பிரெஞ்சு படைப்புலகில் ‘சுயகதைகள் ‘(Autofiction)

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


படைப்பும் படைப்பாளியும் பிரிக்க முடியாதவை. கண்ணால் பார்த்த, காதால் கேட்ட, நாசி வாங்கிய, நா சுவைத்த, மெய் தீண்டிய அனுபவங்கள், அண்டை மனிதர்களின் அனுபவ இழைகளின் கூட்டாக வடிவெடுக்கிறது. ஆகப் படைப்பு சுவைஞனைச் சேரும்போது மற்றொரு கூட்டனுபவத்தை இரண்டாம் முறையாக வேறொரு முகத்தோடு படைப்பாளி அரங்கேற்றுகிறான். இவ் உண்மையின் அடிப்படையில் தமது எல்லைகளை விரிவாக்கிக்கொண்டு அந்தரங்கங்களை, மனத்தின் பாரங்களை வாசகர்தோளில் இறக்கிவைக்கத் துணியும் இலக்கிய முயற்சியென சுயகதைகளைச் சொல்லலாம்.

தமிழைப் பொறுத்தவரையில் ‘சுயகதைகள் ‘ என்ற சொல் புதிதுபோல தோன்றினாலும் ‘சொந்தக் கதை ‘ என்ற பெயரில்- வெகுசன புழக்கத்தில் காலங்காலமாக உபயோகத்தில் இருந்துவருகிறது. போலித்தனமான பண்பாடுகளும், செல்லரித்துப்போன மரபுகளும் குடைபிடிக்கும் தமிழ்ச் சூழலில் தீவிர இலக்கியவாதிகளுக்குங்கூட ‘சொந்தக் கதையைச் சொல்வதற்கு வேண்டிய நேர்மையோ அந்நேர்மைக்கான விசுவாசமோ, அவையிரண்டும் இருந்தாலுங்கூட அதனைச் சொல்வதற்கான தைரியமோ தமிழ்ப் படைப்புலகில் சாத்தியமில்லை என்பதை மேற்கத்திய ‘சுயகதைகளின் ‘ வாசிப்பனுப்பவங்கள் நமக்கு வலியுறுத்தக்கூடும்.

பிரெஞ்சு இலக்கிய உலகில் பேராசிரியரும் நாவலாசிருமான செர்ழ் தூப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky)யினுடைய ‘Fils ‘(1) ‘சொந்தக் கதை அல்லது ‘சுயகதை(Autofiction) என்ற சொல்லை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆங்கிலத்தில் இதனையே ‘Faction ‘ (Fact+Fiction) என்றும் சொல்லிக்கொண்டாலும், சுயகதைகளின் வாசிப்பனுபவம் உற்றவர்களுக்கு ? ஆங்கிலச் சொல்லான ‘Faction ‘ எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு நிற்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்.

‘சுயசரிதை ‘யினின்றும் ‘சுயகதை ‘ எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறியக் கொஞ்சம் ஆழமாக பயணிக்க வேண்டியிருக்கிறது. எழுத்தாளன் தமது பிறப்பனுகூலத்தை, சுயதம்பட்டத் தொனியில், மிதமிஞ்சிய கற்பனையில் சொல்ல விழையும்போது ‘சுயசரிதை ‘ ‘சுயகதை ‘யாக நிறம்மாறுவதை அவதானிக்க முடியும். உதாரணம் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர் ‘அலென் ரோப்-கிரிய்யே ‘(Alain Robbe-Grillet) நுண் படைப்புகளான ‘Le Mirroir qui revient ‘(The Recurring Mirror-1985), Angelique ou l ‘enchantement (Angelique, or the Enchantment -1988)மற்றும் Les derniers jours de Corinthe(The Last Days of Corinthe -1994) அவற்றுள் ஒரு வகை, மகோன்னத படைப்பென்று சித்தரிக்கப்படுகிற ‘Mythologies ‘ ஆசிரியரான எழுத்தாளரும் இருத்தலியல்வாதியுமான ‘ரோலான் பார்த் ‘ துடைய(Roland Barthes)Roland Barthes par Roland Barthes (Paris: Seuil, 1975) மற்றொரு வகை. தமது இயல்புத் தன்மையிலிருந்து விலகிக் முற்றிலும் வேறான பாதையில் தம்மை நடத்திச் செல்லும் சுயசரிதைகள் தங்கள் அத்துமீறல்கள் குறித்து எங்கனம் புளகாங்கிதம் அடைகின்றன என்பதும் தெளிவு.

