உறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

பாவண்ணன்


உறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”
பாவண்ணன்

கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் இயங்கிவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இரா.முருகன். பல சிறுகதைகள்மூலம் இலக்கிய உலகில் ஏற்கனவே அழுத்தமான தடங்களைப் பதித்தவர். கணிப்பொறி உலகைச் சார்ந்தவர். உலகில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி பலவிதமான அனுபவங்களைப் பெற்றவர். இணைய தளங்களில் இவர் பகிர்ந்துகொள்ளும் பலவிதமான அனுபவக்குறிப்புகள் வாசகவரவேற்பைப் பெற்றவை. இவர் ஏற்கனவே எழுதிய “அரசூர் வம்சம்” என்னும் நாவல் இணைய தளத்திலேயே தொடராக வெளிவந்தது. “மூன்று விரல்” நாவலும் இணைய தளமொன்றில் தொடராக இடம்பெற்று இப்போது நூல்வடிவில் பிரசுரமாகியிருக்கிறது.

நெருக்கடியான ஒரு சந்தர்ப்பத்திலிருந்து “மூன்று விரல்” தொடங்குகிறது. கதையின் மையப்பாத்திரமான சுதர்சன் தன் குழுவுடன் இணைந்து எழுதி எடுத்துச் சென்ற மென்பொருளை லண்டனில் வாடிக்கையாளர்கள் நிறைவுறும்வகையில் இயக்கிக்காட்டி, பல கோணங்களில் அதை நிகழ்த்திக்காட்டி ஏற்புக் கடிதத்தையும் காசோலையையும் வாங்கவேண்டியிருக்கிறது. இந்த ஏற்பாட்டில் நிகழக்கூடிய தடுமாற்றங்கள், பதற்றங்கள், முதலாளியின் தொலைபேசிக் கட்டளைகள், வசைகள், அதட்டல்கள், மனக்கொதிப்புகள் என மாறிமாறி முன்வைக்கப்படுகின்றன. நம்பகமான பல பின்னணிச் செய்திகளும் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. எல்லாம் நல்லவிதமாக நிறைவேறி காசோலை கைமாறும் தருணத்தில் சென்னையில் அவன் வேலை பார்த்த நிறுவனம் இன்னொருவருக்கு விற்கப்பட்டுவிடுகிறது. புதிய நிர்வாகம் தன்னை ஏற்றுக்கொள்ளுமா, விலக்கி விடுமா என்ற கேள்வியோடு இந்தியாவுக்கத் திரும்புகிறான் சுதர்சன். இது கதையின் ஒரு பகுதி. வேறொரு புதிய நிறுவனத்தின் சார்பில் தாய்லாந்து நாட்டுக்கு மென்பொருள் குழுவொன்றக்குத் தலைமைப்பொறுப்பேற்றுச் சென்று வெற்றியை ஈட்டுவது இன்னொருபகுதி. சூழல்களின் து¡ண்டுதலால் வேறுவேறு இடங்களில் வேறுவேறு நிறுவனங்களென மாறிக்கொண்டே போவது மூன்றாவது பகுதி.

இந்த மூன்று பகுதிகளிலும் வெற்றிவேட்டையைத் தவிர வேறு எதையும் நினைத்துப்பார்க்க முடியாத துரதிருஷ்டசாலியாக பெயருக்குப் பொருத்தமாக சக்கரமாக ஓடிக்கொண்டே இருக்கிறான் சுதர்சன். புறஉலகம் என்பது அவன் வாழ்வில் மருந்துக்குக்கூட இல்லை. எதன் நிழலும் படியாத சலவைக்கல் மாளிகையாக மாறி உயர்ந்து நிற்கிறது அவன் வாழ்வு. வெற்றிக்காக அவன் காட்டக்கூடிய உழைப்பின் வேகம் பாராட்டக்குரிய ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை. வெற்றியைக் கொண்டாடும் ஆனந்தத்தின் இறுதியில் அல்லது நெருக்கடிகளை விவேகமுடன் எதிர்கொண்டு வெற்றியைத் தொடும் கணத்தில் மிகவும் இயல்பாக ஒரு மனிதனுடைய மனத்தில் எதை அடைவதற்காக இந்த வெற்றி, எதற்காக இந்த வாழ்வு என்னும் எளிய கேள்விகள்கூட படிப்பும் திறமைகளும் பொருந்திய சுதர்சன் மனத்தில் எழுவதில்லை. மனைவிக்கு வேலை கிடைத்து தனக்கு வேலை கிட்டாத சந்தர்ப்பத்தில்கூட கலிபோர்னியா உணவுவிடுதியில் சிப்பந்தியாக வேலையைத் தொடரச் சென்றவிடுகிறான். தரையிலேயே இறங்காத ஒரு விமானத்தைப்போல அவன் மனம் பறந்தபடியே இருக்கிறது.

