கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

வெ. சபாநாயகம்


‘ஒரு நீண்ட பயணம்’ என்கிற கட்டுரையில் தில்லிக்கும் தமிழ் நாட்டிற்குமான இந்தியன் ரயில்வே பயணம் கடந்த 50 ஆண்டுகளில் கண்ட மாற்றங்களை, வளர்ச்சிகளை – முன் பதிவு செய்வதில் அந்தக்காலத்து அவஸ்தை, அப்போதைய ஜனதா எக்ஸ்பிரஸ், கிராண்டிரங்க் எக்ஸ்பிரஸ்களின், இன்றைய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போலன்றி எப்போது போய்ச்சேரும் என்று ரயில்வே அமைச்சரே சொல்ல முடியாத ஆமை வேகம், புகை எஞ்சின் என்பதால் வண்டியைவிட்டு இறங்கும் போது எல்லோருக்கும் போடப்படும் கரிப்பொடி மேக்கப், பல ரயில்வே அமைச்சர்கள் இந்திய ரயில்வேயை தம் சொந்த ஜமீனாகவே கருதி ஆட்சி செய்தது(ஜாபர்ஷெரீப் இரவு இரண்டு மணிக்குப்பெயர் தெரியாத ஸ்டேஷனில் ஐஸ்கிரீம் வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து ரயிலை இரண்டு மணி நேரம் நிறுத்தி வைத்தது, டிக்கட் வாங்காமல் பயணம் செய்து பிடிபட்டபோது ‘எங்கள் மருமகன் ரயில்வே மந்திரியாக இருக்கும்பொது யார் எங்களிடம் டிக்கட் கேட்பது?’என்று லாலுபிரசாத்தின் மாமனார் மாமியார் அடம் பிடித்தது போல), முதன் முதலில்
ரயில்வேயில் Aluminiyam foil உபயோகத்துக்கு வந்ததின் பின்னணி ரகஸ்யம் – என்று ஏகப்பட்ட ரசமான கவல்களைச்சொல்லியுள்ளீர்கள்.

‘பங்களாதேஷ் சில நினைவுகள்’ கட்டுரையில் இந்தியாவிற்குள் பங்களாதேஷ் அகதிகள்வந்ததின் ரகசியம் பற்றிச் சொல்லி இருப்பது – நமது எல்லைப் பாதுகாப்பு ஜவான்களுக்கு கையூட்டு தந்து, நாடகம் ஆடும் அவலம் – நம்மைத் தலைகுனிய வைக்கும்
செய்தி. மாதம் இருமுறை உங்கள் நிறுவனத்தின் பிரதிநிதியாக நீங்கள் பங்களாதேஷ் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை – வங்கஅதிபர் முஜீபூர்ரஹ்மானைச் சந்தித்தது, அவரது மனித நேயம், அவரது படுகொலை தந்த அதிர்ச்சி, கொல்கத்த-டாக்கா பயணிகள் ரயில் விட்டதில் நமது கசப்பான அனுபவம் என நிறைய புதிய தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள். நம்மில் பலருக்கும் தெரியாத தகவலான பங்களாதேஷில் தமிழ் பேசும் குடும்பங்கள் இருப்பது பற்றி எழுதும்போது, பல ரசமான செய்திகள் சொல்லப் பட்டுள்ளன. நாற்பதுகளில் நாகப்பட்டினம், கீழக்கரை, கிருஷ்ணாபுரம், ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து தம் குலத்தொழிலான வாசனைத்திரவியம் வாங்கி விற்க அப்போதைய கிழக்கு வங்காளத்துக்குப் போன முஸ்லிம்கள் அங்கேயே தங்கிப்போனதும், அவர்களுக்குத் தமிழ் நாட்டைப்பற்றியோ,அங்கு தற்போது நடப்பவை பற்றியோ எதுவுமே தெரிந்திருக்கவில்லலை
என்பதும், 1974ல் உங்களிடம் ஒரு முதியவர் ‘எம்.கே.தியாகராஜ பாகவதர், ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், எல்லாம் இன்னமும் நடித்துக்கொண்டிருகிறார்களா?’ என்று கேட்டதும் அவர்களுக்காக அங்கே போகும் போதெல்லாம் பழைய ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற தமிழ்ப்பத்திரிகைகளுடன், தமிழ் கற்க உதவும் பாலபாட நூல்களை தில்லி தமிழ்ப்பள்ளியிலிருந்து வாங்கிப்போய்க் கொடுத்ததும் நெகிழ்ச்சியான செய்திகள். அதோடு வெளியுறவுச்செயலர் திரு.கே.பி.எஸ்.மேனனனுடன் உங்களுக்கு இருந்த பழக்கத்தில் அந்த தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியபோது அதில் உள்ள நடைமுறைச் சிக்கலைச்
சொன்னதால் உதவமுடியாமல் போன தகவலும் மனதை உருக்குபவை.

– அடுத்த கடிதத்தில் முடிவுறும்.

Series Navigation

வெ. சபாநாயகம்

வெ. சபாநாயகம்