புதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

வெங்கட் சாமிநாதன்


சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றி ஒரு வரலாற்றுப் புத்தகத்தை நமக்கு அளித்த முனைவர் எம்.எஸ் ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் இப்போது அதைத் தொடர்ந்து அந்த வரலாற்றின் ஒரு பகுதியை சற்று விரிவாகச் சொல்கிறார், புதுமைப் பித்தன், இலக்கிய சர்ச்சை (1951-52) என்ற புத்தகத்தில். இது என்ன அப்படி விரிவாகச் சொல்லப்படவேண்டிய விஷயமா என்று நமக்குத் தோன்றும். அவருக்கு அது முக்கிய விஷயமாக, அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பல வளர்ச்சிப் போக்குகளை அவர் விவரிக்கிறார். முதலில் நமக்கு, மன்னிக்கவும், எனக்கு சிங்கப்பூர் இலக்கியம் பற்றி அவர் புத்தகம் தான் சொல்லிற்று முதல் முறையாக. இல்லையெனில், சிங்கப்பூர் பற்றித் தெரிந்தது நம் தமிழ் எழுத்தாளர், சித்தாந்திகளைப் புரிந்து கொள்ள உருவகமாகி நிற்கும் சிங்கப்பூர் மைனர்களும் அவர்கள் தங்கப் பல் இளிப்பும் கைலி சரசரப்பும் கிராமத் தெருக்களில் உலா வருவது தான்.

சென்னையிலும் இலங்கையிலும் மறைந்த புதுமைப்பித்தனின் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டக் கூடிய கூட்டங்களின் தொடர்வினையாக அன்றைய மலாயாவின் தமிழ் முரசு பத்திரிகையும் நிதி கேட்டு அறிக்கை விடுகிறது. அதன் தொடர்பாக புதுமைப் பித்தனைப் பற்றிய விவாதத்தைக் கிளப்புவதன் மூலம் புதுமைப்பித்தன் என்ற இலக்கியாசிரியனை நன்கு ஆழமாக தெரிந்து கொள்ளவும் அங்கு உள்ள தமிழ் மக்களிடையே படைப்பு உத்வேகத்தை பரப்பவும் பயன் படும் என்று தமிழ் முரசு எண்ணுகிறது. இதற்கு முன்னாலேயே அங்கு கதை வகுப்புகள் இலக்கிய ரசனை வகுப்புகள் என கந்தசாமி வாத்தியார் நடத்தி இருக்கிறார். எல்லாம் சரி. ஆனால், விதியின் விளையாட்டு வீ.க.சபாபதி என்னும் அன்பர் புதுமைப் பித்தனின் விபரீத ஆசை என்னும் கதையை முன் வைத்து, புதுமைப் பித்தனுக்கு நிதி திரட்டுவதெல்லாம் சரி, ஆனால் அவர் இலக்கிய மேதையா என்ன? ஆபாசமான கதைகள் எழுதி ஒழுக்கக் கேட்டைப் பரப்புக்கிறவர் என்று குற்றம் சாட்டி விவாதத்தைத் தொடங்கியிருக்கிறார். போயும் போயும் அவர்க்கு விபரீத ஆசைதான் புதுமைப் பித்தனின் கிட்டத்தட்ட நூறு கதைகளில், போயும் போயும் அவருக்கு விபரீத ஆசை தான் அகப்பட்டதா? என்று கேட்கத் தோன்றும். காரணம் விபரீத ஆசை வெ.சாமிநாத சர்மா வின் ஜோதி பத்திரிகையில் வெளி வந்த காரணமா? அல்லது லக்ஷ்மி அவர்கள் சொல்வது போல அன்றைய மலாய தமிழ் சமுதாயத்தில் வறுமையினாலும் வேலையின்மையினாலும் ஒழுக்கக்கேடுகள் சகஜமாகிவிட்டதன் காரணமா? அக்கால எழுத்துக்கள் பலவும் இவ்வாறான ஒழுக்கக் கவலை கொண்டவையாக இருந்தன என்றும் லக்ஷ்மி சொல்கிறார். விவாதம் நடக்கிறது, தொடர்கிறது கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு என்பது ஆச்சரியமான விஷயம். தமிழ் நாட்டில் அப்படியெல்லாம் விவாதங்கள் நடந்து விடாது. அரசியலும் சினிமாவும் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இரு அணிகளிலும் நிறையப் பேர் வாதிடுகிறார்கள். வீ.க.சபாபதி மிக சாமர்த்திய சாலி போலும். வாதத்தின் விதிகளை அவரே நிர்ணயித்து விடுகிறார். வாதங்கள் விபரீத ஆசை கதையை முன் வைத்தே பொறி பறக்க வைக்கின்றன. அண்ணாதுரையின் கம்ப ரசம், வி.எஸ் காண்டேகர், ஜோலாவின் நாநா , ரகு நாதனின் முதல் இரவு எல்லாம் சாட்சி சொல்ல அழைக்கப்படுகின்றனர். இரண்டு அணிகளின் வாதமும், “ஆபாசம் தான் ஆகவே புதுமைப் பித்தன் இலக்கிய மேதை இல்லை” என்றும், மற்றவர் “ஆபாசம் இல்லை அது எனவே அவர் இலக்கிய மேதை தான்” என்றும், வீ.க.சபாபதி இட்ட வட்டத்திற்குள்ளேயே துவந்த யுத்தம் நடக்கிறது. எல்லா வாதங்களையும் தூக்கி அடிப்பது “புதுமைப் பித்தனுடைய ஒவ்வொரு கதையிலும் ஆபாசம் இருக்கிறது. ஆனால் அவர் இலக்கிய மேதை என்பதை நிரூபிப்பது அந்த ஆபாசம் தான்” என்று ஒரு போடு போடுகிறார் (எம்.எஸ். மாயத்தேவன் 4.1.52 தமிழ் முரசு) ஒருவர். ஆனால் இந்த விவாதங்களில் பங்கெடுத்துக்கொண்ட ஒருவராவது, புதுமைப் பித்தன் விபரீத ஆசை என்ற ஒரே ஒரு கதை எழுதவில்லை. நூறு கதைகள் முடிவுறாத நாவல் என்றெல்லாம் 700 பக்கங்களுக்கு அவரது புனை கதை உலகம் விரிகிறது என்று சொல்லவில்லை. இது எப்படி நிகழ்ந்துள்ளது எப்படி நிகழ விடப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த ஒரு கதையை வைத்துக்கொண்டு ஒரு பன்முக மேதையை, ஒரு மரபின் முன்னோடியை எடை போடுவது அதர்மமானது என்று ஒருவரும் சொல்லவில்லை.ஆச்சரியம் தான்.

