நார்னியா, ஹாரி பாட்டர், மேட்ரிக்ஸ் – கிருஸ்துவ அடிப்படைவாதம், ஹிந்து மதம் மற்றும் புதுயுக நம்பிக்கைகள்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

அரவிந்தன் நீலகண்டன்


டிசம்பரில் நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலில் நார்னியா திரைச்சித்திரம் குறித்த கார்ட்டியன் இதழின் விமர்சனத்தின் சுட்டி கிடைத்தது. சி.எஸ்.லூயிஸ் எழுதிய ‘க்ரானிக்கல்ஸ் ஆஃப் நார்னியா ‘ அதீத கற்பனை வகையறாவைச் சார்ந்தது. சி.எஸ்.லூயிஸ் குறித்து ஏற்கனவே எனக்கு சிறிது பரிச்சயம் இருந்தது. லூயிஸ் பகுத்தறிவுவாதியாக இருந்து கிறிஸ்தவ அடிப்படைவாதியாக மறுவடிவம் எடுத்தவர். (இவர் அடிப்படைவாதியா என சிலர் கேள்வி எழுப்பலாம். கிறிஸ்தவ அடிப்படைவாதத்திற்கு அழகான வார்த்தைஜாலங்கள் கொண்ட வாதங்களை ஆக்கித்தந்தவர் லூயிஸ்.) ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினை ஏற்றுக்கொண்டவர். இலக்கியவாதியும் கூட. புகழ்பெற்ற மந்திர மோதிரக் கதைகள் எழுதிய டோல்கின் லூயிஸின் நண்பர் என்பதுடன் அவரது சமய நம்பிக்கையையும் பகிர்ந்து கொண்டவர். இவையும் இன்று திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ஹிந்து மதம் மற்றும் புதுயுக நம்பிக்கைகள் ஆகியவற்றினை எதிர்கொள்ள லூயிஸின் வாதங்கள் பயன்படுத்தப்படும். ஹிந்து மதத்தின் அனைத்தையும் ஏற்கும் தன்மைக்கும் கிறிஸ்தவத்தின் ஒரே மார்க்கத்தின் மூலமே இரட்சிப்பு எனும் நிலைப்பாடுமே மேற்கத்திய அறிவுலக தளத்தில் இறுதிப்போரை சந்திக்கும் கருத்தாக்கங்களாக இருக்கும் என்பது லூயிஸின் கணிப்பு.

ஒருவிதத்தில் இது உண்மை எனலாம். மேட்ரிக்ஸ்-ஸ்டார்வார்ஸ்-லயன்கிங் ஆகிய திரைச்சித்திரங்கள் ஸ்டார் ட்ரெக் போன்ற தொடர்கள் ஹிந்து கோட்பாடுகளை மேற்கத்திய மனங்களுக்கு வெவ்வேறு ரூபங்களில் எடுத்துச்சென்றுள்ளன. மாட்ரிக்ஸ் திரைப்படத்தொடர்களின் முடிவில் வெளிப்படையாகவே நரம்புகளுக்குள் நுழைந்து அதிரும் மேற்கத்திய இசைமுழக்கத்துடன் உபநிடதங்கள் ஒலிக்கின்றன. ஏஜெண்ட் ஸ்மித்துடன் நியோ மோதிடும் நேரத்திலும் அவ்வாறே. புதியதோர் காலை புலர்கையில் அதனை உருவாக்கிய சிறுமியாக சதி எனும் பாரதச்சிறுமி காட்டப்படுகிறாள். வேத காலத்தில் புலர் ஒளி பெண் தெய்வம் உஷை. அடிப்படைவாத கிறிஸ்தவர்களால் ஸ்டார்வார்ஸ் பலமில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்க குழந்தைகளை ஹிந்துக்களாக மதமாற்றம் செய்யும் முயற்சி எனக் கூறப்பட்டது. ஜோசப் காம்பெல்லின் தாக்கத்துடன் ஜார்ஜ் லூக்காஸால் உருவாக்கப்பட்ட இந்த தொடரில் மிகவெளிப்படையாக கூட ஹிந்து/பாகன் கலாச்சாரங்களுடன் கிறிஸ்தவ அடிப்படைவாத இறையியல் ஒப்பிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான ஸ்டார்வார்ஸ் திரைச்சித்திரம் ஜெடை ஞான வீரனான அனாகின் ஸ்கைவாக்கர் கொடுங்கோல் ராஜ்ஜியத்தின் டார்த்வாடராக மாறுவதன் முகாந்திரத்தை காட்டுகிறது. மரணத்தின் மீதான பயம். மரணமில்லாத நித்திய ஜீவனை அளிப்பதாக கூறி ஆசைகாட்டப்பட்டு அவன் இருள்கணத்திற்கு மாறிய பின்னர் அவன் செய்யும் முதல் வேலை ஜெடை ஞான வீரர்களாக குழந்தைகள் பயிலும் பயிற்சி களங்களையும் ஜெடை கோவில்களையும் அழிக்கிறான். ஜெடை மார்க்கத்தினைச் சார்ந்த குழந்தைகள் கூட அந்த ஒரே காரணத்திற்காக கொல்லப்படுகின்றனர். சிலுவையின் தோற்றத்தில் ஒளி விழும் பாதையில் இக்கொடுஞ்செயல்களை செய்ய அவன் நடைபோடுவது தற்செயலா ? இறுதியில் அவன் முன்னாள் நண்பனும் பின்னாளில் அவனது மகனை வளர்க்கப் போகிறவனுமான பென் அவனை மீண்டும் மாற்றிட இயலுமெனும் நப்பாசை சிறிதே இருக்க அவனை சந்திக்கிறான். அப்போது டார்த்வாடரின் வாயிலிருந்து வரும் (ஏசுவின்) வார்த்தைகளால் அவன் மீட்க இயலாதபடி இருட்கணத்துடன் இணைந்துவிட்டதை அறிகிறான். அப்படி டார்த்வாடர் கூறுவதென்ன ? ‘நீ என்னுடன் இல்லையெனில் எனக்கு எதிராக இருக்கிறாய் ‘ (மத்தேயு.12:30 ‘என்னோடே இல்லாதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான் ‘ ‘He who is not with me is against me ‘)

