அழகி

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

எஸ். பாபு



சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இங்கே தொட்டதெற்கெல்லாம் எமர்ஜென்சி பிரிவு தான். வெறும் காய்ச்சல் என்றாலும் மாலை ஐந்து மணிக்கு மேல் அல்லது வார விடுமுறை நாட்களில் டாக்டர் அப்பாண்ட்மென்ட் கிடைக்காது. நேரே எமர்ஜென்சிக்கு போக வேண்டியது தான். ஆனால் நான் அனுமதிக்கப்பட்டது காய்ச்சலுக்கு அல்ல. திடீரென்று நாக்கு பேச முடியாமல் இழுத்துக் கொள்ளும். மேலும் நாக்கு பற்களில் கடிபடத் துவங்கும். சில சமயம் ரத்தம் வரும் அளவுக்கு. கழுத்து தானாக பின்னுக்கு சாய்ந்து கொள்ள நாக்கு வெளித் தள்ளுவதும் உள் இழுப்பதுமாய் சிரமங்கள் சொல்லி மாளாது. ஆனால் ஊசி போட்டவுடன் பத்து நிமிடத்தில் சரியாகிவிடும். கடந்த ஒரு வருடத்தில் பல முறை இக்கோளாறு ஏற்பட்டு விட்டது. அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தாம்பரம், சென்னை அப்போலோ, இப்போது அமெரிக்கா என பல டாக்டர்களை பார்த்தாகிவிட்டது. தொடர்ந்த வைத்தியத்தால் நோய் சற்றே குறைந்திருந்தாலும் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. அக்கோளாறு மீண்டும் சமீபத்தில் ஏற்பட்டதால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

நோயாளிகளின் மீதான மெத்தனத்திலும் அலட்சியப் போக்கிலும் அமெரிக்க ஆஸ்பத்திரிகள் நம்ம ஊர் ஆஸ்பத்திரிகளுக்கு சற்றும் சளைத்தவை அல்ல என்று நினைக்கிறேன். என்னை படுக்கையில் கிடத்திவிட்டு போயே போய் விட்டார்கள். ரெம்ப நேரமாக யாரையும் காணவில்லை. பேச முடியாததால் ‘ம்ம்ம்ம்ம்ம்ம்…….’ என்று என்னால் முடிந்த அளவு ஓங்கி முனகினேன். அப்புறம் தான் வந்தார்கள். ஒரு பேப்பரில் ‘மருந்தை உடனே செலுத்தவும்’ என்று எழுதிக் காட்டிய பின்னர்தான் மருந்தைச் செலுத்தினார்கள். பத்து நிமிடத்தில் எல்லாம் சரியாகிவிட்டது. ஆனால் நாக்கில் காயம் ஏற்பட்டிருந்தது. எமெர்ஜென்சியில் பெரும்பாலும் அன்றைக்கே அனுப்பி விடுவார்கள். இது இந்த மருத்துவமனைக்கு நான் வந்தது இரண்டாவது முறை என்பதாலும் அன்றைய தினம் ஈஸ்டர் பண்டிகையாதலால் எனது குடும்ப டாக்டர் அல்லது நரம்பியல் நிபுணர் இருவரில் யாரையும் அழைக்க முடியாது என்பதாலும் ஓர் இரவு தங்கி நாளை செல்லலாம் என்றார்கள். மருந்து என்னை ஆழ்ந்த உறக்கத்துக்கு இட்டுச் சென்றது. உறக்கத்துக்கு நடுவே யாரோ ‘உங்களை ஜெனரல் வார்டுக்கு மாற்றுகிறோம்’ என்று சொன்னது கனவில் கேட்டது. கட்டில் நகர்ந்ததும், லிப்டில் கட்டிலோடு பயணித்ததும் பின்னர் வார்டில் உள்ள ஒரு அறையில் நுழைந்ததும் கனவில் நடந்தது. ஆஸ்பத்திரித் தூக்கம் எப்படி நிம்மதியானதாக இருக்க முடியும்? இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிய என்னை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ரத்த அழுத்தம் பார்க்கவும், நாடி பரிசோதிக்கவும், டெப்பரேச்சர் பார்க்கவும் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். எழுப்பப்படும் போதுதான் நாம் இருப்பது வீடு அல்ல மருத்துவமனை என்பது புரிந்தது.

