சாரங்கா குண சீலனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

மாலி


‘சதிர்’ என்றும், ‘தாசி ஆட்டம்’ என்றும் அழைக்கப்பட்ட ஆடல் வடிவத்துக்கு ‘பரதநாட்டியம்’ என்று பெயர்சூட்டி எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகப்போகிறது.

ஈ.கிருஷ்ணையர், 1932ஆம் ஆண்டு சென்னை சங்கீத வித்வ சபையின் (மியூசிக் அக்கடெமி) வருடாந்த மாநாட்டில் இத் தீர்மானத்தைக் கொணர்ந்து நிறைவேற்றினார். அப்போது அவர் சங்கீத வித்வ சபையின் செயலாளராகவு மிருந்தார்.

பரதநாட்டியம் என்ற இந்தப் பெயரின் ‘பிதாமகராக’ டாக்டர் வே. ராகவனும் ருக்மிணி அருண்டேலும் பின்னர் உரிமைகோரினார்கள். ஆனால், இவர்கள் இருவருமே இல்லை என்பதுதான் வாதம். 1932ஆம் ஆண்டில் ஓர் ஆராய்ச்சி மாணவராக இருந்த ராகவன், சங்கீத வித்வ சபையில் தீர்மானம் ஒன்றை வலியுறுத்தும் அளவுக்கு செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை என்றும், 1933ஆம் ஆண்டு மாநாட்டில் அவர் வாசித்த கட்டுரையிலேயே பரதநாட்டியம் என்ற பதத்தை அவர் முதன் முதலாக பயன்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.

1935ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி சங்கீத வித்வ சபையில் பந்தணைநல்லூர் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் மாணவிகளான சபாரஞ்சிதம், நாகரத்தினம் ஆகி யோரின் நடன நிகழ்ச்சியைப் பார்த்தபோதுதான் ருக்மிணி அருண்டேலுக்கு இந் நடனத்தின்மீதான நாட்டமே ஏற்பட்டது என்பது ருக்மிணி அருடண்டேல் தொடர்பில் வைக்கப்படும் வாதம்.

ஆக, பரதநாட்டியம் என்ற பெயரோடு இன்று இக்கலை வடிவம் சமூக அந்தஸ்தின் பெரும் சின்னமாக, எழுபத்தைந்து ஆண்டுகளை அண்மித்தாலும், இன்றும் இந் நடனத்தின் மேடைவடிவம் இரண்டு நூற்றாண்டுகால பாரம்பரியத்தை பேணி நிற்கிறது. சரபோஜி மன்னரின் (கி. பி. 1798 – 1832) ஆஸ்தான வித்வான்கள் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என்ற தஞ்சை நால்வர்கள் வகுத்த அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா என்ற உருப்படி அமைப்பே ஒரு தனி பரதநாட்டிய நிகழ்வின் பந்தாவாக அமைகிறது.

ஜதிஸ்வரத்துக்குப் பின்னர் கவுத்துவமும், பதங்களுக்குப் பின்னர் ஜாவளியும் 19ஆம் நூற்றாண்டில் இப் பாரம்பரியத்தில் இயைபாகவே இணைந்துகொண்டவை.

இந்த பந்தாவில் குருவிடம் கற்றதோடல்லாமல், தாம் கற்ற பாணியில் தமக்கு ஒரு தனித்துவத்தை இன்று இக்கலையில் உன்னதமாக திகழும் கலைஞர்கள் ஒவ்வொரு வருமே கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நல்ல பரதநாட்டிய நிகழ்ச்சி நமக்கு நன்கு பரிச்சயமானவையும், புதியவை யுமான உருப்படிகளின் மிகச் சாதுரியமான இணைப்போடு அமைகிறது.

சம்பிரதாயமான பண்புகளை பெரிதும் மீறாமல், சிதைத்துவிடாமல், காலத்தின் சிருஸ்டிப்போடு பரதநாட்டியம் இன்று சர்வதேச அரங்கில் அதன் தனித்துவத்தை மிளிரவைக்கிறது. பாட்டு, பக்கவாத்தியம், உடை, ஒப்பனை, அரங்க அமைப்பு, ஒலி, ஒளி போன்ற அனைத்து அம்சங்களிலும் மேலான கவனம் செலுத்தப்படுகிறது.

