சாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி


திருச்சி ரேடியோ சிலோனை இந்தியத் தமிழர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் அன்றாடம் பாவித்து வந்திருக்கிற ஒரு சொற்றொடர் இது. ரேடியோ என்றாலே ரேடியோ சிலோன்தான். வட இலங்கையில் மட்டுமல்ல, தென் தமிழ்நாட்டிலுங்கூட, பொதிகைத் தென்றல், பொங்கும் பூம்புனல், புதுவெள்ளம், நினைவூட்டுகிறோம், அன்றும் இன்றும், திரும்பிப்பார், ஜோடிமாற்றம், இசையும் கதையும், இசைக்களஞ்சியம், இன்றைய நட்சத்திரம், நீங்கள் கேட்டவை, என் விருப்பம், பாட்டுக்குப் பாட்டு, வானொலிமலர், ஒன்றோடு ஒன்று – என்று அதிகாலையிலிருந்து ராத்திரி பத்தரைவரை இலங்கை வானொலிதான். ’83 இனக்கலவரம் இந்த இசைப்பாலத்தைச் சிதைக்கும்வரை, அல்லது ரி.வி.ப்பெட்டிகள் வானொலிப் பெட்டிகளைச் சிறுமைப்படுத்த முனையும்வரை.

அறுபதுகளின் இறுதியில், டைரக்டர் ஸ்ரீதர் பங்குகொண்ட ஓர் இசைநிகழ்ச்சியில், ரசிகர் கூட்டத்தை நோக்கி ஸ்ரீதர், நீங்களெல்லாருமே நன்றாய் அறிந்திருக்கிற, ஆனால் இதுவரை பார்த்திராத, ஒரு பிரமுகரை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்… என்று ஒரு நபரை மேடையில் நிறுத்த, யார் இவர், என்று சில விநாடிகள் வியந்த ரசிகர்கள், ‘வணக்கம் நேயர்களே…’ என்ற ரெண்டே வார்த்தைகளில் அந்தக் காந்தக் குரலை இனங்கண்டு கொண்டு, ‘மயில்வாகனன்! மயில்வாகனன்!!’ என்று குது¡கலித்த சந்தோஷம் நிகழ்ந்திருக்கிறது.

தமிழ்நேயர்களின் மேலே சர்வாதிகாரம் நிகழ்த்திக் கொண்டிருந்த மயில்வாகனனின் மெஸ்மரிஸக் குரலைத் தொடர்ந்து, மணிக்குரல்களின் ஓர் அணிவகுப்பே இலங்கை வானொலியில் நடந்தது.

ராஜகுரு சேனாதிபதி கனகரத்னம், எஸ்.கே.பரராஜசிங்கம், நடராஜ சிவம், வி.என்.மதியழகன், மயில்வாகனன் சர்வானந்தா, சில்வஸ்டர் பாலசுப்பிரமணியம், ஜோக்கிம் ·பெர்னாண்டோ, கே.எஸ். ராஜா, பி.ஹெச்.அப்துல் ஹமீத்….

இந்த வசீகரக் குரல்களெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் நேயர்களை வசியம் பண்ணிக் கொண்டிருக்க, தேசியசேவையில் செய்தி வாசிக்கிற வெங்கலக் குரலொன்று மனசைச் சுண்டியிழுத்துக் கொண்டிருந்தது. அந்த கணீர்க் குரலின் ஏகபோக உரிமையாளர் வி.சுந்தரலிங்கம்.

பிற்காலத்தில் லண்டனில் பி.பி.ஸி. தமிழோசையிலும் குரலாதிக்கம் செலுத்தியவர் சுந்தரலிங்கம்.

அந்த சுந்தரலிங்கம் எனக்குச் செய்த மிகப்பெரிய உபகாரம், கொழும்பில் சாந்தன் என்கிற எழுத்துக் கலைஞனை, சாந்தன் என்கிற உன்னதமான மனிதனை சந்திக்க எனக்கு வாய்ப்பேற்படுத்தித் தந்தது.

