வரலாறியல் அப்பாலைகதை (Historiographic Metafiction)

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

எச்.முஜீப் ரஹ்மான்



வரலாறியல் அப்பாலைகதை என்பது பின் நவீன நாவல் வகையாகும். இது இன்றைய நம்பிக்கைகள் ,தரங்கள் ஆகியவற்றை கடந்த காலத்தின் பார்வை வழியாக குறிப்பாக தனிமனிதனின் கடந்த கால நிகழ்வாக சொல்லும் ஒரு உத்திமுறையாகும்.மேலும் நிகழ்வுகளுக்கும் உண்மைகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து பல வரலாற்றாசிரியர்களின் வேலையை ஒருவர் செய்கிறார்.வரலாறியல் புனைகதையில் ஆவணங்கள் நிகழ்வுகளின் அடையாளமாக,வரலாற்று அறிவு மொழியியலால் மாற்றம் பெற்றதாக,வரலாற்றாசிரியனின் உண்மை, புனைவாக மாற்றம் பெற்றதாக மாறிவிடுகிறது.மேலும் வரலாறியலில் இருந்து உருவாகும் இணைப்பிரதிகள்(paratextual ) உண்மையாக்கம் கொள்ளவேண்டி பலவிதங்களில் வரலாற்று மூலங்களையும்,விளக்கங்களையும் புற ஆதாரங்களாக இருப்பதை வரலாறியல் அப்பாலைகதையில் அப்படியே ஏற்றுக்கொண்டு வினைபடுகிறது.பிரபல ஆய்வாளரும் விமர்சகருமான லிண்டா ஹட்சன் வரலாறியல் அப்பாலைப்புனைகதை பற்றி பேசும் போது ‘The Pastime of Past time’ என்று குறிப்பிடுகிறார்.ஹட்சன் நிகழ்வுகள் உண்மைகளால் போர்த்தப்பட்டு அர்த்தங்களை பெறுகிறது என்றார்.வரலாறு எழுதுதலுக்கும் புனைகதை எழுதுதலுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை.பின் நவீன கோட்பாடும் கலையும் மற்றும் இன்றைய விமர்சன வாசிப்புகளும் வரலாறும் புனைக்தையும் எப்படியெல்லாம் எழுதுதல் என்ற நிலையில் ஒரேமாதிரியாக வினைப்பட்டிருக்கிறது என்பதை ஆராந்து விளக்கங்களை சொல்லுகிறது.வரலாறியலும் சரி புனைக்தையும் சரி புற உண்மையை உண்மையாக மாற்ற வேண்டி அதிக சக்தியை தருவித்துக்கொள்கிறது.மேலும் இரண்டுமே மொழி கட்டமைத்தல் அடையாளத்தில் மிகத்தரமான உயர்ந்த எடுத்துரைப்பை பேணுகிறதேயன்றி எளிமையான விளக்கங்களை சொல்லுவது இல்லை.தமது தேவையை கருத்தில் கொண்டு ஊடிழைப்பிரதிகளை கடந்த காலங்களிலிருந்து பெற்று கலப்புபிரதியாக வடிவாக்கம் கொள்ளுகிறது.
வரலாற்றில் இலக்கியத்துக்கும் வரலாறுக்கும் உள்ள உறவை பார்க்கும்போது இரண்டு வித பிரிவுகளின் கீழ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயங்கியதை காணலாம்.விஞ்ஞான புனைக்கதை மேலெழுந்தபோது இந்த போக்கு மாறியது.இலக்கியத்தை,வரலாறை தனித்தனியே பிரித்து பார்க்கும் மனோபாவம் முந்தைய சூழலில் சாதாரணமாக இருந்தது.சென்ற நூற்றாண்டில் வரலாறு எழுதுதலும் வரலாற்று நாவல் எழுதுதலும் ஏற்றம் பெற்றன.இன்றைய சூழலில் வரலாறு எழுதுதலும்,நாவல்களில் வரலாறியல் பயன்படுத்தப்படும் விதமும் சந்தேகத்தை உருவாக்குவதாக அமைந்தன. இவ்வித நாவல்களில் பொதுவான பயன்பாடாகிய எடுத்துரைப்பு,மேற்கோள்கள்,தன்னிலையின் உருவாக்கம்,பிரதியில் அடையாள நிலைபாடு,கருத்தியல் செயல்திட்டம் போன்றவை தெளிவாக தெரிந்தது.பதினெட்டாம் நூற்றாண்டில் புனைவுக்கும் உண்மைக்குமான விழிப்புணர்வு முக்கியம் பெற்றன.எடுத்துரைப்பில் உண்மை முக்கியத்துவப்படுத்தப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டு நாவலாசிரியர்கள் திட்டமிட்டு எழுதுவதற்க்கு பதிலாக இருப்பதை வெளிப்படுத்தினார்கள்.முந்தைய எழுத்துகளின் தன்மை வாசகர்களை விதிப்படியே செயல்பாடுடையது என்பதற்கேற்ப ஊடாடியது.ஆனால் இன்றைய வாசகர்களோ தற்கால வரலாறியல் அப்பாலைகதையை பற்றிய விழிப்புணர்வை உண்மைக்கும்,புனைவுக்குமான இடைவெளியை நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.மேலும் தற்கால புனைக்கதை வரலாறுக்கும்,கதைக்குமான உறவை கேள்விகேட்கிறது.மைக்கேல் கோட்சீயின் ·போ நாவலில் கதைச்சொல்லிகளும்,வரலாற்றறிஞர்களும் மௌனமாக இருப்பதும் கடந்தகால நிகழ்வுகளை வரலாற்றாசிரியன் முற்றாக புறக்கணிப்பதும் காணலாம்.ஆனால் மரபுசார்ந்த வரலாறுகள் பதினெட்டாம் நூற்றாண்டில் பெண்களுக்கு யாதொரு முக்கியத்துவம் அளிக்காததையும் காணலாம்.பொய்கள் பன்முக உண்மையை நோக்கி நகரும் விதம் கவனிக்கத்தக்கது.பதினட்டாம் நூற்றாண்டின் பொய்களும் தவறுகளும் பின் நவீனத்தில் பன்முகதன்மை வாய்ந்த உண்மைகளாக மாறியது.பண்பாடு,இடம் சார்ந்து உண்மைகள் பரவலாக்கப்படிருக்கிறது என்பதை உணர்ந்தோம்.
