ஹெச்.ஜி.ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் நூலுக்கான விமர்சன அரங்கு

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

அரங்கு : சில பகுதிகள்



ஹெச்.ஜி.ரசூல் எழுதிய இஸ்லாமியப் பெண்ணியம் நூலுக்கான விமர்சன அரங்கு நாகர்கோவிலில் நடைபெற்றது. தலித்திய எழுத்தாளர் வி.சிவராமன் தலைமை தாங்கினார். “ஓதி எறியப்பட்ட முட்டைகள்” நாவலாசிரியர் மீரான் மைதீன், உவர்மண் கவிதை நூலாசிரியர் கவிஞர். நடசிவகுமார், நவீன கதையாளர் அசன் முகைதீன், பல்கலைக் கழக பேராசிரியர் செல்வகுமார், கவிஞர். ந.நாகராஜன், விமர்சகர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விவாதங்களில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் குழு நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டினை செய்திருந்தது. கூட்டத்தில் மீசான் கற்கள் நாவல்மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு.யூசுப் ”இஸ்லாமியப் பெண்ணியம்” குறித்த ஆய்வுத்தாளை சமர்ப்பித்தார். இதன் சில பகுதிகள் வாசிப்பிற்காக இங்கே வழங்கப்படுகிறது.

முதலில் ஒரு வேண்டுகோள்! ஹெச்.ஜி.ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் நூலின் மீதான விமர்சனங்களை வாசிக்கக் கேட்ட நண்பர்கள் பிற்போக்குவாதி, ஒழுக்க சீலன், மெளலவி, இது திருந்தாது என்பது போன்ற பொதுவான விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.
உலகளாவிய ஒரு மதத்தின் ஆகப் பெரும்பிரச்சனைகள் என்று ஆசிரியர் கருதியவை பின்னிப் பின்னி எழுதப்பட்ட 48 பக்க அளவிலானவையென்று புரிந்து கொள்ளும்பட்சத்தில் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஆனால் அப்படி மகிழ்ச்சியடைவார்களா என்பதுதான் தெரியவில்லை. காரணம், கவிஞரைப்போலவே அனைத்து சார்வாளர்களும் ஏதாவதொரு வகையில் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை அல்லது இயக்கத்தை குறைகளற்ற ஒன்றாகப் பார்க்கும் முயற்சியையே மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சிகள், சித்தாந்த நெடுஞ்சாலைகள் முழுக்க ஆங்காங்கே செத்துக் கிடக்கின்றன.
ஆசிரியரால் நூலில் எழுதப்பட்ட முரண்பாடுகள், முதல் வாசிப்பில், தலைப்பில் முன்வைத்த உன்னதம் போன்ற கருத்தியலுக்கு இஸ்லாம் எதிர் என்பதுபோல் தோற்றம் காட்டினாலும் பிற்பாடு ஆணாதிக்க மனோபாவத்தைக் குறை சொல்வதான சரியான, பொதுத் தளத்திற்கு வந்து சேர்கிறது.
முதலில் பெண்ணியம் குறித்த சரியான கருதுகோள் எதுவும் பெண்ணியவாதிகளால் இதுவரை முன்வைக்கப்பட்டவில்லையென்பதைப் புரிந்து கொள்வோம். வைக்கப்பட்வைகளில் பெருமளவும் ஆண்குறி பெண்ணியவாதிகளால் சொல்லப்பட்டவைதான். இவர்களைப் பொறுத்தவரை பெண் சார்ந்த பிரச்சனைகளின் பெரும் பகுதியும் ஆண் மனம் சார்ந்த கருத்தியல்களால் உருவானவை என்பது. உயிரியல் இயக்கம் சார்ந்த எழுச்சி பெற்ற ஆணுறுப்பை ஆதிக்கத்தின் குறியீடாகவும் அதே தேவையைச் சார்ந்த பெண்ணுறுப்பை அடிமைத் தனத்தின் குறியீடாகவும், ஆணின் வெளிப்படையான பாலியல் இச்சையைக்கூட இம்மனோபாவத்தின் வெளிப்பாடென்றும் சித்தாந்தத் தளத்திற்கு இவர்கள் சுமந்து கொண்டு வருகிறார்கள். டார்வின் சித்தாந்தத்திற்கும் மதக் கருத்திற்குமிடையிலான அறிவியல் மற்றும் அறியாமை நிரம்பிய பெரும் இடை-வளியின் அடிப்படையும் இதுதான்.
நுகர்வு கலாச்சாரத்தில் வாழும் மனிதன் உடன்பாடுகளற்ற பாலியல் உறவையே நாடுகிறான். இதில் மதம் குறுக்கீடும்போது ஒரு மதநம்பிக்கையாளன் இதிலிருந்து விலகி பாலியல் தொடர்பில் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகிறான். ஆனால் பொருளியல் அவனை இதற்கு அனுமதிக்க மறுக்கிறது.
