வாசகரும் எழுத்தாளரும்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

க.நா. சுப்ரமணியம்


இது ஜனநாயக யுகம் – அதனால் வாசகனுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையில் அப்படியில்லை. உலகில் முதல் எழுத்தாளன் தோன்றிய முதலே வாசகர்களின் முக்கியத்துவமும் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இன்று பழைய காலத்திய முக்கிய இலக்கியாசிரியர்கள் என்று கருதப்படுபவர்களில் பெரும்பாலோர் வாசகர்களை மறந்து விட்டு, தன் பாட்டில், எழுதியவர்கள்தான். வாலி வதத்தைப் பற்றியோ, விபீஷண சரணாகதி பற்றியோ இன்று வரை ஏற்பட்டுள்ள வாசக விவாதங்களை வால்மீகி என்கிற கவிமட்டும் கேட்டு அவற்றைக் கொண்டு தன் காரியத்தை அமைக்க முயன்றிருப்பாரேயானால், அவர் காவியம் முற்றுப்பெறாமலேதான் இருந்திருக்கும் என்று சொல்லலாம். ஆனால் வால்மீகி மகரிஷி என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. இன்று எழுதுகிற ஒவ்வொருவருமே மகரிஷிதான்; சந்தேகமில்லை.

இலக்கியாசிரியன் தன் வாசகனை எந்த அளவுக்கு நினைவில் கொண்டு தன் படைப்புக்களைச் செய்கிறான் என்பது விவாதத்துக்குரிய விஷயமாகும். நினைப்பதேயில்லை என்பதிலிருந்து, ‘ஏதோ கொஞ்சம் லேசாக நினைவிருக்கும்’ என்பதுவரை சொல்லலாம். ஆனால் இலக்கியச் சரித்திரத்தில் காணக்கிடக்கிற ஒரு உண்மை தப்ப முடியாததாக இருக்கிறது – எந்தக் காலத்தில் வாசகன் முக்கியத்துவம் உச்ச கட்டத்தை எட்டுகிறதோ அந்தக்காலத்தில் இலக்கிய சிருஷ்டி ஓரளவுக்குத் தரம் குறைந்ததாக இருப்பது தெரிகிறது. உதாரணமாக சமஸ்கிருத இலக்கியத்தில் 9,10 நூற்றாண்டுகளில் கவிக்குத் தருகிற அளவுக்கு வாசகனுக்கும் முக்கியத்துவம் தந்து, அந்த வாசகன் கவியேபோல, சில சமயங்களில் கவியையும் விட முக்கியமானவன் என்று அவனுக்கு ஸஹ்ருதயன் என்று பெயர் தந்து பாராட்டினார்கள். இதற்கு ஓரிரண்டு நூற்றாண்டு கவிதையே க்ஷ£ணமடைந்து தரங்குறைந்து தேய்ந்து ஒடுங்கிவிட்டது என்பது சரித்திர உண்மை.

வாசகனே இல்லாவிட்டால் இலக்கியம் எதற்கு, ஏது என்று சொல்பவர்கள் இருக்கலாம். வாசகன் இல்லாத நிலையோ, முக்கியத்துவம் பெறாத நிலையோயல்ல விஷயம். சர்வ ஆதிக்கமும் வாசகனுடையதாக இருப்பதற்கும், சர்வ ஆதிக்கமும் எழுதுபவன் கையிலேயே என்று இருப்பதற்கு இடை நிலையில் ஒரு இடம் இருக்கவேண்டியதுதான் லக்ஷிய நிலை என்று சொல்ல வேண்டும். வா¡சகனை மனதில்கொண்டு, வாசகனை நாடி எழுதுகிற இலக்கியாசிரியர்களை விட, வாசகனை மனதில் கொள்ளாத, எவனுக்கெந்தக் கலை இருக்கிறதோ படிக்கட்டும், சர்வ ஜனரஞ்சகமானது என்று ஒரு தரம் இலக்கியத்திலேயே கிடையாது என்று நினைக்கிறவனே நல்ல இலக்கியாசிரியனாக இருக்கவேனும் – இருந்து வந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டும்.

“பொதுவாக இதெல்லாம் சரி. உன் கதைகளையோ உன் நாவல்களையோ, உன் கவிதைகளையோ, உன் விமர்சனக் கட்டுரைகளையோ பற்றி உனக்குள்ள (அது ஒன்றைரையே அரைக்காலோ, அல்லது இருநூறோ) வாசகன் என்ன நினைக்கிறான், அவன் நினைப்பது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேள்வி கேட்கப்பட்டால், என்னால் நிதானித்து ஒரு பதில்தான் சொல்ல முடியும். “அது அப்படியொன்றும் விவரிக்ககூடிய உறவு அல்ல. வாசகனுக்கும் எழுத்தாளருக்கும் உள்ள உறவு வார்த்தைகளுக்கு அகப்படாது,” என்று சொல்லத் தோன்றுகிறது. இருந்தும் அதையும்தான் சற்றுச் சொல்லிப் பார்க்கலாமே என்று நினைத்துக் குறிப்புக்காட்டுகிற மாதிரிதான் வாசகர்கள் சிலருடன் கடித மூலமாகவோ நேரடியாகவோ நான் நடத்திய சம்பாஷணைகள் என்னை என்ன நினைக்கத் தூண்டுகின்றன என்பதைச் சொல்லுகிறேன்.