ழாக் லெகார்ம் (Jacques Lecarme)சுயகதைகளை முற்றிலும் வேறான தளத்தில் நிறுத்துகிறார்: முதலாவது ‘சுயகதை ‘ என்ற சொல்லின்படி, உண்மையைக் கதையாக்கும் வித்தை அதாவது சொல்லுகின்ற நினைவுகளை அல்ல, சொல்லும் தொனியை -கதையாடலை, விதத்தை-கதைகூறலை. இதற்கு உதாரணமாக இவர் குறிப்பிடுவது ரொலான் பார்த்துடைய சுயகதையான ‘ரொலான் பர்த் பற்றி ரொலான் பர்த் -( Roland Barthes par Roland Barthes) ‘. இரண்டாவது வகையென்று ‘லெகார்ம் ‘ குறிப்பிடுவது, எழுத்தாளர் விஸ்தாரமாய் சஞ்சரிக்கும் கற்பனா உலகம். இங்கேபடைப்பாளியின் நினைவுகளே கட்டுகதைகளாக மாறும் அபாயம், உதாரணம்- ரோப்-க்ரிய்யெ (Robbe-Grillet) எழுதிய ‘பிரயத்தனம் ‘(La Tentative).

ழெரார் ழெனெத்(Gerard Genette) கருத்துப்படி உண்மையான சுயகதைகள் என்பது ஒருவகை, அவை முழுக்க முழுக்க கற்பனை உலகில் சஞ்சரிப்பவை உ.ம்:L ‘Aleph (Serge). பொய்யான சுயகதைகள் மற்றொருவகை, அவை அந்தரங்கத்தை அலங்காரமற்ற உத்தியில் அடக்கி வாசிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் கதைக்குத் தேவையான ‘புனைவு ‘ இயலை முற்றாக விலக்கியவை.

இன்றைய சுயகதைகளுக்கு ‘முன்மாதிரிகளாக ‘நாட் குறிப்புகள், நினைவுக்குறிப்புகள், சுயசரிதைகளை குறிப்பிட்டாகவேண்டும். இச்சமுதாயத்தோடு எனக்கான முகம்: தழும்புகளை அரிதார பூச்சில் மறைத்துகொண்டுள்ள முகம், அதன் மதிப்பீடுகள் என் நிஜ முகத்தோடு ஒவ்வாதவை அதனை அதுவாக முன்னிறுத்தி என் மனப்புழுக்கத்தை அகற்றியாகவேண்டும் என்கிற தவிப்பு இச்சுய கதைகளில் தெரிகிறது.

சுயகதைகள் சுயசரிதைகளின் மாற்றாக அவற்றுக்கான ரட்சகர்களாக வந்துள்ளன என்றும் நம்பப்படுகிறது. எழுத்தாளர் பிலிப் லெழென் (Philippe Lejeune) சுயகதைகளை ‘எழுத்தாளனுக்கும் வாகனுக்கும் இடையேயான ஒப்பந்தம் என்கிறார்: இவ் ஒப்பந்தப்படி எழுத்தாளன் உண்மையைச் சொல்வதும், அதனை வாசகன் நம்புவதென்பதும் எழுதப்படாத விதியாகிறது. ‘ ஸ்பானிய எழுத்தாளர் என்றிக் விலா-மத்தாஸ்(Enrique Vilas-Matas), ‘நம்பகத்தன்மையற்ற சுயசரிதை ஒரு சுயகதை ‘, என்றவர் ‘எனது சொந்த நினைவுகளை எழுதுவதற்காக, பிறமனிதர்களை படைத்தேன் ‘ என்கிறார்.

இந்தச் சுயகதைகளுக்குள்ள இலக்கணந்தான் என்ன ? மிகவும் சிக்கலான கேள்வி.

