ஞமலி போல் வாழேல் !

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

புதுவை ஞானம்


பாரதியார் எந்த அர்த்தத்தில் நாய் போல் வாழாதே என்று சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை.சாபத்தால்
பன்றியான ஒரு முனிவர் அந்த மிருக வாழ்வில் சுகம் கண்டு போய், பிற்காலத்தில் சாப விமோசனம் பெற மறுத்து
விட்ட கதையை நிஜ நாடக இயக்கம்- மு.ராம சாமி ‘துக்கிர அவலம்’ என்ற பேரில் நாடகமாக நடித்தது நினைவுக்கு வருகிறது.ஆனாலும் பாரதியார் ‘நாய்’ பற்றி எழுதியது எதுவும் நினைவில் இல்லை.உண்மையில் இது
வருத்தத்துக்குரிய விஷயம் தான். ஆனாலும், ஒரு திருடன் போட்ட ரொட்டியைத் தின்று விட்டு வளர்த்தவனுக்குத்
துரோகம் செய்து திருடனைக் காட்டிக் கொடுக்க மறந்து போன ஒரு நாய் பற்றி திரு. கணேசலிங்கன் ஒரு கதை
எழுதியதாக அரை குறை ஞாபகம் வருகிறது.

.
பழைய நாட்குறிப்பைப் புரட்டியதில் :

“இணங்கி ஒரு கால் முடமாகி
கண்ணின்றி செவி இழந்து
வணங்கி நெடுவால் அறுபட்டு
மன்னும் முதுகில் வயிறொட்டி
அணங்கு நலிய மூப்பெய்தி
அகல் வாயோடு கழுத்தேந்தி
சுணங்கல் முடவன் பின் சென்றால்
காமன் யாரைத் துயர் செய்தான் ? ! ”
(சிந்தாமணி )
என்பதாக ஒரு பாடல் குறிப்பு கிடைத்தது.இந்தப் பாடலை எனக்குச் சொன்னவர் குடிகாட்டு வைத்தியர் எனப்படும்
ஒரு துறவி .வழக்கம் போல் எனது வாலிபத் திமிரில் அலட்சியப்படுத்திவிட்டேன்.பள்ளியில் படித்தவர் இல்லை அவர்.ஆனால் வாயைத்
திறந்தால் மடையெனப் பெருகி வரும் சித்தர் பாடல்கள்.இந்தப் பாடலின் பொருள் :
ஒரு ஊரில் ஒரு கிழட்டு நாய் இருந்தது.அதன் ஒரு கால் நொண்டியாகி விட்டது.ஒரு கண் குருடாகி விட்டது.காது
காயம் பட்டுத் தொங்கியது.வளைந்து நீண்ட வால் அறு பட்டுத் தொங்கியது.வயிறு இளைத்து முதுகோடு ஒட்டி
விட்டது.அந்தக் கிழ நாய் அகன்ற வாய் கழுத்தில் தொங்க ஒரு பெண் நாய் பின்னே புணர்ச்சி விழைந்து ஓடியது.
நிலைமை இப்படி இருக்க காமன் யாருக்குத் துயர் கொடுத்தான் என்பது ?ஒரு வேளை பாரதியாருக்கு, மனிதர்கள்
அந்தக் கிழட்டு நாய் போல் காமவெறி பிடித்து அலையக்கூடாது என்று தோன்றி, ‘ஞமலி போல் வாழேல்’ எனச்
சொல்லி இருக்கலாம்!

பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்து பின்னர் பரீட்சை வைக்கிறார்கள், ஆனால் வாழ்க்கையில் பரிட்சை வைத்து வைத்து பாடம் சொல்லித்தரப்படுகிறது என்று எங்கோ படித்ததாக ஞாபகம். அது போல் வாழ்க்கை சோதனைகளைக்கொடுத்து கொடுத்து அதன் மூலம்பாடம் சொல்லித்தருகிறது.
( புதுவை ஞானம் )
05:18 AM 7/19/06

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்