புக்கர் பரிசு 2006: கிரண் தேசாய்

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

வா.மணிகண்டன்


ஆங்கில வாசகர்களிடமும், படைப்பாளிகளிடம் பெருமதிப்பு பெற்றதும், இலக்கிய உலகில் இரண்டாவது பெரிய பரிசு எனக் கருதப்படுவதுமான “புக்கர் பரிசு” இந்த ஆண்டு இந்தியாவைச் சார்ந்த கிரண் தேசாய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அவரது இரண்டாவது நாவலான “தி இன்ஹெரிடன்ஸ் ஆ·ப் லாஸ்(The Inheritance of Loss)” இந்த விருதினைப் பெறுகிறது.

இந்நாவல், 1986லிருந்து 1988 வரையிலும் தீவிர வன்முறை மிகுந்த நிகழ்வாக இருந்த, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்ட நேபாள மக்கள் தனி மாநிலம் கோரி நிகழ்த்திய கோர்க்காலாண்ட் இயக்கத்தினை (Gorkhaland movement) பின்புலமாகக் கொண்டது. ஓய்வுபெற்ற நீதிபதியும், விபத்தொன்றில் தனது பெற்றோரை இழந்துவிட்ட அவரது பேத்தி, சாய் ஆகியோரை மையமாகக் கொண்டு நிகழும் நிகழ்வுகள் புதினத்தில் கோர்க்கப்படுகின்றது.

தேசியம், பன்முகக் கலாச்சாரத்தன்மை, ஊடுருவிக் கிடக்கும் மனிதம் என பல விஷயங்களையும் மென்மையாக, நாவல் தொட்டுச் செல்கிறது. தனது நோக்கம் அரசியல் புதினம் படைப்பதல்ல என்றும் அத்தகையதொரு போராட்டச் சூழலில் வாழும் மக்களின் தகவமைவையும், நிகழ்வுகளில் மக்கள் செய்யும் தியாகங்களையும் பதிவு செய்வதே என்று பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவிக்கிறார்.

தனது முதல் நாவலில் இருந்து தனக்கான மொழி, புதினத்திற்கான கட்டமைப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை உணர்வதாகவும், முதல் நாவலைக் காட்டிலும், இரண்டாவது நாவலில் பக்குவத்தன்மை அடைந்திருப்பதாக ஏற்றுக் கொள்ளும் கிரண், இந்த நாவலைப் படைக்க ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தகுந்த அம்சம். பெரும்பாலான படைப்பாளிகளைப் போன்றே தனக்கான பதிப்பாளருக்காக அலைவதில் பெரும் காலம் கழிந்திருக்கிறது.

கிரணின் தாயார் அனிதா தேசாயும் மூன்று முறை புக்கர் பரிசுக்கான இறுதிச் சுற்று வரை பரிந்துரைக்கப்பட்டு பரிசு பெறாதவர். தனது எழுத்துக்கள் தனது தாயாரின் தாக்கத்தால் படைக்கப்படுவதாகச் சொல்லும் கிரண்,பரிசு பெறும் தனது நாவலை தாயாருக்குச் சமர்ப்பிக்கிறார்.

1971 ஆம் ஆண்டு, டெல்லியில் பிறந்த கிரண் தேசாய், தனது பதினான்காம் வயதில் இங்கிலாந்திற்குச் சென்று பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். 1998 ஆம் ஆண்டிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் இவர், இதுவரை எழுதி இருப்பது இரண்டு நாவல்கள் மட்டுமே.

மிக இளைய வயதில் புக்கர் பரிசு பெறும் பெண் எழுத்தாளர் என்னும் சிறப்பினை அடையும், கிரணின் வயது 35. இதற்கு முன் இந்தச் சிறப்பினை தனதாக்கியிருந்த அருந்ததி ராய், 1997ஆம் ஆண்டில் தனது 36வது வயதில் “த காட் ஆ·ப் ஸ்மால் திங்ஸ் (The God of small things)” என்னும் புதினத்திற்கு பெற்றார்.

டேவிட் மிட்ஷெல், பீட்டர் கேரெ, பேரி அன்ஸ்வொர்த், சாரா வாட்டெர்ஸ் மற்றும் நாடினெ கார்டிமெர் ஆகிய ஐந்து எழுத்தாளர்களை, இறுதிச் சுற்றில் பின்தள்ளும் கிரண் தேசாயின் “கதை சொல்லும் முறைக்கும் வரலாற்று உண்மைக்காவும்” பரிசளிக்கப்படுவதாக நடுவர் குழு அறிவிக்கிறது.

தனக்கான வாசகர்கள் யார் என்னும் வினாவில், தான் தனக்காக மட்டுமே எழுதுவதாகவும், தனக்கான வாசர்கள் குறித்து கவலைப்படுவதில்லையென்றும் குறிப்பிடும் கிரண், தான் எழுதுவது தனக்கென்ற சுயநலம்தான் என்கிறார்.

சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் வரிசையில் கிரண் தேசாயும் இந்திய எழுத்து, உலக அரங்கில் தனிக்கவனம் பெற புதிய கதவுகளை திறந்துவிடுவதற்கான முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
**********
வா.மணிகண்டன்
vaamanikandan@gmail.com

Series Navigation

வா.மணிகண்டன்

வா.மணிகண்டன்