பிடெல் காஸ்ட்ரோ 80′!

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

லதா ராமகிருஷ்ணன்.


·

போர்களில் இரு வகைகள் உண்டு. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் போர்கள் அவசியமானதும், தவிர்க்க முடியாததும் ஆகும். ஆனால், பேராசை காரணமாக மற்ற நாடுகளைக் கவர்ந்து, அந்நாட்டு மக்களை அடிமைப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் போர்கள் மனித நாகரீகத்தையே அவமானப்படுத்துபவை என்பதால் அவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இப்படித் தெளிவாக வரையறுத்துக் கூறிய ஹொஸெ மார்த்தி – கியூபப் புரட்சியின் அறிவார்த்தத் தந்தை என்று அழைக்கப்படுபவர். அவர் வழி நின்று !

அவருடைய 80வது பிறந்த நாளின் போது அவரை நினைவு கூர்வதோடு நில்லாமல் அவரை மற்றவர்களும் அறிந்து கொள்ளவும், நினைவுகூரவும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் காரணமாய் அமரந்த்தா, பேராசிரியர் சே. கோச்சடை, த.வே.நடராசன், அ.ஜ.கான், கலைச்செல்வன், ‘நிழல்’திருநாவுக்கரசு, லதா ராமகிருஷ்ணன் மற்றும் பல நண்பர்கள் ஒன்று கூடி கியூபாவின் பெருமைகளையும், தனித்தன்மைகளையும் எடுத்துரைக்கும் எட்டு நூல்களை வெளியிட முடிவு செய்தனர். அதன்படி மக்கள் மருத்துவம் – கியூபாவின் தனித்தடம்’ என்ற பொருளில் பேராசிரியர் சே.கோச்சடை எழுதிய நூல், சூறாவளியும் அடிபணியும் என்ற தலைப்பில் கியூபாவின் பேரிடர் மேலாண்மை குறித்து இரா.நடராசன் மொழிபெயர்த்திருக்கும் நூல், கியூபா – கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம் என்ற பொருளில் தியாகு எழுதியுள்ள நூல், வீழ்வோமென்று நினைத்தாயோ? என்ற தலைப்பில் அமரந்த்தா மொழிபெயர்த்துள்ள கியூபா எதிர்கொள்ளும் மனித உரிமைச் சவால்கள் பற்றிய நூல், மார்க்சியத்தின் அடிப்படைகள் என்ற தலைப்பில் நிழல்வண்ணன் தமிழாக்கம் செய்துள்ள நூல், கீயூபப் புரட்சியின் இன்றையப் பொருத்தப்பாடு என்ற பொருளில் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள நூல், மூன்றாவது கரை என்ற தலைப்பில் கியூபாவின் இலக்கியத் தடம் பற்றி லதா ராமகிருஷ்ணன் எழுதியுள்ள நூல், நீடித்த வேளாண்மையும், வல்லரசிய எதிர்ப்பும் என்ற தலைப்பில் சே.கோச்சடை-த.வே.நடராசன் ஆகிய இருவரையும் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள விரிவான நூல் ஆகிய எட்டு நூல்களும் செப்டம்பர் 3ந் தேதி முழுநாள் நிகழ்வாக சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடந்தேறிய விழாவில் வெளியிடப்பட்டன. கியூபப் புரட்சீயின் இன்றையப் பொருத்தப்பாடு என்ற நூலை புதுமலர் பதிப்பகம் வெளியிட மற்ற ஏழு நூல்களையும் வெளியிட்ட NCBH நிறுவனத்தார் ·பிடெல் காஸ்ட்ரோ 80′ விழாவையும் தாங்களே முன்னின்று சீரிய முறையில் நடத்தினர்.

திரு.நல்லகண்ணு,(இடதுசாரி அரசியல் தலைவர்-NCBH நிறுவனர்), திரு. ராதாகிருஷ்ணன்(NCBH தலைவர்) திரு.ச.சீ. கண்ணன்(காரல் மார்க்ஸ் நூலகம், சென்னை), திரு.நம்மாழ்வார்(தலைவர், தமிழக உழவர் இயக்கம்), திரு.பாமயன்(தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகம்), திரு.ச.சீ.ராஜகோபாலன்(கல்வியாளர்), மருத்துவர். ரவீந்திரநாத்(சமூக நீதிக்கான மருத்துவர் சங்கம்), திரு.ர்.சிவகுமார்(எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர்), திரு.கணகுறிஞ்சி (துணைத்தலைவர்- மக்கள் சிவில் உரிமை கழகம்-தமிழ்நாடு-பாண்டிச்சேரி), திரு.பிரபா கல்விமணி(மக்கள் கல்வி இயக்கம்), பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம் என பல குறிப்பிடத்தக்கவர்கள் கலந்து கொண்டு விழாவில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். புத்தகங்களை எழுதியவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படாதது வருத்தமாக இருந்தது.