சென்னைக்கு அடுத்ததாக, உன்னதமான இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளைப் பார்க்கக்கூடிய இடமாக லண்டன் பெயர்பெற்றது. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களில் இங்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் பரதநாட்டியமும் கர்நாடக சங்கீதமும் இங்கேயே வளர ஆரம்பித்ததல்லாமல், பரதநாட்டியம் அதன் வளர்ச்சி யிலான வித்துவச் சிறப்பையும் சமயங்களில் இப்போது இங்கு அநுபவிக்க வைக்கிறது.

அண்மையில், பத்மினி குணசீலனுடைய மகளும் மாணவியுமான சாரங்கா குண சீலனின் பரதநாட்டிய அரங்கேற்றம் இங்கு நடைபெற்றது. பெருமளவிலான இந்திய இசை, நடன கலைஞர்களைப் பார்ப்பதில் சென்னைக்கு அடுத்தாக லண்டன் இரண்டாவது இடத்தை வகித்தாலும், இசை, நடன அரங்கேற்றங்களில் லண்டன் இன்று நிச்சயமாக முதலாவது இடத்தையே வகிக்கும். வார இறுதிகளில் எந்த அரங்கேற்றத்துக்குச் செல்வதென்பது பல சமயங்களில் பெரும் பிரச்னையாகிறது.

சாரங்கா ஆடலுக்காக பிறந்தவர் என்றேகூட சொல்லலாம். மிக அமைவான உடல் வாகு. பாவம் மிளிரும் முகம்; கண்கள். சுத்தமான அங்க அசைவுகள்.

இவை, வெகு எளிதாக அரங்கை ஆளுமைப்படுத்திவிடுகின்றன. தண்டாயுதபாணி பிள்ளையின் ‘‘சாமியை அழைத்துவாடி…’’ ராகமாளிகை வர்ணம். தோடி, சங்கரா பரணம், வசந்தா, தேவமனோகரி ராகங்களில் ரம்மியமான வர்ணம் அது.

பரிச்சயமான இந்த வர்ணத்தோடு, காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி அமைத்திருந்த ‘நிருத்திய சங்கமம்’, குற்றாலம் நாகராஜன் அமைத்த ‘அஷ்டவிதநாயகி’ ஆகிய உருப்படிகள் புதியன. சம்பிரதாய உருப்படிகளுக்கு அப்பால் சிருஷ்டிப்பாக அமைந்தவை. இரண்டுமே மிக நன்றாக இருந்தன. நிருத்தியசங்கமம் ஜதியும் சுரமுமாக காம்போதியில் மிஸ்ர குறைப்பு.

தவிலும் நாதஸ்வரமும் இணைந்த மல்லாரியோடு சாரங்கா நிகழ்ச்சியை ஆரம்பித்தார். பொதுவாகவே அவசியமற்றபோது, அரங்கேற்றமொன்றில் இந்த தவில், நாதஸ்வரம் எதற்கு என்றே தோற்றினாலும், பக்குவமாகவும் கச்சிதமாகவும் இருந்தது. லண்டனிலுள்ள மகாலக்ஷ்மி கோவிலின் தவில், நாதஸ்வர கலைஞர்கள் இவர்கள். தணிகைவேல் தவில்; சம்பத்குமார் நாதஸ்வரம். காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியும் (மிருதங்கம்) தணிகைவேலும் அந்த மல்லாரியைக் கனகச்சித மாக்கினார்கள். தணிகைவேல் சிறப்பான ஒரு கலைஞராக சென்னையிலும் அறியப்பட்டவர் என்று அவையிலிருந்த லக்ஷ்மி விஸ்வநாதன் கூறினார்.

ஜதிஸ்வரம் திஸ்ர, கண்ட நடைகளில் சற்று வித்தியாசமாக இருந்தது.

உருப்படிகளை லயிப்போடு வெளிப்படுத்த முயலும் தன்மை சாரங்காவிடம் நிகழ்ச்சி முழுமையும் வெளிப்பட்டது.

