கண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

க.நாகராசன்


“ஒரு புத்தகத்துக்கும் ஒரு வாசகனுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. வாக்கியங்களின் வழியாக ஒரு படைப்பு முதலில் ஏதோ ஒரு சித்திரத்தைத்தான் வாசகனுக்கு முன்னிலைப்படுத்துகிறது. அச்சித்திரத்தின் வசீகரம் முதலில் அவனை வியப்புக்குள் ஆழ்த்துகிறது. பிறகு, அந்த வசீகரம் எதனால் ஏற்படுகிறது என அலசத் தொடங்குகிறது வாசகனுடைய மனம். தொடர்ந்து அழகைப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் அடுக்கடுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. ஏதோ ஒரு விதத்தில் தன் வாழ்க்கையையே புரிந்துகொள்வதற்கு நிகரானதாக அம்முயற்சிகள் அனைத்தும் இருப்பதாகத் தோன்றுகிறது. இறுதியில் தன்னைத்தானே புரிந்துகொள்வதற்கும் அதுவே தூண்டுதலாக அமைகிறது.”

மேற்கண்ட பத்தி பாவண்ணனின் “மலரும் மணமும் தேடி” கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு கட்டுரையின் தொடக்கமாக வருகிறது. இத்தொகுப்பின் சாரத்தையே மேற்கண்ட வரிகள் வழங்குவதாகக் கொள்ளலாம். வாசிப்பின் வெளிச்சத்திலிருந்து வாழ்க்கைக்கான புரிதல்களையும் வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து வாசிப்பின் பல தளங்களுக்கு நகர்ந்து புதிய பொருளை கண்டடைவதையும் பாவண்ணன் தொடர்ச்சியாக நிகழ்த்திவருகிறார். ‘எனக்குப் பிடித்த கதைகள்’, ‘ஆழத்தை அறியும் பயணம்’ ஆகிய அவருடைய முந்தைய நூல்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். அந்த நு¡ல்களின் தொடர்ச்சியாகவே ‘மலரும் மணமும் தேடி’ என்கிற அவருடைய புதிய கட்டுரைத்தொகுப்பைக் கருதலாம்.

மொத்தம் 32 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த விமர்சன நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் எட்டுக் கட்டுரைகளும் உலகப்புகழ் பெற்ற நாவல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’, ‘அன்னா கரினினா’ மற்றும் ‘போரும் அமைதியும்’, சார்லஸ் டிக்கன்ஸின் ‘ஆலிவர் டுவிஸ்ட்’ மற்றும் ‘மாபெரும் கனவுகள்’, தாஸ்தயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’, அனடோல் பிரான்ஸின் ‘தாசியும் தபசியும்’, குஸ்தாவ் பிளாபவரின் ‘மேடம் பவாரி’ என உலக வாசகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்ற காவியங்கள் பாவண்ணனுடைய வலிமையான எழுத்துக்களோடும் பார்வைகளோடும் படைக்கப்பட்டுள்ளன.

நு¡லின் இரண்டாம் பகுதியில் கவிதைத்தொகுப்புகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள் கட்டுரைத் தொகுதிகள் எனப் பல்வேறுபட்ட தளங்களுக்கான 24 படைப்புகள் பற்றிய விமர்சனக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திரதாகம்’ நாவல் தொடங்கிய உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவல் வரை. பிரெஞ்சு படைப்பாளியான மாஸோவின் ‘காதல்’ தொடங்கி ஜப்பான் படைப்பாளியான யசுநாரி கவாபட்டாவின் ‘தூங்கும் அழகிகள் இல்லம்’ வரை. எஸ்.வி.ராஜதுரையின் ‘சொல்லில் நனையும் காலம்’ தொடங்கி நாஞ்சில் நாடனுடைய ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ கட்டுரை வரை பழைமைக்கும் புதுமைக்கும் வெவ்வேறு தளங்களுக்கும் வெவ்வேறு தத்துவங்களுக்கும் இடம் கொடுத்திருப்பது நூலின் சிறப்பாகும்.

