ஓசைகளின் நிறமாலை -கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளீயீட்டு நிகழ்வு குறித்த சில பதிவுகள்

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

லதா ராமகிருஷ்ணன்


‘ஓசைகளின் நிறமாலை’ – கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளீயீட்டு நிகழ்வு குறித்த சில பதிவுகள்

விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பன்மடங்காகப் பெருகி¢யுள்ள, பெருகி வருகிற காலகட்டம் இது. ஆனால், இன்றளவும் பார்வையற்றோர்களுக்குப் போதுமான கல்வி, வேலை வாய்ப்புகளோ, அவர்களுடைய படைப்பாக்கத் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளோ போதுமான அளவு இல்லை என்பதே வளர்ந்து வரும் நாடுகளின் நடப்புண்மையாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பார்வையற்றவர்களுக்கான நவீன வாசிப்புக் கருவிகள், உபகரணங்கள் கிடைப்பது ஒரு சில பேருக்கு மாத்திரமே சாத்தியமாக உள்ளது. பல சமயங்களில் பார்வையற்றோருக்கான அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு ஏதோ சலுகை அளிக்கப்படுவதாய் அரைமனதோடு தரப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் என்ற அடிப்படையில் பார்வையற்றவர்கள் சாதாரணப் பள்ளிகளில் படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்றாலும் அப்படி சேர்த்துக் கொள்ளப்படும் பல பள்ளிகளில் பார்வையற்ற மாணவர்களுக்கான பிரத்யேக கவனம் தரப்படுவதில்லை என்பதோடு கூட அவர்களை அந்நியமாக உணரச் செய்யும் போக்கும் நிலவுகிறது. விதிவிலக்குகள் இல்லாமலில்லை. என்றாலும், இன்றளவும் சட்டசபைகளிலோ, நாடாளுமன்றத்திலோ உடல் ஊனமுடையவர்கள், குறிப்பாக பார்வையற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இடம்பெறுவதேயில்லை என்பதே சமூகத்தில் அவர்களுடைய நிலைமையைக் கோடிட்டுக் காட்டி விடுகிறது. சேவை அமைப்புகள் சிலவும், தன்னார்வலர்களும் பார்வையற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்களை படித்துக் காட்டி வருகின்றனர் என்றாலும், குடும்பத்தாரின் உதவி பல பார்வையற்றவர்களுக்குக் கிட்டக் கூடும் என்ற போதிலும், மத்திய, மாநில அரசுகள் பல உதவித் திட்டங்களை அறிவித்துள்ள போதிலும் இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உண்டு.

சில காலம் முன்னால் பார்வையற்றோருக்கான பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்காக பரிட்சை எழுத வந்திருந்த ஒருவர் மாணவியை சுருக்கமாக விடை தரும்படி கடிந்து கொண்டும்,மாணவி கூறிய விடைகளை முழுமையாக எழுதாமலும் போனதில் நன்றாக மதிப்பெண் வாங்கும் அந்த மாணவி தேர்வில் தோல்வியைத் தழுவும்படியாகிய செய்தியை ஒரு பத்திரிகை வெளியிட்டிருந்தது. அரசின் ‘பிரெய்ல் அச்சகம் இயங்காத நிலை இன்று. கணிணி வழியான பலன்கள் எல்லா பார்வையற்ற மாணவர்களையும் எட்டக் கூடிய சூழல் இங்கே இல்லை. பாட புத்தகங்கள் ஒலி நாடாவிலும், பிரெய்லிலும் கிடைப்பதே அரிதாக உள்ள சூழலில் பார்வையற்றவர்கள் தங்கள் இலக்கிய ஆர்வத்திற்கு – வாசிப்பார்வத்திற்கும் சரி, படைப்பார்வத்திற்கும் சரி- வடிகால் கிடைக்காமல் அல்லலுறும் நிலையே தொடர்கிறது. தொலைக்காட்சியை விட வானொலியே இன்றளவும் பார்வையற்றவர்களுக்கு இன்னமும் நெருங்கிய நட்பாக இருந்து வருகிறது. இந்த சூழலிலும் இலக்கியம் மீதுள்ள தணியாத ஆர்வம் காரணமாக பல வழிகளிலும் முயன்று நவீன இலக்கிய வகைமைகளோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டு, படைப்பாக்கத்திலும் ஈடுபடுவோரின் முயற்சி பொருட்படுத்தத் தக்கது; பேசப்பட வேண்டியது.

