எதிர்காலம் என்று ஒன்று

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

வெங்கட் சாமிநாதன்


விஞ்ஞானம் வளர்ந்து வருகிற வேகத்தைப் பார்க்கும் போது, அறிவியல் வகுக்கும் இன்றைய எல்லைக் கோட்டைக் கற்பனை தாண்டும் போது அத்தாண்டல் எவ்வளவு தூரம் சாத்தியக்கூறுகள் கொண்ட கற்பனை, எது அப்படி அல்லாத கட்டற்றதும் அர்த்தமற்றதுமான வீண் பாய்ச்சல், என்பது சொல்ல முடிவதில்லை. Dr. No என்ற படம் வந்தபோது நான் அதை விரும்பவில்லை. நோவின் வீர தீர செயல்களை அன்று புழக்கத்தில் இல்லாத கற்பனையான தொழில் நுணுக்க கருவிகளைக் கொண்டு சாதித்துக் கொண்டது அதை நம் புராணங்களின் உலகத்திற்கு எடுத்துச் செல்வதாக நினைத்தது தான் காரணம். ஆனால் அன்று நான் அளவுக்கு மீறிய கற்பனை என்று நினைத்தது இன்று நடைமுறைக்கு வந்துவிட்ட அன்றாட நம் புழக்கத்தில் உள்ள சாதாரணங்களாகிவிட்டன. உதாரணம் ரிமோட். ஆனால் இம்மாதிரியான கற்பனைகளை நம் புராணங்களில் படிக்கும்போது அவற்றை நாம் வேறு தளத்தில் வைத்துத் தான் வாசித்துக் கொள்கிறோம்.

கா·ப்காவின் ‘மெடமார்·பாசிஸ்’, மேரி ஷெல்லியின் ·ப்ராங்கென்ஸ்டைன், ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸனின் ‘டாக்டர் ஜெகிலும் மிஸ்டர் ஹைடும்”, ஜொனாதன் ஸ்வி·ப்டின் ‘கலிவரின் யாத்திரை’ போன்றவற்றை அறிவியல் புனைவின் கீழ் கோபால் ராஜாராம் வைகைப்படுத்தினாலும் அவற்றை நான் முன்னரும் இப்போதும் படித்துப் புரிந்து கொள்வது ஒரு allegory யாகத்தான். ஒரு வேளை என்றாவது பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்குப் பின் ஒரு எதிர் காலத்தில் மனிதன் கரப்பான் பூச்சியாக மாறலாம். தெரியாது. எனக்குப் பெயர் மறந்து விட்டது. யாரோ ஒரு அசுரனுக்கு, பஸ்மாசுரனா?, நீ யார் தலையைத் தொட்டாலும் அவன் பஸ்மமாகி விடுவான் என்று சிவன் வரம் கொடுக்கப் போக, அவன் சிவன் தலையையே தொட சிவனை ஓட ஓட விரட்டிய புராணத்தை, நான் இப்போது புஷ்-ஒஸாமா பின் லாடன், இந்திரா காந்தி-பிந்த்ரன்வாலா, தமிழ் நாட்டு உள்ளாட்சித்தேர்தலில் அரசும் கட்சியும் கட்டவிழ்த்த அராஜகம், பல இடங்களில் திமுக வையே தோற்கடித்த கதைகளில் படிக்கலாம் தானே.

