பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

முனைவர் மு, பழனியப்பன்,


சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து ஒரு குறிப்பிடத்தகுந்த நூல். இதனுள் அமைந்துள்ள ஆறாம் பத்து காக்கைப் பாடினி நச்சௌ¢ளையாரால் பாடப் பெற்றது என்பது கருதி இத்தொகை நூலுக்கு மேலும் ஒரு பெருமை உண்டு. ஒன்பது ஆண்பால் புலவர்களின் வரிசையில் ஒரு பெண்பால் புலவர் இடம்பெற்றுள்ளார். இவர் பாடிய பத்துப்பாடல்களால் மகிழ்ந்த சேரன் இவரைத் தன் அவையில் அவைக்களப் புலவராக அமைத்துக் கொண்டான். மேலும் ஒன்பது கால் பொன்னும் பரிசாகத் தந்துள்ளான் என்ற குறிப்புகள் வழியாகப் பெண்பால் புலவர் ஒருவர் ஆண்பால் புலவர்களுக்கு ஈடான நிலையில் சங்க காலத்தி¢ல் அறிவாலும், ஆற்றலாலும், ஆளுமையாலும் சிறந்து விளங்கினார் என்பதற்குச் சரியான சான்று இவர் ஆவார்.

அறிவாலும், ஆற்றலாலும், ஆளுமையாலும் சிறந்தவள் பெண் என்பது ஆண்களுக்கு ஈடான நிலை தரும் என்றாலும்¢ அவள் தன் படைப்பு மொழியை, முயற்சியை ஆண்களுக்குச் சமமாக அல்லது ஆண்களை அடியொற்றிச் செய்து கொள்ளவில்லை என்பது பெண்ணின் படைப்பினை ஆராயும் பொழுது தெரியவருகிறது. அவள் ஆணால் உருவாக்கப் பெற்ற மொழியை அதன் அமைப்பைத் தனக்கு ஏற்ற வகையில் தன் நடையில் மாற்றி அமைத்துக் கொண்டு படைக்கத் தொடங்கினாள். மொழி என்னும் கட்டமைப்பிற்குள் தனக்குச் சாதகமான ஓர் இடத்தை அவள் பெற்றுக் கொண்டு அவள் செயல்பட்டாள். இதன்மூலம் அவள் தன்னையும் தனித்து வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது. தன்ஒத்த பாலினரின் இயல்பையும் அவளால் படைக்க முடிந்தது. இந்த வேறுபாடு கருதி¢ தன் பாலினருடன் அவள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணிக் கொள்ள முடிந்திருக்கிறது. இதன் காரணமாக அவளின் படைப்பு மொழியில் பல நுன்மையான வேறுபாடுகள் எழுந்தன.

மேற்சொன்ன ஆறாம் பத்து இதற்குச் சிறந்த காட்டு. இதில் உள்ள பத்துப் பாடல்களிலும் காக்கைப் பாடினி நச்சௌ¢ளை என்ற பெண் தன்கருத்தை தனக்குச் சாதகமான ஆண் வயப்படாத பெண் மொழியில் எடு¢த்துரைத்துள்ளார். அவரின் மொழி பயன்பாடு மற்ற ஏழு அல்லது கிடைக்காத பத்துக்கள் இரண்டையும் சேர்த்து ஒன்பது பத்துக்கள் பாடிய ஆண்பால் புலவர்களின் படைப்பு அமைதியில் இருந்து வேறுபட்டு அமைகிறது.