பின் நவீன நாவல்களில் குணாம்சங்களும்,வற்புறுத்தல்களும் பன்முக உண்மைகளை சொல்வதாக அமைந்தன.புனைக்கதையும்,வரலாறும் இரண்டுவிதமான உண்மைகளை சொல்லுகிறது என்ற நிலையை மாற்றியது.பின் நவீன நாவல்களில் ஒற்றை உண்மைக்கு பதிலாக பன்முக உண்மைகள் வலியுறுத்தப்பட்டன.இந்நாவல்களில் கடந்த காலத்தை நிகழ்கால புனைவாகவும்,வரலாற்றை நிகழ்காலத்துக்குரியதுமாக ஆக்கும் மறு எழுத்து முறை காணப்படுகிறது.வரலாற்றை பிரச்சனைக்குரியதாக மறு எழுத்து ஆக்குகிறது.வரலாறும்,புனைக்கதையும் ஒரேமாதிரியாக இல்லை என்ற போதும் சமூக,பண்பாட்டு,கருத்தியல் தளங்களில் முந்தைய அணுகுமுறைகளை கவனத்துடன் பரிசீலித்தது.வரலாறு புனைக்கதையிலிருந்து வேறுபட்டு இருந்த போதும் பொதுவான தன்மைகளை கணக்கிலெடுத்துக்கொண்டது.புகழ்வாய்ந்த வரலாறியல் அப்பாலைகதைகளை பார்ப்போம்
1.சல்மான் ருஸ்டியின் மிட்னைட் சில்டிரன் மற்றும் த மூர்ஸ் லாஸ்ட் சை
2.ஜோன் பவுலின் த பிரஞ்ச் லெப்டினட்ஸ் வுமன்
3.பி.எஸ்.ஜான்சனின் டிராவலிங் பிப்பிள்
4.ரைமண்ட் பெடர்மனின் டபுள் ஆர் நத்திங்
5.உம்பர்டோ ஈகோவின் த நேம் ஆப் த ரோஸ்
பின் நவீனத்துவம் வரலாற்றை சரிபார்த்தலுக்குரியதாகவும் புனைக்கதையை உண்மையை நிறுவுவதற்குரியதாகவும் கருதவில்லை.வரலாறு என்பதே அரசியல் வாசிப்பின் பொருட்டு கட்டமைக்கப்பட்ட கோட்பாட்டு புனைவு ஆகும்.வரலாறு குறித்த மரபான பார்வைகள் கடந்த காலத்தின் நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே தொகுப்பது,விவரிப்பது,அல்லது விளக்குவது என்பதாகவே இருந்தது.வரலாறு மொழியால் மொழிக்குள் எழுதப்படுகிறது என்ற நிதர்சனமான உண்மைக்கும் அது எழுப்புகிற கேள்விகளுக்கும் அவை முகம் கொடுக்கவே இல்லை.மொழியை பிரச்சனைகளற்ற ஒரு ஊடகமாக வரலாற்று உள்ளடக்கத்தை விளக்க பயன்படுகிற ஒரு வடிவமாக மட்டுமே அவை எடுத்து கொண்டன.ஆனால் புனைக்கதை எழுத்தைப்போலவே வரலாறு எழுதுதலும் எண்ணற்ற அர்த்தபடுத்தல்களை சாத்தியபடுத்துகிற கதையாடல்களாகவே இருந்துவருகின்றன.வரலாறு எழுதுபவர்கள் சொல்லிக்கொள்வது போல அவை உள்ளடக்கத்தை அப்படியே பிரதிபலிக்கிற நேரடி எழுத்துக்கள் அல்ல.மாறாக,அவையும் கூட புனைவு எழுத்தைப்போல உருவம் சார்ந்த மொழியிலேயே எழுதப்படுகிறது.அதனால் தான் எந்த ஒரு வரலாற்று பிரச்சனைக்கும் முடிந்த முடிவு சாத்தியப்படுவதில்லை.சிறந்த வரலாற்று எழுத்துக்கள் வரலாற்று பிரச்சனைகளை மூடிவிடாமல் புதிய சிக்கல்களை தொடரவேண்டிய ஆய்வுதிசைகளை திறந்துவிடுவதைப்பார்க்கலாம்.
வரலாற்று எழுத்துக்களின் கடந்த காலத்தைய நிகழ்வுகளை ஒரு குறிப்பிட்ட நோக்கில் அர்த்தப்படுத்தும் முயற்சி ஒரு கதையாடலாகவே உருவெடுக்கிறது.புனைவுகளில் செய்யப்படுவதைப்போலவே உருவகம் சார்ந்த உத்திகள் மூலமே கதை கட்டப்படுகிறது.முதலில் கடந்த காலத்தின் நிகழ்வுகள் ஒரு கதையாக சொல்லத்தக்க வரிசைகிரமத்தில் முன்வைக்கப்படுகிறது.அடுத்து ஒரு ஆரம்பம்,இடை,இறுதி என்று கண்டுக்கொள்ளத்தக்க கட்டங்களுடைய கதையாக உருமாற்றம் செய்யப்பட்டு முன்வைக்கப்படுகிறது.மூன்றாவதாக அர்த்தங்களை முடிவுசெய்ய வேண்டிய விவாதத்திற்க்குரிய பொருளாக அவை கட்டப்படுகின்றன.இந்த மூன்று உத்திகளுமே உருவகம் சார்ந்தவையாக அர்த்தங்களை ஒத்திப்போடுபவையாக இருப்பது கவனிக்கத்தக்கது.
வரலாறியல் அப்பாலைகதையை பொறுத்தவரையில் புனைவையும்,நிகழ்வையும் எதிரிடையாக பார்ப்பதில்லை.மேலும் வரலாற்றையும் புனைக்கதையும் தனித்தனியே பார்ப்பதில்லை.வரலாற்று நாவலுக்கும் வரலாறியல் அப்பாலைகதைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.நமது மரபிலுள்ள சிலப்பதிகாரம்,கம்பராமாயணம் போன்றவை வரலாறுக்கும் புனைவுக்குமான இடைவெளியை தகர்த்திருப்பதையும்,வரலாறுக்கும் உண்மைக்குமான வேறுபாடை தகர்த்திருப்பதை உதாரணமாக காட்டலாம்.தமிழில் வெளிவந்த வரலாறியல் அப்பாலைகதைகளை பார்ப்போம்.
1.ஜெயமோகனின் விஷ்ணுபுரம்
2.எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்
3.கோணங்கியின் பாழி
4.ரமேஷ்-பிரேமின் புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்
5.எம்.ஜி.சுரேஷின் யுரேகா என்றொரு நகரம்
போன்ற நாவல்களும் பல சிறுகதைகளும் வரலாற்றுக்கும் உண்மைக்குமான இடைவெளியை உடைத்து புனைவுகளாக இயங்கி வாசகர்களால் கவனம் பெற்றிருக்கிறது.

“It is part of the postmodernist stand to confront the paradoxes of fictive/historical representation, the particular/the general, and the present/the past. And this contradiction is itself contradictory, for it refuses to recuperate or dissolve either side of the dichotomy, yet it is more than willing to exploit both” (Linda Hutcheon, A Poetics of Postmodernism, 1988, p.106)
WORKS CITED
Bawer, Bruce. “Confession or Fiction? Stories from Vietnam.” Wall Street Journal 215, 23 Mar 1990: A13.
Beidler, Philip D. American Literature and the Experience of Vietnam. Athens: U of Georgia P, 1982.
Christensen, Inger. The Meaning of Metafiction. Bergen: Universitetsforlaget, 1981.
Herr, Michael. Dispatches. New York: Vintage, 1977.
Lyons, Gene. “No More Bugles, No More Drums.” Entertainment Weekly 23 Feb. 1990: 50-52.
Mehren, Elizabeth. “Short War Stories.” Los Angeles Times 11 Mar. 1990: E1, E12.
Melmoth, John, “Muck and Bullets.” The Sunday Times (London) 20 May 1990: H6.
Naparsteck, Martin. “An Interview with Tim O’Brien.” Contemporary Literature 32 (Spring 1991): 1-11.
O’Brien, Tim. The Things They Carried. New York: Houghton, 1990.
Scholes, Robert. Fabulation and Metafiction. Urbana: U of Illinois P, 1983.
Schroeder, Eric James. “Two Interviews: Talks With Tim O’Brien and Robert Stone.” Modern Fiction Studies 30 (Spring 1984): 135-64.
Waugh, Patricia. Metafiction: The Theory and Practice of Self-Conscious Fiction. New York: Methuen, 1984

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்