சுதர்சனுடைய தினசரிச் சம்பவங்கள் வழியாக இரா.முருகன் கட்டியெழுப்ப விழையும் “வாழ்க்கையின் மறுதொடக்கம்” என்னும் அம்சம் மிகவும் முக்கியமான ஒன்று. போட்டிகள் மிகுந்த தொழிலில் நிலவும் ஏற்றங்களையும் தடுமாற்றங்களையும் பரபரப்புகளையும் அலைச்சல்களையும் தொகுத்துக்காட்டும் போக்கில் சரிந்து உதிர்க்கப்படுகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுபடியும் ஒரு புதுத்தொடக்கத்துக்கு தன்னை மனத்தளவில் தயார்ப்படுத்திக்கொண்டு ஊக்கத்துடன் எழுந்து புறப்படும் தருணங்களைக் காட்டுகிறார் இரா.முருகன். உறைந்து நின்று விடுகிற ஒரு கணிப்பொறியை ஒரே சமயத்தில் கட்டுப்படுத்து, மாற்று, நீக்கு என்னும் ஆணைகளுக்குரிய முன்றுவிசைப்பொத்தான்களையும் அழுத்தி உயிர்ப்பூட்டி மீண்டும் இயங்கவைக்கிற செயல்முறையைப்போல உறைந்துபோகிற வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்குத்தானே உயிர்ப்பூட்டிக்கொண்டு மறுதொடக்கத்துக்குத் தயாராக விசையேற்றுக் கொள்கிறது அவன் வாழ்வு. சுதர்சனுடைய தொழிலறிவும் பல்விளக்கக்கூட நேரமின்றி அதிகாலையில் ஓடி பின்னிரவுவரை விழித்திருந்து உழைக்கும் வேகமும் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு வெற்றியைக் கொடுப்பதற்காக எண்ணற்ற இழப்புகளை விழுங்கிக்கொண்டும் மறைத்துக்கொண்டும் ஓடுகிற சாமர்த்தியமும் அவனுக்கு எப்போதும் துணையிருக்கின்றன. இறுதியில் அவனுக்கு வாழ்வு கற்றுத் தருவதென்ன? தகுதி, தன்னம்பிக்கை, தளரா உழைப்பு மூலம் மறுதொடக்கம் என்னும் புள்ளியில் நிறைவடைகிறது இப்படைப்பு. முந்தைய புள்ளிவரை ஈட்டிய அனுபவங்களோடும் செல்வத்தோடும் ஆற்றல்களோடும் சிக்கல்களோடும் ஆரம்பிக்கும் மறுதொடக்கம் வாழ்வின் மாபெரும் உண்மையாக துலக்கம் பெறுகிறது. எங்கும் தேக்கமுறாமல் மீண்டும்மீண்டும் தொடங்கி நகர்ந்துகொண்டே இருப்பதே வாழ்வின் ரகசியம். இதுவே இந்தப் படைப்பின் பலம். ஆனால் இந்தக் கோணம் ஒரு விவாதமாக பல்வேறு முனைகளிலிருந்து திரண்டெழுந்து மோதி தானாக உருப்பெறாமல், சுதர்சனின் ஒற்றைத்தன்மை மிகுந்த வாழ்க்கைச் சம்பவங்களைச் சான்றாக முன்வைத்து நகர்ந்து தொட்டு நிற்பதை பலவீனமென்று சொல்லலாம்.

சுதர்சன்போன்ற செயல்திட்டத் தலைமைப்பொறுப்பிலிருப்பவர்கள் மென்பொருள் துறையின் ஒரு பிரிவினர்மட்டுமே . அடுத்தடுத்து ஆணைத்தொடர்களை எழுதுகிறவர்கள், வடிவமைப்பாளர்கள், நிரல் தொகுப்பாளர்கள், தகவல்களைச் செலுத்துகிறவர்கள், தகவல் பரப்பை வடிவமைத்து முடுக்கும் தகவல் களஞ்சிய இயக்குநர்கள், என்ற பிற பிரிவினர்களும் தத்தம் அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருமே மற்றவர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறவர்கள். மென்பொருள் பின்னணியைச் சார்ந்து இப்பிரிவுகள் பலமடங்காகிப் பல பிரிவினர்களாகி விரிவடையக்கூடியவை. ஒவ்வொருவருடைய மதிப்பும்கூட வெவ்வேறு தன்மையில் உள்ளது. ஒரே வட்டத்தில் இயங்குபவர்கள் என்றாலும் அனைவரும் தனித்தனியான இயங்கு எல்லைகளை உடைய சின்னச்சின்ன வட்டங்களாகச் செயல்படுகிறவர்கள். இவர்கள் அனைவருடைய பிர்ச்சனைகளையும் ஒரே தன்மையுடையதாக எடுத்துக்கொள்ளமுடியுமா என்பது சந்தேகமே. இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் இன்னொரு கட்டத்தோடு மோதி விவாதத்துடன் முன்னகரும்போதுதான் மென்பொருள் உலகம் தன் சகல வாசல்களையும் திறந்துவைத்ததாக அமையும். மாறாக ஒற்றை வாசலுள்ள எஸ்கிமோக்கள் கூடாரமாக சுதர்சன் வழியாக மட்டுமே மென்பொருள் உலகத்தை அணுகும்படி இப்படைப்பு அமைந்துபோனது துரதிருஷ்டவசமானது.

முருகன் படைப்பில் முக்கியமாக இடம்பெறுபவை கிண்டல் வார்த்தைகள். எல்லாரும் எல்லாவற்றின்மீதும் திகட்டுமளவுக்கு கிண்டல் வார்த்தைகளை உதிர்த்தபடி இருக்கிறார்கள். முதலாளி, தொழிலாளி, உணவுவிடுதி, சிப்பந்திகள், அதிகாரிகள், சக ஊழியர்கள், காதலி, வயதில் முதிர்ந்த / குறைந்த நண்பர்கள் என பாரபட்சமில்லாமல் எல்லாத்தரப்பினர் மீதும் இந்தக் கிண்டல் வார்த்தைகள் சிதறப்படுகின்றன. கிண்டலின் இலக்குக்கு யாருமே அல்லது எதுவுமே இப்படைப்பில் தப்பவில்லை. வேலைக்கடுமையின் உச்சத்தில் வெளிப்படும்போது மட்டுமே இக்கிண்டல் மிகஇயல்பாக படைப்பின் போக்கில் இணைந்துகொள்கிறது. ( “சுதர்சன், உனக்கு கல்யாணமா? எப்போ?” என்று ஒரு தருணத்தில் கேட்கிறாள் கண்ணாத்தா. “நீ ஒரு தப்பும் இல்லாம கோட் எப்ப எழுதறியோ அதுக்கு அடுத்தநாள்” என்கிறான் சுதர்சன்.) மற்ற நேரங்களில் வெறும் வக்கணைப்பேச்சாகச் சுருங்கி படைப்புடன் இணையாமல் நின்றுபோகிறது.

இப்படைப்பில் கதைகூறும் திறமை தவிர வேறு எந்தத் தனித்தன்மையும் புலப்படவில்லை. பெரிய நாவல்களில் உருவாகக்கூடிய ஆழ்ந்த பெ முச்சுகளையோ கையறுநிலையின் தவிப்புகளையோ இறுதிப்புள்ளியில் தானாக முகிழ்க்கக்கூடிய மெளனத்தையோ இந்த நாவலில் காணமுடியவில்லை. இயம்புமுறையில் இருக்கக்கூடிய ஒற்றைத்தன்மை உறுத்தலாக இருக்கிறது. கிராமம், நகரம், அலுவலகம், சிறைக்கூடம், நிர்வாண நடனவிடுதி எனப் பலவிதமாக காணப்படும் எல்லாக் களங்களிலம் ஒரே விதமான சித்தரிப்புமுறையே பயன்படுத்துகிறது. முதலாளி, நிர்வாகி, உணவுவிடுதிக்காரர்கள், அதிகாரிகள், நண்பர்கள், சிப்பந்திகள், மஸாஜ் சேவகிகள் எல்லாருமே ஒரே மொழியையே பயன்படுத்துகிறார்கள். நாவலை நிகழ்த்திக்காட்ட இது பெரும்தடையாக இருக்கிறது.

