முன்னோட்டம்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

ஜெயகாந்தன்


(‘ஞானரதம்’ முதல் இதழில் ஜனவரி 1970-இல் ஜெயகாந்தன் முன்னோட்டம் பகுதியில் எழுதியது.)

தமிழ் இலக்கிய உலகில் படைப்புக்களை விடவும் படைப்புக்களைப் பற்றிய சிந்தனைகளும் விவாதங்களும் பெருகி மண்டி வருகிற ஒரு சூழ்நிலையில் இந்த ‘ஞானரதம்’ வெளிவருகிறது.

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பது விரும்பத் தகுந்ததா இல்லையா என்கிற விவாதத்தில் இறங்குவதை விடவும் இந்தச் சூழ்நிலையைச் சமாளித்துத் தீரவேண்டியது-இந்தச் சவாலை ஏற்றுக் கொள்ளுவது-ஒரு சில படைப்பளிகளுக்கு ஒரு நிர்ப்பந்தமாக மாறிவிட்ட சூழ்நிலையில் இந்த ‘ஞானரதம்’ வெளிவருகிறது.

இந்த ‘ஞானரதம்’ எனது சொந்த முயற்சியோ சுயமுயற்சியோ மட்டுமல்ல. இந்த பெயரை நானும் – அல்லது எனது பெயரை இந்த ரதமும் – தாங்கியிருக்கலாம். ஆனால் இந்த ரதமே நானல்ல. என்னைப் போலவே இலக்கிய தாகமும் படைப்புக்கு அடிப்படையான தினவும் உள்ள நண்பர்கள் பலர் இதிலே பங்கு பெற்று இருக்கிறார்கள்; பெறவும் இருக்கிறார்கள்.

சொந்தத்தில் ஓர் இலக்கியப் பத்திரிகை ஆரம்பிப்பது என்கின்ற எண்ணத்தை வெகு நாட்களுக்கு முன்னாலேயே கைவிட்டுவிட்டவன் நான். என்னுடைய சரக்குக்கு எங்கெங்கோ கிராக்கி இருக்கும்பொழுது சொந்தக்கடை போடுவதின் மூலம் எனது உற்பத்தி பாதிக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் என்ற அச்சத்தாலேயே நான் கைவிட்டவன். ஆனால் இப்போது எனது சரக்குக்கு மார்க்கெட்டிலே அதிக கிராக்கி இருந்தபோதிலும் கூட அங்கே விலை போக முடியாத, மார்க்கெட்டில் திரிகிறவரின் பார்வைக்கு மிரட்சி தரக்கூடிய இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் மார்க்கெட்டிலே வைக்கக் கூடாத சில சரக்குகளை வினியோகம் செய்ய தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட வாடிக்கைக்காரர்களைச் சந்தித்து வரவு செலவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு நேர்ந்திருக்கிறது.

‘சரஸ்வதி’ பத்திரிக்கை நின்று போன காலத்திலிருந்தே எனக்கு இப்படியொரு பத்திரிகையின் தேவை இருந்திருக்கிறது.

ஆனாலும் அப்படியொரு பத்திரிகை இல்லாது போனதின் காரணமாகவே சில நன்மையும் எனக்கு ஏற்பட்டது.

என்னை எழுத அழைத்த பத்திரிகைகளில் அவர்கள் தேவைக்கு மட்டுமல்லாது என்னுடைய தேவைகளுக்ககவும் நான் எழுதினேன். என்னுடைய கருத்துக்களை வலிந்து நான் சுமத்தினேன் என்று இதற்கு அர்த்தமில்லை. அவர்களின் நிர்ப்பந்தத்திற்கு நான் பணிந்து போனேன் என்றும் இதற்குப் பொருள் இல்லை. ஆனாலும் சில துணிகரமான, இலக்கிய மனம் போகிற போக்கில் எழுதிப் பார்க்கிற, எந்த விதமான பயத்திற்கும் இடமில்லாத, சுதந்திரக் கனவுகளைத் தீட்டிப் பார்க்கும் சுவைக்காக ஒரு சுவர் அல்லது ஒரு திரை அல்லது ஒரு கையகலத் தளம், வளர்கின்ற கலைஞனுக்குத் தவிர்க்க முடியாத தேவையாகிறது.

இந்தத் தேவை எனக்கு மட்டுமல்ல; எழுதுகிற – என்னைப் போல் எழுதுகிற – அதாவது என்னை மாதிரியே எழுதுகிற அல்ல -ப லருக்கு இப்படியொரு தேவை இருக்கிறது என்பதையும் என்னால் உணர முடிந்தது.

எழுதுகிறவர்களுக்கு மட்டுமல்ல, படிக்கிறவர்களுக்கும் – அதாவது, இன்றைய பத்திரிகைக் குவியல்களிலே கூட இலக்கியத்தைத் தேடிக் கண்டுபித்துத் தாகம் தீர்த்துக் கொள்வதற்காகப் படிகிறவர்களுக்கும் – இந்தத் தேவை எழுதுபவர்களை விட அதிகமாக இருப்பதையும் என்னால் அறிய முடிந்தது.

எனவேதான் ஓர் இலக்கியவாதி என்கிற முறையில் தனித்தும் ஒதுங்கியும் – ஒரு பக்கம் ஒடுங்கியும் – இருப்பதிலே பயனும் சுவையும் கண்டுவிட்ட நான் இந்தப் பந்தத்திற்கு உட்பட்டிருக்கிறேன்.

தன்னை உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருப்பதனை விடவும் பந்தம் வேறொன்றுமில்லை. தன் அறிவுக்கும் புலனுக்கும் எட்டாத தூரத்திலிருக்கின்ற யார் யாருடனெல்லாமோ – தன்னை அடிக்கடி பகிரங்கப் படுத்திக் கொண்டிருப்பதனால் – பந்தமும் சொந்தமும் கொண்டிருக்கிறான் அறிவியல் மனிதன்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் -அதனைச் சிறப்பாக வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் – மனிதன் காலத்தை வென்று நிற்கிறான்.

இல்லாவிட்டால் காளிதாசனுக்கும் நமக்கும் என்ன பிராப்தி? சாக்ரடிஸ¤க்கும் உங்களுக்கும் என்ன சொந்தம்? இன்றைக்கு மவுண்ட் ரோட்டிலே நடந்து போகிறவனை அன்றைய மார்க்ஸ் ஏன் மடியைப் பிடித்து இழுக்கிறார்?

இதெல்லாம் மனிதன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதன் விளைவு. சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டதின் சிறப்பான விளைவு.

ஞானவர்கள் ஒதுங்குவதும் ஒடுங்குவதும் ஒதுக்கத்துக்காகவும் ஒடுக்கத்துக்காகவும் அல்ல. இந்தத் தன்மைதான் அவர்களைப் பொதுமைப் படுத்துகிறது.

‘ஞானரதம்’ எந்தப் படைப்பாளியின் தன்மையையும் தனித்துவத்தையும் குலைக்காது.

ஒரே மாதிரி சிந்திக்கிறவர்கள் ஊர்கோலம் போகத்தான் லாயக்கு. கருத்துலகில் காரியங்கள் சாதிப்பதற்குப் பலதரப்பட்ட கருத்தோட்டங்களும் சிந்தனைகளும் வேண்டும். என்னோடு உடன்பாடு கொண்டவர்கள் அல்ல, என்னிடம் மாறுபட்டவர்களே என்னை வளர்த்திருக்கிறார்கள். என்னோடு உடன்பாடு உள்ளவர்கள் கூட என்னோடு மாறுபடும்போதெல்லம் என்னை வளர்த்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உடன்பாடு கொள்வது என்பது ஒருவர் ஒரு புத்தகத்தைப் பார்த்துத் தன்னுடைய கருத்தை Refer செய்து கொள்வது மாதிரி. அறிவுலக வாழ்க்கை என்பது Reference-ஸோடு நின்று விடுவதில்லை.

மாறுபாடான கருத்துக்களை அறிவின் முனைப்பிலே நிற்கிறவர்கள் முடிவற்று தர்க்கம் செய்து கொண்டிருப்பதில்லை. அது வெளிப்படும் பொழுதே, அது வெளிப்படுகின்ற முறையிலேயே இன்னொருவருக்கு உடனே வெளிச்சம் ஏற்பட்டு விடுகிறது. அந்த வெளிச்சத்தில் மாறுபாடு மறைந்து போகிறது. அந்தச் சிந்தனைச் சங்கிலி மேலும் தொடர்வதற்கு முடிச்சு விழாமல் அவர்களால் சம்பாஷிக்க முடிகிறது. இப்படிப்பட்ட அறிவு நேயம் கொண்டவர்கள்தான் இங்கே ஆசிரியர் குழுவிலே அங்கம் வகிக்கிறார்கள். எங்களுக்குள்ளே உடன்பாடுகளும் உண்டு; மாறுபாடுகளும் உண்டு. அந்த மாறுபாடுகளை நாங்கள் மதிக்கிறோம். ஏனென்றால் அவை அடிக்கடி மறைகின்றன. எனவே புதிது புதிதாகவும் தோன்றுகின்றன.

பிற எழுத்தாள நண்பர்களுக்கு ‘ஞானரதம்’ தருகின்ற செய்தி இதுதான்: வேறு பத்திரிகைகளிலே நீங்கள் எழுதமுடியாதனவற்றை இங்கே எழுதுங்கள்.

அதே மாதிரி வாசகர்களுக்கு நாம் தருகின்ற சலுகை இதுதான்: வேறு பத்திரிகைகளில் எதையோ தேடி அடிக்கடி இல்லை என்று ஏமாந்து தவிக்கிறீர்களே அதை ‘ஞானரதம்’ தர முயலும்.

-ஜனவரி 1970

நன்றி: ஞானரதம், ஜெயகாந்தன்
(ஞானரதம் இதழ் தொகுப்பு விரைவில் எனி இந்தியன் பதிப்பகம் வெளியிடவிருக்கிறது.)

Series Navigation

- ஜெயகாந்தன்

- ஜெயகாந்தன்