கட்டுரைகள் மிக நேர்த்தியாக அமைந்திருப்பதை தொகுப்பின் பலமாகச் சொல்லவேண்டும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு சரியாக தன் இலக்கை அடைவதைப்போல பெரும்பாலான கட்டுரைகள் வடிவமைப்போடும் கூர்மையோடும் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக மாலதி மைத்ரியின் ‘நீரின்றி அமையாது உலகு’ கவிதைத்தொகுப்புக்கு பாவண்ணன் எழுதியுள்ள அறிமுகக்கட்டுரையை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இயற்கையோடு இணையும் விழைவு என்னும் கட்டுரைத் தலைப்பே தொகுப்பின் சாரத்தைக் குறிப்பாக உணர்த்துகிறது. பஞ்ச பூதங்களின் கச்சிதக் கலவையே மனித உடல் என்று தொடங்கும் கட்டுரை இயற்கையைப் பாராட்டி இளங்கோவடிகள் எழுதிய திங்களைப் போற்றுதும். ஞாபயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் ஆகிய வாழ்த்துப்பாடல்களை நினைவு கூர்கிறது. மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும் என்கிற பசுவையாவின் கவிதை பொருத்தமாக நினைவுகூரப்படுகிறது. இயற்கைநாட்டம் இயற்கையைக் கண்டு வியத்தலாக உருப்பெற்று அதுவே இயற்கையைக் கண்டு வணங்குவதாக மாறுவதை குலசேகர ஆழ்வாரின் வரிகளோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது. ‘கோனேரி வாழும் குருகாயப் பிறப்பேனே, செண்பகமாய் வாழும் திருவுடையேன் ஆவேனே’ என்னும் நூற்றாண்டுகளைத் தாண்டி ஒலிக்கிற குரல்களின் நீட்சியாகவே இயற்கை வயப்பட்ட மாலதி மைத்ரியின் கவிதைகளும் திகழ்கின்றன என்கிற எடுப்பான அறிமுகத்தோடு, கவிதைத் தொகுப்பைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை வாசகனுக்கு கட்டுரை ஏற்படுத்தித் தருகிறது.
கடல், வீடு,ஊஞ்சல், வானம் என மாலதி மைத்ரி குறிப்பிடும் இயற்கை விழைவுக்கான படிமங்கள் மிக அழகாக விளக்கப்படுகின்றன. ‘நீரோடு போதல்’ கவிதையில் குளிக்கும் பெண்ணொருத்தியின் சித்திரம் ஏற்படுத்தும் சிந்தனையோடு கட்டுரை முடிவடைகிறது. பிரம்மராஜனுடைய சிறப்பு வாய்ந்த கட்டுரையும் பாராட்டப்படுகிறது. கோகுல கண்ணனுடைய ‘முகங்களை விற்றவன்’ சிறுகதைத் தொகுதிக்கு எழுதப்பட்டிருக்கும் ‘எதிர்பார்ப்பின் ஆவலும் ஏமாற்றத்தின் வலியும்’ என்னும் கட்டுரையும் வியாசராய பல்லாளரின் ‘போராட்டம்’ நாவலுக்கு எழுதப்பட்டிருக்கும் ‘வன்முறையின் நிறம்’ என்னும் கட்டுரையும் எடுப்பான முகப்போடும் வடிவமைப்போடும் அமைந்துள்ளன என்று கூறலாம்.

ஒரே வடிவத்தைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு முறையில் கட்டுரைகளை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகப் படுகிறது. எடுத்துக்காட்டாக மூன்றில் இரண்டுபங்கு அளவுக்க பீடிகையே இடம்பெற்றுள்ள கன்னட மொகள்ளி கணேஷின் ‘தழும்பு’ சிறுகதைத் தொகுப்புக்கான ‘புதிய வடிவத்தைத் தேடி’ என்னும் கட்டுரையையும் எவ்விதமான முன்னுரைக்குறிப்பும் இல்லாமல் நேரிடையாக விமர்சனத்துக்கு இறங்கும் ‘தூங்கும் அழகிகள் இல்லம்’ நாவலுக்காக எழதிய ‘சிற்றின்பமும் பேரின்பமும்’ கட்டுரையையும் குறிப்பிடவேண்டும். படைப்புக்கேற்ற வெவ்வேறு வடிவங்களைக் கையாள்வதின் மூலம் படிப்பவர்களிடையே நேரச் சாத்தியமான சலிப்பு நீக்கப்படுகிறது.