இந்த விதத்தில் தர்மபுரி அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணிபுரிந்து வரும் முனைவர் கோ.கண்ணன் அவர்களின் நூலை வெளியிட்டு அதன் வழி பார்வையற்றவர்களின் இலக்கிய ரசனை குறித்த, படைப்பாற்றல் குறித்த விழிப்புணைவை சமூகத்தில் பரவலாக்க முயற்சி மேற்கொண்டது Welfare Foundation of the Blind என்ற நிறுவனம். 2.10.2006 அன்று மாலை ‘ஓசைகளின் நிறமாலை’ என்ற கண்ணனின் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. அதையொட்டி அன்று காலை ‘பார்வையிழப்பும், இலக்கியப் பரிச்சயமும்’ என்ற பொருளில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு ஆகியிருந்தது. பண்டிகை காரணமாக வருகை தந்திருந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுடைய பங்காற்றல் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளரும், சிறுபத்திரிகையாளருமாகிய திரு.ஆர்.சிவகுமார் தான் பணி செய்யும் மாநிலக் கல்லூரியில் அறுபதுக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் படித்து வருவதாகக் குறிப்பிட்டார். காலை அமர்வை ஒருங்கிணைத்த அவர் தன்னோடு ஆங்கிலத் துறையில் திரு.சிவராமன், திரு.வாசுதேவன் என்ற இரு பார்வையற்ற ஆசிரியர்கள் பணி புரிவதாகவும், அவர்களுடைய நவீன இலக்கியப் பரிச்சயமும், திறனாய்வும் குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார். மாநிலக் கல்லூரியின் ஆசிரியர்கள் தங்களுக்குள் நிதி திரட்டி தங்கள் கல்லூரியில் பயிலும் அத்தனை பர்வையற்ற மாணவர்களுக்கும் , அவர்களுடைய கல்விக்கு உதவி செய்யும் விதமாய் இலவசமாக மதிய உணவு மாதம் முழுதும் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

காலை அமர்வில் ஏ.என்.ராஜா, வெங்கடேசன், சக்திவேல், ஜெயபாலன், சந்திரசேகர், சிவகுமாரன், கோ.கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பார்வையின்மை காரணமாக இலக்கியத் துறையில் தாங்கள் எதிகொள்ள வேண்டியிருக்கும் இடர்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள். இவர்களில் கண்ணன் தவிர மற்றவர்கள் கல்லூரி மாணவர்கள். மூவர் நேத்ரோதயா என்ற பார்வையற்றோருக்கான அமைப்பு நடத்தும் மணவர் விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாமல் போவதைத் தாங்கள் வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், ஆனால், இலக்கியக் கூட்டங்களில் தாங்கள் கருத்துரைக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறினார் வெங்கடேசன். கதைகள் வாசித்துக் காட்ட வெகு சிலரே முன்வருவதாகவும், பாலியல் வர்ணணைகளை வாசித்துக் காட்ட பலரும் விரும்புவதில்லை என்றும் பரவலாகக் கருத்து பெறப்பட்டது. ஒலி நாடாக்களில் படைப்புகள் கிடைப்பது இன்னும் பரவலாக வேண்டும் என்றும் அரசு நூலகங்களிலும், கல்லூரி நூலகங்களிலும் பார்வையற்றவர்களுக்கென்று தனி வாசிப்பறை, நவீன வாசிப்புத் தொழில் நுட்பங் கொண்ட உபகரணங்களோடு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஒருமித்த குரலில் கூறினார்கள். மனதில் கவிதை உதயமாகும் போது அதை உடனுக்குடன் எழுதி வைத்துக் கொள்ள முடிவதில்லை என்று வருத்தத்தோடு கூறினார்கள். சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் ஆகியவற்றில் முன்பு அத்தகைய வசதி இருந்தஹாகவும், இடையில் அது முடக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டு அவை மீண்டும் த்றக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் cassette library திறக்கப்பட வேண்டும் என்று கருத்துரைத்தார்கள். இன்று கணிணி வலைத்தளங்களில் நிறைய நூலகங்கள் இருக்கிறதென்றும், பார்வையற்றவர்களுக்கு கணிணித் திரையில் தோன்றுவனவற்றை உடனுக்குடன் வாசித்துக் காட்டும் ‘மென்பொறி’ ஆங்கில நூல்களுக்கு இருக்கிறதென்றும், தமிழுக்கு அத்தகைய மென்பொறி’ கிடைப்பதில்லை என்றும் நேத்ரோதயாவிலிருந்து வந்தவர்கள் கருத்துரைத்தார்கள்.( இங்கேயுள்ள browsing center களில் தமிழ் எழுத்துருக்களைப் பெறுவதே இயலாத காரியமாக இருக்கிறது.). பிரெய்ல் புத்தகங்களுக்கான தேவை இப்பொழுது இல்லையென்று சொல்வது தவறு என்றும் அத் உண்மையாகவே இருந்தாலும் போதுமான அளவு நூல்கள் பிரெய்ல் எழுத்தில் கிடைக்காமலிருப்பதே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்கள். பார்வையற்றவர்களுக்கான browsing centers அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்கள். நேத்ரோதயா அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்ற தகவல் பெறப்பட்டது. கணிணித் துறை சார்ந்தவர்கள் உதவ முன்வந்தால் நன்றாக இருக்கும். பார்வையற்ற ஆசிரியர்களை மாணவர்கள் எப்படி பாவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ”சில மாணவர்கள் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்; சிலர் ஏளனமாகப் பார்க்கிறார்கள். சில மாணவர்களின் அலட்சியம் வேதனைப்படுத்துகிறது”, என்றார் கண்ணன். இது பார்வையுள்ள ஆசிரியர்களுக்கும் பொதுவான நிலை தான் என்றார் சிவகுமார். பார்வையற்றவர்களுக்கென்று நல்ல இலக்கியப் படைப்புகளையும் அறிமுகப்படுத்தும் தனி பத்திரிகை நடத்தப்பட வேண்டும், பதிப்பகங்கள் பார்வையற்றவர்களின் படைப்புகளை வெளியிட முன்வர வேண்டும், பிரெய்ல் எழுத்தில் பிற எழுத்தாளர்களுடைய தரமான படைப்புகளை வெளியிட முன்வர வேண்டும், ஒலிநாடாக்களில் படைப்புகளை பதிவு செய்து வெளியிட முன்வர வேண்டும் என்ற பல கருத்துக்கள் கலந்துரையாடலில் பெறப்பட்டன.

