செந்தமிழ் நாடெனும் போதினிலே

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

நாகூர் ரூமி



நான் சின்னப் பிள்ளையாக இருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி தினமும் என் வீட்டில் நடக்கும். இடுப்பில் ஒரு கூடையைத் தூக்கி வைத்துக் கொண்டு காலையில் ஒருத்தி வருவாள். கறுகறுவென இருப்பாள். நீளமான மூக்கு. நெட்டையாகவும் இருப்பாள். மூக்குத்தி போட்டிருப்பாள். மருமகளே வந்திட்டியா என்றுதான் என் பாட்டி அவளைப் பார்த்ததும் சொல்லும். நானும் என் பாட்டியைப் பின் பற்றி மருமகளே என்று அவளை அழைப்பேன். நான் அப்படிச் சொன்ன போதெல்லாம் பற்களெல்லாம் தெரிய அவள் சிரிப்பாள்.

நான் அப்போது பள்ளிக்கூட மாணவன் என்று நினைக்கிறேன். என் கையில் செலவுக்கு பாட்டி கொடுத்த காசு எப்போதும் கொஞ்சம் இருக்கும். கிணற்றடியைச் சுற்றிக் கொண்டு அவள் எங்கள் வீட்டுக் கழிவறைக்குள் சென்று அள்ளி விட்டுத் திரும்பும்போது பாட்டி ஐந்து காசோ பத்து காசோ கொடுத்து விடும். நான் என் வீட்டு சந்துக்குள் சென்று நாலணா கொடுப்பேன். பாட்டிக்குத் தெரியாமல். என் கன்னத்தை சொடக்கு விட்டுவிட்டுப் போவாள் மருமகள்.

அப்போதெல்லாம் அவள் ஜாதி என்ன, தோட்டி என்றால் யார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாத புனிதமான கால கட்டம். தோட்டி, பறையன் என்ற சொற்களைச் சொல்வதுகூட சட்டத்திற்குப் புறம்பானது என்று ஆகிவிட்ட காலமிது.

ஆனாலும் எதுவும் ஒழிந்துவிடவில்லை என்பதுதான் நிஜம். தோட்டி துப்புரவுத் தொழிலாளியாகி விட்டார். பறையன் என்பது தலித் என்றாகிவிட்டது. சொற்கள் ஒழிந்து விட்டன. அவற்றின் பின்னால் இருந்த அவலம் ஒழியவில்லை.

சமீபத்தில் ஒரு குறும்படம் பார்த்தேன். இரண்டு பகுதிகளாக எடுத்திருக்கிறார்கள். மதுரை மாநகராட்சியில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களைப் பற்றிய படம். ஆனால் அப்படிக்கூடச் சொல்லிவிட முடியாது. ஒட்டுமொத்தமாக ஒளிரும் இந்தியாவை, குறிப்பாக தமிழ் நாட்டைப், பற்றிய படம் என்றுதான் சொல்ல வேண்டும்.

முதல் பகுதியில் மாரியம்மாள் என்ற ஒரு துப்புரவுத் தொழிலாளி ஒரு தெருவில் மலம் அள்ளுவதையும் அதைக் கொண்டுபோய் கொட்டிவிட்டு, கைகால்களைக் கழுவிக் கொண்டு காபி அல்லது டீ சாப்பிடுவதையும் காட்டுகிறார்கள். அதில் தெரியவரும் பல உண்மைகள் மனசாட்சி உள்ள யாருக்கும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும்.

நீளமான ஒரு தெரு. கீழத்தெரு என்று பெயராம். கோவில் சந்து என்றும் சொல்கிறார்கள். ஏதோ ஒரு கோவிலின் மதில் சுவருக்கு அந்தப் பக்கமிருக்கும் தெரு. ஆனால் அது தெருவாக இல்லை. ஒரு நீளமான கக்கூஸாக இருக்கிறது. தெரு முழுக்க மஞ்சள் அசிங்கம்தான். காதலுக்கு மரியாதை மாதிரி கடவுளுக்கு மரியாதை.