பின்னர் வெளிவந்த ஹாரி பாட்டர் கதைகளிலும் திரைச்சித்திரங்களிலும் கூட கிறிஸ்தவ இறையியலின் சில அம்சங்களுக்கான எதிர்ப்பு நீரோட்டமாக தொடரத்தான் செய்தது. அடிப்படைவாத கிறிஸ்தவ பார்வையில் ஹாரிபாட்டரே மிகவும் எதிர்ப்புக்குள்ளானது. வால்டர்மார்ட்டின் ‘He who must not be named ‘ ஆபிரகாமிய இறைவனுக்கும் ஒரு விதத்தில் பொருந்துவதாகும். குழந்தையை காக்கும் கவசமாக விளங்கும் தாயின் தியாகம் வெளிப்படையாகவே கிறிஸ்தவத்தின் ஆண்தெய்வத்தின் ஒரே ஆண்மகனின் தியாகத்திலிருந்து வேறுபடுவதாகும். ஹாரிபாட்டர் அடங்கி நடக்கும் பாத்திரமல்ல. கிளர்ச்சியாளத்தன்மை கொண்ட சிறுவன். நிறுவன எதிர்ப்பாளன். இறுதியாக சாவினை கண்டு நடுங்கி மறுதலிக்கும் வால்டர்மார்ட் ஒரு புறம், சாவினை வாழ்வின் ஒரு பகுதியாக விளையாட்டாக ஏற்கும் டம்பிளோர் மறுபுறம். இவையனைத்திலும் அச்சம் மரணம் குறித்த பார்வையில் நேர்மறைத்தன்மை கொண்ட பாத்திரங்களின் மரணம் குறித்த பார்வை கிறிஸ்தவ இறையியலுக்கு அன்னிய தன்மை கொண்டதாக விளங்குவதைக் காணலாம். ‘லயன்கிங் ‘கில் குரங்கு அமைச்சன் ரஃபீக்கி பத்மாசனமிட்டு யோகத்தில் அமர்ந்தவாறு தந்தையின் மரணத்துக்கு தான் காரணமானதாக குற்றவுணர்ச்சியில் தன் ராஜ்ஜியத்தை இழந்துவிட்ட சம்பா எனும் சிங்க இளவரசனுக்கு அவனது நிஜ இயற்கையினை உணர்த்தும் காட்சிகள் மற்றும் அத்திரைப்படத்தில் வரும் ‘வாழ்க்கை வட்டம் ‘(Circle of Life-எல்டன் ஜான்) எனும் பாடல், புதிதாக பிறந்த சிங்க இளவரசனுக்கு நெற்றியில் சாம்பல் நிறப் பொடியும் சிவந்த சாறினால் திலகமும் இடும் ஆப்பிரிக்க மண்சார்ந்த (கிறிஸ்தவத்தின் ஞானஸ்நானத்திற்கு அயலான) மதச்சடங்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் திட்டி தீர்க்கப்பட்டன. தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என சொல்லப்பட்டனர். God TV அதன் முந்தைய அவதாரமான மிராகிள் நெட் ஆகியவற்றில் பென்னி ஹின்னும் இன்னபிற போதகர்களும் ஹாரிபாட்டர் நூல்கள் உங்கள் வீட்டில் இருப்பது சாத்தானுக்கு நீங்கள் கொடுக்கும் வரவேற்பு என்றனர். வத்திகானின் அதிகாரபூர்வ முதன்மை பேயோட்டி (Exorcist) ஹாரிபாட்டர் படிக்கும் குழந்தைகள் பேய்பிடிக்கும் தளர்ச்சிநிலையை எளிதில் அடைவதாக அறிவித்தார்.