மதியம் வயிற்றுக்கு நல்ல உணவு அளிக்கப்பட்டதோடு காஸ்ட்ரோ பற்றிய ஒரு ஆவணப் படமும் காட்டப்பட்டு சிந்தனைக்கும் விருந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாலை நடந்தேறிய நிறைவு விழாவில் திரு.சி.மகேந்திரன்(துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு), மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பழனிமாணிக்கம், பேராசிரியர் நாகநாதன் (இணைத் தலைவர்-மாநில திட்டக்குழு, தமிழக அரசு), திரு.என்.வரதராசன்(மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சி¢ஸ்ட்) தமிழ்நாடு, திரு.தா.பாண்டியன்(செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு), நடிகர் ராஜேஷ் முதலியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த திரு.அபிலார்தோ ஆர்.கியூட்டோ சோஸா-அரசியல் ஆலோசகர் & துணைத்தலைவர், கியூபா தூதரகம், புது தில்லி- கியூபத் தலைவருக்கும், மக்களுக்கும் இந்தியாவின் மீதும், இந்திய மக்கள் மீதும் உள்ள தோழமையையும், அபிமானத்தையும் பற்றி விரிவாகப் பேசினார்.

கியூபத் தலைவர்கள் சுயவிமரிசனத்திற்கும், மற்றவர்களிடமிருந்து எழும் விமர்சனங்களுக்கும் உரிய மதிப்பும், இடமும் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நம் அரசியல்வாதிகளிடம் – அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் சரி – இந்த மனப்போக்கு போதுமான அளவு இல்லையென்றே படுகிறது. அதே போல், கருத்துக்களை போதிப்பது என்பதை விட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதலே மேலான அணுகுமுறை என்ற மனப்போக்கும் முக்கியம். இன்னொன்று, சிறு குழந்தையும் கூட, அதை இன்னொரு குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசி குறை கூறுவதை விரும்பாது. எனவே, அல்லலுறும் நம் எண்ணிறந்த சகோதர சகோதரிகளின் அவலநிலையைப் பொறுக்க முடியாதவர்களாய்த் தான் அப்படிப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் சில பேச்சாளர்கள் கியூபாவுடன் ஒப்பிட்டுக் காட்டிக் காட்டி இந்தியாவைக் குறைத்துப் பேசியதைக் கேட்ட போது சற்று வருத்தமாகவே இருந்தது.

விழாவுக்கு வந்திருந்தவர்கள் எட்டு நூல்களையும் வாங்கிப் பயனுறும் வகையில் அன்று விலையில் சிறப்புச் சலுகையும் அளிக்கப்பட்டிருந்தது. வெளியான எட்டு நூல்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. குறிப்பாக, கியூபாவின் மருத்துவம், கல்வி, நீடித்த வேளான்மை, கியூபப் புரட்சியின் இன்றையப் பொருத்தப்பாடு, கியூபவின் பேரிடர் மேலாண்மை, மனித உரிமைச் சவால்கள் முதலியவற்றைப் பேசும் நூல்கள் மிகவும் கவனத்திற்குரியவை.

விழாவில் பேசியவர் அனைவரும் இந்த விழா நடப்பதற்கும், எட்டு நூல்களும் வெளியாவதற்கும் பெருமுயற்சிகள் எடுத்துக் கொண்ட அமரந்த்தாவை மறவாமல் பாராட்டினர். சிறப்பு விருந்தினரான கியூப நாட்டு அரசியல் அலோசகரின் உரையை உடனுக்குடன் மேடையில் திரு. தியாகு திறம்பட மொழிபெயர்த்ததில் அயர்ந்து, மகிழ்ந்து போன அவர் அங்கேயே தியாகு கையில் தங்கள் அரசியல் புத்தகம் ஒன்றைக் கொடுத்து மொழிபெயர்க்கும்படி கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது!

விழா ஆரம்பம் முதல் இறுதி வரை பம்பரமாகச் சுழன்று காரியங்களைச் செய்து கொண்டிருந்த NCBH நிறுவன ஊழியர்கள் திரு.துரைராஜ், திருமதி சாரதா, திருமதி. ராணி மற்றும் முழுநாளும் விழா நிகழ்ச்சிகளை சீரிய முறையில் தொகுத்து வழங்கிய திரு.பாஸ்கர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்!

வளர்ந்து வரும் கவிஞராகிய திரு. கவிபாஸ்கரின் கைவண்ணத்தில் அரங்கின் இருபக்கச் சுவர்களிலுமிருந்த ஓவியங்களிலிருந்து காஸ்ட்ரோவும், சேகுவேராவும் உயிர்ப்போடு அவையோரையும், விழா நிகழ்வுகளையும் கண்டு களித்துக் கொண்டிருந்தார்கள்!

லதா ராமகிருஷ்ணன்

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்