’75ல் கணையாழியில் சாந்தனுடைய ‘நீக்கல்கள்’ என்கிற சிறுகதையை வாசித்துவிட்டுத் து¡க்கங்கெட்டுக் கிடந்த எனக்கு, பின்னாளில் என்னுடைய அபிமான எழுத்தாளனாகவிருந்த, மிக நெருங்கிய சிநேகிதனாகவிருந்த சாந்தனை சந்தித்துப் பேச எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் மலர்து¡விக் கொண்டாடப்பட வேண்டியது.

அதன்பிறகுதான் சாந்தனுடைய இலக்கியப் படைப்புகள் படிக்கக் கிடைத்தன. கடுகு, ஒரே ஒரு ஊரிலே, ஒட்டுமா, முளைகள், ஒரு பிடி மண்…

பிறகு, நான் திருநெல்வேலியில், நான் சார்ந்திருந்த இலக்கியத் தேடல் அமைப்பு, சாந்தனுடைய ‘கிருஷ்ணன் து¡து’ சிறுகதைத் தொகுதியைப் பதிப்பிக்க நேர்ந்ததும், அந்தத் தொகுதிக்கு முன்னுரை எழுதுகிற பரவசம் எனக்குக் கிட்டியதும் ஒரு இனிய கனவு.

சாந்தன், ஷங்கரநாராயணன், நான் – மூவரும் இணைந்து, 1997, 98, 99-ல் நடத்திய, ஜோதிவிநாயகம் நினைவு சிறுகதைப் பரிசுத் திட்ட முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து சாந்தன் வர முடிந்ததும், சாந்தனுடைய ‘யாழ் இனிது’ சிறுகதைத் தொகுதியை நானே பதிப்பித்து, அவர் முன்னிலையிலேயே வெளியிட முடிந்ததும் இன்னுமொரு கனவு.

நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னால் சாந்தனோடு திருவனந்தபுரம் போனதும், இந்தத் தொகுதியிலிடம் பெற்றிருக்கிற, சாந்தனின் சோவியத் நெடுங்கதையான ‘உறவுகள் ஆயிரம்’-மின் கேரளத்துக் கதாநாயகி, மலையாளக் கூந்தல் புரள திருவனந்தபுரத்தில் தரிசனந் தந்தது மேலுமொரு கனவாகப் பார்த்தது. கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். உணர்ச்சியிருந்தது. இல்லை, இது கனவில்லை. நிஜம். ஆழமான சிநேகத்துக்கும், மென்மையான காதலுக்குமிடையே ஊசலாடுகிற உறவை, ஒரு இனிமையான குறுகுறுப்பை இலக்கியத்தரம் வாய்ந்த குறுநாவலாக்கிய சாந்தனின் காவியநாயகி கண்களுக்கெதிரே. எனக்கருகில் சாந்தன், மலரும் நினைவுகள் கண்களில் மின்ன. மின்னாமலென்ன செய்யும்? ‘உறவுகள் ஆயிரம்’-மின் கதாநாயகனே சாந்தனே தானில்லையா!

அசோகமித்திரன் சரியாய் அவதானித்ததைப் போல, சாந்தனின் கதைகளில் சாந்தன்தான் கதாநாயகன். சாந்தனே கிருஷ்ணன். சாந்தனே ரமணன்.

சாந்தனுடைய படைப்புகளெல்லாம் சொந்த அனுபவங்களை அடித்தளமாய்க் கொண்ட யதார்த்தமான முயற்சிகளாகையால், சாந்தனின் கதைகளுக்குத் தலைமையேற்க எந்தவொரு கற்பனைப் பாத்திரத்துக்கும் தகுதியில்லை.

இனப்பிரச்னை ஒரு சிந்துபாத் கதையாய்த் தொடர்ந்துகொண்டே யிருக்கிற இலங்கையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் உடைமைகளை யிழந்தார்கள், உறவுகளை யிழந்தார்கள், அகதிகளாக ஆனார்கள், புலம்பெயர்ந்து போனார்கள். ஆனால், இனஇறுக்கத்தையுங் கூட இலக்கியமாக்குகிற திறமை, கண்ணீரையும் கதையாக்குகிற கலை, வெகு சிலருக்குக் கைவந்தது. அவர்களில் தலையாயவர் சாந்தன்.

இந்தத் தொகுதியிலிருக்கிற நான்கு கதைகளிலுமே இனப்பிரச்னை இழையோடுகிறது.

