பேசாநாடகம் பிறந்ததுவே

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

முனைவர் மு. பழனியப்பன்


1970 ஆம் ஆண்டு பாரதிதாசனாருக்கு, அவரின் பிசிராந்தையார் நாடக நூலுக்காக சாகித்திய அகாதமி பரிசு வழங்கப்பெற்றது. கவி ஞரான அவருக்கு கவிதைக்கான பரிசு வழங்கப் பெறாமல், நாடகத்திற்கு ஏன் வழங்கப் பெற்றது என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம். பிசிராந்தையார் நாடகம் கவிதை நாடகமாகும். பாரதிதாசனாரின் கவிதை புனைதிறனுக்கும், நாடக ஆற்றலுக்கும் அந்நூல் சான்று பயப்பதால் அவ்விரு திறனுக்காக பாரதிதாசனாருக்கு அப்பரிசினை சாகித்திய அகாடமி வழங்கியுள்ளது என உணரும்போது மேற்கண்ட ஐயம் சற்று விலகலாம்.

இருப்பினும் பாரதிதாசனாரின் கவிதையாற்றல் மக்களிடம் பரவிய அளவிற்கு, நாடகத்திறன் சென்றடையவில்லை. கவிதைகளைப் படைத் த பாரதிதாசனார் அவற்றோடு ஆங்காங்கே நாடகங்களைப் படைப்பதிலும் மிகவும் ஆர்வம் கொண்டு விளங்கியுள்ளார். நல்ல தீர்ப்பு(1944), செளமியன்(1947), பாரதிதாசன் நாடகங்கள்(1959), பிசிராந்தையார்(1959- தொடக்குதல்), அமைதி, பாண்ழயன் பரிசு திரைப்பட ஆக்கமுயற்சி(1961) எனத்தொடரும் அவரது நாடகப்பணிகள் அவருக்கிருந்த நாடக ஆர்வத்தை வெளிப்படுத்துவனவாக உள்ளன.

மேற்கண்ட நாடகப்பட்டியலில் இடம்பெறும் நாடகங்களிலிருந்து அமைதி என்ற நாடகம் முற்றிலும் மாறுபட்டப் புதுமை உடையதாக உள்ளது. இதில் இடம்பெறும் பாத்திரங்கள் அனைத்தும் வசனம் பேசாப் பாத்திரங்களாகச் செயலாற்றும் செயல் வீரர்களாகப் படைக்கப் பெற்றுள்ளன. பாரதிதாசனார் இந்நாடகம் குறித்துப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார். ? ?அமைதி என்னும் இச்சிறு நாடகம், நாடகஉறுப்பினர்- நடிகர் எவருக்கும் பேச்சில்லாது நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணுவதால் மட்டும் கருத்தறியுமாறு அமைக்கப் பெற்றுள்ளது… இந்நாடகம் எம்மொழியாராலும் நடத்துவிக்க முடியும், கருத்துக்களும் உலகப்பொதுவானவை. ? ? என்ற அவரின் கருத்துப்படி இந்நாடகம் இயக்கும் நிலையிலும், கருத்தமைவு நிலையிலும் உலகப் பொதுமை பெற்றே விளங்குகின்றது. மொழி என்ற வட்டத்தைக் கடந்து, உணர்வுகளால் இந்நாடகம் நடைபெறுவதால், அனைத்து மொழியினராலும் உணரத்தக்க வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்நாடகம் நகைச்சுவையுணர்வுடையதாகவும், பொதுவுடைமைக் கருத்துக்களை முன்வைப்பதாகவும், புரட்சி எண்ணங்களை மெளனத்தால் செயல்படுத்துவதாகவும் அமைந்துவிளங்குகின்றது. இவ்வகைச் சிறப்புகளுடன் கதையமைப்பிலும் உயர்ந்து நிற்பதால் பழப்போருக்கு புதுவகை இன்பத்தினைப் பயப்பதாக உள்ளது.