காலையில் டியூட்டி மாறி புதிதாய் வந்த நர்ஸ் எனது உடல் சூட்டையும் ரத்த அழுத்தத்தையும் பரிசோதித்தாள். அவளுக்கு ‘அழகி’ என்று பெயரிட்டிருந்தேன். அழகிய தோற்றம் மற்றுமின்றி அவளின் துள்ளலான பாவனைகளும், எப்போதும் ததும்பும் கபடமற்ற சிரிப்பும், தாய்மையின் கருணை பொங்கும் பேச்சும், பெருகி வழியும் குதூகலமுமான குணாதிசயங்கள் நான் அவளுக்கு அப்பெயரைச் சூட்ட காரணமாக இருந்தன. அவள் போய்விட்ட நேரங்களில் அறைக்குள் அங்குமிங்கும் உலாத்தினேன். ஜன்னல் வழியே பணிக்குத் திரும்பும் மருத்துவர்களை, ஊழியர்களை நோட்டம் விட்டேன். பொழுது போவது கடினமாக இருந்தது. நோயுற்றவனின் தீராத கடினமான பொழுது பற்றி சுந்தர ராமசாமி ஒரு கதை எழுதியிருப்பதாக ஞாபகம்.

அதிகாலையிலேயே குடும்ப டாக்டர் வந்து பார்த்துவிட்டுப் போய்விட்டார். அவர் வேலை செய்வது வேறோரு சிறிய மருத்துவமனையில். அப்புறமாய் வந்த நரம்பியல் நிபுணர், ஏற்கனவே உட்கொள்ளும் மாத்திரைகளுடன் கூடுதலாக ஒரு மாத்திரை சேர்த்துக் கொள்ளச் சொல்லி எழுதித் தந்துவிட்டுப் போய்விட்டார். அப்புறம் என்ன, நான் போக அனுமதிக்க வேண்டியது தானே? அதில் தான் குழப்பம், குளறுபடி. அவ்வப்போது தலைமை நர்ஸிடம் போய் கேட்டபடி இருந்தேன். யார் டிஸ்சார்ஜ் செய்வது – வந்து பார்த்துவிட்டுப் போன குடும்ப டாக்டரா அல்லது இந்த மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரா என்பதில் குழப்பம் உள்ளதாகவும், இருவரையும் இது குறித்து தொடர்பு கொண்டிருப்பதாகவும் தலைமை நர்ஸ் தெரிவித்தாள். குளறுபடிகளில் அமெரிக்க ஆஸ்பத்திரிகள் இந்திய ஆஸ்பத்திரிகளைவிட சற்றும் சளைத்தவை அல்ல என்பது மீண்டும் நிரூபணமானது.

அறைக்குள் வந்த ‘அழகி’யிடம் “சாப்பிட ஏதாவது கிடைக்குமா?” என்று கேட்டேன்.
“ஏன், காலை உணவு வரவில்லையா?” என்றாள்.
“வந்தது, ஆனால் நான் கறி சாப்பிடுவதில்லை”
“ஓ… வெஜிடேரியனா?”
“வெஜிடேரியன் இல்லை. ஆனால் மாட்டுக் கறியும், பன்றிக் கறியும் சாப்பிடுவதில்லை”
“இங்கே கறி என்றாலே மாட்டுக் கறியும் பன்றிக் கறியும் தான்” என்றவள் “என் மகளும் உங்களைப் போலத்தான். கறியே சாப்பிடுவதில்லை. வெறும் பழங்களும் காய்கறிகளும் தான் சாப்பிடுகிறாள்” என்று சொல்லி முகத்தை அழகாகச் சுழித்தாள்.
எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. இவளுக்கு பதினேழு பதினெட்டு வயதுக்கு மேல் மதிப்பிட முடியாது. இவளுக்கு ஒரு மகளா?
சட்டென்று கட்டிலருகே முழந்தாழிட்டு “என்ன வேண்டும், ரொட்டி, ஜஸ்கிரீம்?” என்று கேட்டாள். என்னை அவளுடைய மகளாக நான் உணர்ந்த அற்புத தருணம் அது.
ரொட்டியும் காப்பியும் போதுமென்றேன். மின்னலாய் மறைந்தவள் சில நொடிகளில் ஒரு தட்டில் ரொட்டி, வெனிலா ஜஸ்கிரீம், காப்பியுடன் வந்தாள். “தாங்க்ஸ் சோ மச்” என்றேன். “வெல்கம்” என்ற சொல் உதிர்த்து மறைந்தது மின்னல்.

சாப்பிட்டு முடித்து மீண்டும் தலைமை நர்ஸ் இருக்கும் இடத்தை தேடிப் போனேன். இம்முறை அவளையே நெடு நேரமாய் காணவில்லை. பிறகு வந்தவள் “உங்கள் குடும்ப டாக்டர் தான் உங்களை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது. அவரை தொடர்பு கொண்டிருக்கிறோம். பதில் வந்ததும் தெரிவிக்கிறோம்” என்றாள். சோர்ந்து போய் அறைக்குத் திரும்பி படுக்கையில் விழுந்தேன். அறையில் இருந்த ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன்.