லண்டனில் இசையும் நடனமும் சிறப்பதற்கான ஒரு முக்கிய காரணம், ஆற்றலும் கீர்த்தியும் வாய்ந்த பக்கவாத்திய கலைஞர்கள் பலர் இப்போது இங்கே இருக்கிறார்கள். சிறப்பான பக்கவாத்தியமும் பரதநாட்டியத்துக்கு இன்று மேன்மை சேர்க்கிறது. டாக்டர் பத்மா சுப்ரமண்யத்தை நினைவுபடுத்தினால் இது துல்லியமாக புரியும். இன்னோரிடத்திலிருந்து எழும் பாடல், இசைக்கு ஒருவர் அபிநயிப்பதாக அல்லாமல், அந்த நர்த்தகியிடமேயிருந்து அவை எழுவதான உணர்வு பத்மாவின் நிகழ்ச்சியில் இயல்பானது. ஆடலைவிட பக்கவாத்தியம் உயர்ந்தது அல்லது குறைந்தது என்றில்லாமல், அவரது ஆடலில் இன்னொரு பரிமாணத்தை அது சேர்க்கிறது. மிருதங்கம், வயலினோடு வீணையையும் பிரதானமாகவே சேர்த்துக் கொள்கிறார். செண்டை, மத்தளம், உடுக்கு போன்ற வாத்தியங்களையும்கூட அவர் அவ்வப்போது பயன்படுத்தினாலும், அவற்றை நன்கு வடிவமைத்து, கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்வார்.

சாரங்காவின் அரங்கேற்றத்திலும் இந்த பக்கவாத்தியச் சிறப்பு இருந்தது. குற்றாலம் நாகராஜன் பாட்டு. நடனத்துக்கு பாடுவதென்பது தனித்துவமானது. அந்த தனித்து வம் மிகவே நிறைந்தவர் நாகராஜன். தாளத்தில் ஆளுமை, நல்ல சுருதி, ராக ஞானம், தெளிவான உச்சரிப்பு எல்லாம் அவரிடமுண்டு. சென்னையிலிருந்து அழைக்கப்பட்டிருந்த மீனாட்சி சிறிநிவாசனும் கூடவே பாடினார். முன்னர் கேட்ட தில்லை; ஆனால், ஞானமான பாட்டு. சுருதி ஒத்துவராவிடினும் வேண்டியவிதத்தில் மாறிமாறி பாடி மெருகுசேர்த்தார்கள்.

காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி நடனத்துக்கான மிருதங்கவாசிப்பின் பிதாமகர். அவர் உருவாக்கிய பாணியைத்தான் இன்று அநேகமாக அனைவருமே பின்பற்றுகிறார்கள். அவர்கூட இப்போது லண்டனில்தான் வசிக்கிறார். நடன நிகழ்ச்சியொன்றுக்கு அவர் வாசிக்கின்றபோது அந் நிகழ்ச்சிக்கு ஒரு தனி சோபை சேர்கிறது. அடவுகளுக்கு மாத்திரமன்றி, சுலோகங்களுக்குக்கூட நர்த்தகிக்கு இடைஞ்சல் ஏற்படாதவிதத்திலான அவரின் வாசிப்பு ஓர் அலாதியைக் கொடுக்கும். ஞானவரதன் புல்லாங்குழல்; மாலினி தனபாலசிங்கம் வீணை. பத்மினியின் நட்டுவாங்கமும் நன்றாகவிருந்தது.

ஆக, தன்னுடைய லயப்பிடிப்பான ஆடலில், சஞ்சாரிபாவங்களில் சாரங்கா இந்த அரங்கேற்றத்தில் ஏற்படுத்திய நிறைவிலும்பார்க்க ஏற்படுத்திய நம்பிக்கைகள் அதிகம்.

ஒன்றைச் சொல்லவேண்டும்; ஒன்பது உருப்படிகளை அளித்த சாரங்கா ஆறு அல்லது ஏழு தடவைகள் உடைமாற்றியிருந்தார். எல்லாமே மிக அழகான உடைகள்தாம். ஆனால், தாயாக மாத்திரமன்றி, குருவாகவும் அமைந்த பத்மினி இப்படிச்செய்தால், ‘லண்டனில் இவர்களுக்கு செருக்கு’ என்று சொல்ல மாட்டார்களா, என்ன ?

பத்மினியினுடைய குரு அடையார் லக்ஷ்மன் பிரதமவிருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். லண்டனில் கடந்த இருபது ஆண்டுகளில் பத்மினி அரங்கேற்றிய இருபதாவது மாணவி சாரங்கா. பத்மினி அரங்கேற்றியவர்களில் வெள்ளைக்காரப் பெண்களும் இருக்கிறார்கள்.

ஆக, சில அரங்கேற்றங்கள், நடன நிகழ்ச்சிகள் நல்ல சிருஷ்டிப்புகளையும் மேலான கலை நுகர்வையும் இங்கு தருகின்றன.

– மாலி

( ripiyer@yahoo.com மூலம் பெறப்பட்டது. )

Series Navigation

மாலி

மாலி