செர்ழ் தூப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky)யின் கூற்றுப்படி, ‘எந்தவொரு படைப்பில் படைப்பாளனே படைப்பின் கருவாகவும், பேசப்படும் விஷயமாகவும் மாறிப்போகின்றானோ அப்படைப்பு ‘சுயகதை ‘யாகிறது ‘. இவ்விதி சுயசரிதைக்கான விதியல்லவா என்கிற கேள்வி எழும்போது, நம்பகத்தன்மையற்ற சுயசரிதை, சுயகதை என்கிற பதில் கிடைக்கிறது. தமது சுயசரிதையெங்கும் நாவலுக்குறிய மொழியிலும், குணத்திலும் கட்டுப்பாடின்றி படைப்பாளன் வலம்வர சுயகதைகள் உதவுகின்றன.

‘படைப்பெங்கும் நான் ‘நான் ‘ அற்றவனாகவே இருக்கிறேன். என்னைச் சுற்றிலும் ‘நான் ‘ இன்மையின் வெற்றிடம், சூன்யம் ‘. என்னை நினைவுகூற வேண்டுமெனில், இன்னொரு ‘நான் ‘ கண்டாக வேண்டும் விளைவு எனது கற்பனை ‘நான் ‘ முளைக்கிறது;(JE ME MANQUE TOUT AU LONG….De MOI, je ne peux rien apercevoir. A MA PLACE NEANT….Si j ‘essaie de me rememorer, je m ‘invente…JE SUIS UN ETRE FICTIF – ‘Le livre brise ‘ -Serge Doubrovsky)

அன்னி எர்னோ (Annie Ernaux), ‘படைப்பாளி தமது அந்தரங்க தணிக்கைக்குழுவின் அனுமதியுடன் குடும்பம், கல்வி, தமது பாலியல் இச்சை என எல்லாவற்றிலும் வெகு சுதந்திரமாக சுயகதைகளில் வெகுதூரம் பயணிக்கமுடியும் ‘ ( ‘les censures interieures ‘ et lui permet ‘d ‘aller au plus loin possible dans l ‘exposition du non-dit familial, sexuel et scolaire),என்கிறார். தன்னில் பங்கெடுத்தவர்களின் நிறகுறைகளை பேசுவதற்கான வாய்ப்பு, அதற்கான சுதந்திரத்தினையும் சுயகதைகள் வழங்கத் தவறுவதில்லை.

உண்மை, ‘புனைவு ‘ என்கிற போர்வையில் ஒளிந்துகொண்டு சில்மிஷங்கள் செய்வதற்கான வாய்ப்பினை சுயகதைகள் நல்குகின்றன. இதனையே சுயசரிதைகளில் நேரிடையாக சொல்கிறபோது சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லவும், சிலவேளைகளில் படைப்பாளி தண்டிக்கப்படவுங்கூட வாய்ப்புண்டு. ‘எனது எல்லைக்குள் பிரவேசித்ததால் எனதுடமையாகிப்போனீர்கள், உங்களைப்பற்றி எழுதவேண்டியிருக்கிறது. நான் என்ன செய்யட்டும், அது உங்கள் பொல்லாத நேரம் ‘ (Vous avez traverse mon territoire, vous m ‘appartenez, c ‘est tant pis pour vous )சொல்பவர்,- B. Poirot-Delpech( Le Monde).

டி.எஸ் எலியட், புகழ்பெற்ற ‘பூனைகளுக்கான பெயர்சூட்டல் ( ‘The naming of cats) ‘ என்கிற தமது கவிதையொன்றில் ஒவ்வொரு பூனைக்கும் பெயர் சூட்டுவதில் உள்ள நான்கு சாத்தியங்களைக் குறிப்பிடுகிறார்: வழக்கமாய் குடும்பங்கள்தோறும் சூட்டுகிற உபயோகத்திலிருக்கிற பொதுவான பெயர்கள் முதலாவது. புகழ்பெற்ற, பிரியத்துக்குகந்த மனிதர்களின் செல்லப் பெயர்களைச் சூட்டி அழைப்பது இரண்டாவது வகை. பிறகு அதன் உடல்வாகு, குணத்தின் அடிப்படையில் இடும் பெயர்கள் மூன்றாவது வகை. இறுதியாக அதாவது நான்காவதாக வெளியுலகம் அறியாது சம்பந்தபட்டப் பூனைமட்டுமே பூடகமாக வைத்திருக்கிற ஒருபெயர். இதன் தொடர்ச்சியாக டொனினொ பெனாக்கிஸ்ட்டா (Tonino Benaquista) தமது ‘கரும்பேழையில் ‘(La boite noire) ஒவ்வொரு தனிமனிதனின் உட்கூறுகளாய் மூன்று மனிதர்களை அடையாளப்படுத்துகிறார்: ‘இப்படியாய் இருக்கவேண்டுமே ‘ என்ற விருப்பத்தின்பாற்பட்ட கற்பனா மனிதன், ‘இப்படித்தான் இருக்கிறோம் ‘ என அவன் நம்பிக்கொண்டிருக்கும் மனிதன், நிஜத்தில் வலம் வரும் மனிதன். இம்மூன்றையும் தவிர்த்து நான்காவது ‘மனிதம் ‘ ஒன்றும் அவனிடம் உண்டு, அநேகமாக பெரும்பாலான மனிதர்களிடத்தில் தலைமறைவுவாழ்க்கை நடத்துகிறது. படைப்புலகம் வாய்ப்புஅளிக்கமுடியுமென்றால் தன்னையேக் காட்டிக்கொடுக்கும் கயமையும் அதற்குண்டு; சுயகதை என்ற பெயரில்.