அழகி வந்தாள். கையில் பரீட்சை எழுதும் அட்டை போல் வைத்திருந்தாள். அந்தக் கோலத்தில் அவளே பரீட்சை எழுதப்போகிறவள் போல தோற்றமளித்தாள்.
குழந்தையை அதட்டிக் கேட்கும் தாய் போல “ம்..சொல்லுங்கள்..காலையிலிருந்து எத்தனை முறை மலம் கழித்தீர்கள்?” என்று கேட்டாள்.
இது என்ன கேள்வி. “ஒரு முறை.”
“சிறுநீர் எத்தனை முறை?”
“ம்….நான்கு முறை.”
“காலை வேளைக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்டாகி விட்டதா?”
“சாப்பிட்டாகி விட்டது.”
“குட். கேள்விகள் அவ்வளவுதான்.” எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு போனாள். அந்த நொடியில் எனக்கு அவளுடைய மகளை பார்க்க வேண்டும் போலத் தோன்றியது ஏன் என்று தெரியவில்லை.

அடுத்த முறை வந்த போது டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைச் சீட்டை கேட்டு வாங்கிக் கொண்டு “மாத்திரைகள் வாங்குவதற்கு உங்கள் இன்சூரன்ஸ் கவரேஜ் இடமளிக்கிறதா” என்று கேட்டாள். ஆம் என்றேன். இங்கே கொஞ்சம் சாம்பிள் மாத்திரைகள் இருக்கின்றன. அதைத் தருகிறேன். பத்து நாட்களுக்கு வரும் என்று கூறி எடுத்து வந்து கொடுத்துவிட்டுப் போனாள்.
மதிய உணவும் வந்தது. திறந்து பார்த்தேன். ரொட்டித்துண்டுகளுக்கு இடையில் மாட்டுக்கறி. மூடி வைத்து விட்டு காப்பியை மட்டும் குடித்தேன். சிறிது நேரத்தில் உணவு கொண்டு வந்த பெண் மீண்டும் வந்து ஒரு தட்டை வைத்து விட்டு ரகசியமான குரலில் என்னிடம் “வெஜிடேரியன் சாப்பாடு” என்று சொல்லிச் சென்றாள். திருப்தியாய் சாப்பிட்டு இரண்டாவது காப்பியையும் குடித்தேன்.
மீண்டும் வந்த ‘அழகி’ இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு “மதிய உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்?” என்றாள். அந்த கேள்வியில் ‘நான் அனுப்பி வைத்த வெஜிடேரியன் உணவு வந்ததா’ என்ற ஒருவித குழந்தைத்தனமான பெருமிதத் தொனி இருந்தது. “நீங்கள் அனுப்பி வைத்த சாப்பாட்டைத் தான் சாப்பிட்டேன்.” என்றேன். மூடியிருந்த தட்டுகளை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டு “குட். வெரி குட்” என்று புன்னகை உதிர்த்துப் போனாள்.

ஒரு வழியாய் நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். ஒரு காகிதத்தில் என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்ட தலைமை நர்ஸ் “இனி நீங்கள் போகலாம்” என்றாள். நான் கிளம்பத் தயாரானேன். என் கண்கள் ‘அழகி’யைத் துழாவின. சொல்லி விட்டுக் கிளம்பலாம் என்றால் இந்நேரம் பார்த்து எங்கே போனாள்? யாரிடமும் கேட்கலாம் என்றால், குறிப்பிட்ட ஒரு நர்ஸைப் பற்றி கேட்பது குறித்து அநாகரிகமாக நினைத்து விடுவார்களோ என்று தோன்றியது. அவளை எங்கேயும் காணவில்லை. நான் கேட்காமலேயே நான் வெளியே செல்லுவதற்கான வழியை தலைமை நர்ஸ் என்னிடம் தெரிவித்து விடை கொடுத்து தன் வேலையில் மூழ்கினாள். நான் ‘அழகி’யைப் பார்க்க முடியாதவனாய், பார்த்து குறைந்த பட்சம் நன்றி என்ற வார்த்தையைச் சொல்லமுடியாதவனாய் வெளியேறினேன். அன்று முழுவதும் அவள் பற்றிய நினைவாகவே இருந்தது. முந்தைய இரவிலிருந்து ஏறக்குறைய நான்கு நர்ஸ்கள் டியூட்டி மாறினார்கள். எல்லோரும் இவள் போல கனிவாவோ கருணையாகவோ இல்லையே ஏன்? ஏனென்று எனக்குத் தெரியும். ஏனெனில் தேவதைகள் அபூர்வமானவர்கள்.

அன்புடன்
எஸ். பாபு
agribabu@rediffmail.com

Series Navigation

எஸ். பாபு

எஸ். பாபு