இந்த சூழலில்தான் நார்னியா கிறிஸ்தவத்தின் பதாகையை அதீதக் கற்பனை உலகில் உயர்த்தி பிடித்திட எடுக்கப்பட்டுள்ளது.

இதனை வால்ட்டிஸ்னி திரைப்படத்துடன் இணைந்து எடுத்துள்ள வால்டன் மீடியாவுடைய சொந்தக்காரர் பல பில்லியன் டாலர்களின் அதிபதியும் எவாஞ்சலிக்க கிறிஸ்தவருமான ஃபிலிப் அன்ஷட்ஸ். நார்னியா ஒரு மாயஜால உலகம். சூனியக்காரியால் வன்குளிர் காலத்தில் உறையவைக்கப்பட்டிருக்கும் இவ்வுலகில் கிறிஸ்துமஸே இல்லை. இரண்டாம் உலகப்போரின் இலண்டன் குண்டுவீச்சுக்கு அஞ்சி நாட்டுப்புறத்துக்கு அனுப்பி வைக்கப்படும் குழந்தைகள் பீட்டர், சூஸன்,எட்மண்ட் மற்றும் கடைக்குட்டி லூஸி. ஒளிந்து விளையாடும் போது ஒரு மாயதுணி அலமாரிக்குள் நுழைந்து அவள் நார்னியாவை கண்டடைகிறாள். ‘ஏவாளின் மகளான ‘ லூஸியை நட்புடன் வரவேற்கிறான் ஒரு ஃபான். பின்னர் அவள் மீண்டும் நனவுலகிற்கு வருகிறாள். அங்கு அவள் கூறுவதை நம்ப மறுக்கின்றனர். எட்மண்ட் லூஸி சொல்வது உண்மை என்பதை கண்டுபிடித்தாலும் அவளுக்கு சாட்சி பகரவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் மீண்டும் நார்னியா வருகின்றனர். எட்மண்ட் (தொடக்கத்திலேயே கீழ்படியாமை கொண்டவனாக காட்டப்படிகிறவன்) சூனியக்காரியின் ‘Turkish delights ‘ க்கும் அரசபதவி வாக்குறுதிக்கும் ஆசைப்பட்டு துரோகம் செய்துவிடுகிறான். இந்நிலையில் நார்னியாவின் உண்மை அரசனான பேசும் சிங்கம் அஸ்லானை கண்டுபிடிக்க மற்ற மூவரும் விரைகின்றனர். பாட்ஜர்களின் துணையோடு. சூனியக்காரியின் ஓநாய்கள் துரத்திட. கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசுகளுடன் (வாள், கத்தி, மாய மருந்து மற்றும் வில்லம்புகள்). எட்மண்ட்டும் தவறினை உணர்ந்து அஸ்லானுடன் இணைகிறான். ஆனால் அவன் செய்த துரோகத்துக்காக இரவில் சூனியக்காரியிடம் தம்மை ஒப்புகொடுக்கிறார் பேசும் சிங்கமான அஸ்லான். இந்த தியாகபலியை பார்ப்பவர்கள் இரு பெண்களான சூசனும் லூஸியுமே. மறுநாள் அஸ்லானின் படைகளுக்கு பீட்டர் வாளேந்தி தலைமையேற்கிறான். வெண்பனி சூனியக்காரிக்கும் அஸ்லானின் படைகளுக்கும் போர் மூள்கிறது. போரில் அஸ்லானின் படைகள் தோற்கும் தருணம். அஸ்லானின் உடலிருக்கும் இடத்தில் நில அதிர்ச்சி. அஸ்லான் உயிர்த்தெழுகிறார். தங்கநிற பின்னணியில் தீச்சுவாலை நிறத்துடன் அவர் தம் படைகளை உத்வேகமூட்டி சூனியக்காரியை தோற்கடிக்கிறார்.பின்னர் நார்னியா நான்கு திசைகளுக்கு நால்வரையும் அரசுரிமை ஏற்கச்செய்து மீண்டும் வருவதாக கூறிச் செல்கிறார்.