நமது வாசிப்புக்கு உள்ளாகிற அநேக சுயசரிதைகள், அப்படைப்பாளியின் ஐந்து சதவிகித மென்மையான, மேன்மையான மின்னற்கீற்றுகளை தொண்ணூற்றைந்து சதத்திற்குக் கொண்டுசேர்க்கும் தன்மையன. தங்கள் அழுக்குகளை, முரண்பாடுகளை, மனவிகாரங்களை சொல்லவரும் முனைப்பிலும், வாசிப்பவனிடம் கைத்தட்டலை யாசிக்கும் மனம்; மகாத்மா காந்தியாக இருந்தால் கூட. சுயசரிதைகள் பாவமன்னிப்பு கோரல்களாகவோ, பிராயச்சித்தத் தேடல்களாகவோ இருக்கமுடியாதெனினும், எஞ்சிநிற்கிற உண்மைகளை அநேக சமயங்களில் கருணைக்கொலைசெய்துவிட்டு அப்பழுக்கற்ற மனிதர்களாக, ஒழுக்கசீலர்களாகக் காண்பித்துக்கொள்ளும் தன்முனைப்புகளுக்காவது குறைவு உண்டா என்றால், இல்லை. இப்படியான நேரங்களில்தான் சுயகதைகள் உதவிக்கு வருகின்றன. சுயசரிதைகளுக்குண்டான விதிகளை உடைத்தெறிந்து, ஒவ்வொரு தனிமனிதனிடத்தும் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் மனிதம் தமது புழுக்கத்திற்கு வடிகாலாக சுயகதைகளை நினைக்கிறது.. ‘வாழ்வின் உண்மை இலக்கியத்தில் மட்டுமே இருக்கிறதென ‘ நம்பும் இலக்கியவாதியும் சுயசரிதைச் சொல்லவருகிறநேரத்தில் அவனது புத்தி வழக்கம்போல உத்திகளுக்கு அடிமையாகிறபோதும், உண்மைகளைனின்றும் விலகாமல் எழுதுகிறான். மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவனாக அல்லது உகந்தவனாக நிஜத்தில் தன்னை மாற்றிக்கொள்ள இயலாத படைப்பாளி எழுத்தில் அதனைச் செய்கிறான். வாசகனின் விருப்பத்தினை நேர்படுத்தும் வகையில் தனது சுயம், தன்பிள்ளை, தன்மனைவி, தன் காமம் பேசுகிறான்.

சுயகதைகளை நாவலென்றோ, சுயசரிதையென்றோ திட்டமிட்டு சொல்வதற்கு இயலாத நிலையிலிருப்பினும் ஏனைய இலக்கிய வடிவங்களைப்போலவே அவை படைப்பிலக்கியம் சார்ந்தவை. உண்மையென்கிற அச்சாணியில் உருளுவது அதன் கூடுதல் பலம். எதிர்காலத்தில் படைப்பாளிகளின் சுயசரிதைகள் சுயகதைகள் என்றே அச்சிலேறும் சாத்தியங்கள் அதிகம், அவற்றுள் கற்பூரமும் நாறும்;கமலப்பூவும் நாறும்.

****

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா