ஆய்வுக் கட்டுரை: முதற் குலோத்துங்கனின் முண்டன் கோயில் கல்வெட்டு

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

கோ. தில்லை கோவிந்தராஜன்


அரியலூர் – தஞ்சை பெருவழி சாலையில் கொள்ளிடத் திருநதியின் வடகரையில் அமைந்த ஊர்தான் திருமானூர்.

வரலாறு:

இவ்வூரின் பழைய பெயராக கல்வெட்டுக்களில் ‘திரைமூர்’ காணப்படுகிறது. இவ்வூர் ‘திருமாநல்லூர்’ என்ற பெயர் 16 ஆம் நூற்றாண்டில் அரியலூர் பாளையக்காரர்களால் வழங்கப்பட்டுள்ளது.

சோழர் ஆட்சியில் இப்பகுதியை அடுத்துள்ள திருமழபாடி, கண்டராத்தித்தம், காமரசவல்லி போன்ற பகுதிகள் சிறப்புற்று விளங்கியதற்கு கல்வெட்டுகளே சான்றாக அமைந்துள்ளது.

இப்பகுதியில் முதற்குலோத்துங்கனின் ஆட்சி காலத்தில் மூன்று முறை வளநாட்டின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வரசனின் 15ஆம் ஆட்சி ஆண்டில் ‘குலோத்துங்க சோழ வளநாடு’ என்றும், 29ஆம் ஆட்சி ஆண்டில் ‘கேயவினோத வளநாடு’ என்றும், 45ஆம் ஆட்சியாண்டில் ‘தியாகவல்லி வளநாடு’ என்றும் வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.

கல்வெட்டு காணப்படும் இடம்:

இவ்வூரின் ஆற்றங்கரையோரமாக முண்டன் கோயில் வளாகத்தில் 6 அடி நீளமும் முக்கால் அடி அகலமும் கொண்ட இருத்தனித்தனி நிலைப்படிக் கல்வெட்டுகளில் காணும் செய்தி இவ்வூரினை சேர்ந்த சிவன் கோயிலான அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை கயிலாசநாதர் கோயிலில் நடைபெற்ற தானத்தையும் அதன் எல்லைகளையும் பற்றி குறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டின் செய்திகள்:

இக்கல்வெட்டின் தொடக்கத்தில் அரசனின் மெய்க்கீர்த்தி இல்லாமல் குலோத்துங்க சோழதேவற்கு ஆண்டு 49வது என்று தொடங்கி நாட்டுப் பிரிவு மற்றும் செய்திகளைக் கூறுவதாக அமைந்துள்ளது. இக் கல்வெட்டு எழுத்துகள் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதில் சிலவிடங்களில் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு பிரிவும், இக்கோயில் குடிகொண்டுள்ள இறைவன் பெயரும் ‘தியாகவல்லி வளநாட்டுப் பொய்கை நாட்டு பிரமதெய ஸ்ரீலோகாதித்த சதுவெதிமங்கலத்தது ஸ்ரீகயிலாஸமான ஸ்ரீராஜேந்திர சோழ ஈஸ்வரமுடையார் கோயில்’ எனக் குறிக்கப்பட்டுகிறது.

‘தியாகவல்லி’ என்பது முதற்குலோத்துங்கனின் பட்டத்தரசி’ ஆவாள். இதனை அவளுடைய மெய்க்கீர்த்தியிலிருந்து அறியலாம்.

“ஆரமுந் திருப்புயத் தலங்கலும் போல
வீரமுந் தியாகமும் விளங்கப்பார்தொழச்
சிவனிடத் துமையெனத் தியாகவல்ல்லி
உலக முடையாளிருப்ப வவளுடன்
கங்கைவீற் றீரந்தென மங்கையர் திலகம் –
ஏழிசை வல்லபி யேழலகு முடையாள்
ஏழிசை வல்லபி யேழலகு முடையாள்
வாழி மலர்ந்தின திருப்ப வூழியுந்
திருமாலாகத்துப் பரியா தென்றும்
திருமக ளிருந்தென் வீரசி மாசனத்து
வீற்றிருந் தருளின கோவிராசகேசரி வன்மரான
திரிபுவன சக்கர வர்த்திகள்
ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு”

அவளுடைய நினைவாக இப்பகுதிக்கு ‘தியாகவல்லி வளநாடு’ என்று பெயரிட்டு சிறப்பித்துள்ளான்.

இக்கல்வெட்டில் ‘ஸ்ரீகயிலாஸமான ஸ்ரீராஜேந்திர சோழ ஈஸ்வரர் கோயில்’ என்பது முதலாம் ராஜேந்திர நினைவாக எழுதப்பட்டதாக இருக்கலாம். இக்கோயில் கலை வேலைபாடுகள் குறைந்து காணப்படுகின்றது.

“திருமானீஸ்வரர்” திருக்கோயில்:

முதற் குலோத்துங்கனின் காலத்திற்கு முன்பு இக் கயிலாஸநாதர் திருக்கோயில் வேறு இடத்தில் இருந்திருக்கலாம். இவ்வரசர் காலத்தில் அல்லது பின் வந்தவர்கள் தற்பொழுது உள்ள இடத்திற்கு மாற்றம் செய்து இருக்கலாம் என்ற அய்யம் எழுகின்றது. அதற்கு காரணமாக அமைவது இப்பகுதியினை கள ஆய்வு செய்தபோது ஊரின் முக்கிய பிரமுகர் ஒருவரும், எனது அருமை நண்பர் தொல்லியல் துறையச் சார்ந்த திரு.ம. இராஜேந்திரன் அவர்களும், இவ்வூரை ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் கோயில் ஒன்று இருந்ததற்கான சில தடயங்களான செங்கல் கற்களின் எச்சங்கள் காணப்படுவதை காண்பித்தார். இவை ஆற்றில் நீரில்லாத கோடை காலங்களில் தெரிவதுண்டு.

இவ்வூருக்கு நேரே கொள்ளிடத்தின் தெற்கே அமைந்துள்ள ஊரான பெரும்புலியூர் கல்வெட்டில் சோழ மரபினைச் சேர்ந்த அரசன் பரகேசரிவர்மனுடைய பத்தாவது ஆட்சியாண்டைக் குறிப்பதில் பெரும்புலியூர் மகாசபையைச் சேர்ந்த பொய்கை நாட்டிலுள்ள கீழ் பிரம்தேயத்திற்கு 3 மா நிலத்தினை இறையிலியாக மதுரைக் கொண்ட பரகேஸரி எனப்படும் முதலாம் பராந்தகனின் 20ஆம் ஆட்சியாண்டில் திருமானீஸ்வரர் மகாதேவருக்கு கொடுத்துள்ளார். அதே நிலத்தை திருநெய்தானத்து மகாதேவருக்கு விற்று கொடுத்துள்ளார். மேலும் பெரும்புலியூர் மகாசபையினர் 6 1/2 மா மற்றும் கீழ் 1/2 வேறு நிலம் மாகாணி மாற்றி முன்சொல்லப்பட்ட திருமானீஸ்வரர்’ இறைவருக்கு கொடுத்துள்ளார்கள்.

இக் கல்வெட்டினை நோக்கம்போது இத் திருமானீஸ்வரர் கோயிலே கொள்ளிட ஆற்றின் நடுவிலிருந்திருக்கலாம். அவை கால வெள்ளத்தினால் சிதைந்து போயிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். இதனை மேலும் ஆய்வு செய்தல் வேண்டும்.

வெள்ளப்பெருக்கும் திருமழபாடியும்:

திருமழபாடியில் சோழர் காலத்துத் தலைவனாக விளங்கி ஒருவனான ‘தெற்றிவெளியானான எதிரிலி சோழ மூவேந்த வேளான்’ என்பவர் (மூன்றாம் இராஜராஜன்) கொள்ளிட ஆற்றை தெற்கே பெயர்த்து அகலப்படுத்தி ஊருக்கு ரட்சை செய்ததாக கல்வெட்டு கூறுகின்றது.

திருமழப்பாடி எவ்வாறு வெள்ள போக்கினால் பாதிக்கப்பட்டதோ அதுபோல் இத்திருமானீஸ்வரர் கோயிலும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகையால் முன்னர் கூறியது போல் பிற்கால அரசர்களால் இக்கோயில் இட மாற்றமும், பெயர் மாற்றமும் செயதிருக்க வேண்டும். இத் திருமானீஸ்வரர் பெயராலேயே இவ்வூருக்கு திருமானுர் என்று வழங்கப் பட்டிருக்க வேண்டும்.

கல்வெட்டு எண்.1

1. குலொத்துங்க
2. சோழதேவர்
3. க்கு யாண்டு ச ய
4. ஆவது விருச்சிக
5. ஞாயிற்று கிருஷ்(ண)
6. பக்ஷத்து சதுர்
7. தஸியும் ரோகி
8. ணியும் பெற்ற
9. செவ்வாய்க்கிழ
10. மை நாள் தியாக
11. வல்லி வளநாட்
12. டுப் பொய்கை ந
13. ¡ட்டு பிரமதெய
14. ம் ஸ்ரீ லோகா
15. தித்துச் சதுவெ
16. தி மங்கலத்
17. து ஸ்ரீகயிலா
18. ஸமாந ஸ்ரீரா
19. ஜெந்திர சொழ ஈ
20. ஸ்வரமுடையார்
21. கொயில் முகப்(பி)
22. ல் சங்கரநாராய
23. ண திருமண்டப
24. த்தெய இவ்வூர்ம
25. காகசபை எல்
26. லாம் கூட்ட கு¨
27. ரவற கூடியிருது
28. ஸ்ரீ கயிலாஸ முடை
29. ய மகதெவர் கொ
30. யிலு திருமுற்றமுந்தி
31. ருந் தெவந் மும் மடை
32. விளாகமுங் களமு
33. ம் உட்பட நிலம்
34. (கிரந்த அளவு)
35. இந் நிலமாகாணி
36. க் கீழரையெ இருமாவ
37. ரையும் மிகுதிச் சுருக்
38. க முள்ளடங்க உள்ளு
39. தெல்லாம் சந்த்ராதி
40. த்தவல் இறையிலி
41. யாவதாகவும் இத்¦
42. தவர்க்குத் திருப்படி
43. மாற்றுக்கு விட்ட நில
44. ங்களாவந ராஜ கெ
45. சரிவிதிக்கு மெற்றிவு
46. றி இ….வாய்காலு

கல்வெட்டு எண்.2

47. க்கு வடக்குங் கண்
48. ணற்றும் கண்ணா
49. றும் +துண்டத்து
50. பள்ளி கொண்ட
51. ¡ந மச்சகல் நில
52. ம் தெசி
53. ளுமும் இவ்வதி
54. க்குக் கிழக்கு இவ்
55. வாய்க்காலுக்கு
56. வடக்குங் கண்
57. ணாற்று + சதுரத்
58. துஓர் சல நிலம்
59. உதழுறா சித்த
60. மும் ஸ்ரீ கிருஷ்ணவதி
61. க்குக் கிழக்கு விக்
62. கிரம சொழவாய
63. க்காலுக்கு வடக்
64. கு அ கண்ணாற்று
65. ங் சதிரத்து சங்க
66. ரநாராணய மச்
67. கல் நிலம்

68. மஏம நவதிக்கு
69. க் கிழக்கும் தூரர்
70. துக வாய்க்காலு
71. க்கு தெற்கு + க
72. கண்ணாற்று 2து
73. ணடத்து நிலம்
74. ச மாகு வம்
75. இங்கே +துண்ட
76. நிலம் (கிரந்த அளவு) இ
77. ம் ஆக நிலம்
78. சி ளுமும் இந்நில
79. மும் மாவரைச்
80. சநமும் ய
81. மடக்கி நிலம்
82. (கிரந்த அளவு) திரும
83. இவ்வூர் மாவீதபடி
84. யெ இறுக்க கடவதாக இப்பரிசு
85. ஸ்ம்மதித்து சபைக்குச்ச
86. சமது கொள விணெமாதவ
87. பட்ட நடணியாலும் ஒத்த ஜய
88. நம தித்தங் நிந்ற நம்பியும் இ
89. ம தெவ நிலகிரிவக்ம் திரு வர
90. ங்கமாள ஸகரஸிங்(க)ம் பா
91. ஸ்கரங் ஸ்ரீவாஸ¤தெவங்னும்
92. நாராயண பாஸ்கரனும்(தி)ருவெ
93. ண்ணைக்கூத்த பட்ட……(கல்வெட்டு முடிவு)

துணை நூல் பட்டியல்:

1. வரலாற்றில் திருமானூர், இல.தியாகராஜன், ஆய்வுக்கட்டுரை

2. திருமழபாடி, எஸ் இராமச்சந்திரன், தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு.

3. Political Geography of the Chola Country, Dr.Y.Subrayalu, Department of Archaeology, Chennai.

4. பிற்கால சோழர் சரித்திரம், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

5. Annual Report of Epigraphy. No.409/1961-62.

கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு:

வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரான கோ. தில்லை கோவிந்தராஜன், தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர். இவர் பத்துக்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் கண்டுபிடித்துள்ளார். இக் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்தி படங்களுடன் பிரபல தமிழ் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. கல்வெட்டு ஆய்வாளர் திரு. எஸ். இராமச்சந்திரன் நடத்திய பல கள ஆய்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இதுவரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

thillai.g@gmail.com

Series Navigation

கோ. தில்லை கோவிந்தராஜன்

கோ. தில்லை கோவிந்தராஜன்