கோபால் ராஜாராம் தொகுத்துத் தந்துள்ள எதிர்காலம் என்று ஒன்று தரும் கதைகள், திண்ணை.காமும் மரத்தடியும் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டிக்கு வந்த கதைகள் சிலவும் இன்னும் சிலவும் சேர்ந்தவை. அப்போது எனக்கு இந்த இணையங்களின் அறிமுகம் இருந்ததில்லை. அறிமுகம் இருக்கும் இப்போதும் அவற்றில் வருவன சிலவற்றைத்தான் படித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இம்மாதிரியான போட்டியும் இத்தொகுப்பும் சுவாரஸ்யமான வாசிப்பை மட்டுமல்லாமல், சில சுவாரஸ்யமான கேள்விகளையும் எழுப்பிவிடுகின்றன.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்றான நான்ஸி க்ரெஸின் ‘ஜீன் திருடனின் விநோத வழக்கு’ இன்றைய நடப்பிற்கு வெகுதூரம் தள்ளிச் செல்லவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நடப்பு சற்று அதீதப்படுத்தி எழுதப்பட்டுள்ளதென்றாலும், அது இன்றைய தலைமுறைக் குள்ளேயே, நான்ஸி சொல்லும் அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படாது என்று சொல்வதற்கில்லை. இன்றைய பன்னாட்டு நிறுவனம் எதுவும் மருந்து தயாரிப்பாகட்டும், அல்லது கோகோ பானமாகட்டும், அல்லது சிறப்புப் பொருளாதார மையங்கள் (Special Economic Zones) என்று சொல்லி ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் இன்றைய நிலைக்கு வெகு தூரம் அதீதமாகக் கற்பனை சென்று விடவில்லை. ஒரு கோரமான மனப்போக்கையும் நடைமுறையையும், நகைச் சுவையோடு சொல்கிறார். இம்மாதிரி நகைச் சுவை ததும்பும் கற்பனைகள் எனக்குப் பிடித்துப் போகின்றன, அவை அறிவியல் சாத்தியங்களை அதீதமாகக் கற்பனை செய்வதாக இருந்தாலும். நளினி சாஸ்திரியின் வானத்திலிருந்து வந்தவன் அப்படிப்பட்ட ஒன்று. பூமியிலிருந்து விண்கலத்தில் சென்றவர்கள் தான் வேறு கிரஹ விண்கலத்தையும் ஜீவன்களையும் கைப்பற்றி வருகிற கதை என்று நினைத்தால், கைப்பற்றப்பட்டது பூமியிருந்து சென்ற விண்கலம். ‘என் பெயர் அசோகன், நான் மனிதன்’ என்று சொல்லி குரங்குகள் வாழும் கிரஹத்தில் குதிப்பது தமிழனாக இருப்பது தமிழ் அடையாளங்களை எதிலும் தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடும். பெயர் மட்டும் அசோகன் என்றிருப்பது வருத்தமளிக்கக் கூடும். இந்த வகைப்பாட்டில் எனக்குப் பிடித்துப் போன கதைகள் இன்னும் சில உண்டு. நாகரத்னம் க்ருஷ்ணாவின் அமலா, விமலா, கமலா. எல்லாம் நான் அறிந்த க்ளோன்கள். திருவல்லிக்கேணியில் நாராயணன் என்னும் விஞ்ஞானியின் படைப்புகள். மருமகனாகும் ஆசையில் வந்தவனுக்கு ஒன்றுக்கு மூன்றாகக் கிடைக்கிறது. நா.சுவாமிநாதனின் ‘மூளை மாற்று ஆராய்ச்சி” யின் அவர் விவரிப்பது ஒரு ரகளை. அறிவியல் கற்பனைகள் போர் அடிக்கும், மூளையை மிகவும் வருத்தெடுக்கும் என்று நினைப்போம். அப்படி இல்லை. குரங்குகளுக்கு இறந்த மனிதனின் மூளையை வைத்தால் என்ன ஆகும்? அவற்றைப் பழக்குவதற்கும், அல்லது மனிதன் கற்பதற்கும் செலவாகும், வருஷங்கள் பிரயாசை எல்லாம் மிச்சம் தானே. அப்படி மனித மூளை வைக்கப்பட்ட குரங்கு என்னமோ சொல்கிறது. தமிழ் மாதிரி இருக்கிறது என்று மலயாளப் பெண் சொல்கிறாள். தமிழ் தெரிந்த தாத்தா ஒருவரைப் பிடித்து அது என்னவென்று கேட்கப்படுகிறது. (அப்போது தமிழ் வழக்கிழந்த மொழியாகிவிட்ட காலம்) அது ஒரு யாழ்ப்பாணத்தமிழ் புலவரின் மூளை என்றும், அது தனக்கு கூட்டு, குழம்பு, வேப்பம்பூ ரசம், வாழைப்பொரியல் எல்லாம் வேகவைத்த சூடான சோற்றுடன் இலை போட்டு சாப்பாடு போடக் கேட்டு எழுதிய இரண்டு வெண்பாக்கள் என்று தெரிகிறது. இந்த மூளை மாற்று ஆராய்வு, மறைந்த மொழி, கலாசாரம், உணவு இவற்றைக் கண்டறியும் தொல்பொருள் ஆய்வாகப் பரிணமிக்கவே அந்த ஆராயவுக்கு ஆதரவு தரப்படுகிறது.

அறிவியல் கற்பனையோடு பெண்ணீயமும் கலந்தால் தீப்பொறி பறக்குமா, நகைச்சுவை உதிருமா? மீனாக்ஸ் எழுதியிருக்கும் பால்பேதம் கதையில் மிக ஆசையோடு வளர்த்த தன் மகள் பெண்ணை மதித்து நடக்கும் கணவனைத் தேடுகிறேன் என்று கல்யாணத்தைத் தள்ளிப் போடுகிறாளே என்று வருந்தும் அப்பா பெண் வேலை செய்யும் ஊருக்குப் போகும் ரயிலில் ஒரு ஆண்மகனைப் பார்த்து பிடித்துப் போக, அந்த ஆண் மகனோ “அப்பா, என்னைத் தெரியவில்லையா, நான் தான் உங்கள் வசந்தி, இப்போது வசந்த் ஆகிவிட்டேன். பெண்களை மதிக்கும் ஒரு நல்ல மகனாக இருக்க விரும்பி ஆணாகிவிட்டேன்” என்கிறாள். பெண்ணீய பிரச்சினைகளுக்கு இப்படி ஒரு நல்ல முடிவு இருக்கிறது என்று சொல்கிறாரோ என்னவோ. இது அறிவியல் கற்பனை அல்ல. இன்றைய சாத்தியங்களில் பால் மாற்றமும் ஒன்று. துகாராம் கோபால் ராவின் ‘மரபணு’ கதையும் கூட கற்பனை அல்ல. இன்றைய எரியும் பிரச்சினை. மரபணுவோடு விஞ்ஞான சோதனை விளையாட்டுக்கள் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பது ஒரு எரியும் பிரச்சினை. எதிப்பவர்களை லுட்டைட்கள் (மடிசஞ்சிகள்!) என்று வசைபாடக்கூடும். ரோபோக்களாலேயே காரியங்கள் எல்லாம் நடக்கும் ஒரு கால கட்டத்தில் திருச்சி மெயின் கார்டு கேட் இருக்குமா என்று கற்பனை செய்து பார்த்தேன். இருக்காது என்று எனக்குத் தோன்றியது. சீராளன் வெகு தீவிர கற்பனைக் காரர். 6000 வருடங்களுக்குப் பிறகான ஒரு காலத்தில் பூமி சுழலாது நின்று விடுவதையும், ஒரு பாதி பூமியில் என்றும் பகலாகவும், மறு பாதியில் என்றும் இரவாகவும் ஆகிப்போனால் வாழ்க்கை எப்படி இருக்கும்? சுழலும் பூமி ஒரு கட்டத்தில் நின்று விடுவது போல ஒரு கட்டத்தில் பின்னும் சுழல ஆரம்பிக்கும் அல்லவா? வெற்றுக் கற்பனை அல்ல. ந்யூட்டனின் இயக்க விதிகள் அவருக்கு உதவுகின்றன. மூன்றாவது விதிப்படி பூமி மீண்டும் சுழல ஆரம்பிக்கும். ஆனால் எதிர்திசையில். இ.ரா.மகேசனின் 14.10,.2010 என்ற கதையில் விடிந்தது விழித்துக் கொண்டவன் “சாரு, காபி” என்று கேட்டவனுக்கு காபியும் இல்லை. பதிலும் இல்லை. சாருவும் இல்லை. வீட்டில், தெருவில், அலுவலக்த்தில், ஊரில் எங்கும் யாரும் இல்லை. எல்லோரும் காற்றில் கரைந்து விட்டார்கள். மனித குலமே கரைந்துவிட்டது. ஆனால் தெருக்கள், கட்டிடங்கள், எதற்கும் அழிவில்லை. ஆனால் வெறிச்சோடிட்டுப் போய்விட்டன. டி.வி. ஸ்டேஷனும் தான். ஆனால் டி.வி.யில் ‘மெட்டி ஒலி’ இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. கடவுளும் அழிக்க முடியாதது தமிழ் டி.வி. சீரியல் எனபது இதனால் பெறப்படும் நீதியாகும்.