ஆதாமின் மகன்களும் ஏவாளின் மகள்களும் அஸ்லானின் படையுடன் இணைகையில் சூனியக்காரியின் அரசு நீங்கும் எனும் தீர்க்கதரிசனம் இத்திரைப்படத்தில் நாம் சந்திக்கும் முதல் கிறிஸ்தவ சார்பாகும். அஸ்லான் கிறிஸ்துவின் குறியீடாகும். இது குறித்து கார்டியன் பத்திரிகை கிறிஸ்து கிறிஸ்தவ இறையியலில் ஆட்டுக்குட்டியானவர் என்று கூறப்பட்டுள்ளதை கூறுகிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விமர்சனத்தில் ஆடம் கோப்னிக் நியூயார்க்கரில் கழுதையே கிறிஸ்துவின் சிறந்த குறியீடாக இருந்திருக்கும் என கூறியுள்ளதை தெரிவிக்கிறது. ஆனால் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ இறையியலின் பார்வையில் சிங்கமே ஏசுவின் சரியான குறியீடாகும். ஏனெனில் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவம் வகாபிய இஸ்லாம் போல கறாராக யூத இறைவாக்கினர் மற்றும் தீர்க்கதரிசனங்களின் அடிப்படையிலேயே தன்னை நிலைநாட்டுகிறது. கிறிஸ்தவ துதிபாடல்களில் ஏசு தாவீதின் வழிவந்த ‘யூதராஜ சிங்கம் ‘ எனக் குறிப்பிடப்படுவார். யூதேயத்தின் சிங்கமாகவே மெசியாவும் யூததீர்க்கதரிசனங்களில் கூறப்படுகிறார். எனவேதான் புதிய ஏற்பாடு என கிறிஸ்தவம் அழைக்கும் நூல்களின் இறைமகனுக்கான விலங்கின குறியீடான ஆட்டுக்குட்டி நீக்கப்பட்டு சிங்கம் முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே திண்ணையில் வெளியான கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது போல இராணுவ மெஸியா எனும் நிலைப்பாட்டில்தான் ஏசு சிங்கமாக முடியும். நார்னியா பாகன் தேவியின் நிலம். அங்கு ஏசு இராணுவ பொலிவுடைய போர்களத்தில் கர்ஜித்து ஆயுதம் தாங்கிய தம் படைவீரருக்கு உற்சாகம் ஊட்டும் சிங்கமே.

அடுத்ததாக அஸ்லான் தம்மைத்தாமே தியாகம் செய்யும் கட்டம். கிறிஸ்தவ விவிலிய சித்திரமாகவே இது காட்டப்படுகிறது. சிங்கம் தன்னை பலியாக்க செல்லும் போது விவிலிய வசனங்கள் பேசப்படுகின்றன. (நான் போகிற இடத்துக்கு இப்போது நீ என் பின்னே வரக்கூடாது யோவான் 13:36 இத்யாதி) அங்கு அவமானப்படுத்தப்பட்டு அஸ்லான் கொல்லப்படுகிறது. அதன் பிடரி மயிர் வெட்டி பங்கிடப்படுகிறது (ஏசுவின் ஆடைகள் பங்கிடப்பட்டதை நினைவுறுத்தும் படிக்கு) இக்காட்சி அமைப்பினை நியூயார்க் டைம்ஸ் விமர்சனம் ‘juvenile version of Mel Gibson ‘s Passion of the Christ ‘ என்கிறது. அங்கு காட்டப்படும் கற்பனை விலங்கினங்கள் அருவெறுப்பும் மானுடத்தன்மை கிஞ்சித்தும் இல்லாதவைகளாகவும் காட்டப்படுகின்றன. குறிப்பாக வெண்பனி சூனியக்காரியின் அணுக்கத்தொண்டனாக விளங்குபவனின் உடையலங்காரங்கள் ஒரு யூதமதகுருவினை ஒத்ததாக அமைந்துள்ளது வெறும் தற்செயலாக இருக்க முடியாது. உயிர்த்தெழும் முன்னர் ஏற்படும் நிலநடுக்கம் அதற்கும் அஸ்லானின் தியாகத்திற்கும் சாட்சிகளாக பெண்களே இருத்தல் ஆகியவை வெளிப்படையான விவிலிய சித்திரங்கள். இறுதியாக நார்னியா பங்கிட்டளிக்கப்படும் இடம் ஏனோ கண்டங்களை கிறிஸ்தவம் பங்கிட்ட மத்திய கால மனப்பாங்கினை வெளிப்படுத்துகிறது.