கதைநிகழ்வைச் சொல்லிக்கொண்டே போகிறபோதே, ஆங்காங்கே கடந்தகால நிகழ்ச்சிகளை இயல்பாய் இடைச்செருகல் செய்து சாந்தன் nostalgia-வைத் து¡ண்டிக்கொண்டே போவது, வலு சுகமான ஒரு வாசிப்பை வழங்குகிறது. ஆனால், nostalgia என்பது ஒரு சங்கடமான சங்கதி. குறிப்பாக, எழுதுகிறவனுக்கு.

Nostalgia என்பதற்கு இணையான தமிழ்ப்பதம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ‘மலரும் நினைவுகள்’ என்பது nostalgiaவை நெருங்கி வந்தாலும், ஆங்கிலத்திலிருக்கிற சுகமான சோகம், அதே பரிமாணத்தில், தமிழில் தாக்கம் ஏற்படுத்துவதென்பது சந்தேகந்தான்.

ஆனாலும் பரவாயில்லை, நாம் ‘மலரும் நினைவுகள்’ என்றே சொல்வோம்.

‘மலரும் நினைவுகள் கண்களில் மின்ன’ அந்த 1998 ஒகஸ்ற் ராவில், திருவனந்தபுரத்தில், தகழி ஷிவஷங்கரன்பிள்ளையை அட்சரசுத்தமாய் உச்சரிக்கிற, தன்னுடையவே தன்னுடைய மலையாளத்துக் கதாநாயகியைப் பார்த்து சாந்தன் பரவசித்திருக்க, நான் க்ளிக்கின புகைப்படங்கள் பிறகு என்னுடையவே என்னுடைய கவனப் பிசகால் வெளிச்சம் பட்டு வெளிறிப்போன அசம்பாவிதத்தைக் குற்றவுணர்ச்சியோடு நான் சொன்னபோது சாந்தனுடைய மனசு எவ்வளவு வேதனையும் ஏமாற்றமும் அடைந்திருக்குமென்பது தெரியும். ஆனாலும் என்மனசைக் குழப்பிவிடக் கூடாது என்கிற முனைப்பில், ‘அதுக்கென்ன பரவாயில்லை’ என்று வெகு தாராளமான ரெண்டே வார்த்தைகளில் விஷயத்தை முடித்துவிட்ட சாந்தன் என்கிற மனிதனின் மேன்மையை மேலுமொருமுறை அன்றைக்கு உணரமுடிந்தது.

நல்ல மனிதனாயிருப்பதுவே நல்ல எழுத்தாளனாயிருப்பதற்கு அடிப்படை, என்று ‘கிருஷ்ணன் து¡து’ முன்னுரையில் கனகாலத்துக்கு முன்பு நான் சாந்தனைக் குறித்து எழுதினது திரும்பவும் நிர்ணயமாகியிருக்கிறது.

சரி, திரும்பவும் இப்போது இலங்கை வானொலியைத் தொட்டுப் பார்ப்போம்.

பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருந்த பருவத்தில், நாலரைமணி இசைக்களஞ்சியத்துக்கு ஓட்டமாய் ஒடிவந்து ரேடியோப் போட்டு, மயில்வாகனனின் மந்திரக்குரலில் புளகாங்கிதமடைந்த அனுபவமுண்டு.

அதேபோலப் புளாங்கிதமும் மனச்சிலிர்ப்பும், பிற்காலத்தில் சாந்தனுடைய புத்தகங்களைப் புரட்டுகிறபோது ஏற்பட்டிருக்கிறது.

இந்த அனுபவம் ‘விளிம்பில் உலாவுதல்’ என்கிற சாந்தனின் இந்தக் குறுநாவல் தொகுதியை வாசிக்கிற உங்களுக்குக் கிட்டுமென்கிற நிச்சயம் எனக்கிருக்கிறது.

ஆமாம்.

இலங்கை வானொலிக்கு மயில்வாகனன் எப்படியோ, அப்படித்தான் சாந்தன், இலங்கைத் தமிழிலக்கியத்துக்கு.

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி

>>>
சாந்தனின் குறுநாவல்கள் தொகுதி – ‘விளிம்பில் உலாவுதல்’ நு¡ல் முன்னுரையாக அளித்தது.
ghoriaahk@yahoo.com

Series Navigation

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி