வைதீஸ்வரனின் கவிதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

வெங்கட் சாமிநாதன்


யார் என்னதான் சொல்லிக்கொண்டாலும், கூட்டம் கூட்டிப் பேசினாலும், பாராட்டுரைகளைச் சேகரித்துக்கொண்டாலும், தருமு சிவராமூ ஒரு முறை சொன்னது போல, “அவர்கள் சொல்வதெல்லாம் அபிப்ராயங்களே, நான் சொல்வது judgement” என்று தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டாலும், எல்லாம் அபிப்ராயங்கள் தான். ஒரே ஒரு மனிதரது, தனி மனித அபிப்ராயங்கள் தாம். காலம் நிர்ணயிக்கும் என்று சொல்வது கூட, அந்தந்தக் காலத்தின் குணம் நிர்ணயிப்பது தான். இதில் ஏதும் judgements கிடையாது. 1973-ல் ஞானரதம் படைப்பிலக்கியத் தேர்வு கருத்தரங்கு நடத்தியது. எனக்கு வைதீஸ்வரனின் ஒரு குட்டிக் கவிதைத் தொகுப்பு, உதய நிழல் தான் ஒரே கவிதைத் தொகுப்பாகப் பட்டது. வல்லிக்கண்ணனுக்கு , நா.காமராசனின் கருப்பு மலர்கள் சிறந்ததாகப்பட்டது. காமராசன் அந்நாட்களில் மிகவாகப் பேசப்பட்டவர். அலங்கார சொல் ஜாலங்களில் வல்லவர். இன்று நா.காமராசனையும் காணோம். அவர் கவிதைகள் எனச் சொல்லப்பட்டவையும் போன இடம் தெரியவில்லை. ஆனால் எண்ணற்ற காமராசன்கள் வெவ்வேறு பெயர்களில் அவரவர் பேட்டை களில் குறுநில மன்னர்களாக, சக்கரவர்த்திகளாக கோலோச்சுகிறார்கள். ஆனால் வைதீஸ்வரன் காணாமல் போய்விடவில்லை. அவரிடமிருந்து இன்னமும் கவிதைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பெரிதும் பேசப்படுபவர்களிடம் புதுக்கவிதை புதுச் செய்யுளாகியுள்ளது. இன்றும் அன்று போல வடிவம் பார்த்து கவிதை பெயர் பெறுகிறது, கவித்வம் உணர்ந்து அல்ல. இதிலிருந்து காலம் என்ன புண்ணாக்கைச் செய்துவிட்டது என்று தான் சலித்துக்கொள்ளத் தோன்றுகிறது.

உதய நிழல் வைதீஸ்வரனைத் தான் இப்போது 50 வருடங்களுக்குப் பின்னரும் பார்க்கிறோம். அதே ஆளுமைதான் வளர்ந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் அவர் கவிதைகளில் எனக்குப் பிடித்தவை பிடிக்காதவை பற்றி எழுதியிருந்தேன். “எனக்கு” என்ற சொல்லுக்கு அடிக்கோடிட வேண்டும். இப்போதும் அவருடைய “கால்-மனிதன்” தொகுப்பைப் பார்க்கும் போதும், எனக்குத் தோன்றுவனவற்றை “எனக்கு” என்ற அடிக்கோடிட்ட சொல்லுடனேயே எடுத்துக்கொள்ளவேண்டும். இது எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்றாலும், அவ்வப்போது இதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று தொலைக்காட்சியில் ஒரு கவிஞரின் பேட்டி நடந்து கொண்டிருந்தது. தான் எழுதிய கவிதைகள் 3000 பக்கங்களுக்கு இருக்கும் என்றார். அவன் காலத்திய ஆசுகவி யேயான கம்பனுக்கும் மேல் மூன்று மடங்கு கவித்வம் வாய்ந்தவராக இருக்கவேண்டும். அவரைப் பேட்டி கண்டவரைப்பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. ஆனாலும், அவர் பேட்டியாளர் சொல்வதைப் புன்னகையோடு கேட்டுக்கொண்டிருந்தார். அதில் கேலி தொக்கியிருக்கிறதோ என்று பார்த்தேன்.இல்லை. ஷெல்லியைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். கவிதை மேற்செல்ல மறுக்கிறது. ஷெல்லியும் வலுக்கட்டாயமாக உட்கார்ந்திருக்கவில்லை. கவிதை அத்தோடு நிற்கிறது. அடுத்த சரியான சொல் கிடைக்கும் வரை. அது எப்போது நாட்கள் கழிந்து பொறி தட்டுவது போல் உதயமாகிறது. “wandering” என்ற சொல் கிடைத்ததும் கவிதை மேல் செல்கிறது. இந்த மாதிரி அவஸ்தைகள் எல்லாம் 3000 பக்கம் எழுதும் கவிஞருக்கு இல்லை. அடுத்து, தினம் தன் கவிதைகளை வாசிப்பவரும் வந்தார். அவர் அத்தொலைக்காட்சியின் ஆஸ்தான கவிஞர் போலும். அவரும் கவிஞரே இல்லை என்று 40 வருடங்களுக்கு முன் நான் சொன்னதை கவிஞரோ அல்லது காலமோ லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. நான் கவிதை இல்லை என்று சொன்னது 26வது பதிப்பு வந்துள்ளது, காலமும் மக்களும் பதில் சொல்லியாயிற்று என்று அந்த கவிஞர் தீர்மானத்தோடு சொன்னார். இவ்வளவு பலசாலிக் கவிஞர் முன் நான் என் எளிமையைத் தான் உணர்ந்தேன். ஆனாலும் இவை எதுவும் கவிதையாக இன்னமும் எனக்குத் தோன்றவில்லை. 50 வருடங்களாக. எனக்குத் தலை நரைத்து விட்டது. அவர்கள் இளமைத் தோற்றத்துடன் தான் இருக்கிறார்கள். எனக்குத் தான் என்ன பட்டாலும் புத்தி வராது என்று தோன்றுகிறது.

