிலையான பொருள். இறைவனே நிலையான பொருள். அசத்து என்பது உயிர் தவிர்ந்த உலகப் பொருள்கள். அவை நிலையில்லாதவை. சத்தான இறைவனோடும், அசத்தான உலகப்பொருள்களோடும் உயிர் தொடர்புடையது ஆதலின் அதனை சதசத்து என்று தத்துவ உலகில் அழைப்பர்.
உயிருள் பிரிப்பில்லை,; பேதமில்லை,; வகையில்லை,; எனவே எல்லா உயிரும் ஒன்றெனவே,; நிலையெனவே கொள்ளுகின்றது சித்தாந்தம்.
அவன் அவள் அது எனும் அவை மூவினனமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிய மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர் (நூற்பா1 சிவஞானபேதம்)
அவன் அவள் அது என்ற முப்பகுப்புடையது உலகம் என்ற மேற்காணும் சிவஞானபோத நூற்பாவின்படி, உலகப்பொருள்களில் சதசத்தான அவனும் அவளும், அசத்தான அதுவும் சேர்ந்தது உலகம் அமைந்துள்ளது. சதசத்தான ஆணும், பெண்ணும் உடலளவில் பிறிந்திருப்பினும் அவை உயிரால் ஒன்றே என்பது சித்தாந்த அடிப்படைக்கருத்தாகும்.
உயிரால் ஒன்றுபடும் ஆண், பெண் இருபாலரும் சித்தாந்த வழியில் நன்றாய் முக்திபெற முடியும் என்பது சிந்தாந்தத் தௌ¤வு. இவ்வழியில் ஆணுக்கு ஈடான சரிசமநிலையை, ஏற்றத்தாழ்வற்ற நிலையைப் பெண்ணும் பெற இயலும் என்ற தத்துவத் தௌ¤வு பெண்ணியவதாத்தால்- பாராட்டப்பெறக் கூடியதே.
இருப்பினும் திருவருட்பயனில் இடம்பெறும் சிலகருத்துக்கள் பெண்களுக்கு எதிரானதாக இருப்பதை கற்கையில் உணர முடிகின்றது. அவற்றைப் பெண்ணியப் பார்வையில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. தெய்வப்பனுவலாகவும், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவும் திருவருட்பயனை கருதுவோர்க்கு இக்கட்டுரை எவ்வித மறுப்பையும், இடையூற்றையும் ஏற்படுத்தாது என்பதை இங்கு தௌ¤வுபடுத்திக் கொள்வது நல்லது.
பெண்ணிய வாசிப்பின் போது மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு குறட்பா பின்வருவதாகும்.
பலரைப் புணர்ந்தும் இருள் பாவைக்கு உண்டு என்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு (25)

என்ற குறட்பா இருள் மலநிலையை உணர்த்த வந்ததாகும். இருள் மலம் எனப்படுவது ஆணவமலமாகும். இதுவே மூலமலம் ஆகும். இவ்வாணவம் உயிரில் படிந்து ஆண்டவனை அடைய விடாது தடுக்கின்றது. இது என்றைக்கு உயிர் தோன்றியதோ அன்றைக்கே உடன் தோன்றியதாகும். அதனால் இதனை சகசமலம் என்பர் தத்துவ உலகினர். உயிர்கள் பல,; ஆணவமலம் ஒன்றே. உயிர்கள் பல; ஆண்டவன் ஒருவனே என்ற இவ்விளக்கங்கள் ஆணவமலத்தைத் தௌ¤வுபடுத்தும்.
மேற்குறட்பா பலவழிகளில் பொருள் உணரத்தக்கது. அதன் நேர்பொருள் பின்வருமாறு,;
இல்லறத்தில் உள்ள பெண் ஒருத்தி, தன் கணவன் இல்லாத பொழுதுகளில் பிற ஆடவருடன் கூடி இன்பம் பெறும் இயல்பினள். அவள் தன் கணவன் வந்த காலத்து அவனுக்கே அன்புடையவள் போல, கற்பு காப்பாள். அத்தகைய இயல்புடையது இருள்மலம். இதில் பயின்று வரும் உவமையைப் பின்வருமாறு விரிக்கலாம்.
இருள்பாவை
தெரிந்தபொருள்- ஆடவர் பலருடன் கூடும் பாவை
தெரியாத பொருள்- பல உயிருடன் உள்ள இருள் (ஆணவமலம்)
பொதுதன்மை – பலருடன் கூடுதல்.
இதன் மூலம் பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
1) கற்புடைய பெண் யார்? அவளின் இயல்புகள் என்ன?
2) போலிக் கற்புடைய பெண்யார்? அவளின் இயல்புகள் என்ன?
3) கற்புடைய பெண் போல கணவனிடம் நடந்துகொள்வது என்பது பெண்ணின் இயல்பா?
4) பலரைக் கூடுதல் பெண்ணுக்கு இயல்பானதா?
5) மணமின்றி பலரைக்கூடும் பொருட்பெண், கற்புடைய பெண் இவர்களுக்குள் வேறுபாடு இல்லையா-?
6) ஆணவத்திற்கு உவமையாக பெண் கூறப்படுவதால் அவளே ஆணவத்தின் வடிவமா?
7) ஆன்மா ஆண்மயமானதா?
8) கணவன் என்பவன் கடவுளுடன் உவமை வாயிலாக ஒப்ப எண்ணப் படுகிறானா?
9) பெண் என்பவள் கடவுளுக்கு உண்மையான ஆன்மாவாக அமைய இயலாதா?
போன்ற பல கேள்விகளுக்கு மேற்குறள் இடமளிக்கிறது. இக்கேள்விகள் கேள்விகளாகவே அமையட்டும். இவற்றுக்குப் பதிலளிக்கப் புகுந்தால் அவ்விடைகள் மேலும் பல சிக்கல்களைச் சிடுக்குகளை உண்டாக்கும். எனவே பதில் பெறாமல் கட்டுரை மேலே செல்கிறது.
இருளின் இயல்பைக் கூறவந்த திருவருட்பயனின் ஆசிரியர், உவமை ஒன்றைக் கூறியதன் வாயிலாக சைவ சித்தாந்தத் தத்துவத்தை ஆண்அதிகாரப்பட்டதாகக் கண்டுள்ளார் என்பது மேற்செய்திகள் மூலம் தௌpவாகின்றது. இது நிற்க.
திருமுறைகளிலும், திவ்யபிரபந்தங்களிலும் பெண் படைப்பாளர்களைக் காணும் பொழுது சந்தானாச்சாரியர்களுள் பெண்பாலர் இடம்பெறாததும் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் குருவின் இயல்பைக் கூறும் அருளுருநிலையிலும் ஆண் பால் தன்மைகளே சுட்டப்பெற்றிருப்பது- பெண்பாலர் ஞானாசிரியாக மாறஇயலது என்ற கருத்தைத் தருவதாக உளது.
கோ(41) அவனை (46), பெய்ப்பாவகன் (47), பேர் அறிவான்(49) இவன் (50) ௲ஞானாசிரியரின் தன்மைக்கு உணர்த்தப்பெற்ற இவ்வாண்பால் பெயர்கள் ஞானாசிரியராக ஆண்பாலரே வரஇயலும் என்பதைக் கூறாமல் கூறுகின்றன. மேலும் அணைந்தோர் தன்மை என்ற நிறைவு இயலிலும் ஆண்பால் பெயர்களே பயனாகியுள்ளன. அணைந்தோர் தன்மை என்பது அடியார் தன்மையைக் குறிப்பதாகும்.
எனவே ஞானசிரியரனாகவும் அமையமுடியாமல், மலமற்ற உயிராகவும் அமைய முடியாமல், அணைந்தோருள் ஒருவராகவும் நிற்கமுடியாமல் பெண் தவிர்க்கப் பெற்றுள்ளமை மேற்கண்டதன் மூலம் உறுதியாகின்றது.
ஆண்-பெண் இன்பம்
ஆண் இணைவாலே பெண் இன்பம் பெற இயலும் என்ற மரபு அடிப்படையிலான கருத்து மற்றொரு குறளில் உவமையாக்கப் பெற்றுள்ளது.
இருவர் மடந்தையருக்கு என் பயன் இன்பு உண்டாம்
ஒருவன் ஒருத்தி உறின்(72)

என்ற இக்குறளில் ஒருவனும் ஒருத்தியும் காணும் இன்பமே இன்பம்; இருபெண்கள் இணைவால் இன்பம் பெற இயலாது; இதுபோல உயிர் எனும் பெண் ஆண்டவன் எனும் ஆணுடன் கலந்தால் மட்டுமே இன்பம் பெற இயலும் என்ற பொருள் விளக்கப்படுகிறது.
இங்கு ஆண் ஆண்டவனாகவும் பெண் உயிராகவும் ஏற்ற இறக்கத்துடன் காட்டப்பெற்று பெண் இரண்டாம் நிலையில் வைக்கப்பெற்றுள்ளாள். மேலும் ஆன்மாவும் ஆன்மாவும் இணைந்து இன்பம் பெற இயலாது என்பது தத்துவ அடிப்படையில் சரியானாலும், பெண்ணும் பெண்ணும் இணைந்தால் இன்பம் காண இயலாது என்பது தற்கால நிலையில் சரியாகாது. பெண்ணும், பெண்ணும் இணைந்து இன்பம் பெறலாம்,; அதுவே பெண்ணிற்கு முழு உணர்வையும், மதிப்பையும் அளிப்பது என்பது தற்கால பெண்ணியலார் கருத்து. இவ்வடிப்படையில் காணுகையில் பெண்ணை ஆன்மாவாகவும், ஆணை ஆண்டவனாகவும் உவமையுள் கலந்திருப்பது தேவையற்றதாகின்றது.
எனவே ஆண்படைப்பாளர்கள் இலக்கியம், இலக்கணம், தத்துவம் என எது செய்ய புகினும் தமக்குச் சார்பாகவே படைப்புக்களை ஆக்கிக்கொண்டுள்ளனர்,; பெண்களுக்கு எதிராகவே இருந்துள்ளனர் என்பது இதன்மூலம் மேலும் வலுப்பெறுகின்றது.


muppalam2003@yahoo.co.in

manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்