மதுரையிலிருந்து ஒரு வாசகர் மணி மணியான எழுத்துக்களில் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் என் ஒவ்வொரு கதையும் வெளிவந்தவுடன் பாராட்டி “ஆஹா அற்புதம்! பிரமாதம்” என்றெல்லாம், ஒரு தபால் கார்டில் அடங்கக்கூடிய அளவில் எழுதுவார். இந்தக் கடிதங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரப் போதுமான அறிவு எனக்கில்லை. என் மனைவி அவற்றைத் தொகுத்துப் பத்திரப்படுத்தி வைப்பாள். இன்னமும் வைத்திருக்கிறாள் என்று எண்ணுகிறேன். இந்த அன்பரின் பெயரை வெளியிட எனக்கிஷ்டமில்லை. ஏனென்றால் இன்று அவர் தன்னைப் பிரபலமான எழுத்தாளராகக் கருதிக்கொண்டிருக்கிறார். ஒரு விசேஷம் என்னவென்றால், அவர் பிரபலமாகத் தொடங்கிய தேதியிலிருந்து எனக்குக் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டார். இந்த ஒருவர் தன்னுடைய ஸஹ்ருதயா என்று நான் இவர் எழுதிய கடிதங்களை வைத்து ஏற்றுக் கொண்டால் நான் எழுதுவதன் தொடக்கம், நான் எழுதுகிற பாணி, இலக்கியம்பற்றி என் கொள்கைகள் எல்லாவற்றையுமே மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிவரும். அதற்கு நான் தயாரில்லை. அதற்காக இந்த வாசகர் தான் நம்பாததைச் சொன்னதாகவும் நான் கருதவில்லை. ஏதோ சொன்னார் – கார்டு எழுத வசதியிருந்தது அவ்வளவுதான். அவருடைய கையெழுத்தைப் பார்த்து நான் பொறாமைப்பட்டதுண்டு என்றும் சொல்ல விரும்புகிறேன்.

இன்னொருவரிடமிருந்தும் எனக்கு அந்த நாட்களில் அடிக்கடி கடிதம் வரும். நாவல், கதை, எது எழுதினாலும் அதைப்பற்றித் தீர்க்கமாக விவாதித்து இது சரியென்று எனக்குத் தோன்றுகிறது – இது சரியல்ல என்று எண்ணுகிறேன் என்று எழுதுவார். அவர் கடிதங்களுக்கு நான் பதில் எழுதியதில்லை – ஆனால் அவர் அதற்காக எழுதுவதை நிறுத்திவிடவில்லை; எழுதிக்கொண்டே இருந்தார். ஆனால் பின்னர் சற்றுக் காலதாமதமாக அவரே ஏதோ நாவல், கதை ஒன்று எழுத ஆரம்பித்த பிறகு, அவர் சரியல்ல என்று எனக்குச் சொன்ன பாணியைப் பின்பற்றி எழுதுகிறார் என்று கண்டு, அவரைச் சந்தித்தபோது அது பற்றிக் கேட்டேன். “உண்மை” என்று ஒப்புக்கொண்டார். ஆனால் ஏன் அப்படி என்று சொல்ல அவருக்குத் தெரியவில்லை.

என் வாசகர்கள் பற்றி இது போதும் என்று எண்ணுகிறேன். ஆனால் பொதுவாக விமர்சனக்கட்டுரைகள் எழுதும்போதுதான் மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதுகிறேன். “நீங்கள் அழிக்கும் விமரிசனம் ஏன் எழுதுகிறீர்கள்? ஆக்க விமர்சனம் செய்யக்கூடாதா?” என்றுதான் விமர்சனம் எழுத ஆரம்பித்த காலத்தில் பல வாசகர்கள் என்னைக் கேட்டதுண்டு. அதற்கு ஒரே பதில்தான் உண்டு. “அழிக்கப்பட வேண்டியது அதிகமாக இருக்கும்வரை அழிக்கும் விமரிசனம் செய்தேதான் தீரவேண்டும். ஆனால் ஆக்க விமரிசனம் இல்லாமல் அழித்தல் விமரிசனம் என்று ஒன்று கிடையாது. இலக்கிய விமர்சனத்தில் ஒரு நோக்கில் அழிப்பதும் ஆக்குவதும் ஒன்றே” என்றுதான் பதில் தரவேண்டும்.

மற்றபடி கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. தான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம் – ஆனால் இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு – அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்.

இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்.

நன்றி: ஞானரதம் – மே 1970.

(ஞானரதம் இதழ் தொகுப்பு விரைவில் எனி இந்தியன் பதிப்பகம் வெளியிடவிருக்கிறது.)

Series Navigation

க.நா. சுப்ரமணியம்

க.நா. சுப்ரமணியம்