ஐம்பது வருடங்களாக கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன், புதுக்கவிதையின் தோற்றவருடங்களிலேயே தன் கால் பதித்துவிட்ட வைதீஸ்வரன், கால்-மனிதன் தொகுப்பின் கடைசி பக்கங்களில் பல பெரிய சிறிய தலைகளின் பாராட்டுக்களையும் இணைத்துள்ளார். ‘பூக்கள் ஏன் மலர்கின்றன’, போன்ற கேள்விகளுடன் தொடங்கும் ஒரு கவிதை,

“பதில் கிட்டாமல்
பொருள் பூத்து விட்டால்
எனக்கும் கவிதை தோன்று மெனத்
தோன்றுகிறது இத்தருணம்”

என்று சொல்லும்போதே ஒரு கவிதை தோன்றிவிடுகிறது, நமது வைதீஸ்வரனுக்கு. ஆனால் அவர் முதல் கவிதையாகவும், பின் அட்டையிலும் பிரதானப்படுத்தியிருக்கும்

“இந்த உலகம்
நம்மால்
அழியாமலிருக்கட்டும்”

ஒரு கவிதையாக எனக்குப் படவில்லை. நல்ல சிந்தனைகளை நன்றாகச் சொல்லிவிட்டால் கவிதையாகிவிடுமா? “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதில் நல்ல சிந்தனை மட்டுமில்லை. மனதுக்குள் ஒரு முறை சொல்லிப் பார்க்கலாம். ஏற்ற முகபாவத்துடன் சப்தமிட்டுச் சொல்ல தூண்டும் உணர்வுடன் வருவது அது. இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் வைதீஸ்வரன் கவிஞன்.

இருட்டை விட்டு
இன்னும் பிரித்தறிய முடியாத,
ஒற்றைக் காகம்
அதன் ஒற்றைக் குரல்
மௌனத்தை இன்னும்
முழுதாய்த் திறக்க முடியவில்லை.

குவிந்த விரல்களின் மழலையாய்
விரியும் கோலங்கள்…….

வெள்ளையாய்ச் சிரிக்கிறது விடிவு
ஒரு குழந்தையின் கள்ளத் தனத்துடன்.

போன்ற காட்சிகளைக் காண்பவர், இது போன்று எழுதுபவர் கவிஞர் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

கதவு திறக்கும் ஒலி
கேட்கிறது….

என்று தொடங்கும் ஒரு கவிதை

கதவு பொதுவாக
குற்றமற்று நிற்கிறது”

என்று முடியும் ஒரு கவிதை சிறப்பான ஒன்று தான். ஆனால் ‘பொதுவாக’ என்ற சொல்லை நீக்கிவிட்டால் இன்னும் சிறப்பாக ஆகியிராதா? “பொதுவாக” என்னும் சொல் கருத்து விளக்கமாக வருவதல்லவா? கவிதை ஏன் கருத்து விளக்கமாகவேண்டும்?

இப்படியெல்லாம் சில கண்களில் பட்டாலும், அவை டி.கே.சி. அருமையாகச் சொல்லும் “அப்பளத்தில் கல்லாக” நெருடினாலும், கைவிரல்களுக்கிடையில் பெரிதாக ஒரு அப்பளம் கிடைத்துள்ளதே.

இப்படி நெருடும் கற்கள் பரவிக் கிடக்கின்றன பல இடங்களில், சில பதங்களாகவும், பதச் சேர்க்கைகளாகவும் (உதாரணங்கள் சில வேண்டுமா? – எண்ணக்கோல், காற்றுச் சாட்டை, மேக மிருகங்கள், திசைப் போர்வை, மந்திரவாதிக் கம்பளி, “அந்த இடித்(தடி) திருடனை, சில வரிகளாகவும்,

“இப்படிப் பட்ட அபவாதச் செயல்
எதுவானாலும் அதைச்
சட்டமாக்கி விட்டால் தான்,
ஜனநாயகத்தின் மீசையில்
மண் ஒட்டாமலிருக்கும். “

இப்படி இன்னும் பல உண்டு தான்.

வைதீஸ்வரனுக்கு சுற்றிக் காணும் அரசியல் பற்றி, சில மனித சுபாவங்கள் பற்றி, கோஷங்கள் பற்றி யெல்லாம் விமர்சனங்கள் உண்டு. ஆரோக்கியமானதும், கிண்டலாக வெளிப்படுவதும் ஆனவை அவை. அது ஐம்பது வருடங்களாக தொடரும் ஒரே பார்வை. அவரது ஆளுமையைச் சார்ந்தது. இப்போதைய மதிப்புகளை, தேவையைச் சார்ந்ததல்ல. “சோரம் அல்லது களவியல்” என்று ஒரு கவிதை:

சோரத்தின்
சுகமே அலாதி – அது
எதிர் நீச்சலின் வீர முடிவு
அவிழ்த்துவிட்ட ஆண்மையின்
தன்னிச்சைத் துள்ளல்”

என்று எழுதும் வைதீஸ்வரனின் சமூக மதிப்புகள் அவரதே. வேறு எங்கிருந்தும் பெற்றதல்ல. கூட்டத்தோடு போடும் கோவிந்தா அல்ல. அதை வெளிப்படவும் சொல்கிறார். இது நம் கவிதை உலகில் வெகு அரிதாகக் காணப்படும் குணம். கடைசியில் அக்கவிதை முடிகிறது இவ்வாறு:

பூமியின் பொய் வாடை கடந்த
புனிதப் புணர்ச்சி என்று
புரிந்து கொள்வாய் நீ.
ஒப்புதலுடன் இருபாலும்
இணைந்து செய்யும் குற்றத்தை
குற்றம் என்று
எப்படி ஒப்புக்கொள்வது?

இது போல இன்றைய பொய்க்கோஷமான ஜாதி பற்றியும், கவிதையாக, கோஷமாக அல்ல, எழுதுகிறார், நக்கலுடன். இவரது விமரிசனங்கள் எல்லாம் நக்கலுடன் தான் வெளிப்படும்.

கட்சிக் கொடிகள் காற்றில் பதற
“காக்கை குருவி எங்கள் ஜாதீ”
என ஓலமிட்டன ஒலிபெருக்கிகள்.

அலறிப் புடைத்துப் பறந்தன
அத்தனை காகங்களும்,
மனித ஜாதிக்குப் பயந்து.

அவருக்கு மொழி என்னமாக விளையாடுகிறது. அவர் பார்வைகளிலேயே கவித்வம்

வைத்தியன் பார்த்த கண்களும்
காதலன் கண்ட கண்களும்
அர்த்தங்கள் வெவ்வேறு சொல்லும்……

காடுகளைக் கடத்திக் கொண்டு
போனது நாகரீகம்…..

குடிகாரன் கழுத்துத் துண்டாய்
பக்கவாட்டில் தொங்கும்
பேருந்து மக்கள் பத்து மணி வண்டிகளில்….

சொர்க்கத்திலேறும் முயற்சியை
தற்காலிகமாய்த் தள்ளி வைத்தாற்போல்
சாத்தி வைத்த ஏணிகள்
மொட்டை மாடியில்…..

மௌனத்தைப் போர்த்திக்கொண்டு கனவு காணும்
மாடு போல் படுத்திருக்கிறது காடு….

வைதீஸ்வரன் எழுத்திலும், சிந்தையிலும், பார்வையிலும், காணும் காட்சிகளிலும் கவிஞர் தான். ஆனாலும் பல இடங்களில் அவர் கேலியும், சொல்லாட்சியும், பதச் சேர்க்கைகளும் கை விட்டு விடுகின்றன. ஏன், பி.டி.உஷாவுக்கு கால் சுளுக்கிக் கொள்ளாதா, இல்லை நித்ய ஸ்ரீ மகா தேவனுக்குத் தான் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாதா? அதனால் அந்த இடைவேளைக் கோளாறினால் அவர்கள் இல்லாது போய்விடுவார்களா? எனவே, 166 பக்கங்களுக்கு விரியும் இக்கவிதைத் தொகுப்பில் எனக்குப் பிடிக்காத கவிதை வரிகள், பதங்கள், பதச் சேர்க்கைகள், படிமங்கள் என்று சொல்லப்படுபவை, நகையாடல் என்று கொள்ளப் படுபவை, முழுக்கவிதைகள், கவிதைப் பொருட்கள் எல்லாம் உண்டு தான். அவை எனக்குப் பிடிக்காது போவதில், அல்லது பிடித்துப் போனவையிலும் எந்த தெய்வ சாந்நித்யமும் கிடையாது. என் ஒருவனின் ரசனை வட்டத்தில் சிறை படுபவை. இதனால் பல நஷ்டங்கள் என்னமோ இருக்கும் தான். எனக்குப் பிடித்துப் போகிறவற்றிற்கு தமிழ் நாட்டிலும் இந்தியப் பரப்பிலும், அதிகார மட்டங்களில் அங்கீகாரம், பரிசு, விருதுகள், பொன்னாடைகள், எதும் அவரது ஜாதகத்தில் இல்லாது போகலாம். 28 பதிப்புகள் அவர் கவிதை வராது போகலாம்.

ஆக, இந்த கணிசமான எண்ணிக்கையும் பக்கங்களும் கொண்ட தொகுப்பில் எனக்குப் பிடித்தவை என நிறையவே கவிதைகள் உள்ளன. முடிவில், கடலோர மனிதன், ஸீஸர், மகா கவி, அழிப்பு, பரிசு, கண்காட்சி, மிருகம், ஆஹா, சுகம், அகராதி, எதிராளி, நெருப்புப் போர்வை, ரிஷிகேஷ், ஒரு துளி காவியம், பிச்சமூர்த்தி, நகல் முகம், நடுப்பகல், சிலிர்ப்பு, காத்திருப்பு, ஒரு கொலையின் கொண்டாட்டம், இக்கட்டு, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சொர்க்கத்தில் சோதனை என்று ஒரு நீண்ட கவிதை, அல்லது குறுங்காவியமும் இத்தொகுப்பில் உள்ளது. புதுக்கவிதையில் நீண்ட கவிதைகள் என்று பிச்சமூர்த்தியிடமிருந்தும் சி. மணியிடமிருந்தும் தான் கவிதை என்று சொல்லத்தக்கவை வந்துள்ளன. மற்றவை எல்லாம் வெறும் அளப்புகள் தான். வைதீஸ்வரனும் அதற்கு விலக்கல்ல. இருப்பினும், வைதீஸ்வரன் கவிஞர். அவர் பார்வையும், எள்ளலும், சமூகம் பற்றி, அரசியல் பற்றி, சக மனித மதிப்புகள் பற்றி கவிதையாக நமக்கு வந்துள்ளன. அத்தோடு, அவர் தன்னைச் சுற்றியுள்ளவற்றை அனுபவித்து எழுதுகிறாரே, அத்தனை அழகுடன் அவையும் கவிதையாகி வந்துள்ளன.

கிளையில் காக்கை
தன்னையே கொத்திக் கொள்கிறது
சுயவிமரிசனம் போல்.

சரி இதெல்லாம் போகட்டும், வைதீஸ்வரனின் கவித்வ ஆளுமைக்கு ஒரு சிறிய, ஆனால் முழுமையான உதாரணமாக ஒரு கவிதை. பரிசு என்ற தலைப்பில்.

நெருங்கியவன்
தெரிந்த முகம் என்று
சிரித்து விட்டேன்
மிகச் சிநேகிதமாய். பதிலுக்கு
அவனும் சிரித்துவிட்டான்
நாகரீகமாய்

கடந்த பின் தான்
புரிந்தது.. அவனை
அறிந்தவன் நான் இல்லையென்று

எறிந்த சிரிப்பை மீண்டும்
திரும்பி வாங்க சாத்தியமில்லை

இருந்தாலும்
அறிமுகமற்ற மனிதனிடம்
அன்பு காட்ட முடிந்தது
இன்று ஒரு நல்ல ஆரம்பம் தான்
தவறுதலாக் இருந்தாலும் கூட.

இப்படி எழுதும் கவிஞருக்கு பொன்னாடையோ, சாகித்ய அகாடமி பரிசோ, கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் தான் என்ன?


கால் மனிதன்; (கவிதைத் தொகுப்பு) எஸ். வைதீஸ்வரன், சந்தியா பதிப்பகம், 54, 53வது தெரு, அசோக் நடர், சென்னை-83

வெங்கட் சாமிநாதன்/25.10.06

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்