மதிய உணவிற்குப் பின் தொடங்கிய நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமாகிய டாக்டட்.கே.எஸ்.சுப்ரமணியன்(இவர் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர். இதுவரை ஜெயகாந்தனின் நான்கு நாவல்கள், திலகவதியின் ஒரு நாவல், சுமார் 300 நவீன தமிழ்க் கவிதைகள் முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.தவிர,சொந்தக் கட்டுரைகளடங்கிய நான்கு தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன), தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் மா.இராஜேந்திரன், இலக்கியத் திறனாய்வாளரும், ஆராய்ச்சி மாணவருமாகிய ஜவஹர், வெல்·பேர் ·பவுண்டேஷன் ஆ·ப் தி ப்¨ளைண்ட்’ன் நிறுவனர்-தலைவர் டாக்டர்.ஜெயராமன் முதலியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். கண்ணனின் கவிதைத் தொகுப்பை திரு. ஜெயராமன் வெளியிட திரு. கே.எஸ். சுப்ரமணியம் பெற்றுக் கொண்டார். தலைமை உரையாற்றிய டாக்டர்.ஜெயராமன் படைப்பாற்றலின் மீதான பார்வையிழப்பின் தாக்கம் பற்றி விரிவாக உரையாற்றினார். சிறுவயதிலேயே பார்வையை இழந்தும் அயராமல் படித்து முன்னேறியதோடு தன்னொத்த பிறரையும் உயர்த்தும் முனைப்போடு பார்வையற்றவர்களால் பார்வையற்றவர்களுக்காக இயங்கும் பல அமைப்புகள் உருவாக வழிவகுத்து, அத்தகைய அமைப்புகள் பலவற்றில் சீரிய பங்காற்றி இன்று பார்வையற்றோர் நன்நல அறக்கட்டளையின் தலைவராய் சீரிய முறையில் பணியாற்றி வரும் டாக்டர் ஜெயராமனுடைய 300 பக்கங்களைக் கொண்ட முனைவர் பட்ட ஆய்வேடு ‘படைப்பாற்றலின் மேல் பார்வையிழப்பின் தாக்கம்’ என்ற கருப்பொருளில் அமைந்தது. இது புத்தகமாக வெளிவர வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகப் படுகிறது. நாவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் ஓசைகளின் நிறமாலை’ என்ற தலைப்பில் உரையாற்றிய திரு. ஜவஹர் கண்ணனுக்கு ஏராளமான புத்தகங்களை வாசித்துக் காண்பித்திருப்பவர்; வாசித்துக் காண்பித்து வருபவர். அவர் சமகால தமிழ்க் கவிதைகளைப் பற்றிய அகல்விரிவாகப் பேசி அந்த அகண்ட வெளியில் கண்ணனின் கவிதைகளைப் பொருத்திக் காண்பித்தார். கண்ணனுக்குப் படித்துக் காண்பிப்பதன் வாயிலாக தனது இலக்கியப் பரிச்சயமும் செழுமையடைவதாகத் தெரிவித்தார் அவர். நானும் எனது கவிதையும் என்ற தலைப்பில் ஏற்புரை வழங்கிய கவிஞர் கோ.கண்ணன் கவிதைகள் தான் தனக்கு அதிகமாக வாசித்துக் காண்பிக்கப்படுகின்ற காரணத்தால் தனக்கு அந்த வடிவத்தோடு கூடுதல் பரிச்சயமும், தேர்ச்சியும் சாத்தியப்படுவதாகக் குறிப்பிட்ட அவர் தனக்கான அனுபவங்கள், தனக்கான பாதிப்புகளை பகிர்ந்து கொள்ளவே தான் எழுதத் தொடங்கியதாகத் தெரிவித்தார். அவருடைய கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘என்னுரை’ பகுதியில் இது குறித்து அவர் விரிவாகப் பின்வருமாறு கூறியிருக்கிறார்:-

என்னால் உருவாக்கப்பட்ட ஓசைகளின் நிறமாலை என்ற இந்த நூலை வெளிக் கொணர்வதில் ஆயிரம் தடவைகள் நான் தயக்கம் காட்டினேன். இன்னமும் காட்டுகிறேன். என்ன காரணம்? என்னை வெளிப்படுத்துகையில் கயிற்றில் நின்றாடும் கழைக்கூத்தாடியென உணர்கிறேன்.காரணம், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான். ஏன் இப்படிச் சொல்கிறேனென்றால், ஒரு படைப்பு எதார்த்தமாகவும் இருக்க வேண்டும், அது பொதுமைப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும், ஒரு பார்வையற்றவரின் வாழ்க்கை அனுபவங்கள் அதில் உண்மையாகப் பதிவு செய்யப்படவும் வேண்டும்,அதே நேரம், பார்வையற்ற ஒருவருக்கு இதைத் தான் எழுதத் தெரியும், அவர் இதைத் தான் எழுதுவார் என்ற ஒற்றப் பரிமாண முத்திரை குத்தப்படாமலும் அது இருக்க வேண்டும். இத்தகைய அவஸ்தைகளோடு தான் நான் என் ‘ஓசைகளின் நிறமாலை’ என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இது என் கன்னி முயற்சி. அனால், கண்ணியமான முயற்சியாகவே இருக்க வேண்டும் என்று நான் கவலைப்படுகிறேன். படைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த நூல் குறித்த தங்கள் அபிப்பிராயங்களை எனக்கு கடிதம் மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ தெரிவித்தால் அது என்னை மேலும் இலக்கியத் தரத்தில் மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். வாசகர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

கவிஞர் கோ.கண்ணனின் சில கவிதைகள் சில நாட்கள் முன்பு திண்ணையில் இடம்பெற்றிருந்ததை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். கண்ணனின் கவிதைகள் நேர்மையானவை; நுட்பமானவை.வாசகரிடமிருந்து எந்தவித அனுதாபவுணர்வையும் கோரத் தேவையில்லாத அளவு தம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டிருப்பவை. அவருடைய தொகுப்பைப் படித்து அவருக்கு அவற்றைப் பற்றிக் கருத்துரைக்க விரும்புவோர் அவருடைய கைபேசியில் அவரை தொடர்பு கொள்ளலாம். எண் 9443786921. தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் மாதிரிக்கு சில இங்கே தரப்பட்டுள்ளது:

தீவுகள்
———-
ஒரு மரத்தே உறையும்
பல கூட்டுப் பறவைகள் போல்
சுழலும் இப்பந்தின் மேல்
வசிக்கிறோம்
அவரவர் உலகைச் சுமந்தபடி
வேற்றுக் கிரக வாசிகளாய்.

அகலிகை அயனம்
————-
அகலிகை சபிப்பால்
பொடிந்த ராமனும்
அவளது தகிப்பால்
பொறிந்த இந்திரனும்
எந்த சீதையின் தர்மத்தாலும்
எந்த தேவதையர் நியாயத்தாலும்
எக்காலத்தும்
எவ்வகை பிராயச்சித்தத்தாலும்
உயிர்ப்புப் பெறப் போவதில்லை.
கல்லின் சுமையோ,
அக்னி உக்கிரமோ,
நிர்வாண ரணமோ,
கௌதம குரூபைக்கோ,
ராம வீம்புக்கோ,
இந்திர இச்சைகோ
தெரியாதென்பதால் அல்ல;
உண்மைகளை
ஒப்ப மறுப்பதால்.

பதிவுகள்
————
எவர் எவர் கால்களுக்கெல்லாமோ
நிர்ப்பந்திக்கப்படும்
நான் கடக்க வேண்டிய பயண தூரம்.

எவர் எவர் தோள்களுக்கெல்லாமோ
சுமத்தப்படும்
என்னுடைய சிலுவை பாரம்.

எவர் எவர் விழிகளிலெல்லாமோ
அலையலையாய் விரியும்
எனக்கான வாசிப்பின் பக்கங்கள்.

எவர் எவர் திருவாய்களிலெல்லாமோ
ஒலி ஒளிபரப்பு செய்யப்படும்
எனக்கான கேள்வி, காட்சிகள்.

எவர் எவர் விரல்களிலோ
மலைமலையாய் குவிந்திடும்
என்னுடைய எண்ணப் பதிவுகள்.

நானும்
அத்தனை கால்களையும்,
அத்தனை தோள்களையும்,
அத்தனை முகங்களையும்,
அத்தனை கரங்களையும்
ஆரத் தழுவித் தழுவி
முத்தமிட்டு முத்தமிட்டு
ஆனந்தமாய் புன்முறுவலிப்பேன்
அழுது ஓய்ந்திடும் சிறு குழந்தையென.



இடம்பெறும் ஐந்து புகைப்படங்கள்

*முதல் படத்தில் இடமிருந்து வலமாக- டாக்டர் கெ.எஸ்.சுப்ரமணியம், டாக்டர்.ஜி.ஜெயராமன். கவிஞர். கண்ணன், லதா ராமகிருஷ்ணன்

இரண்டாவது படத்தில் கண்ணன் ஏற்புரை வழங்குகிறார்.

மூன்றாவது படத்தில் கலந்துரையாடல் காட்சி

நான்காவது படம் – கண்ணனின் கவிதைத் தொகுப்பு முகப்பு அட்டையும், பின் அட்டையும்

ஐந்தாவது படம்- கவிஞர்-இலக்கியத் திறனாய்வாளர் திரு ஜவஹருக்கு டாக்டர் ஜெயராமன் நினைவுப் பரிசாக கியூபா குறித்த சமீபத்திய வெளியீடான எட்டு புத்தகங்களை வழங்குகிறார்.

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்