நார்னியாவுக்கும் ஹாரிபாட்டருக்கும் என்ன வேறுபாடு ? ஹாரிபாட்டர் முதலில் குறிப்பிட்டது போலவே ஒரு கிளர்ச்சியாள சிறுவன். அத்தொடர்கள் முழுக்க நிறுவனத்தின் தீமைகளின் எதிர்ப்பு (அமைச்சகத்திற்கு எதிராக) மற்றும் தீமைக்கான எதிர்ப்பு (வால்டர்மார்ட்டுக்கு எதிராக) ஆகியவற்றினை சுற்றி சுழல்கிறது ஹாரியின் போராட்டம். அவனுக்குள் எழும் வேட்கைகளுக்கு எதிராக அவன் போராடுகிறான். கேம்பெலின் ‘மோனோமித் ‘ இயல்பாக வெளிப்படுகிறது ஹாரியிடம். நார்னியாவில் அத்தகைய போராட்டம் எதுவுமில்லை. சூனியக்காரி எதிர்க்கப்பட வேண்டியவள் அவ்வளவுதான். ஒரு கிறிஸ்தவ எவாஞ்சலிக்கல் போராட்டம் அவ்வளவுதான். உள் போராட்டங்கள் ஏதுமற்று சுட்டிக்காட்டப்பட்ட எதிரியை எதிர்த்தழிக்க உத்வேகம் தரும் இராணுவ பலியாக அஸ்லானின் மரணம் விளங்குகிறது. ஹாரி அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துபவன்-அவனது குருவான டம்பிள்டோரின் அதிகாரத்தையும் கூட. ஆனால் நார்னியாவில் பீட்டரின் அதிகாரத்தை ஏற்கவேண்டிய அவசியத்தை எட்மண்ட் உணருகிறான். அதிகாரத்திற்கு கீழ்படியாமையே அவனை துரோகம் செய்திட தூண்டுவதாக அமைகிறது. அதுவே பாவமாக அஸ்லானின் மரணத்திற்கு வித்திடுகிறது.

ஹிந்துக்களை பொறுத்தவரையில் நார்னியா எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது ? நான் சென்றிருந்தபோது, அஸ்லான் விழித்தெழுந்ததும் கை தட்டுகிறார்கள். அஸ்லானின் ‘தியாகம் ‘ சவ்வுமிட்டாயாக இழுக்கப்பட்டபோது ‘ரா ரா ‘ என சந்திரமுகி குரல் கொடுக்கிறார்கள். குழந்தைகள் அச்சமயத்தில் போரடிப்பதாக அங்கும் இங்கும் நெளிகிறார்கள். எருமைதலைகள் கொண்ட வெண் சூனியக்காரியின் படைகளை குழந்தைகளிடம் காட்டி ‘அரக்கங்க வாறாங்க பாரு ‘ என்கின்றனர். ஊஹும்…அஸ்லானின் உள்ளோட்ட கிறிஸ்தவ எவாஞ்சலிக்கல் செய்தி இங்கு அப்படி ஒன்றும் கூர்மையாக இறங்கப்போவதில்லை. இது தேவிகளின், விக்கிரக வழிபாட்டாளர்களின் தேசம். ஆனால் இனிவரும் நார்னியா கதைகளில் – நாலு கை தெய்வ விக்கிரகங்களை ஆராதிக்கும் வில்லர்களான கறுப்பு நில மக்களின் கதைகள் இங்கு எவ்விதம் உள்வாங்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

நியூயார்க் டைம்ஸ்ஸின் விரிவான விமர்சனம்: http://www.nybooks.com/articles/18672

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்