எழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு!

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

த.சிவபாலு எம்.ஏ


பண்பட்ட எழுத்தாளப் பெருமகனை இழந்து புண்பட்டுக் கண்ணீர்வடிக்கின்றாள் தமிழன்னை
செயலாளர் த.சிவபாலு எம்.ஏ.
உதயன் விழா 2004க்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்திருந்த திரு,திருமதி சோமகாந்தன் பத்மா தம்பதியினருக்கு கனடிய மண்ணில் பாராட்டுவிழா எடுக்கப்பட்டது மனக்கண்ணிலே நேற்று நடந்தது போன்று நினைவலைகளில் தோற்றமளிக்கின்றது. அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியினை மனது ஏனோ ஏற்க மறுக்கின்றது. எமக்கு வேண்டியவர்கள் இறக்கக்கூடாது என்பதில் சுயநலமா அல்லது அவர் தமிழ் உலகிற்காக வாழவேண்டியவர் என்பதனாலா? மறந்துவிடமுடியாத நற்பண்புள்ளவர், குழந்தைமனத்தோடு பழகுகின்ற பண்பு படைத்தவர் அமரர் சோமகாந்தன். கனடிய மண்ணிற்கு மீண்டும் உதயன்விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்றநோக்கத்தோடும் தனது கனடிய பயணக்கட்டுரையினைத் தொகுத்து நூலாக்கி அதனைக் கனடிய மண்ணில் வெளியிடவேண்டும், இங்கு உள்ள நண்பர்களைக் குறிப்பாக அதிபர் பொ.கனகசபாபதி, கவிநாயகர் வி.கந்தவனம், உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் கதிர் துரைசிங்கம், குரு அரவிந்தன், க.நவம், பிறேம்ஜு போன்றவர்களை எல்லாம் கண்டு கதைக்கவேண்டும் என மிகுந்த ஆர்வத்தோடு என்னோடு ஒரு சிலதினங்களுக்கு முன்னர் தொலைபேசியில் அழைத்து உரையாடியது இன்றும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்;கின்றது. நண்பர் ஆ.பொ.செல்லையா அவர்கள் இறப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசியில் அழைத்து எனக்கு ‘சிவா போட்டுவாறன்’ என்ற இறுதி வார்த்தைகள் இன்றும் எனது ஒலிப்பதிவு நாடாவில் ஒலித்துக் கொண்டிருப்பது போன்று சோமகாந்தனின் “எப்படி இருக்கின்றீர்கள்” என்ற வார்த்தையின் சுகந்தம் எத்துணை இன்பத்தைத் தருவது. தொலைபேசியில் அழைத்தால் அவரோடு கதைக்கும்போது பொழுதுபோவதே தெரியாத அளவிற்கு பலவிடயங்களைப் பற்றியும் கதைப்பார். எழுதுவதனை எல்லாம் நூலாக்கவேண்டும் பதிவாக இடம்பெற வேண்டும் அது சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என புத்திபுகட்டுவார். எனது ‘உலகுக்க உழைப்போம்’ கவிதைத் தொகுதி;யினை ரவி தமிழ்வாணன் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளி;யிட்ட வேளை எனது சார்பில் முதற்பிரதியினை வாங்கிச் சிறப்பித்தவர் சோமகாந்தன் என ரவி தமிழ்வாணன் என்னிடம் குறிப்பிட்டபோது எழுத்தாளர்களை ஊக்;குவிக்கவேண்டும் என்னும் நோக்கம் அவரிடம் குடிகொண்டடிருந்ததை அறியமுடிந்தது. அது மட்டுமன்றி அவர் இங்கு வந்திருந்தபோது அவர் கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியில் கல்விபயின்றதனையும் ஐ.சி. மாஸ்ரர் குடும்பத்தினர் தன்னை ஊக்கப்படுத்தியமையையும் நினைவு கூர்ந்தார். நான் ஐ.சி.யின் இரண்டாவது புதல்வர் அம்பிகாவரன் இங்குதானே இருக்கின்றார் என்றேன். அவரோடு தொடர்பு கொள்ளவேண்டும் எனத் தனது ஆர்வத்தைக் காட்டினார். அவருக்கு வைத்த பாராட்டுவிழாவிற்கு நான் அம்பிகாவரனை அழைத்திருந்தேன். அவர் மட்டிலா மகிழ்வோடு தனது குருவைக் கண்டதற்குச் சமனாக அவரோடு மிகுந்த ஆர்வத்தோடு கதைத்து மகிழ்ந்ததைக் கேட்டேன். தான் ஒரு பெரும் எழுத்தாளனாக வளர்ந்துவிட்ட நிலையிலும் எந்தவித பெருமையும் பாராட்டாது எல்லோருடனும் சரி சமனாகப் பழகும் பக்குவம் கொண்டவர் சோமகாந்தன் என்பதனை அவரோடு பழகியவர்கள் நன்கு அறிவார்கள்.
இலங்கையில் இருந்தகாலத்தில் எனது சகோதரி பார்வதியோடு நன்கு பழகியவர்கள் சோமகாந்தனும் அவருது துணைவியார் பத்மா அவர்களும் ஆனால் எனக்கு அந்தப் பாக்கியம் கனடாவில்; தான் கிட்டியது. எழுத்தாளர் இணையத்தின் சார்பில் அவருக்கு ஒரு பாராட்டு விழா இடம்பெற்றது. அந்தவிழாவைப் பற்றி எழுதியபோது அவரைப்பற்றி உதயன் பத்திரிகையில் எழுதியது நினைவுக்கு வருகின்றது. “கனடிய மண் தாராளமனது கொண்டது. அது யாருக்கு, ஏன், எதற்கு என்ற நோக்கமின்றி விழாக்களை எடுத்துவருகின்றது. தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை இது விதிவிலக்கல்ல.என்பதுமட்டுமன்றி மலிந்தும் காணப்படுகின்றது. ஆனால் இங்கே நடைபெறும் இந்த எழுத்தாளத் தம்பதியினருக்கான பாராட்டுவிழா உண்மையிலேயே மிகவும் பெறுமதிவாய்ந்ததாக தகைசார்ந்த ஒரு இலக்கியத்தம்பதிகளை இனங்கண்டு பாராட்டப்படுவது சாலப்பொருத்தமானதும், வரவேற்கத்தக்கதுமே! கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எழுத்துத்துறையில் தனக்கெனத் தடம்பதித்த ஒரு எழுத்தாளராக மதிப்பிற்குரிய திரு. சோமகாந்தன் அவர்கள் திகழ்கின்றார். அவர் எழுதுவதோடுமட்டும் நின்றுவிடாது எழுதுவோரை ஊக்கப்படுத்தும்வகையிலே தனது உடல்நலத்தைக்கூடபாராது பல முயற்சிகளை முன்நின்று உழைத்துவந்த, வருகின்ற ஒரு இலக்கியச் செம்மல் என்றால் தவறாகாது.” என நான் அந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தமையை ஒரு முறை இரைமீட்டுப்பார்க்கின்றேன். ஒரு சில மணி நேரம்தான் அவரோடு உரையாடினேன். ஆவர்பால் தீராத காதல் ஏற்பட்டுவிட்டது. அன்போடு அழைத்தேன் அழைப்பை ஏற்று என் இல்லத்திற்கு வந்திருந்து பொழுது போவதே தெரியாமல் ஐந்து ஆறு மணித்தியாலங்களாகக் கதைத்துக்கொண்டிருந்தோம். அவ்வளவிற்குச் சாதாரணராக அவர் பழகும் இயல்புகொண்டவர்.
யாழ் குடாநாட்டில் வடமராட்சிப்பகுதியில் கரணவாய் என்னும் கிராமத்தில் கலட்டி என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் இன்று தமிழ் பேசும் நல்லுலகெங்கும் பேசப்படும் எழுத்தாளர் ‘சோமகாந்தன்’. அவர் தனது ஆரம்பக் கல்வியை கரணவாய் குருக்கள் பாடசாலையில் ஆரம்பித்தார் அவருக்கு சைவக்குருக்காளவிருந்து எழுத்தறிவித்த திரு. வைத்தியநாதக் குரக்கள், செவ்வந்திநாதக்குரக்கள் போன்றோர் கல்விபெற ஊக்கம் தந்தNதூடு பலவித பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு கல்வி கற்க ஊக்கமும் தந்தனர்.
சாதாரண ஒரு அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.சோமகாந்தன் அவர்கள் 1930களில் அந்தணர் குடும்ப வாழ்க்கை எத்தகையது என்பதனை சற்றுத் திரும்பிப்பார்த்தால் தெரியும். ஒரே ஒரு அந்தணர் குடும்பம்தான் கலட்டி என்றழைக்கப்படும் அந்தக் கிராமியச் சூழலில் இருந்துவந்துள்ளனர். தண்ணீர் அள்ளிக் குடிக்கவேண்டும் என்றாலும் தங்கள் கையையே நம்;பியிருக்கவேண்டிய சாதியமைப்பின் பின்புலம். தோட்டம் செய்கின்ற வாய்ப்புக்குள் குறைந்த ஒரு கிராமியச்சூழலில் வளர்ந்தவர் அவர். யாழ்மாவட்டத்தில் மிகப் பிரபலமான கோவில்களில் சிவாச்சாரியார்களாக இருந்தவர்கள் தவிர மற்றவர்களின வாழ்கைத்தரம் மிகமோசமானதாக இருந்த ஒரு காலகட்டத்தில் அவர் பிறந்துவளர்துள்ளார். தனது இடைநிலைப் படிப்பை கரவெட்டி விக்னேஸ்வரக்கல்லூரியில் ஆரம்பித்து பின்னர் தன்முயற்சி காரணமாக மகாஜனக்கல்லூரிக்குச் சென்று முன்னுக்கு வந்தவர். விக்னேஸ்வரக்கல்லூரியில் கல்வி கற்கும்காலமே இவரின் எழுத்துப்பணிக்கு வித்திட்ட களமாக அமைந்தது. அங்கு ஆசிரியத் தம்பதிகளாகக் கடமையாற்றிய ஐ.சி. மாஸ்ரர் அவர்களின் அரவணைப்பிலும் ஊக்குவிப்பிலும் இலக்கியத்தில் நாட்டமும், எழுதுவதற்கான ஆக்கத்திறனையும் பெற்றுக்கொண்டார் திரு. சோமகாந்தன் அவர்கள்;.
அவரது ஆரம்ப வாழ்வின் சூழல்தான் தனது கதைக்கு களமாகவும், அடித்தளமாகவும் அமைந்தது என்று கூறும் அவரிடம் பதிந்துள்ள சமூகப்பார்வை எத்தகையது என்பதனை நாம் உணர்ந்துகொள்ளலாம். மிக இளமை நினைவுகளோடு தான் கண்டு, அனுபவித்த பட்டறிவினை கருப்பொருளாக்கிய ஒரு கதைதான் “நிலவோ நெருப்போ” அவர் வாழ்ந்த சூழல் புகையிலை, மிளாகாய் மரக்கறித்தோட்டங்கள் சூழ்ந்த இடம். அங்கு குஞ்சர் கடை, மூத்த விநாயகர் கோவிலடி எனப்படும் இடங்களில் தோட்டக்காரருக்கான குழை உரமாக நிலத்திலே புதைக்கப்படும் குழைகளை இவ்வூரைச் சேர்ந்த சில இளம்பெண்கள் தலையிலே கட்டாகக்கட்டி விற்பதற்காகச் சுமந்து வருவார்கள். அவ்விதம் வரும் பெண்களிடம் தரகர்கள் அவற்றை வாங்கி வியாபாரிகளுக்கு பல இடங்களுக்கும் கொண்டு சென்று விற்பது வழக்கம். அவ்விதம் கொண்டுவரும் பெண்களில் இளமையும் அழகும் கூடியவர்களிடம் கூடிய விலைகொடுத்து குழைக்கட்டை வாங்கும் தரகர்கள் கபடநோக்கத்தோடு அவர்களுடன் நெருங்கிப்பழக முற்பட்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்று மூக்குடைபட்ட ஒரு கதைதான் ஷநெருப்போ நிலவோ| என்னும் கதை. இவ்விதமான உண்மைச் சம்பவத்தால் மனம் பாதிக்கப்பட் நிலையினை ஏழ்மையிலும் சீரிய வாழ்வினைக்கைக்கொள்ளும் பெண்ணினத்தின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றது அவரது முதலாவது கதை. இக்கதை அவருக்குப் பல பாராட்டுக்களைத் தேடித்தந்தது மட்டுமன்றி எழுத்துத் துறையில் முன்னேற ஊண்டுகோலாக அமைந்தது எனலாம். அவரது சிறுகதைத் தொகுப்பாக இது வெளிவந்து உடனேயே முடிவடைந்ததால் பின்னர் இரண்டாவது தொகுப்பையும் வெளியிட்டார்.
அடுத்து அவர் எழுதிய நூல் வரதர் வெளியீடாக “விடிவெள்ளி பூத்தது|” ஒரு ஆண்டிற்குள்ளேயே தமிழ் நாட்டில் மறுபிரசுரமானது. இற்றைக்கு 60-70 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட வடமராட்சிப் பிரதேச கிராமியச் சூழலைப் படம்பிடித்துக்காட்டுவதாக அது அமைந்தது. இந்நூலுக்கு வல்லிக்கண்ணன் அவர்கள் அணிந்துரை எழுதியது மட்டுமன்றி சிறந்த கதை எனவும் பாராட்டினார்.
இவரது எழுத்தாற்றல் அதாவது சமூக கட்டமைப்பற்றிய தெளிவான பார்வை பிரபல ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் கணேசலிங்கன் அவர்களைக் கவர்ந்தது மட்டுமன்றி முன்னுரையும் எழுதித்தர ஒப்புக்கொண்டு எழுதினார் என்றால் இவரது எழுத்து நடையைப் பற்றி குறிப்பிடவேண்டியதில்லை. பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் இவரது எழுத்தாற்றலை நயந்து பாராட்டத் தவறவில்லை. எழுத்துலகில் இவருக்கு அனுசரணையாக இருந்து ஊக்குவித்தவர்களுள் பேராசிரியர் க.கைலாசபதி அவர்களும், சிவத்தம்பி அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர் எழுதிய ஈழத்து இலக்கியம் – பல்துறை நோக்கு என்னும் நூல் ஈழத்து இலக்கியம் பற்றிய ஆய்வுக்கு வழிகோலியது என பேராசிரியர் அருணாசலம் அவர்களும் நுஃமான் அவர்களும் குறிப்பிட்டுள்ளமை கருத்திற்கொள்ளற்பாலதே. “பொய்கை மலர்” என்னும் ஆன்மீகப் பண்பாட்டு நூலை பேராசிரியர் நுஃமான் அவர்கள் பாராட்டியுள்ளார். இது மாவிட்ட புரம் கந்தன் ஆலயத்தில் ஆரம்பித்து கதிர்காமக் கந்தனிடம் சென்று முடிவடையும் பிரயாணக்கட்டுரையாக அமைந்துள்ளது. கரையோரப் பாதைவழியாக கதிர்காமத்திற்குச் செல்லும் முருக பக்தர்களின் பிரயாணத்தை விபரிக்கும் நல்லதொரு நூலாக இது அமைந்தது இதனோடு தொடர்புடையதாக ஜேர்மென சாமி என அழைக்கப்படும் பற்றிக் ஹரிசன் அவர்கள் நேரடியாக கரையோரப் பாதை மாற்கமாகப் பலதடவைகள் சென்றவர் என்பதும் அவர் மேற்கொண்டு குறும் விபரணத்திரைப்படம் பெரிதும் உதவியதும் எனலாம். இந்த யாத்திரைபற்றிய பிரயாணக் கட்டுரையை வாசித்த நேயர்கள் பலரிடமிருந்தும் பாராட்டுக்கடிதங்கள் கிடைத்தன. குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து பெருந்தொகையான வாசகர்கள் பாராட்டுக்கடிதங்களைப் பெற்றதோடு அவரை எழுத்துத் துறையில் தூண்டக் காலாக அமைந்ததெனலாம் எனப் பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் இவரது எழுத்துக்களைப் பலதடவைகள் பாராட்டிப் பேசியுள்ளதோடு எழுதியும் உள்ளார். ஈழத்திலும், தமிழகத்திலும் இவரது எழுத்தாற்றல் பிரபலமானது மட்டுமன்றி பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது என்பதுதான் வெளிப்படை.
சிறந்த ஒரு எழுத்தாளராகத் தன்னை வரையறுத்துக் கொண்ட சோமகாந்தன் அவர்கள் ஒருவானொலி விற்பன்னராகவும் திகழ்ந்தார். 60களில் வானொலியில் தத்துவச் சித்திரம், விபரணச் சித்திரம் என்பனவற்றைத் திருக்குறள், நாலடியார், திரிகடுகம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூகப்பார்வையினை முன்நிறுத்தி நடத்தி வந்தார். இவை ஒழுக்க விழுமியங்களை எமது சிறார்கள் பின்பற்றத் தக்கவகையில் அமைந்திருந்தமை பலரதும் பாராட்டை இவருக்குப் பெற்றுத்தந்தது.
“மழை பொய்த்து விட்டால்” என்னும் நிகழ்வு கலைஞர் கருணாநிதி அவர்களின் பாணியிலே திருவாளர்கள் மதியழகன், சண்முகரட்ணம் ஆகியோர் இலங்கை வானொலியில் பணியாற்றியவேளை செய்து வந்துள்ளார். இது பலரதும் பாராட்டைப் பெறவைத்ததோடு பிரபலமடையவும் செய்தது.
“நிகழ்வுகளும் நினைவுகளும்” என்னும் தலைப்பில் ஒரு பக்கத்தில் 3அல்லது 4 நிரைகளை நிரம்பும் வகையில் வாராவாரம் பத்திரிகையில் வெளிவந்த கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கிய விடயங்களின் தொகுப்பாக காந்தன் கண்ணோட்டம் என்னும் நூலாக கே.எஸ். சிவகுமார் அவர்களின் முன்னுரையுடன் வெளியாகியது. இது முக்கிய கதைகள், சம்பவங்களை உள்ளடக்கிய மிகவும் வாசகர்களால் வரவேற்கப்பட்ட தொடராக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
2000 ஆண்டில் இவரால் எழுதப்பட்ட ஷஈழுத் மிழருக்கு ஏன் இந்த வேட்கை|| என்னும் சமகால பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நூல் பெரும் வரவேற்றைப் பெற்றுள்ளது. பேச்சு வார்த்தை எப்போதும் பேரினவாதிகளின் பக்கமே நிற்கும் நிலையினைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது எனினும் அடுத்த அத்தியாயத்தினைப் பேச்சுவார்த்தையின் முடிவா அல்லது முறிவா என்பது பற்றி எழுதத் தீர்மானித்துள்ளார். தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பது அவர் அடிமனத்தில் ஆழப்பதிந்த விடயம் அது அந்தரங்கமாக ஆத்மாவைக் கேள்விகேட்டுக்கொண்டிருக்கின்றது. அக்கருத்தினை மக்கள் மத்தியில் தருவது பொருத்தம் என்னும் கருத்தினை அவர் கொண்டுள்ளார். அவர் எழுதத் தீர்மானித்துள்ள விடயம் அரசியல் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
ஆங்கலத்தில் அவர் எழுதி வெளியான நூல்களில் டுயமெய யனெ சுயஅயலயயெஅ 300 பக்கங்களைக் கொண்டது. வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் பத்மநாதன் அவர்களுடன் இணைந்து யுனெஸ்கோ நிதியுதவியுடன் ‘யுnஉநைவெ வுநஅpடந ழக ளூiஎய in ளுசை டுயமெய’ என்னும் சிதைந்துபோன சிவ ஆலயங்கள் பற்றிய நூலையும் எழுதினார்.
தமிழில் முதலாவது கைநூலை வரதரோடு இணைந்து 1970ல் வெளியிட்டார். ஆறுமுக நாவலர் நூற்றாண்டு மலர் வெளியீட்டுக் குழுவில் செயலாளராக விரந்து பணியாற்றி அந்த நூல் சிறப்பாக வெளிவரக் காரணமாகச் செயற்பட்டார்.
1974ல் தமிழ் சிங்கள எழுத்தாளர்களை இணைத்து பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்ட மண்டபத்தில் தமிழ் எழுத்தாளர்களை உலகு அறிய வைக்க பாரிய ஒரு மகாநாட்டை நடாத்த அரும்பாடுபட்டார். அதில் அவர் வெற்;றியும் கண்டார்.
1980இல் நீதியரசர் தம்பையா அவர்களின் தலைமையில் பாரதி நூற்றாண்டு விழாக்குழவின் தேசிய செயலாளராகப் பணியாற்றினார்.