மென்பொருளாளர்கள்மீது நிறுவப்பட்ட கற்பிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்து அழுத்தமான சித்திரங்களையும் விவாதங்களையும் உருவாக்குவதற்கு மாறாக எல்லாவற்றையும் ஒரு தகவலாக உதிர்த்துவிட்டு படைப்பு வேகவேகமாக நகர்ந்துவிடுகிறது. புஷ்பாவின் முத்தத்தையும் சந்தியாவின் புன்னகையையும் மாறிமாறி கதைநெடுக நினைவுகளில் சுமந்து கொண்டிருப்பவன் மனத்தில் காலாவதியான விசாவால் தற்செயலாகக் காவலர்களால் பிடிக்கப்பட்டு சிறைவாசத்தில் ஜட்டியோடு நின்ற நண்பனுடைய உருவம் ஒருமுறைகூட மீண்டும் எழாதது விசித்திரமானது. அந்த ஞாபகத்தினுடைய அழுத்தத்தின் விளைவாக மென்பொருளாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற வாழ்வின் நிரந்தரமின்மையை நிறுவிக்காட்டியிருக்கமுடியும். விரிவுகொள்ள சரியான ஒரு சரடு கிடைத்தும் படைப்பு அதைப் புறக்கணித்துவிடுகிறது.

காசுக்காக உலகில் பல்வேறு பகுதிகளுக்குப் பறந்து நேரம் காலம் சுற்றுப்புறம், கலாச்சாரம், சொந்த வாழ்க்கை என எதையும் சட்டைசெய்யக்கூட நேரமின்றி குறித்த நாளுக்குள் வந்த வேலையை முடிக்கவேண்டும் என்று செலுத்தப்பட்டவர்களைப்போல இயங்கும் கணிப்ப¦¡றி வல்லுநர்களுடைய உலகத்தின் சிறுபகுதி இந்தப் படைப்பில் இடம்பெறுகிறது.

இப்படைப்பில் இடம்பெறக்கூடிய இரண்டு தந்தைப் பாத்திரங்கள் முக்கியமானவர்களாகப் படுகிறார்கள். தற்செயலாக இருவருமே மனைவியைவிட்டுப் பிரிந்து வாழ்பவர்கள். ஒருவர் சந்தியாவின் தந்தை வாரியர். இன்னொருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி. மூன்று வயதில் பிரிந்துவந்த மகளுடன் அவளுடைய இருபத்தைந்து வயது வரைக்கும் கடிதங்கள் வழியாகவும் தொலைபேசி உரையாடல்கள் வழியாகவும்மட்டுமே உறவைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் அபூர்வத் தந்தை வாரியர். கண்ணாலேயே பார்க்காத தன் மகளுடைய எதிர்காலம்பற்றி பல கனவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கிறப்பவர். குறிப்பிட்ட நாளுக்குள் அவள் கருவுறவில்லையென்றால் அவர் வம்சம் வாரிசற்றதாகப் போய்விடும் என அவர் நம்பி வலியுறுத்திய ஜாதகக் குறிப்பு சுட்டிக்காட்டியதைப்போலவே அவள் உலக வர்த்தகக் கட்டடச் சிதைவின்போது அகப்பட்டு உயிர் துறந்த செய்தியைக் கேட்டு அவர் மனமுடைந்து வெளியேறிவிடுகிறார். மற்றொருவரான் ஜெப்ரியும் தன் மகள்மீது அளவற்ற பிரியம் கொண்டவர். மணவிலக்கு பெற்ற மனைவியுடன் கைகுலுக்கி வியாபாரம் பேசிமுடித்துவிட்டு அவளோடு வளரக்கூடிய தன் மகளுக்காக இசைக்குறிப்புப் புத்தகமொன்றை பரிசாக அனுப்பும் விசித்திரமான மனிதர்.

இரா.முருகன் முன்வைக்கக்கூடிய மென்பொருளாளர் பிரச்சனை நாம் அனைவரும் தகவலளவில் அறிந்த ஒன்றே. சுரண்டும் மையங்களாக மாறிக்கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் பழங்கால அடிமை முறையில் நிகழ்ந்ததைப்போல ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணிநேரத்துக்கும் மேலான உழைப்பு என்னும் எழுதா விதியை எங்கும் நிர்ப்பந்திப்பதும் அவ்விதிக்கு உட்பட்டு காலம் சுற்றுப்புறம், கலாச்சாரம், சொந்த வாழ்க்கை என எதையும் சட்டைசெய்யக்கூட நேரமின்றி குறுகிய கால அவகாசத்துக்குள் செலுத்தப்பட்ட ஏவுகணையென கணிப்பொறி வல்லுநர்கள் இயங்குவதும் நாள்தோறும் காணக்கிடைக்கிற காட்சிகள்தாம். அவர்களுடைய உலக அனுபவங்கள் முதன்முதலாக ஒரு படைப்பில் இடம்பெறுவதை விசேஷமான அம்சமாகவே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அனுபவங்கள் வழியாக சாரத்தைநோக்கிய பயணம் படைப்பில் நிகழவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.

(மூன்று விரல் -இரா.முருகன். கிழக்குப் பதிப்பகம். எண் 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. விலை.ரூ 150 )

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்