கடித இலக்கியம் – 15

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

வே. சபாநாயகம்



கடிதம் – 15

நாகராஜம்பட்டி
4-2-77

அன்புமிக்க சபா,

வணக்கம்.

வழக்கமான நினைப்பு உண்டு. திடீரென்று கடிதம் மட்டும் இப்போது நினைத்துக் கொண்டு எழுதுகிறேன்.

எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருங்கள். வாழ்வதற்குப் பல சிரமங்கள் செலுத்தத்தான் வேண்டும். எதனாலும் பாதிக்கப்படாத ஒரு துரிய தூய ஆனந்த நிலையில் மனசை வைத்துக் கொண்டு விட்டால், அந்தப் பீடத்தில் போய் உட்கார்கிற ஒரே ஒரு சிறிய கணத்திலேனு அந்தச் சிரமங்களையெல்லாம் நாம் எளிதாகவே தாங்கிச் செல்லக் கூடும் என்பது புலப்படும். இது அப்படியே என் சொந்த அனுபவத்தில் நான் எடுத்துச் சொல்கிற விஷயம். ஒரு சத்தியத்தை அறிமுகப் படுத்துகிற சர்வ மங்கள அதிகாரத்தோடு இதை நான் சொல்லுகிறேன்.

முழுமனதோடு எந்தக் காரியமும் செய்யுங்கள். உங்கள் சிரமங்கள் தீர்ந்து போவதற்கான நெளிவு சுளிவுகளை நீங்கள் காண்பீர்கள்.

துறக்கத் தயாராகி விடுங்கள். விரக்தியோடு அல்ல. ஒரு காதலனின் விருப்பத்தோடு. உங்கள் சொந்தத் தொல்லை என்று இவ்வுலகத்தில் இன்னும் ஒன்று உருவாகவில்லை என்கிற பிரமிக்கத்தக்க உண்மையை மிக எளிதாக உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எதுவும் வேண்டாம். உங்கள் உறவுகள் எல்லா நலன்களும் பெற்று இனிதே சுகித்திருக்கட்டும். அதைக் கண்டு நிற்கிற உங்கள் ஆனந்தங்கள் கணக்கிட முடியாதவை என இருக்கட்டும். அங்ஙனம் துறந்து விடுங்கள்.

நான் சொல்லுகிற நிலை எதுவென்று நான் இன்னும் எப்படியெல்லாம் சொல்லட்டும்? வேதாந்தத் தமிழில் இதற்கு வெகு காலமாகவே சில குறியீட்டுச் சொற்கள் உண்டு. அவற்றை உபயோகிப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அவ்வாறுள்ளதே ‘துறவு’ என்னும் சொல். நான் உங்களை ஒரு நிஜக் காவியோ மானஸீகக் காவியோ கட்டிக் கொண்டு சந்நியாசியாகிவிடச் சொல்லவில்லை. இந்தத் தெளிவு கலந்த பார்வையோடு நான் மேலே சொன்னவற்றில் ஏதேனும் அர்த்தம் தேடுங்கள்.

என்னுடைய வாழ்க்கை மட்டும் எப்படி இருக்கிறது? அதுவும் இவ்வாறாக ஓடுவதாலேயே இந்தச் சமுத்திரத்தில் நான் கலக்க முடிகிறது.

நமது ஆறுகள் ஓடித் தாம் நாடுகிற கடல்களைச் சேரும். நம்பி மகிழுங்கள்.

இந்தக் கடிதத்தில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் எழுதலாம். ஆனால் விண்டுரைக்க முடியாத ஒரு சத்தியத்தின் நாடி இதில் விளங்கினால் போதுமானது.

சபரிமலைப் பயணம் சென்று வந்தோம். இந்தமுறை முழுநிலவு கண்டோம். போதும் என்கிற மாதிரி ஆனந்தத்தின் ருசி எல்லையற்றுத்தான் இருக்குமோ? ஆஹா, பின் ஒருக்கால் நினைத்துப் பார்த்துக் கொண்டால் அற்புதங்களாக நிற்கிற நிகழ்ச்சிகள்தாம் எத்தனை?

தந்தையாரைப் பற்றி எழுதுங்கள். நான் வந்து அவரைப் பார்க்கவா? சூழ்நிலையில் தங்களுக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது? நமக்கு மத்தியில் சாங்கியங்கள் இல்லை. நம் இருவருக்கும் சிரமமற்றதோர் – இருப்பினும், அந்தச் சிரமங்களைக் கடந்ததோர் துய்ய மகிழ்ச்சி நிலை எதன்பொருட்டும் வலிந்திழுக்கப் படலாகாது. தந்தையாரிடம் நிறைய ஆன்மீக விஷயங்களைப் பேசுங்கள். அது- சம்பந்தப்பட்ட அனைவரையும் அமைதிப்படுத்தி ஒரு குழந்தையைப்போல் வைத்துக் கொள்ளும். மனித குலம் தனது குழந்தைகளை வளர்த்து வளர்த்து விடுவதையன்றி வாழ்க்கை என்பது வேறு என்ன? சிறப்பாக வளர்த்தவர் தாமும் என்றும் செழிப்பாக வாழ்வார்.

தங்கள் – பி.ச.குப்புசாமி
4-2-77
— 0 —–

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்