1964இல் அ.ந.கந்தசாமி அவர்களின் ஆய்வின் முயற்சியினால் மகாகவி பாரதியவரகள் யாழ்ப்பாணத்துச் சாமி எனக்குறிப்பிட்டுத் தனது ஞானகுருவாகக் கொண்டிருந்த மோனம் அருளம்பலம் அவர்கள் பிறந்து வாழ்ந்த வியாபாரிமூலையில் விழா எடுத்து நினைவுச் சின்னமும் நிறவ அரும்பாடுபட்டார்.
1991ல்இவரது இலக்கியப் பணியைக் கௌரவித்து திருகோணமலை இலக்கிய நண்பர்களினால் ஷஇலக்கியக் குரிசில்| பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
1992 இல் நாவலர் சபையின் செயலாளர்நாயகமாகச் செயற்பட்டார். பேராசிரியர் க.கைலாசபதி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு நாவலர் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய பாரிய நூலை வெளியீடு செய்தார்.
1993ல் நீர்கொழும்பு இந்து இலக்கிய மன்றம் மேற்கொண்ட விழாவில் “தமிழ் மாமணி” என்னும் பட்டத்தினை முன்னைநாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்.
1994ல் இலங்கை கலாச்சார அமைச்சு தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அவர்வழங்கம் சேவையைப் பாராட்டி ஷதமிழ் ஒளி| என்னும் பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தது.
1962இல் சென்னையில் இடம்பெற்ற அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். இவ்விழாவிற்குப் பிரதம விருந்தனராக நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் வருகைதந்திருந்ததோடு இவரைப் பாராட்டினார்.
1995ல் பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற சேக்கிழார் விழாவில் கலந்துகாண்டார். இந்த விழாவில் ஷஷஇலங்கையில் பெரியபுராணம் ஏற்படுத்திய தாக்கம்|| என்னும் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து பாராட்டிப் பெற்றுக்கொண்டார்.
1996ல் ஈழத்து எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து தேசிய மகாநாட்டினைக் கூட்டி வல்லிககண்ணன், பொன் நீலன், தாமரை மகேந்திரன் ஆகியோரை அழைத்து கலந்துகொள்ளவும்வைத்தார்.
2001ம் ஆண்டு பொம்பேயில் இடம்பெற்ற சிம்மிய இயக்க மகாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். இங்குசென்றிருந்த சமயம் இதயநோய்க்கு உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனடாவில் தங்கியிருந்தகாலத்தில் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் இங்குள்ள ஆலயங்களில் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வரும்போதெல்லாம் அவருக்குப் பக்கபலமாக அவரோடு அங்கு சென்றிருந்து அவரின் சொற்பொழிவைக் கேட்பதோடு மட்டுமன்றி அவரைச் சதா ஊக்கப்படுத்துகின்ற ஒரு அருமையும் பெருமையும் உள்ள ஒரு பாசத்தின் தலைவனாகவே பத்மாஅவர்கள் அவரைக் கண்டு மனதிலே ஏற்றிப் பூசித்துவந்துள்ளார். பத்மா சோமகாந்தன் பெண்ணிய வாதியாக பெண்கள் விடுதலைக்காகப் போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1954ம் ஆண்டு தொடக்கம் அவர் எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார் எனினும் அவரது பார்வை சமுதாயத்தில் அடக்கப்பட்ட மக்கள்மீதே உள்ளது என்பது அவரது செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன. இவர் எழுதிய முதலாவது சிறுகதைக்கு முதலாவது பரிசு கிடைத்தது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவருக்கு பல உயர் பதவிகள் தேடி