குறளும் பரிமேலழகர் உரையும்

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

இந்திரா பார்த்தசாரதி


நேற்று ஒருவருடன் பேசிகொண்டிருந்தபோது, ஸ்டாஃபன் ஹாகிங் எழுதிய, ‘A Brief History of Time ‘ பற்றிப் பேச்சு வந்தது. எனக்குக் குறள் நினைவுக்கு வந்தது.

‘நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்

வாள துணைவார்ப் பெறின் ‘.

இதற்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரை குறளுக்கு நிகரான செறிவுடையது. பரிமேலழகர் உரை இல்லாமலிருந்திருந்தால், குறளின் ஆழத்தை நம்மால் புரிந்துகொண்டிருக்க முடியுமா ? இன்று, தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்கள் யாவரும் குறளுக்கு உரை எழுதி வருகிறார்கள். பரிமேலழகர் உரையை இகழவும் செய்கிறார்கள். காரணம், பகவத் கீதையைப் போல், குறள், எல்லாத் தலைகளுக்கும் பொருந்துகின்ற குல்லாய்.

சரி, இக்குறளின் பொருள் என்ன ?

இது, ‘நிலையாமை ‘ என்ற அதிகாரத்தில் வருகிறது.

ஒரு பெரிய வாள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால்,அது கண்ணுக்குத் தெரியவில்லை. கூர்மையான வாள். உலகில் உள்ள ஒவ்வொரு உடம்பும் அந்த வாளில் தொடர்ந்து அறுபட்டுக் கொண்டே இருக்கிறது. அறுபடுவதும் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரு நாள் உயிர் இல்லாமல் போகும்போதுதான், கண்ணுக்குத் தெரியாத வாளில், உடம்பு தொடர்ந்து அறுபட்டு வந்திருப்பது நமக்குப் புரிகிறது.இந்த வாளின் பெயர் என்ன ? காலம். இது அருவப் பொருள். உலகக் காரியங்கள் நடக்கக் காலத்தை நாம் ‘நாள் ‘ என்று கூறுபோட்டுக் கணக்கிடுகிறோம். இவ்வாறு கூறு போடுவதற்கு உதவுவது, சூர்யனின் உதயம், அஸ்தமனம் ஆகிய அளவைகள்.

‘காலம் ‘ என்ற அருவமான வாள், ‘ ‘நாள் ‘ என்ற மயக்கத்தை நமக்குத் தோற்றுவிக்கின்றது., அவ் வாளில் அறுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராமல், பொழுது அவ்வளவிலேயே இன்பமாகக் கழிகின்றது என்று மகிழ்பவர் பலர். ஆனால் இவ்வாறு அறுபடுவதை உணர்கின்றவர்கள் மிக அரியவர்.

பரிமேலழகர் உரையைப் பார்ப்போம்:

‘ நாளென்று அறுக்கப்படுவதொரு காலவரையறபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளின் வாயது உயிர், அஃது உணர்வாரைப் பெறின் ‘

‘காலமென்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற்பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளாற் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறு படாமையின், ‘நாலென் வின்றுபோ ‘லென்றும், அது தன்னை வாளென் றுணரமாட்டாதார் நமக்குப் பொழுது போகா நின்றதென்று இன்புறுமாறு ‘நாளாய் ‘ மயக்கலிற் ‘ காட்டி ‘ என்றும், இடைவிடாது ஈர்தலான் ‘வாளின் வாயதெ ‘ன்றும், அஃதீர்கின்றமையை உணர்வார் அரியராகலின், ‘உணர்வார்ப்பெறின் ‘ என்றும் கூறினார். ‘உயிர் ‘ என்ற சாதி ஒருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின் ‘. வாள் எனபது ஆகுபெயர். ‘

இக்குறளை நுனிப்புல் மேய்கின்றவர்கள், ‘நாள் ‘தான் நம் வாழ்நாளை அறுக்கிற வாள் என்று பொருள் கொள்வார்கள். மணக்குடவர் கொண்ட பொருளும் இதுவே. இதை பரிமேலழகர் மறுக்கிறார். ‘காலம் ‘ என்பது, நாளென ஒன்று போல் காட்டும் (கண்ணுக்குப் புலனாகாத) வாள், அதன்கண் அறுபடுவது உயிருடைய உடம்பு என்பது அவர் காணும் பொருள்.

‘ இனி, இதனை நாளென்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொரு வாளாம் என்றுரைப்பாருமுளர். ‘என ‘ என்பது பெயர் அன்று; இடைச்சொல்லாகலானும்,

‘ஒன்றுபோல்காட்டி ‘ என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், ‘அது ‘ என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை உணர்க ‘.

பரிமேலழகர் உரையின் நுணுக்கத்தை அறிய அதை ஊண்றிப் படிக்கவேண்டியது அவசியம்.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர் ‘

மிகப் பிரபலபான குறள். பொருள் எளிதில் விளங்குகின்றது. பரிமேலழகர் உரையைப் பார்ப்போம்.