பாவண்ணனுடைய கூர்மையான அவதானிப்பும் ஆழ்ந்த ரசனையும் தொகுதி முழுதும் வெளிப்படுகிறது. ‘நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்’ என்னும் மலையாளக் கவிதைத்தொகுப்பைச் சொல்லலாம். இவற்றின் மொழிபெயர்ப்பாசிரியர் ஜெயமோகன். பாவண்ணன் கண்கள் இத்தொகுப்பில் இடம்பெறும் கல்பற்றா நாராயணனுடைய ‘உறக்கம்’ கவிதையைத் தேர்ந்தெடுக்கிறது. எப்படி எல்லாம் ஒரு கவிதையை விரிவாக்க இயலும், புரிந்துகொள்ள இயலும் என்னும் கலையை வாசகன் அறியமுடிகிறது. ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம்’ நாவலில் தென்படும் தந்தைமையைப் போற்றுவதையும் எழுத்தாளுமையைவிட சரியான (புதிய ) கதைக்களனைத் தேர்ந்தெடுத்ததே அந்த நாவலின் வெற்றிக்கான காரணம் என்று கண்டுரைப்பதையும் பாவண்ணனின் கூர்மையான பார்வைக்கு சான்றுகள் என்று கூறலாம். ·பெர்னான்டோ ஸொராண்டினாவின் ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை’ சிறுகதைக்கான விமர்சனத்தையும் ‘மெளனப்பனி ரகசியப்பனி’ கதையின் பனிபற்றிய படிமத்தை விளக்குவதிலும் பாவண்ணன் புதிய பார்வையைத் தருகிறார். இக்கட்டுரையில் தாஸ்தாவெய்ஸ்கியின் வெண்ணற இரவுகளின் காதலையும் தகழியின் செம்மீன் பரீதுகுட்டி யின் காதலையும் ஒப்பிட்டு இருள் மற்றும் அலை படிமங்களை விளக்கும் இடம் பாராட்டுக்குரிவை.

எல்லாக் கடுரைளிலும் விமர்சனங்கள் மிக அழகாக வைக்கப்படுகின்றன. படைப்புகளின் குறைகள் constructive criticism ஆக தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ நாவலுக்கான ‘சார்புகளும் சரிவுகளும்’ கட்டுரையைச் சொல்லலாம். மாபெரும் காவியமாக விஸ்வரூபம் எடுக்கப்படவேண்டிய நாவல் படைப்பாளரின் ஒற்றைப்பார்வையின்மூலம் மிகச் சாதாரணமான நாவலாக வந்துள்ள அவலம் வேதனையோடு முன்வைக்கப்படுகிறது. விக்ரமாதித்யனின் ‘சுடலைமாடன்வரை’ கவிதைத் தொகுதியைப்பற்றிய ‘நிறமற்றவன் குரல்’ கட்டுரையில் பெரும்பாலும் கவிதைகள் இலக்கை அடையாமலும் கூறியதையே கூறுவதையும் வெறும் சலிப்புரைகளாக முடிவதையும் மென்மையோடு குறிப்பிடப்படுகிறது. ‘வெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்’ என்கிற தலைப்பில் இடம்பெறும் பெருமாள் முருகனுடைய சிறுகதைத்தொகுப்பான ‘நீர்விளையாட்டு’ பற்றிய கட்டுரை மிகச்சிறப்பாகச் சொல்லப்பட்டு இறுதியில் ஒரே சொல்முறையை மீண்டும்மீண்டும் பயன்படுத்துவதால் வாசிப்பில் நேரும் சலிப்பையும் பதிவுசெய்கிறது.

ஒரு சிற்பத்தைச் செதுக்குவது வேண்டிய பாகங்களை உருவாக்கும் கலை அல்ல, மாறாக, வேண்டாத பாகங்களை நீக்கும் கலை எனச் சொல்லப்படுவது நினைவுக்கு வருகிறது. ஒரு சிலையில் எல்லாப் பாகங்களையும் செதுக்கி முடித்த பின்னரே கண்களைத் திறப்பார்கள். ஏனென்றால் அது மிகவும் கவனமாக நிகழ்த்தப்படவேண்டும். சிறிய தவறுகூட நிகழ்ந்துவிடக்கூடாது. கண்களில் வெளிப்படும் உணர்வும் சாயலும் சிலையின் நோக்கத்தை உணர்த்துவதாக இருக்கவேண்டும். கட்டுரைகளுக்குத் தலைப்பிடும் பாவண்ணனின் கலை இதையெல்லாம் சிந்திக்கத் தூண்டுகிறது. நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ‘போரும் அமைதியும்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’ மற்றும் ஏனைய நாவல்களின் விமர்சனக் கட்டுரைகளுக்குப் பொருத்தமான தலைப்புகளைச் சூட்டுவது சிலையின் கண்களைத் திறப்பதற்குச் சமமாகும்.

சென்ற தலைமுறையைச் சேர்ந்த ‘முல்லை’ தொகுப்பின் விமர்சனத்தில் வெளிப்படும் நேர்த்தியும் பத்மநாப ஐயரின் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கொனஸ்ரன்னாவின் ‘பற்றி எரியும் பனைமரம்’ ஓவியத்துக்கான விமர்சனத்தில் வெளிப்படும் ரசனை உணர்ச்சியும் அவதானிப்பும் பாவண்ணனின் பரந்த கலையாளுமையைக் காட்டுகிறது. பொதுவாக விமர்சனக் கட்டுரைத் தொகுப்புகளில் காணப்படும் சுயதம்பட்டமும் பந்தாவும் மொழிபெயர்ப்பு நாவலை விமர்சனம் செய்யும்போது தன் தலைக்கு தானே போட்டுக்கொள்ளும் ஒளிவட்டமும் இந்தத் தொகுப்பில் அறவே இல்லாதது ஆறுதலைத் தருகிறது. எளிமையான மொழி தொகுப்பின் கூடுதல் பலம்.

தொகுப்பில் சிற்சில இடங்களில் காணப்படும் எழுத்துப் பிழைகள் வருத்தத்தை அளிக்கின்றன. உள்ளடக்கத்தில் எலீ லீசலாக உள்ளவர் கட்டுரையில் எலீ வீசலாக உள்ளார். ·பெர்னான்டோ ஸொராண்டினோவின் ‘ஹார்ன் இசைப்பவர்’ கதையில் மனைவி பிரிந்ததால் வேதனை என்று கட்டுரையாளரால் குறிப்பிடப்படுகிறது. ஆனால் கதையில் மனைவி பாத்திரம் இடம்பெறுகிறது. தொடர்ச்சியான ஹார்ன் இசையால் துன்புறுகிறது. பிரிந்தவள் காவலியாகவோ அல்லது அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் நாயகனை ஈர்த்தவளாகவோ இருக்கக்கூடிய சாத்தியங்கள் கதையில் உள்ளன.

‘மலரும் மணமும் தேடி’ என்கிற தலைப்பு படிம அழகோடு விளங்குகிறது. மலர் படைப்புக்குப் படிமமாகிறது. அந்தப் படைப்பின் சாரத்தை மலரின் மணமாகக் கொள்ளமுடிகிறது. வெவ்வேறு வகை, வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவை. வெவ்வேறு குணங்களைக் கொண்டவை எனப் பூத்துக் குலுங்கும் மலர்களில் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக தேனெடுக்கும் பாவண்ணன் காமம் செப்பாது கண்டது மொழிந்திருக்கிறார். கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கும்போது படைப்புகளைப்பற்றியும் படைப்பாளர்களைப்பற்றியும் விரியும் நமது பிரமிப்பு அவற்றைப் படித்துமுடிக்கும் தருவாயில் வாழ்க்கையைப்பற்றிய பிரமிப்பாக மடைமாற்றம் அடைவதை இத்தொகுப்பின் வெற்றியாகச் சொல்லவேண்டும். அஞ்சிறைத் தும்பியின் பயணத்தில் மறைமுகமாக மகர்ந்தச் சேர்க்கை நிகழ்வதுபோல கட்டுரைகளின் ஊடேயான பயணம் வாசகனுக்கும் மாற்றத்தைத் தருகிறது. வாசிப்பிலிருந்து வாழ்க்கைக்கான புரிதலையும் வாழ்க்கையிலிருந்து வாசிப்பதற்கான ரசனையையும் கண்டடையும் பாதைகள் படிப்பவருக்கு புலப்படுகின்றன. அந்தப் பாதையில் தொடர் ச்சியாக மேற்கொள்ளும் பயணம் என்றாவது ஒரு நாள் வாசகனுடைய கண்களைத் திறக்கக்கூடும்.

( மலரும் மணமும் தேடி – கட்டுரைத் தொகுப்பு- பாவண்ணன். சந்தியா பதிப்பகம், நியுடெக் வைபவ், 57 ஏ, 53வது தெரு, அசோக் நகர், சென்னை- 83. விலை. ரூ80)

gnagarajanpy2006@yahoo.co.in

Series Navigation

க.நாகராசன்

க.நாகராசன்