ஒரு புறம் பாலியல் ஒழுக்கத்தையும் பலதார மணத்தையும் கருத்தியல், சார்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம். மறுபுறம் தன்னளவில் வெகுதாரமணத்தை அனுமதிக்க இயலாத பொருளியல் நிர்பந்தம். கருத்தியலுக்கும் நடைமுறைக்குமிடையிலான இந்த ஊடாட்டம்தான் குடும்பக் கட்டுப்பாடு குறித்த பிரச்சினையிலும் நிகழ்கிறது. இதில் அரசியல் லாபம் காண முனைபவர்கள் மதப் பண்டிதர்களிடம் சென்று இவற்றை கேள்விகளாக முன்வைத்து அரசியல் செய்வதற்கான பதிலை பெற்று பிரச்சாரம் செய்கின்றனர்.
மேற்கத்திய நாடுகளில் பெப்சிக்கும் கோக்குக்கும் அடுத்து இன்று முக்கியமாக விளம்பரம் செய்யப்படுவது இஸ்லாமிய விஷயங்களாகவும் இந்தியச் சூழலில் இது ஓட்டு வாங்குவதற்கு சிறந்த சாதனமாகவும் மேலும் பயன்படுகிறது. ஆனால், இந்த சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலைகளை கணக்கில் கொள்ளாமல் சிந்தனையாளர் அரங்கில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டாகவும் அறிவு ஜீவிகளுக்கு இஸ்லாமிய விஷயங்கள் பயன்படுகின்றன.
தலாக் பிரச்சினையைப் பொறுத்தவரை இஸ்லாம் தெளிவான வரையறைகளை வைத்திருக்கிறது. இஸ்லாமியர்கள் மிகத்திறமையாக இந்த வரத்தை சமூக சாபமாக நடைமுறைக்கு மாற்றியிருக்கிறார்கள். இந்த வரத்தை சமூக சாபமாக நடைமுறைக்கு மாற்றியிருக்கிறார்கள். மிகக் கடுமையான தலாக் விதிகளைக் கடைபிடித்து ஒருவன் தன் மனைவியை தலாக் செய்து விடும்பட்சத்தில் அவன் மனம் திருந்தினாலும் அவளை இன்னொருவனுக்கு உடல்ரீதியாக சமர்ப்பிக்காமல் திரும்பப் பெற இயலாது.
இங்கே எழும் நியாயமான கேள்வி; ஒப்பந்தத்தை மீறியதற்கான தண்டனை என்பதுபோல் பிடித்தம் போக மீதிதான் கிடைக்கும் என்று சொல்வதற்கு பெண் என்பவள் வெறும் ஒரு பண்டமா என்ன. இந்தப் பிடித்தத்தை எடுத்துக் கொள்ள பெண் உடன்படாதபோது சட்டம் என்ன சொல்கிறது? இங்கேதான் மதமும் அது உருவான காலகட்டமும் பெண்ணியம் சார்ந்து கேள்விக்குள்ளாக வேண்டும். இது குர்ஆனை மறுவாசிப்புக்குட்படுத்தும் பட்சத்தில் தீர்ந்து விடும் என்பதான முடிவுக்கு ஆசிரியர் எப்படி வந்து சேர்ந்தார் என்பது ஆச்சரியம் தருகிறது. நூலாசிரியர் மேலும் ஒரு இடத்தில் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்துவதை திருத்துவதாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்று சொல்லியிருப்பதை வழக்கம்போல் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு பெண் தன் கணவனை குலாஅ எனும் மணவிலக்கு செய்வதனால் அதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டுமென்பதும் தன் மனைவியை தலாக் செய்வதனால் அதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டியதில்லை என்பதுவும் மேலோட்டமான பொதுவான விமர்சனத்திற்குள்ளாகிறது. ஒரு ஆண், பெண் மீது சுமத்தும் பழி எப்போதுமே அவளது பாலியல் தன்மை பற்றியதாகவே இருக்கிறது. இதற்கான சமீபத்திய உதாரணம் குஷ்பு பிரச்சினை. பெண்ணுக்கு மறுமணம் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதன் எதிர் விளைவுகளை நடைமுறை சார்ந்து புரிந்து கொள்ளவும் விவாதிக்கவும் வேண்டும். இதைச் சொல்பவனுக்கு சிந்தனையாளர்களின் பேரரங்கில் பார்வையாளனாக நுழையும் அனுமதியைக்கூட நீங்கள் தர மறுக்கலாம் என்பது வேறுவிஷயம்.