சேவியரின் ஏலி ஏலி லாமா சபக்தானி கதையில் ஏசுவுகிகு பதிலாக பாராபாஸ் சிலுவையில் அறையப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும். பாராபாசின் சகோதரனுக்கு பாராபாஸ் காப்பாற்றப்படவேண்டும். ஏசுவுக்கு என்ன ஆனாலும் கவலை இல்லை. ஏசு காப்பாற்றப்பட்டால், கிறித்துவ மதம் தோன்றும் ஆபத்தில்லை என்று நினைப்பவர் உண்டு. ஆனால் ஏதும் மாறாக நிகழ்வதில்லை. ஏசு சிலுவையிலறையப்படுகிறார். எதுவும் நிகழ்வது தடைப்படுவதில்லை. கேள்வி எழுப்பிய ஒரே சுவாரஸ்யம் தான் சேவியர் கதையில். அதற்கு மாறாக கற்பனை செய்யத் துணியவில்லை. ரொம்ப தூரம் கற்பனைக் குதிரையைப் பறக்க விட்டவர்கள் சீராளனோடு, சன்னாசியும் தான். பிறழ்ந்த குறிப்புகள் என்ற கதையில் இயல்பான பிறப்பு வளர்ச்சி, பின் இறப்பு எல்லாம் தலைகீழாகிப் போகிறது. 1946-ல் பிறந்த குழந்தை சுபாவுக்கு வயது 60. இனி வயது குறைந்து கொண்டே போகும். 2005-ல் சுபாவுக்கு வயது 0. என்ன ஆகும்? அதன் அடுத்த கட்டம் செயற்கைக் கருப்பைக்குள் இடம் பெயரவேண்டும். பெயர்கிறது. அதன் பின்னோக்கிய வளர்ச்சியில் அடுத்த கட்டம் சின்ன முட்டையும் விந்துவும் பிரியவேண்டும். பின் விந்துவுக்கும் பின்னோக்கிய பயணம் இருக்கவேண்டுமே. கதை அந்தக் கட்டத்துக்குள் போகவில்லை. சன்னாசி அந்தக் கற்பனையைத் தவிர்த்து விடுகிறார். இதெல்லாம் அதீத கற்பனைகள் அல்லவா? வேடிக்கையும் விளையாட்டும் நிறந்தவை. உண்மையில் விடியோ விளையாட்டுக்களத்தில் நின்று சொல்லப்படும் கதையில் நடக்கும் விண்கலப்போர், கடைசியில் தான் சிறுவர் போட்டி போடும் விடியோ விளையாட்டுக்கள் தான் கதையாக வந்துள்ளன என்று தெரிகிறது.

இவையெல்லாம் கற்பனைகள். ஆனால் உடன் நிகழ் யதார்த்தங்கள் அறிவியல் கற்பனை போல் சொல்லப்படுவதை என்ன சொல்வது? நான்ஸி க்ரெஸின் கதையைப் பற்றி முன்னால் சொன்னேன். மரக்கலாஞ்சி மாஞ்சிலா வில் நடராஜன் ஸ்ரீனிவாசன் சொல்லும் கதை உடன் நிகழ் கால சோகம். இயற்கை அழிந்து சிமிண்ட் அதன் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு வரும் அவலம். மரக்கலாஞ்சி மாஞ்சிலா செடி, மஞ்சள் நிழல் விழச் செய்யும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் கொண்ட தாவரம் உண்மையா கற்பனையா என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் அத்தாவரத்திற்கு ஏற்பட்டதாகச் சொல்லும் நிச்சய அழிவு, இது போன்று எத்தனையோ பட்சிகளுக்கு, மிருகங்களுக்கு, தாவரங்களுக்கு ஏற்பட்டுள்ளன. இது மனிதனே தான் முன்னேற்றம் என்று கருதும் அறியாமையில் தனக்கு வரவழைத்துக்கொண்ட அழிவு. இது எப்படி கற்பனையாகும்? அறிவியலாகும்? நகங்களை வெட்டி ஒரு கலவையில் போட்டு சாக்ஸ் என்ற ஒரு வகை மதுவைத் தயாரிக்கும் இனக்குழு பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கிறார். மண்ணாந்தை என்று தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டுள்ளவரின் சலிப்பில்ல, ஓய்வில்லா அறிவு தேட்டை என்னில் வியப்பையும் மரியாதையையும் பிறப்பித்துள்ளது. அவரது அறிவியலைச் சார்ந்ததா தத்துவார்த்தத்தைச் சேர்ந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை. புத்த ஜாதகக் கதை போல இருக்கிறது.

இப்படி இத்தனை கேள்விகளையும் சந்தேகங்களையும், நகைச் சுவையோடும், மிகுந்த சுவாரஸ்யத்தோடும் சொல்லும் கதைகளையும் எழுதுவோரையும் எங்கெங்கோயிருந்தெல்லாம் ஒன்று சேத்திருக்கிறார்களே!

வெங்கட் சாமிநாதன்/2.11.06
——————————————————————————————————————————

எதிர்காலம் என்று ஒன்று: (அறிவியல் புனைகதைத் தொகுப்பு) தொகுப்பாசிரியர்: கோபால் ராஜாராம்:
எனி இந்தியன் பதிப்பகம்: 102, Bஇ, 57. P.M.G காம்ப்ளெக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை-17 விலை ரூ.80.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்