சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் திட்டமிட்ட புறக்கணிப்பு

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

முனைவர் மு. பழனியப்பன்


சங்க இலக்கியங்கள் தமிழின் ஒரு குறிப்பிடத்தகுந்த நிலைக்கலன்கள். இதனில் இருந்தே தமிழ் இனத்தின் மூத்த பண்பாடு, வாழ்க்கை முறை முதலானவை தொடக்கம் பெறுகின்றன. இதன் படைப்பாக்கம் மற்ற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டமைவது. நெடிய பாக்களாகத் தொடங்கும் முறைமை இல்லாமல் சிறு அடிகளில் தொடங்கி பெரு அடிகளாக வளர்வது. இதிகாசங்களில் தொடங்காமல் இயல்பான வாழ்க்கை முறையில் இன்பம் கூட்டுவது. ஆண் / பெண் கவிஞர்கள் இந்தப் படைப்பாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.
இருந்தாலும் சங்க இலக்கியங்களில் ஆண் கவிஞர்களின் அளவு, அவர்கள் படைத்த பாக்களின் அளவு இவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தால் பெண்கவிஞர்களின் பங்களிப்பு என்பது பத்து விழுக்காட்டிற்கும் குறைவான அளவே ஆகும்.
நூல்களின் அடிப்படையில் பார்த்தால் எட்டுத்தொகை நூல்களில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய ஐந்து நூல்களில் பெண்களின் படைப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல் இவற்றில் பெண்களின் படைப்புகள் முற்றிலும் இல்லை என்பது கவனத்திற்குரியது.
பத்துப்பாட்டு நூல்களில் முடத்தாமக்கண்ணியார் என்ற ஒரு பெண்புலவர் தென்படுகிறார்.
இந்த அடிப்படையில் பெண்புலவர்களின் பங்களிப்பு குறைவுபட்டதற்குப் பல காரணங்கள் உண்டு. அவை சமூகப் புறக்கணிப்பு, கல்வியிண்மை, ஆளுமை இன்மை எனப் பல நிலைகளில் உணரப்படலாம். இவற்றை ஒரு பக்கம் வைத்துவிட்டு, மறுபக்கம் சிந்தனை செய்து பார்க்க வேண்டி இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களில் மூன்று நூல்களில் பெண்களின் படைப்புகளே இல்லாமல் புறக்கணிப்பு செய்யப் பெற்றுள்ளன. இந்நிலை ஏன்-?
ஐங்குறுநூறு என்ற நூல் ஐந்து புலவர்களால் ஐந்து திணைகளை அடிப்படையாக வைத்து பாடப்பட்டது. மூன்று அடிகள் முதல் ஆறடிகள் வரை பாடப்பெற்ற பாடல்கள் கொண்டுத் தொகுக்கப் பெற்ற நூல் இது. குறிஞ்சித் திணையில் நூறு பாடல்களை கபிலரும், அதுபோல முல்லையைப் பேயனாரும், மருதத்தை ஓரம்போகியாரும், நெய்தலை அம்மூவனாரும், பாலை ஓதலாந்தையாரும்¢ கருப்பொருளாகக் கொண்டு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் பாடியுள்ளனர். இந்நூலைத் தொகுத்தவர் கூடலூர் கிழார். தொகுக்கப் பொருளுதவி மற்றும் பிற உதவிகளைச் செய்த அரசன் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
கலித்தொகை என்ற நூலிலும் இதே போல ஐந்து தி¢ணைகள் பாடப்படுகின்றன. ஐந்துபுலவர்கள் என்ற திட்டமிடப்பட்ட படைப்பாக்க நிலை இங்கு பின்பற்றப்பட்டுள்ளது. இந்¢நூல் மொத்தம் நூற்றைம்பது பாடல்களை உடையது. பாலையில் உள்ள முப்பத்தைந்து பாடல்களை பெருங்கடுங்கோ பாடியுள்ளார். குறிஞ்சித்திணைக்கான இருபத்தொன்பது பாடல்களை கபிலர் பாடியுள்ளார். மருதத்திற்கான முப்பத்தைந்து பாடல்களை மருதன் இளநாகனார் பாடியுள்ளார். முல்லைக்கான பதினேழு பாடல்களை சோழன் நல்லுருத்திரன் பாடியுள்ளார். நெய்தலுக்கான முப்பத்து மூன்று பாடல்களை நல்லத்துவனார் பாடியுள்ளார். இவ்வகையில் பாடப்பட்ட இந்தத் தொகுப்பில் பெண் கவிஞர்க்கு இடமில்¢லை என்பது தௌ¤வு.
பரிபாடல். எழுபது பாடல்கள் இருப்பதாகக் கருதப்படும் இந்நூலில் தற்போது இருபத்தி¢இரண்டு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றில் ஒரு பெண்கவிஞரின் கவிதை கூட இல்லை என்பது நோக்கத்தக்கது. எழுதவில்லையா? அல்லது கிடைக்கப் பெறவில்லையா? அல்லது கிடைக்கப் பெற்றும் தொகுக்கப் படவி¢ல்லையா? என்பது கேள்வி. ஏனெனில் சங்கப்பாக்கள் தொகுக்கப்படுதல் என்பது அனைத்து தொகுதிகளி¢லும் ஆணாலேயே செய்யப்பட்டுள்ளது. பதிப்பிக்கப்படுதல் என்று இன்று வழங்குகிற சொல்லாக்கம் முழுதும் ஆணால் ஆண் அதிகார வர்க்கத்தால் இன்று வரை கையகப்படுத்தப் பெற்று வருகிறது. இந்நிலை சங்கத்திலும் இருந்தது என்பதற்கு சங்க நூல் தொகுப்புகள் சான்று.
மேலே காட்டிய மூன்று நூல்களை மட்டும் தௌ¤வு படக் காண்போம். ஐங்குறுநூறு, கலித்தொகை என்ற இரண்டும் திட்டமிடப்பட்டு வரையப் பட்ட தொகுப்பு என்பது அதன் படைப்பாக்கத்தின் மூலம் உறுதியாகின்றனது. இந்தப் படைப்பாக்கத்தில் ஏன் ஒரு பெண் கூட இடம் பெறவில்¢லை?
ஐந்து திணைகளில் பாடும் மிகச்சிறந்த வல்லமை ஆண்களிடமே இருந்தது. இதற்குக் கபிலர் சான்று. ஏனெனில்¢ இரண்டு தொகுப்புகளிலுமே கபிலர் குறிஞ்சியைப் பாடியுள்ளார். இந்தக் கருத்தின் அடிப்படையில் தொகுப்பை திட்டமிட்டவர்கள் செயல்பட்டிருக்கலாமோ என்ற ஐயத்தி¢னோடு அதற்கு பதில் காண முயல்வோம்.
அள்ளுர் நன்முல்லையார் என்ற பெண்பால்புலவர்¢ சங்க இலக்கியங்களில் மொத்தம் பதினோரு பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களில் ஐந்து பாடல்கள் குறிஞ்சித் திணை சார்ந்தது. மீதம் உள்ளவை மற்ற திணைகள் சார்ந்தவை. இந்நிலையில் குறிஞ்சிப் பாக்கள் பாடுவதில் குறைவு பட்டவர்கள் என்று பெண்களைத் தள்ளி இருக்க இயலாது. அவர்களிடம் பணி தரப்பெற்றிருந்தால் செய்யப் பெற்றிருக்கும்.
அடுத்து ஒக்கூர் மாசத்தியார் மொத்தம் எட்டுப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களில் ஆறு பாடல்கள் முல்லைத்திணை சார்ந்தவை.
ஒளவையார் இவர்பாடிய ஐம்பத்தொன்பது பாடல்களில் பாலைத்திணை பெரும்பங்கு வகிக்கின்றது. அதாவது ஒன்பது பாடல்களை இவர் பாலைத்திணையில் பாடியுள்ளார். இவர் மேற்கண்ட இரண்டு தொகுப்புகளி¢லும் புறக்கணிக்கப் பட்டுள்ளார். இவர் தம் பெருமை அப்போதே பரவி இருந்தது என்றாலும் இவர் இத்தொகுப்புகளில் இடம் பெறுத்தப்பெறாமை ஏன் என்று எண்ண வேண்டியுள்ளது.
அதுபோல நெய்தல் பாடச் சிறந்தவர் கச்சிப் பேட்டு நன்னாகையார். நெடும் பல்லியத்தை மருத்தில்¢ இரண்டு பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார். இவர்களை மேற்கண்ட தொகுப்புகளில் இடம் பெறச் செய்திருக்க முடியும். இடம் பெறச் செய்யாமல் போனது ஏன். திட்டமிடப்பட்ட ஒரு படைப்பாக்கத்தில் திட்டமிடப்பட்டு பெண்படைப்பாளர்கள் மறைக்கப் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான கால இடைவெளி அதிகம் என்ற கருத்தை முன்வைத்தால் அனைவரும் குறுந்தொகை, நற்றிணை போன்ற படைப்பாக்கங்களில் இணைந்து செயல்பட்டுள்ளனர் என்ற பதிலை முன் வைக்க இயலும்.
மேலும் பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்து காக்கை பாடினியாரால் பாடப்பெற்றுள்ளது. இதுவும் திட்டமிட்ப்பட்ட படைப்பாக்கத்தை உடையது. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு புலவர் என்ற நிலையில் தொகுக்கப்பட்டது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனோடு மிகச்சிறந்த நட்பை இக்கவிஞர் பெற்றிருந்தமையால் இவர் அங்கு ஏற்கப் பட்டுள்ளார்.
அகநானூறும் மிகச் சிறந்த கட்டுக்கோப்பை உடையது. நானூறு பாடல்களில் ஒற்றைப் படை எண்கள் அனைத்தும் பாலைத்திணை பற்றியன. நான்கு என்ற அடிப்படையின முல்லைத்தி¢ணையின. இவ்வகையில் பெருமை பெற்ற இந்நூல் படைப்பில் மொத்தம் பதிமூன்று பெண்கள் ஈடுபட்டு இருபத்து மூன்று பாடல்களைத் தந்துள்ளனர்.
இப்படைப்புப் பின்புலத்தில் இருந்து நோக்கும்போது பெண்கள் ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைக்கப் பட்டு அதிலிருந்து முன்னேறிவிடாமல் தடுத்துவிட்ட பெருமையில் மிகக் குறிப்பிடத்தக்க பங்கு ஆண்படைப்பு உலகத்திற்கு, வெளியீட்டு உலகத்திற்கு இருந்துள்ளது .


muppalam2003 @ yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்