வந்தன எனினும் கணவனின் உடனிருக்கவேண்டிய விருப்பினால் அவற்றை ஏற்க மறுத்துள்ள அவர் இன்று கணவரின் இழப்பினால் பெருந்துயரில் ஆழ்ந்துள்ளார். ஈழத்து மாண்புறு மகளிர்; 25 பேர்களில் தங்கம்மா அப்பாக்குட்டி, கோகிலா மகேந்திரன் போன்றோரின் வரிசையில் இவரும் இன்று முன்னணியில் உள்ள ஒரு எழுத்தாளராவார். பெண்களுக்கான கல்வி மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றார். பெண்களின் குரல் என்னும் சஞ்சிகைக்குப் பொறுப்பாகவிருந்து அது வெளிவர ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார். வீரகேசரியில் பெண்கள், இளம்பிள்ளைகளுக்கான வழிமுறைகள், பற்றிய கட்டுரையினை பத்மா என்னும் பெயரோடு புதன்தோறும் எழுதி வருகின்றார். “கடவுளின் பூக்கள்” என்னும் கதைக்கு வில்வ தேவசிகாமணி பரிசு 1994இல் இவருக்குக் கிடைத்தது. 1997இல் இவர் எழுதிய பெண்ணியம் சார்ந்த “புதிய வார்ப்புக்கள்|” என்னும் நூலுக்கு மார்க்கா பரிசில் கிடைத்தது. இவர் எழுதிய “வெள்ளி மலர்கள்|” எனும் கதைக்கு இந்த பத்திரிகை விதந்துரை செய்தமை குறிப்பிடத்தக்கது. இன்றும் தமிழ் பாடவிதான ஆலொசகராகக் கடமையாற்றி வருகின்றார். ஆசிரியர்களுக்கு விரிவுரைகளும் செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘ஈழத்துச் சோமு’ எனப் பலராலும் அறியப்பட்ட ஒரு பண்பட்ட, புடம்போடப்பட்ட எழுத்தாளனை தமிழுலகு இழந்து நிற்கின்றது. அவரின் சேவைகள் பல பரிமாணங்களைக் கொண்டன. எந்த ஒழு எழுத்தாளனையும் இனங்கண்டு பாராட்டி, ஊ;ககப்படுத்துகின்ற பண்பு அவரிடம் குடிகொண்டுள்ள அவர் ஏனைய எழுத்தாளர்களில் இருந்து வேறுபட்டவராக மிக உயர்ந்து காணப்படுகின்றார். குழந்தைகளிடமாகட்டும் அல்லது சிறியவர்களிடமாகட்டும் மிகுந்த பணிவோடு கலந்துரையாடும் பண்பு அவரின் சிறப்புக்களுள் ஒன்று. ஒரு முறை அவரோடு கதைத்துவிட்டால் போதும் பின்னர் அவரோடு தொடர்ந்து கதைக்கவேண்டும், தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்னும் மன நிலையை ஏற்படுத்துகின்ற வசியம் – கவர்ச்சியினை அவரிடம் நான் கண்டுகொண்டேன். இத்தகைய மனிதப் பண்பினை முதன்மைப்படுத்தி நின்ற சோமகாந்தன் இன்று எம்மிடையே இல்லை. நெரு நெல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமைதான் உடையதே இந்த உலகு ஆயிற்றே! என்செய்வோம். பாரதி கண்ட மோனம் அருளம்பலவனார் எனப்படும் யாழ்ப்பாணத்துச் சுவாமியை வெளியுலகிற்குக் கொண்டுவந்ததோடு அவர் பிற்ந்த மண்ணில் அவருக்கு ஒரு நினைவுத் தூபியையும் எழுப்புவதற்கு முன்னின்று உழைத்தவர் சோமகாந்தன் எனின் அவரின் பணிபற்றி;ச் சொல்லவும் வேண்டுமோ. அவரின் கருத்துக்கள், எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரின் வழி செல்வதே அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும். குனடிய எழுத்தாளர் இணையத்தின் மூலம் அவர் வெளியீடு செய்ய முன்வந்த ‘கனடிய பயணக் கட்டுரை’ நூலை வெளியீடு செய்து அஞ்சலி செலுத்த தன்னாலான முழு முயற்சியினையும் மேற்கொண்டுள்ளது. தமிழ் எழுத்தாளர்களிடம் மட்டுமல்ல சிங்கள எழுத்தாளர்களாலும் போற்றப்படும் ஒரு தேசிய எழுத்தாளராக அவர் விழங்;கினார். தமிழ் உள்ளவரை அவர் புகழ் நிலைக்கும் என்பதற்கு அவரின் அரும்பணிகளே காரணமாகும்.

——————-

Series Navigation

த.சிவபாலு எம்.ஏ

த.சிவபாலு எம்.ஏ