தமிழ் மக்களின் பழமொழிகளைத் தொகுத்துப் பதிப்பித்த தரமிக்கவர்கள்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

தேவமைந்தன்



ஒன்றை, அது எதுவோ, எழுதிவிட்டு இதழொன்றுக்கு அனுப்பிவிட்டு அச்சில் வருகிறதா என்று ஒவ்வொரு நாளோ கிழமையோ மாதமோ ஏங்கித் தவமிருந்து, வந்துவிட்டால் அதில் தன் பெயரைத் தரிசித்து, புளகாங்கிதமடைவது மனித சுபாவமே.
ஆனால் தங்கள் பெயர் தாங்கள் இருக்கும்போதும் போனபின்பும் வெளிப்படுமா, படாதா என்ற எந்தவித யோசனையுமின்றி, ஆழ்ந்த தங்களின் வாழ்க்கை அனுபவங்களை, சகமனிதர்கள் தங்களுக்கு காய்ச்சி இழுத்துப்போட்ட சூடுகளை, நாலுபேர் தங்கள் வாழ்க்கையை இழுத்துப்போட்டு மிதித்ததனால் கிடைத்த படிப்பினைகளை, நம்பக்கூடாதவைகள் என்று நம்பிக்கெட்டபின்பு தெரிந்துகொண்டு தங்களைப்போன்று அடுத்தவர்களும் துன்பப் பட்டுவிடக் கூடாதே என்று அந்தப் பாடங்களை எந்த விதக் காப்புரிமைச் சட்டப் பாதுகாப்புமின்றி வாய்மொழிகளாகவே படைத்துச் சென்றார்களே அவர்கள் நம் வணக்கத்துக்குரியவர்கள்.

அவர்களை விடவும் பாராட்டுக்குரியவர்கள் அவ்வாய்மொழிகளைத் தங்களின் காதுகள் வழியாக மனத்திலும் பின்பு எழுத்திலும் பதிவு செய்தவர்கள். இதிலும், அதாவது பழமொழிகளை ஆவணப்படுத்துவதிலும் நம்மை முந்திக் கொண்டவர்கள் அயல்நாட்டிலிருந்து இங்கு அலுவலாகவும் அப்படியே ‘கம்புக்குக் களையெடுத்தாற்போலவும் இருக்கவேண்டும்; தம்பிக்குப் பெண் பார்த்ததாகவும் அமைய வேண்டும்” என்று தங்களின் மதத்தைப் பரப்பவும் வந்தவர்கள். பாருங்களேன்!

1842ஆம் ஆண்டு இந்தப் பணியைத் தொடங்கி வைத்தவர் பெர்சிவல் பாதிரியார். 1826இல் தமிழ் மக்களிடையே மிஷனரிப் பணியைச் செய்ய ஆரம்பித்தார். அவர்களிடமிருந்து தான் பெற்ற 6000-த்துக்கும் மேற்பட்ட பழமொழிகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் மொழியாக்கி 584 பக்கங்களைக் கொண்ட டெமியளவு புத்தகமாகப் பதிப்பித்தார்.

பெர்சிவல் பாதிரியாரால் உத்வேகமுற்று, 1894 நவம்பர் மாதத்தில் சென்னை வேப்பேரியில் ‘சர்கன் இல்லத்தில்’ இருந்து ஜான் லாசரஸ் பாதிரியார் எழுதினார்; “பலவிதமான மிஷனரி வேலைகளின் இடையே அவசர அவசரமாகத் தமிழ்ப்பழமொழிகளை சாதாரண மக்களிடமிருந்து பெற்றுத் தொகுத்தேன்.(12000 பழமொழிகளுக்குமேல் சேகரித்தவர், அவற்றை சலித்து சலித்துப் பார்த்து 1894இலேயே 687பக்கம் டெமியளவு தொகுப்பை 9417 பழமொழிகளும் அவற்றுக்கான ஆங்கிலக் குறிப்புகளும்(hints) ஒப்புடைய தமிழ், ஆங்கிலப் பழமொழிகளும் கொண்டதாக வெளியிட்டார்.) முழுமை இருக்காதுதான். ஆனாலும் தமிழ் அறிவின் குறிப்பிடத்தக்கதொரு கிளையான மக்களின் உரத்த சிந்தனைகளை சரிவறவும் நேராகவும் புரிந்துகொள்ள என் தொகுப்பு கொஞ்சமேனும் உதவுமென்றால் பல ஆண்டுகளாக நான் மேற்கொண்ட கடின உழைப்புக்குத் தக்க பலன் கிடைக்கும்.”

மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதே சென்னை வேப்பேரியிலிருந்து ஜான் லாசரசையும் தன் உழைப்பால் பிற்படுத்தி 1897 ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் மிகவும் அருமையான, தெள்ளத்தெளிவாகப் பல தலைப்புகளின் கீழ் வகைப்படுத்திய, 94 டெமியளவு பக்கங்கள் பலவிதமாகப் பொருளடக்க அகரவரிசைகள் கொண்ட, நன்கு சமகால மக்களோடும் புலமைஉடையோர்களோடும் பழகிச் செம்மைப்படுத்திய, உள்ளுக்குள்ளும் ஒப்புடைய ஆங்கிலத்திலும் ஏற்ற ஒப்பீடுகளும் ஆங்கில மூலப்பழமொழிகளும் சொலவடைகளும் கூடிய 3644 பழமொழிகளின் விளக்கத்தை 523 பக்கம் டெமியளவு தொகுப்பாக வெளியிட்டார் ஹெர்மன் ஜென்ஸன் பாதிரியார். மிக முக்கியமாக, ஜான் லாசரஸைப்போல் பழமொழிகளின் எண்ணிக்கையிலும் பக்க அளவிலும் கவனம் வைக்காமல் பொருண்மை வெளிப்பாட்டில் ஆழமான அக்கறை கொண்டு நூலை உருவாக்கினார். இதற்கு இரண்டு தொகுப்புக்கும் ஒவ்வொரு சான்றைப் பார்க்கலாம். துல்லியமான புரிந்துகொள்கைக்காக அப்படியே தருகிறேன்.

ஜான் லாசரஸ்:
நொறுவை தின்றால் நூறு வயது.
A doubtful advice.
(A Dictionary Of Tamil Proverbs With An Introduction And Hints in English on Their Meaning And Application, Madras 1894. p.459)

ஹெர்மன் ஜென்ஸன்:
உன்னைப்பிடி, என்னைப்பிடி உலகாத்தாள் தலையைப் பிடி.
Catch you, catch me, and catch the head of the goddess.
Said by one who has already exerted himself to the utmost for someone when he is asked to do yet another kindness, implying that there is no end to the demands made on him. e.g., Draupadi made a vow when the Pandavas were conquered at gambling, that she would not tie up her hair till their enemies the Kauravas were killed. When this had been accomplished by Krishna’s favour, she again declared that she would not tie up her hair till Aswathama, who had killed her children, was slain. Then Krishna said this proverb to her.
( A Classified Collection of Tamil Proverbs, Madras 1897. p.131.

இவர்களுக்கு அப்புறம் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1952ஆம் ஆண்டில் – 10,450 பழமொழிகளைத் தொகுத்துப் பதிப்பித்தது. புத்தகத்தின் பெயர் ‘கழகப் பழமொழி அகரவரிசை.’ பாலியல் பழமொழிகளும் கொச்சை வழக்குப் பழமொழிகளும் அப்படியே இந்த 1952 பதிப்பில் இடம் பெற்றுள்ளமை மிகவும் குறிப்பிடத்தக்கது. பாசாங்கில்லாத பதிப்பு.

தான் உழைத்த உழைப்பின் அளவு, தமிழகத்தில் புகழும் பணமும் பெறாதவர்களுள் கூறிப்பிடத்தக்கவரான கி.வா.ஜகந்நாதன் அவர்கள் 1988இல் 21342 முதன்மைப் பழமொழிகள் உட்பட்ட 25,000 பழமொழிகளையும் தேவையான பிற்சேர்க்கை – அரும் சொற்பொருள் அகரவரிசை ஆகியவற்றைக் கொண்ட அழகான (கெட்டி அட்டை) தொகுப்பை 948 பக்கங்கள் கொண்ட டெமியளவு புத்தகமாக ‘காந்தமலை, 2, நார்ட்டன் முதல் தெரு, மந்தைவெளி, சென்னை-600028’ என்ற முகவரியிலிருந்து உரிமை பெற்ற பதிப்பாக வெளியிட்டார்.(விலை:ரூ.100.) இதில் ஒரு பழமொழிக்கு மாற்றுப் பழமொழி இருந்தால் தவறாமல் குறிப்பிட்டார். ஒரு சான்று:

துள்ளின மாடு பொதி சுமக்கும்.
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
(பக்.568-569)

****
(நன்றி: கட்டுரைக்கான தயாரிப்புக்கும் மூலநூல்களுக்கும் அடிப்படை உதவிகள் தந்த புதுச்சேரி பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவன இந்தியவியல் ஆய்வாளர் கண்ணனுக்கும்; நூலகர்கள் சரவணன், ராமானுஜம், நரேனுக்கும் நன்றி.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்