‘ யாவரும் உண்ணும் வகை உழுதலைச்செய்து அதனால் தாமும் உண்து வாழ்கின்றாரே தமக்குரியரராய் வாழ்கின்றார். மற்றையரெல்லாம் பிறரைத் தொழுது அதனால் தாமும் உண்டு அவரைப் பின் செல்கின்றவர் ‘.

‘தாமும் உண்டு ‘ என்பதில் ‘உம் ‘மையை கவனித்தீர்களா/ அதாவது, மற்றவர்களுக்கு உணவளிப்பது முதல் கடமை,, தாம் உண்பது என்பது இதற்கு அடுத்த நிலைதான்.

இறுதயிிலே கூறுகிறார்: ‘ தாமும் மக்கட் பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம்முயிர் ஓம்பி அவர்பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து ‘.

உண்மையான மக்கட் பிறப்பினர் உழுதுண்டு தம் தனிமனித சுதந்திரத்தைப் பேணி வாழ்கின்றவர்கள். மற்றவர்கள், உறுப்பு ஒற்றுமையினால் மக்களாய்க் கருதப்படுகின்றவர்கள் ஆனால் பிறரைத் தொழுது, அதனால், மற்றவர்கள் இட, தாமும்உண்டு வாழ்வதால், தமக்குரியர் அல்லர், அதாவது, தம் தனி மனித உரிமை பேணா அடிமைகள்.

வள்ளுவர் உறுப்பு ஒற்றுமையை அடிப்படையாக வைத்து அங்கதமாகப் பேசும் இடங்கள் பல உண்டு.

‘ மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில் ‘

‘ வடிவால் முழுவதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்தாற்போன்ற ஒப்பு வேறிரண்டு சாதிக் கண் யாம் கண்டதில்லை ‘.

இதென்ன ஆச்சர்யம் என்று வியக்கின்றார் வள்ளுவர். கயவனுக்கும் மானுடனுக்கும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள், இரண்டு கால்கள் என்று இருக்கின்றனவே, இதென்ன வடிவ ஒப்புமை! மானுடம் என்பது உயர்ந்த ஜாதி அல்லவா ? ‘மானுடம் வென்றதம்மா ‘ என்றான் கம்பன்.

‘கயமை ‘ என்றால் என்ன ? ‘குணங்கள் யாவுமிலராகிய கீழோர் ‘ என்கிறார் பரிமேலழகர்.

அயோக்கியர்கள் என்ற பொருளில் இன்று வழங்கினாலும், வள்ளுவர், ‘philisitine ‘

என்ற பொருளில் கூறியிருப்பாரோ என்று நினைக்கத் தூண்டுகிறது.

அடுத்த குறளைப் பாருங்கள்.

‘நன்றறி வாறிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத் தவலம் இலர் ‘.

பரிமேலழகர் உரை:

‘ தமக்கு உறுதியாவன அறிவாரின் அவை அறியாத கீழ்மக்கள் நன்மை உடையவர்; அவர் போல அவை காரணமாக நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான். ‘

அதாவது, அறிவு சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து மேலும் மேலும் சிந்திக்கும் அறிவு ஜீவிகளைக் காட்டிலும் சாதாரண மக்கள் கொடுத்து வைத்தவர்கள். சிந்தித்துச் சிந்தித்துத் தங்களைக் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. ‘அவை காரணமாக ‘ என்கிறார் பரிமேலழகர். அறம் சார்ந்த குழப்பங்கள் (ethical and existential dilemma), அறியுந்தொறும், அறியுந்தோறும், அறியாதன கடலனைய இருக்கின்றன என்பதின் காரணமாக ஏற்படும் கவலை, இவைகள் யாவும் கயவரைப் பாதிப்பதில்லை என்பதால் கவலையுமில்லை.

பரிமேலழகர் கூறுகிறார்:

‘உறுதிகளாவன: இம்மை மறுமை வீடுகட்குரியவாய புகழ், அற ஞானங்கள். இவற்றை அறிவார் இவை செய்யா நின்றே மிகச் செயப்பெறுகின்றிலேமென்றும், செய்கின்ற இவை தமக்கு இடையூறு வருங்கொலென்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோவென்றும், இவ்வாற்றாற் கவலை எய்துவர். கயவர் அப்புகழ் முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையரல்லராதலான் திருவுடையரெனக் குறிப்பால் இகழ்ந்தவாறு ‘.

‘Philistine ‘ என்பதற்கு அகராதிப் பொருள்;

‘A crass prosaic individual guided by material rather than intellectual, spiritual, or artistic values ‘.

—-

Series Navigation

இந்திரா பார்த்தசாரதி.

இந்திரா பார்த்தசாரதி.