பிண ஊர்வலத்தில் தொடங்கும் இந்நாடகம், கதைநாயகன் பிணமாகும் முடிவினைக் கொண்டுள்ளது. இத னால் நாடகத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அமைதிக்கான பின்புலம் இயல்பாக அமைய வாய்ப்புண்டாகிவிடுகின்றது. முதற்காட்சி -ஆர்பாட்டம், ஆடுதல், பாடுதல் இல்லா பிண ஊர்வலமாக நகர்வதால் நாடகம் அமைதி கொண்டதாய் தொடங்கிவிடுகின்றது. அதனை எதிர்பார்க்கும் வாசகரையும் அது அமைதிப்படுத்தி தனது அமைதிச் சூழலுக்கு கொண்டு வந்துவிடுகின்றது. மேலும் ? ?நிலையாமை உடைய உலகில் எதுவும் நிலையானதல்ல. அனைத்தும் மாறக் கூடியன,, பொருளை வறியவர்க்கு வழங்காது சேர்த்து வைப்பதால், சுயநலங்கொண்டே வாழ்வதால் பயனொன்றும் இல்லை,, பொதுநலத்திற்கு வாழ்தல் நன்று,, அதனால் வரும் புகழ் மட்டுமே நிலையானது ? ? என்ற தத்துவ நிலைக்கு பார்வையாளரைக் கொண்டுவருவதற்காகவும் இந்நாடகம் இறப்பு ஊர்வலத்தில் தொடங்கி, இறப்பிலேயே முடிவதாக பாரதிதாசனாரால் அமைக்கப் பெற்றிருக்கவேண்டும்.

மண்ணாங்கட்டியின் பயணம்

மண்ணாங்கட்டியின் பயணமாக நாடகம் அமைகின்றது. தனக்கென மனைவி, மக்கள், குடும்பம் ஏற்படா நிலையில், தன்தாயை இழந்த அவன் ஊரார் உதவியுடன் அவளுக்கு இறுதிக்கடன் செய்கின்றான். அதன்பின் அவ்வீட்டில் தனிமையில் இருக்கப் பிடிக்காது, சில துணிமணிகளுடன், காசுகளுடன் புறப்பட்டு விடுகின்றான்.

தங்குவதற்கு நல்ல வீடில்லா ஓர் ஏழைக்குத் தான் இருந்த வீட்டைக், கடிதம் மூலம் தந்து உதவுகின்றான். சேலை இல்லாக் கிழவியொருத்திக்குத் தன் அம்மாவின் ப ?டுச் சேலையைத் தந்து காக்கின்றான். பிள்ளையில்லா குடும்பத்திற்குத் தெருவில் வீசப்பட்ட, அனாதையாக்கப் பெற்ற ஒரு குழந்தையைத் தக்க முறையில் மறைமுகமாகத் தந்து இவன் குழந்தையையும் வாழவைக்கின்றான், குழந்தையற்ற குடும்பத்தையும் மகிழ்வு கொள்ளவைக்கின்றான். உணவில்லா ஏழைகளுக்குக் கோயில் மடப்பள்ளி உணவைப் பகிர்ந்தளிக்கின்றான். இரவில் ஒரு வீட்டிற்குத் திருட வந்த திருடர்களைத் தடுத்து அவ்வீட்டின் பொருட்கள் களவு போகாவண்ணம் காக்கின்றான். மற்றொரு ஊரில் பணத்தைக் குவித்து வைத்துள்ள பண்ணையார் இருவரின் சொத்துக்களுக்கு சேதமூட்டி அதனைச் செப்பமிடச் செய்வதன் மூலம் ஏழைகளுக்கு வாழ்வையும், வேலையையும் பெற்றுத் தருகிறான். பொன், மண், பெண், பதவி போன்ற எவ்வித ஆசைகளும் இல்லா மனிதனாய், மற்றவர்க்கு உதவும் தயாள குணம் மிக்கவனாக இவன் விளங்குகின்றான். பாரதிதாசனார் கண்ட புரட்சிமனிதன் இவனெனக் கொள்வது தகும். இறுதியில் சேதமுண்டாக்கிய நிலையில் காரணமானவன் தானே என்பதைத் ஒப்புக்கொண்டு அதற்கான தண்டனையாகத் தன் உயிரை இழப்ிபவனாக இவன் படைக்கப் பெற்றுள்ளான்.

சிறுகதையல்ல- நாடகம்.

மேற்சொன்ன நாடகக் கதையைச் சிறுகதையமைப்பில் சொல்லியிருப்பினும், சிறுகதையாக அதனை அமைக்காது நாடகமாகப் பாரதிதாசனார் படைத்துள்ளார். வரிக்குவரி பாத்திரச் செயல்முறைகளைக் கூறுவதாலும், பயணக்கதை என்பதால் காட்சிகளை அடிக்கடி மாற்றியமைப்பதாலும் நாடகமாக இதனை அவரால் படைக்க முடிந்துள்ளது.

எடுத்துக்காட்டிற்கு இரண்டாம் காட்சியின் தொடக்கப் பகுதியைச் சுட்டலாம். ? ?பிணத்தோடு சென்றவர்கள், மண்ணாங்கட்டி உள்ள வீடு நோக்கி வருகிறார்கள். மண்ணாங்கட்டி தன் வீட்டுக் குறட்டில் நின்று கைகூப்ப, பிணத்தோடு சென்று மீண்ட அனைவரும் கை கூப்பிச் செல்லுகின்றனர். ? ? என்ற காட்சி வருணனை- பாத்திரங்களின் செயல்பாடுகளை உரைத்து, படக்காட்சி போல நடிப்பவரைச் சுட்டி நிற்பதால் நாடகத்தன்மை பெற்றுவிடுகின்றது. இவ்வமைப்பிலேயே பாரதிதாசனார் இந்நாடகத்தினை நகர்த்திச் சென்றுள்ளார்.

நகைச்சுவை நலம்

பதினாறு பிரிவுகளைக் கொண்ட இந்நாடகம் ஆங்காங்கே நகைச்சுவைப் பண்பினையும் கொண்டு விளங்குகின்றது. இரவுப் பொழுதில் ஒரு வீட்ழல் திருட, திருடர்கள் இருவர் திட்டமிடுகின்றனர். ஒருவன் வீட்டின் வெளியில் நின்று கொள்ள, மற்றொருவன் உள்புகுந்து திருடத் தொடங்குகின்றான். அவ்வீட்டிலுள்ள இரண்டு சன்னல்களின் கம்பிகளையும் வளைத்து, அவர்கள் திருடத் தொடங்குகிறார்கள். உள்ளிருப்பவன் பாத்திர, பண்டங்களை எடுத்துத் தர மற்றவன் வாங்கி வெளியே வைத்துவிடுவது, பின் கொண்டு செல்வது என்பது அவர்களின் ஏற்பாடு. அத்திட்டம் நடைமுறையாகிக் கொண்டிருக்கிறது. அந்நேரத்தில் வெளியில் இருப்பவனை, மண்ணாங்கட்டி தன்னை வெளிப்படுத்திக் காடடி அச்சமூட்ட அவன் நடுங்குகின்றான். நழுவிச் செல்லும் அவன்மீது சிறுகல்லை எறிந்து, அவனை மண்ணாங்கட்டி ஓடச் செய்து விடுகின்றான். இதைப் படிக்கும்போதே வாசகர்கள் சிரிக்கும் சூழலுக்கு வந்து விடுகின்றனர். இதன்பின் உள்ளிருப்பவன் பொருள்களை எடுத்துத் தர, வெளியே மண்ணாங்கட்டி வாங்கிக் கொண்டு மற்றொரு சன்னல் வழியாக அதனை உள்வைக்க, திருட்டு தடுக்கப் பெறுகின்றது. கடைசியாக உள்ளிருப்பவன் சோறு, குழம்பு தர, அதை வாங்கிய மண்ணாங்கட்டி சன்னல் மீதே வைத்துவிட்டு மரமேறிக் கொண்டுவிடுகின்றான். உள்ளிருப்பவன் மெதுவாக வெளியேறி வந்து, தன் துணைவனை அங்குமிங்கும் தேடுகின்றான். காணாது கலக்கமுறும் வேளையில் ஒருகல் அவன் முன் வந்து விழுகின்றது. மற்றொருகல் அவன்மேல் விழுகின்றது. அவன் சோற்றையும், குழம்பையும் அள்ளிக்கொண்டு ஓடுகின்றான். இந்தக்காட்சி நகையுணர்வின் உச்சமாக பாரதிதாசனாரால் அமைக்கப் பெற்றுள்ளது. இக்காட்சித் தொடரை நகையுணர்வுடன், மிக சாமர்த்தியமாக, காரணகாரியத் தொடர்பு குன்றாமல் பாரதிதாசனார் படைத்துள்ளமை எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாகும்.

புரட்சிக்கருத்துக்கள்.

இந்நாடகத்தில் நகையுணர்வுக்கு அடுத்து புரட்சிக் கருத்துக்களின் வெளிப்பாடு சிறப்பிடம் பெறுவதாக உள்ளது. பெருமாள் கோவில் ஒன்றின் மடைப்பள்ளியில் தயாரிக்கப்பெறும் பண்டங்கள், ஏழைமக்களுக்குச் சென்று சேராது, உண்டு பெருப்பவர்க்குச் சென்றடைகின்றது. இதனைக் கண்ட மண்ணாங்கட்டி, அவ்வுணவைத் தந்திரமாகத் தான் பெற்று உண்டு, ஏழைகளுக்கும் ஈந்தளிக்கின்றான். கடவுள் மறுப்புக் கொள்கையுடையவரான பாரதிதாசனார், கோயில் உணவு ஏழைகளுக்குச் சென்று சேருமானால் அதன் நலம் ஏற்கத்தக்கதே எனக் கருதியுள்ளமை இக்காட்சி மூலம் தெரியவருகின்றது.

மற்றொரு காட்சி மூலம் மண்ணாங்கட்டி பணம் படைத்த பண்ணையாரின் கொழுத்த செல்வத்தை ஏழை மக்களும் பெற்றிட அமைதி வழியில் புரட்சி செய்கின்றான். அவன் ஏழைகளுக்கு எதுவும் தராத பெரிய பண்ணையாருக்குப் பாடம் புகட்ட ஊர் ஏரி யைப் பலர் உதவியுடன் உடைக்கின்றான். ஏரி நீர் புகுந்து, தன்வீட்டை நோக்கி அழிக்க வரும் சூழலில் அதனைச் செப்பனிட பெரிய பண்ணையார் ஊர்மக்களின் உதவியை நாடுகின்றார். இதன்மூலம் ஏழைகள் பிழைத்திட வN கிடைக்கின்றது.

இவ்வேலை முழயும் தருணத்தில் சின்னப் பண்ணையாரின் மாளிகைக்குப் பெரிய பண்ணையார் தீயிட்டு விடுகின்றார். பெரிய பண்ணையாரின் மனைவியைச் சின்னப் பண்ணையார் மோகிக்கும் மோக நாடகம் வெளிப்பட்டுவிடுவதால் இவ்வேற்பாட்டினைப் பெரிய பண்ணையார் செய்து விடுகின்றார். தீயினால் ஏற்பட்ட பேரழிவைப் போக்கிட மீண்டும் ஊர் மக்கள் உதவி நாடப் பெறுகின்றது. இதன்மூலம் மீண்டும் அவ்வேழைகள் வேலை பெறுகின்றனர்.

அதன்பின் இரு பண்ணையார்களுக்கும் இடையிலான பகை வளருகின்றது. பெரிய பண்ணையார் ஏரியை உடைத்தப் பலரைத் தாக்க முயலுகின்றார். அந்நேரத்தில் தானே அச்செயலுக்குக் காரணம் என மண்ணாங்கட்டி குறிப்பு எழுதித் தர அவனை அரசின் காவலர்கள் அடித்துத் துன்புறுத்துகின்றனர். அவன் மீளா வாழ்வெய்துகின்றான். ? ?ஏழைகள் வா ?வில் சமத்துவம் கண்ட அம்மாவீரன் சாதாரண மண்ணாங்கட்டி அல்ல, அவன் பொன்கட்டி. தன்னை உருக்கி, மற்றவர்க்கு அணியாக்கியவன் அவன். ? ? என்று அவன்வாழ்வை நாடக இறுதியில் எடுத்துரைக்கின்றார் பாரதிதாசனார்.

அமைதி என்ற தலைப்புக்கேற்ப அமைதியுடன் புரட்சிபுரியும் தீரனாக மண்ணாங்கட்டி இதில் படைக்கப் பெற்றுள்ளான். தன்வாழ்வு மடிந்தாலும் பிறர் வா ?வு எழத் தன்னை அவன் உரமாக்கிக் கொண்டுள்ளான். இந்நாடகத்தினைத் திட்டமிட்டு படைத்ததன் மூலம் பாரதிதாசனார் தமி ?நாடக உலகில் அழியா இடம் பெறுகின்றார். இவரது நாடக ஆற்றலின் முழுமையை உணரும் போது, சாகித்திய அகாதமி இவரது கவி, நாடக படைப்பாற்றலுக்கு இணைத்துப் பரிசை வழங்கியிருப்பதன் நோக்கம் புலனாகின்றது.

Muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்