ஆயிரத்து ஐநூற்று எண்பத்து இரண்டாம் ஆண்டிலேயே பெண் மொழி ஆளுமை ஆணின் மொழியாளுமையில் இருந்து வேறுபட்டது என்பது உலக அளவில் கண்டறியப் பட்ட போதிலும் அதனை மெய்ப்பிக்கும் சான்றுகளுக்கான முயற்சி தொடங்கப் படவில்லை. ஆனால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டில் ராபின் லாக்ஆப், அன்னி பாடைன், ரூத் பெர்ன்டு, நான்சி கான்கிளின் (Robin Lakoff, Anne Bodine, Ruth Brend, and Nancy Conklin) என்போர் இ¢ம்முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பெண்கள் பயன்படுத்திய அமெரிக்க ஆங்கில பெண் மொழியில் உள்ள தனித்தன்மைகளை எடுத்துக் காட்டினர்.
அது மெல்ல வளர்ந்து உலக மொழிகளில் உள்ள பெண்தன்மைக் கூறுகளின் பொதுமையை ஆராயத் தொடங்கியது. ”மொழியில் பால் வேறுபாடு என்பது உலகுதழுவிய ஒன்று” என்ற கொள்கை (“Sex differentiation in language is universal . . .”) இதன்வழி உருவானது. இதன் வளர்ச்சி நிலை பெண் மொழி என்பதற்கான வரையறையைத் தந்தது. மொழியில் பாலினக்கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக இதன்பின் பெண் மொழி உணர்ப்பட்டது(”If, then, one uses the term loosely to cover those gender-preferred features, there is a “women’s language.”)
இவ்வடிப்படையில் உணரத் தொடங்கப் பட்ட பெண்மொழி உலகின் அனைத்து மொழிகளிலும் உணரப்பட ஆய்வுகள் தொடங்கின. அவ்வகையில் பெண்மொழி என்பது தமிழுலகிலும் உணரப் பட வேண்டிய ஒன்றே.
பதிற்றுப் பத்து இவ்வகையில் ஆராயப் படத் தக்க ஒன்று. ஏனெனில் இத்தொகுப்பில்¢ ஆண் படைப்பும் அமைந்துள்ளது. பெண்படைப்பும் அமைந்துள்ளது. இவையிரண்டிற்கும் ஒரே பின்புலம். ஒரே கொள்கை. ஒரே எல்லை என்ற பல ஒற்றுமைக் கூறுகள் கிடைத்திருப்பது ஆண்மொழியையும் பெண் மொழியையும் உற்று நோக்கி ஆராய உதவுகிறது.
காக்கைப் பாடினியின் பெண்மொழிக் கூற்றிற்கு முதலில் சான்று காண்போம்.
”இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த
வளங்கெழு குடைச் சூலடங்கிய கொள்கை
ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை
ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புண்கண் அஞ்சும்”
(காக்கைப் பாடினி 2ம் பத்து ஏழாம் பாடல் வரிகள் 10-15)
இப்பாடலடிகளில் கவனிக்கத் தக்கவை இருகூறுகள். 1. மகளிர் 2. வளங்கெழு குடைச்சூல்
மகளிர்
இளமையும் துணையாகும் தன்மையும் உடைய புதல்வரைப் பெற்று நல்வளம் பயந்தவர்கள். ஆன்ற அறிவினர். நல்ல புகழினர். ஒள்ளிய நெற்றியை உடையோர். புலவியின் காரணமாக கண்கள் கோபத்தை வெளிப்படுத்தும். இக்கருத்துகளில் புதல்வர் யாருக்கு நல்வளம் பயக்க இருக்கிறார்கள்? என்ற கருத்து சிந்திக்கத் தக்கது. ”கணவன் உவப்பப் புதல்வர் பயந்து” (மதுரைக் காஞ்சி 600) என்பது மாங்குடி மருதனாரின் கூற்று. கணவன் மகிழ்வு கொள்வதற்காக மகனைப் பெற்றாள் என்பது ஆணின் கூற்று. தனக்குத் துணையாகும் தன்மை உடைய மகனைப் பெற்றவள் என்பது பெண்மொழி. ஆண்மொழிக்கும் பெண் மொழிக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு இதுதான். பெண் தன் சொற்களுக்குள் அன்பை வைக்கிறாள். ஆண் தன் சொற்களுக்குள் காமத்தை வைக்கிறான். கணவனின் உவப்ப எதற்காக-? என்ற சிந்தனையை மேம்படுத்திப் பார்த்தால் இதன் உண்மை புரியும்.
வளங்கெழு குடைச் சூல்
இதற்கு உரையாசிரியர்கள் தருகிற விளக்கம் ”வளமை பொருந்திய சிலம்பையும், அடக்ககத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும் உடைய” ( ஒளவை துரைசாமிப்பிள்ளை உரை) என்பதாகும். வளங்கெழு கடைச் சூல் என்ற தொடரை ஏன் சிலம்பிற்குக் காட்டவேண்டும். உள்புறம் துளை வருமாறு கடையப் பட்ட சிலம்பை அணிந்த பெண் என்ற இந்த இந்த உரைக்குறிப்பு சிலம்பு கழி நோன்பை எல்லாம் கேள்விக்கு உள்ளாக்கி விடும்.
இதற்கு நேர் பொருளை உரையாசிரியர் தந்திருக்கலாம். அதாவது வளமை மிகுந்த உள்புறம் குடைவு பெற்ற கருப்பையை உடைய- அதன்வழியாக வளமை மிக்க மகனைப் பெற்றுத் தந்த மகளிர் என்ற பொருளில் பெண் படைத்துள்ளாள். இதனை உரையிட்ட ஆண்உலகம் செய்த மாற்றம் சிலம்பு என்பது.
பெண்ணின் வளமை கருப்பை கொண்டிருப்பது. அதனுள் மகவைத் தாங்குவது. அந்த மகவனுபவத்தை அவள் அவள் சொற்களில்தான் கூறமுடியும் என்பதற்க மேற்காண் வரிகள் சான்று.
இவளின் துனித்த கண் என்பது இதே பத்தின் இரண்டாம் பாடலில் ஆடல் மகளிர்பால் ஈடுபட்ட ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை அவனின் மனைவி ஊடல் கொண்டமையால் கூறப்பட்டதாகும். அந்த கண்களை விட இரவலர் நோயுடைய கண்ணிற்கு இவன் அஞ்சுவான். பெண் தனக்குரிய இடத்தை முன் கண்ணில் பெற்றாள். எனவே பின்கண் இயல்பாய் எவ்விதப் புனைவும் தேவையாகாமல் வந்தது.
இவ்வாறு வரிக்கு வரி பெண் பெண்மொழியில் பேசிக் கொண்டே இருக்கிறாள். அதை அக்கண் நோக்கினால் அன்றி கிட்டாது.
ஆண் சொல்லிற்கும் பெண் சொல்லிற்கும் உள்ள ஒரு சிறு வேறுபாட்டை இப்பகுதி கொண்டே விளக்கலாம்.
விறலியை அழைக்க வேண்டும். அவளைப் பரிசு பெற ஆற்றுப் படுத்த வேண்டும். அவ்வகையில் காக்கைப் பாடினி ” ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் ” என்றழைக்கிறார்( 6ம்¢ பத்து, எட்டாம் பாடல், அடி 1)
குமட்டூர் கண்ணனார் அழைக்கும் வகை பின்வருமாறு ”உண்மின் கள்ளே, அடுமின் சோறே, எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே, வருநர்க்கு வரையாது பொலங்கலந் தௌ¤ர்ப்ப இருள் வணரொலிவரும் புரியவிழைம்பால் ஏந்துகோட் அல்குல் முகிழ்நகை மடவரல் கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே” (2ம் பத்து எட்டாம் பாடல் 1-6)
விறலியின் இயல்பு ஆடுதல். எனவே அவளை ஆடுக விறலியர் என்று இயல்பாய் எவ்வித அதிகார தோரணையும் இல்லாமல் அழைக்கிறார் காக்கைப் பாடினி. ஆடும் அவளை தன் வீட்டு ஏவல்காரியாய்ப் பார்க்கிறது குமட்டூர் கண்ணனார் பாடல். சமையல் காரியாய் சமைத்துப் போட வைக்கிறது.
காக்கைப் பாடினியைப் பொறுத்தவரையில் அவளும் விறலி அல்லது பாடினி என்ற வகைப் பெண்களுடன் ஒருவள் தான். குமட்டூராருக்கு அவள் ஒரு கற்பனைப் பாத்திரம். அவள் உணர்வோடு உயிரோடு அவர் ஒன்றுதல் இயலாது. எனவே அக் கற்பனைப் பாத்திரத்தை எதையும் செய்யக் கூறலாம். மாடு கன்று மேய்க்கச் சொல்லலாம். வீடு கூட்டச் சொல்லலாம்.
இவ்வகையில் சிந்தித்துக் கொண்டே போக நல்லகளம் பதிற்றுப்பத்து. இக்கட்டுரை வழி சில மட்டுமே காட்டப் பெற்றன. பல உள்ளன. அவை இனிவரும் ஆய்வுகளில் இடம்பெறும்.

muppalam2006@gmail.com
muppalam2003@yahoo.co.in
muppalam@HOTMAIL.COM

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்