உத்திரபிரதேசத்தில் நடந்த இம்ரானா விவகாரத்தில் குறிப்பிட்ட சம்பவம் பற்றி மார்க்க அறிஞர்களிடம் கருத்து ஆராயப்பட்டது. அவர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்தார்கள். வழக்கம்போல் அது தவறான கருத்தாக இருந்தாலும் வெறும் கருத்து மட்டும் தான் தீர்ப்பல்ல. எப்போதும்போல அது ஊடக வியாபாரத்திற்குப் பயன்பட்டதுடன் அவர்களது அரசியலும், சுவாரஸ்யம் கருதி செய்தியை விரிவாகத் தர விரும்பாத அதன் சுதந்திரமும் இங்கே முழு அளவில் பயன்படுத்தப்பட்டது. ஆசிரியரும் இதை ஏனோ ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு என்றேதான் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருவன் தூக்கத்தில் தலாக் தலாக் என்று உளறியதாகவும் அந்தத் தலாக் செல்லுபடியாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறிவிட்டதாகவும் மிக அண்மைக்காலத்தில் பத்திரிகை வியாபாரம் நடந்தது. இந்தச் செய்தியின் நம்பகத் தன்மை குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. அச்சில் வெளியான செய்தி பொய்யாக இருக்காது எனும் கடந்தநூற்றாண்டின் தொடக்க கால பொது மனோபாவம், நோச்டால்ஜியா எனும் பெயரில் அறிவு ஜீவிகளிடம் ஆழமாக வேரூன்றியிருக்கலாம்.
பெரும்பாலும் தனது பழைய கவிதைகளின் மையப் புள்ளிகளைத் தொட்டு புதிய வலையை பின்னியிருக்கிறார் நூலாசிரியர் ரசூல். சிலந்தி வலைபோல் மிக மெல்லியவிவாதங்கள். இதை நுட்பக் கூறுகள் என்றும் நுட்பக் கோளாறுகள் என்றும் வகைப்படுத்தலாம். சமூக ஓட்டத்தில் எப்போதுமே கரையொதுங்கிக் கிடக்கும். நுட்பங்கள் மொழியின் போதாமைகளை நம்பிக்கைச் சரட்டில் பிணைப்பது, சமூக வாழ்வில் தீண்டப்படாமல் கிடக்கும். அகீகா போன்ற விஷயங்களை விவாதப் புள்ளியாக்குவது நுட்பக் கோளாறுகளின் வகைப்பட்டவை என்பதற்கு மேல் எதுவுமில்லை.
பர்தா பிரச்சனையைப் பொறுத்தவரை இஸ்லாமியப் பெண்களின் ஆடை வடிவமைப்பாளர்களாக தங்களை முன் நிறுத்துவதற்கு தலிபான்களுக்கு மட்டுமல்ல, எவருக்குமே உரிமையில்லை.
தர்கா கலாச்சாரத்தில் ஏர்வாடி மாதிரிகளையும் அதன் பின்னணிகளையும் பிரித்துப் பார்க்க ஆசிரியர் முன் வரும் பட்சத்தில் அவரது கருத்து அனைவருக்கும் உடன்பாடானதுதான்.
தமிழ்வழித் தொழுகையை வலியுறுத்தும் ஆசிரியர் தன்னால் தவ்ஹீது பிராமணர்கள் என்று எள்ளி நகையாடப்பட்டவர்களுடன் இவ்விஷயத்தில் வெளிப்படையாக இல்லையென்றாலும் ஒத்தியல்பு கொண்டிருப்பது அவரது பரந்த மனோபாவத்தை காட்டுகிறது.
இஸ்லாமிய விஷயங்களுக்கு இருக்கும் சந்தை மதிப்பையும் உலக அளவிலான ஊடக அரசியலையும் அதன் வானளாவிய சுதந்திரத்தையும் சர்வ தேச அரசியலையும் பின்னணியாகக் கொண்டு இதுபோன்ற விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமானது.
மதக்கருத்தாக்கங்களை பிற மதக் கருத்தாக்கங்களுடன் ஒப்புமைப்படுத்திப் பார்ப்பதுவும் வாழ்வியல் சார்ந்து ஆய்வுக்குட்படுத்துவதும் தான் பொழுதுபோவதற்கு சிறந்த சாதனமாக இருக்க முடியும். உயிரியல் ஆயுதங்களும், அணு குண்டுகளும், இயற்கை சீர்கேடும், பேரழிவும், குறிப்பாக அமெரிக்காவும் இருக்கும்வரை மதங்களையும் கடவுளர்களையும் தவிர்த்து மனிதன் வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கிறான். மதங்களை அவற்றிற்கான இடத்தில் அமர்த்தி விடுவோம். நகரப் பேருந்துகளைப் போல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சித்தாந்தங்களுடன் ஒப்புமைப்படுத்தி அதில் திருத்தங்களை மேற்கொண்டால் பண்டைய பாரசீகம்போல் மாதம் ஒரு மதம் வெளியாவதுடன் நிலைமை இன்னும் மோசமாகி விடக்கூடும்.

ஹெச்.ஜி.ரசூல், இஸ்லாமிய பெண்ணியம்,
வெளியீடு பாரதி புத்தகாலயம், அண்ணாசாலை, சென்னை.

Series Navigation

அரங்கு : சில பகுதிகள்

அரங்கு : சில பகுதிகள்