சாம்பலைக் கொட்டிக் கொட்டி அதை அள்ளும் மாரியம்மாளிடம் அது தெருவா அல்லது கக்கூஸா என்று கேட்கிறார் வீடியோ எடுப்பவர். தெருதான் ஆனால் மக்கள் அதை கக்கூஸாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார் அள்ளிக் கொண்டே. ஏன் கக்கூஸ் அருகில் இல்லையா என்ற கேள்விக்கு மூன்று கழிப்பிடங்கள் இருப்பதாகவும் ஆனால் ஆங்கு யாரும் போவதில்லை என்றும் சொல்கிறார்.

அவர் சொல்லிக் கொண்டும் அள்ளிக் கொண்டும் இருக்கும்போதே அது தெருதான் என்று சொல்லும் விதமாக, மூக்கை தாவணியால் பொத்திக் கொண்டு ஒரு பெண் ஏதோ காய்கறி, கருவேப்பில போன்ற சமாச்சாரத்துடன் — சமையலுக்கு? — சென்று கொண்டிருக்கிறார். சீருடையணிந்த ஒரு பெண் குழந்தை பள்ளிக் கூடத்துக்குப் போகிறது. ஒரு பெரியவர் அந்தப் பக்கமாக போகிறார். சில சிறுவர்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே கர்ம சிரத்தையாக அங்கேயே உட்கார்ந்து தெருக்கடனைக் கழிக்கிறார்கள். அந்தத் தெருவைக் கடக்கும் மனிதர்களில் மூக்கைப் பொத்தாத ஒரே ஆள் மாரியம்மாதான். பழகிவிட்டது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் கூறுகிறார்.

ஏன் என்று கேட்பதற்கு, தன் பிள்ளைகளைக் காப்பாற்ற என்று பதில் வருகிறது. கணவனைப் பற்றிய கேள்விக்கு, அவர் குடித்துக் குடித்து உயிரை விட்டுவிட்டார் என்று பதில் கிடைக்கிறது. சம்பளம் பற்றிய கேள்விக்கு மாதம் 3000 ரூபாய் என்கிறார். கடன் இருக்கிறதா என்ற கேள்விக்கு பிள்ளைகளின் திருமணத்துக்காக பத்தாயிரம் தேவர் ஜாதியைச் சேர்ந்த பணக்காரரிடம் கடன் வாங்கியிருப்பதாகவும், அதில் வட்டிக்காக மாதம் ஆயிரம் ரூபாய் போய்விடுவதாகவும் சொல்கிறார்.

மலம் அள்ளப் பிரத்தியேகமாக ஏதும் பொடி கிடி மாநகராட்சி தருவதில்லையா என்ற கேள்விக்கு இல்லை என்றும், மந்திரி கிந்திரி வரும் நாட்களில் மட்டும் கொஞ்சம் பொடி கொடுத்து போடச் சொல்வார்கள் என்றும் சொல்கிறார். பொடிவைக்காத பேச்சு. சாம்பலும், மலமள்ளும் தட்டும்கூட தாங்களே ஏற்பாடு செய்து கொள்வதுதான் என்றும், வாளி மட்டுமே மாநகராட்சி தருவ்தாகவும் சொல்கிறார்.

அந்த நீண்ட தெரு முழுக்க இரண்டு பக்கமும் கிடக்கும் கழிவுகளையெல்லாம் சாம்பலைக் கொட்டிக் கொட்டி நிறம் மாற்றி பின் அள்ளி வாளியில் வைத்து தலையில் தூக்கிக் கொண்டு கொஞ்ச தூரம் நடந்து சென்று தயாராக நிற்கும் ஒரு மாந்கராட்சி வண்டியில் கொடுக்கிறார். அதில் இருப்பவர்கள் அதை வாஙகி உள்ளே கொட்டிவிட்டு வாளியை அவரிடம் கொடுக்கிறார்கள். பின் மறுபடியும் அள்ளப் போகிறார். இப்படியாக குறைந்தது மூன்று முறை அவர் செய்ய வேண்டியிருக்கிற்து. பின் கைகால்களை கழுவிக் கொண்டு கடையில் போய் டீயோ காபியோ வாங்கிக் குடிக்கிறார்.