ஆனால் லக்ஷ்மி அவர்களின் புத்தகம் இந்த அபூர்வ பழம் சம்பவத்தைச் சொல்வதற்கும் மேலாக அவர் எழுத விருக்கும் விரிவான வரலாற்றின் ஒரு பகுதி என்பது ஒரு விஷயம் அதற்கும் மேலாக, நான் இதில் கண்ட சுவாரஸ்யங்கள்: ஒரு மேதையின் பரிமாணங்கள் என்னவாக இருந்தாலும், ஒரு கால கட்டத்தில், ஒரு சமூகத்தில் அப்போது நிலவும் சில தேவைகளுக்கு அப்பரிமாணங்கள் குறுகி விடுகின்றன. அல்லது ஒரு சிறிய விஷயம் பெரிதாக்கப் படுகிறது. மற்றதெல்லாம் இல்லாததாகிவிடுகிறது. சமூக தேவை என்றேன். இதில் ஒருவர், இளஞ்சோழன் என்பவர், அவரது தமிழ் சமூகம் ஜாதி, இனம் என்றெல்லாம் பிளவு பட்டதில்லை என்பதற்கு சான்று சொல்ல “பார்ப்பனர் புதுமைப்பித்தன்” என்று தலைப்பிட்டுத் தன் கருத்தைச் சொல்கிறார். சிறுகதை வள்ளுவர் என்று ஒருவர்(தமிழகத் தமிழர் தான். வேறு யாருக்கு விருது பற்றியெல்லாம் நினைப்பு அலைக்கழிக்கும்) புதுமைப்பித்தனுக்கு விருது தரப்போக, வீ.க.சபாபதியின் சீற்றத்துக்கு ஆளாகிறார். “இப்படிச் சொல்லி வள்ளுவரையே களங்கப்படுத்துகிறார்கள் இந்த புதுமைப்பித்தன் பக்தர்கள்” என்று சபாபதி பாய்கிறார்.

புதுமைப் பித்தன் குடும்பத்திற்கு ஆளுக்கு ஒரு வெள்ளி என்று நிதி திரட்டிக் கொடுக்கப்படுகிறது.அதன் உப விளைவு தான் இந்த விவாதம். இந்த விவாதத்தின் உப விளைவுகள் எனப் பல சொல்கிறார். இலக்கியத்தில் புதுமை என்று ஒரு நூலை இலக்கிய வகுப்பு நடத்தியவரும் முதுபெரும் எழுத்தாளருமான கந்தசாமி வாத்தியார் எழுதி இலவசமாக வினியோகிக்கிறார். புதிய எழுத்தாளர்கள் உருவாகிறார்கள். புதிய இலக்கிய விழிப்புணர்ச்சியை உருவாக்க முடிகிறது.

இச்சர்ச்சையின் பின் புலமாக பத்திரிகைகளும், இலக்கிய முயற்சிகளும் வளர்ந்த வரலாற்றை எழுதுகிறார் லக்ஷ்மி. சர்ச்சையில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் பற்றியும் சர்ச்சைகள் பற்றியும், பின்னணியோடு, ஒவ்வொருவரின் கருத்து நிலைப்பாட்டிற்கு காரணங்கள் என்னவாக இருக்கும் என்றும் விரிவாகச் சொல்லிச் செல்கிறார். வெள்ளி கொடுத்தோர் பட்டியல், புதுமைப்பித்தன் மலர், 1951-52 சர்ச்சையில் பங்கு கொண்டோர் ஜீவித்திருப்போருடன் நேர்காணல் என்று இந்த வரலாறும் ஆவணமும் விரிகிறது. இந்நூல் அன்றைய சமூகத்தைச் சொல்கிறது. இலக்கிய சூழலைச் சொல்கிறது. பண்பாட்டுக் கவலைகளைச் சொல்கிறது. மறைமுகமாக.

கடைசியாக ஒரு முக்கிய விஷயம்: லக்ஷ்மி அவர்களுக்கு அந்தக் கால விவரங்களை அறிய, ஆராய உதவியது: சிங்கப்பூர் தேசிய நூலகம் – அங்கு தமிழ் முரசின் நுண்படச் சுருள் கிடைக்கிறது. மற்றும் தேசிய பழஞ்சுவடிகள் காப்பகம், மலேசியா. தமிழகத்தில் அரசு காப்பகங்களில் இம்மாதிரியானவற்றிற்கு இடம் இல்லை. அமெரிக்க பணம் வாங்கிப் பாதுக்காக்கும் ரோஜா முத்தையா நூலகத்தைத் தான் தஞ்சமடைய வேண்டும்.

வெங்கட் சாமிநாதன்/2.12.06

vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்