இரண்டாம் பகுதியில் மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தில் மலமள்ளும் ஆண்களையும் உள்ளே கழிவறைகளை ஒரு பெண் துப்புரவு செய்வதையும் காட்டுகிறார்கள். பின்னணியில் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாரதி பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிக்கொண்டிருக்கிறார்! இரண்டாம் பகுதியின் தொடக்கத்தில் ‘மகாகவி பாரதி & இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெருமையுடன் இணைந்து வழக்கும்’ என்று தொடங்குகிறார்கள்! அங்கதத்தின் உச்சமென்று இதைச் சொல்ல வேண்டும். பாதாளச் சாக்கடைக்குள் ஒருவர் இறக்கி விடப்பட்டு அங்கே துப்புரவு செய்வதையும் காட்டுகிறார்கள்.

முதல் பகுதியின் ஆரம்பத்தில் சில தகவல்கள் தரப்படுகின்றன.

மதுரை மாநகராட்சியில் 2700 முழு நேர சுகாதாரப் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள். 35 விழுக்காடு பெண்கள். ஆஸ்துமா, காலரா, புற்று நோய், மஞ்சள் காமாலை, மலேரியா, மாலைக்கண் நோய், யானைக்கால் வியாதி, ஆகியவற்றால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். முதல் பகுதி முடியும்போது ‘மறுபக்கம் நவம்பர் 2003’ என்றும் இரண்டாம் பகுதி முடியும்போது ‘மறுபக்கம் டிசம்பர் 2004’ என்றும் போடுகிறார்கள்.

இதன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு இயக்கம் ஆகியவற்றை அமுதன் R.P. என்பவர் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஓடும் இதற்கு அதிர்ச்சியூட்ட வேண்டும் என்றே ‘பீ’ என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ளது.

இதைப் பார்த்தபோது எனக்கு மகாத்மா காந்தி நினைவுக்கு வந்தார். காரணம் வேறொன்றுமில்லை. அடுத்தவன் வீட்டு மலத்தை அள்ளுவதை ஒரு வேலையாக வைத்திருந்தவர் அவர்தான். மாரியம்மாள் அள்ளும் அசிங்கங்களையெல்லாம் பார்க்கும்போது, டேய் மனிதா, நீ பெருமைப் பட்டுக் கொள்வதற்கு எதுவுவே இல்லையடா, ஏனெனில் கடைசியில் உன்னிடமிருந்து வெளிப்படுவதெல்லாம் இதுதான் என்று சொல்லும் கடவுளின் மஞ்சள் சிரிப்பாக எனக்கு அது படுகிறது.

இந்த துப்புரவுத் தொழிலாளர்களையெல்லாம் மகாத்மா என்று சொல்லிவிடலாமா என்று கேட்டால் அது ஒருவிதமான அயோக்கியத்தனம் என்று கடுமையாக நான் மறுப்பேன். ஒரு பட்டத்தைக் கொடுத்து இழிவிலேயே மனிதனைத் தொடர வைக்கின்ற அரசியல் அது.

ஒரு தெருவையே கழிவறையாக்கும் மக்களின் மனநிலை எப்போது மாறும்? சுய மரியாதை என்றால் என்னவென்றுகூடப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மனிதனைக் கசக்கும் வறுமை எப்போது ஒழியும்? தொழில் நுட்பத்தின் உதவி கொண்டு இந்தக் கழிவுகளையெல்லாம் நாம் எப்போது அகற்றப் போகிறோம்? அசிங்கத்தை வெளியே அனுப்பிக் கொண்டிருக்கும் நாம் அசிங்கத்திலிருந்து எப்போது வெளியே வரப் போகிறோம்?

அதுவரை செந்தமிழ் நாடெனும்போதினிலே உன் நாசியைப் பொத்திக்கொள் நல்லவனே.
——————————————————————————
ruminagore@gmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி