தமிழின் முதல் இசை நாடகம்

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

இந்திரா பார்த்தசாரதி


1871ல் ப.வ. இராமசாமி ராஜு அவர்களால் எழுதப்பட்ட ‘பிரதாபசந்திர விலாசம் ‘ என்ற நாடகம், பெரும்பான்மையான தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களின் கவனத்தைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. இது, சுந்தரம் பிள்ளை அவர்களின், ‘மனோன்மணி ‘யத்துக்கும் காலத்தால் முந்தியது. ‘ நாடகங்களில் அவரவர் ஜாதி, ஸ்திதி, கல்வி முதலியவற்றிற்குத் தகுதியாகப் பேசுவது வழக்கமாகையால், இப்புத்தகத்திலும் ஷோக் சுந்தரம், மத்தாப்புச் சுந்தரம், பாவாடை ஜித்தர், திருவேங்கத்தானு, முத்தையன், சட்பட், படால் முதலிய ஜனங்கள் தம்தமியல்பினுக்கிசைய வார்த்தையாடுகின்றனர் ‘ என்று நாடக ஆசிரியர் தம் குறிப்பில் சொல்லியிருப்பதினால், செந்தமிழ்த்தரத்துக்குத் தகுதியான நூலன்று என்று தமிழ்ப் பேராசிரியர்களால் இது புறக்கணிக்கப்பட்டிருக்கக்கூடும்.

மேடையில் நடிக்கப் படுவதற்கென்றே எழுதப்பட்ட நாடககம் போல் இது தோன்றினாலும், எப்பொழுதாவது மேடையேறியிருக்கின்றதா என்பதும் தெரியவில்லை.

ஒரு தடவை மேடையேறியதாகவும், இது செல்வாக்கு மிகுந்த சிந்தாதிரிப்பேட்டை முதலியார் ஒருவரைச் சித்திரிப்பதுபோல் தோன்றியதால், அரசாங்கத் தடை உத்தரவுக்குள்ளாகியதாக அமரர் க.நா.சுப்ரமணியம் பல ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் சொன்னார். இதுவும் அவர் கேள்விப்பட்ட செய்தியேயன்றி, அவருக்கு உறுதியாகத் தெரியாது. இந்நாடகம் அச்சில் இப்பொழுது கிடைக்கப்

பெறவில்லை.

முதலில், நாடக ஆசிரியரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இவர் ஓர் ஆச்சர்யமான மனிதர்.

1852ம் ஆண்டு, திண்டிவனத்தில் உப்பு அதிகாரியாயிருந்த அரங்கசாமி ராஜுவின் மகனாகப் பிறந்தவர் இராமசாமி ராஜு. பத்துவயது வரைப் படிப்போ, ஆங்கில அறிவோ இல்லாமைலிருந்த அவர், கற்பதற்காகவே, இராமச்சந்திர நாயுடு என்ற தம் உறவினருடன் சென்னைக்குச் சென்றுவிட்டார். புத்திரப் பேறில்லாத ராமச்சந்திர நாயுடு, அவரை மகனாகப் பேணி, ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, அவருக்குக் கல்வியும் ஆங்கிலப் புலமையும் வருவதற்கு வழிவகுத்தார். ராஜுவுக்கு, ஆங்கிலம் மட்டுமன்றித், தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நல்ல தேர்ச்சி ஏற்பட்டது. இவருக்குப்பிற்காலத்தில் இந்த நான்கு மொழிகளிலும் எழுதுவதற்கான ஆற்றல் இருந்ததுஎன்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

பத்து வயதில் கல்வி கற்க ஆரம்பித்த அவர் பதினான்கு வயதில், நான்கே ஆண்டுகளில், மெட்டிரிகுலேஷன் தேர்வில் முதலிடம் பெற்று, பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். பிறகு, மாநிலக்கல்லுரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராய் பணியாற்றிய அவருக்குச் செங்கல்பட்டு கலெக்டர் ஸி.எஸ். கரோல் என்ற ஆங்கிலேயரின் பரிந்துரையால் சுங்க அலுவலகத்தில் உயர்ந்த அதிகாரியாக வேலை கிடைத்தது.

1882ல் இவர் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கிருந்தபோது, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும், லண்டன் யுனிவெர்ஸிடி கல்லுரியிலும்

தமிழும் தெலுங்கும் கற்பித்து வந்ததாகத் தெரிகிறது. அப்பொழுதுதான் ‘Tales of sixty Mandarines ‘ என்ற ஆங்கில நூலையும் அங்கு வெளியிட்டார்.

1885ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பிவந்த அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில்

வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார்.

சம்ஸ்கிருத மொழியில் இவர் இயற்றிய நூலின் பெயர் ‘ஸ்ரிமத் ராமநாத ராஜங்கள மகோதியானம் ‘ என்பதாகும். இந்நூலின் பிரதி, பிரிட்டிஷ் மியுஸியம் நூல்நிலையத்தில் இருப்பதாக, அமரர் சிவபாதசுந்தரம் அவர்கள், 1982ல் நான் லண்டனில் அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் ராஜு அவர்களால் செய்யப்பட்டிருக்கிறது. இவர் ஆங்கிலத்தில் எழுதிய பிற நூல்கள், அர்ஜுன்சிங், லார்ட் லைக்லி, மெய்ட் ஆஃப் தி மூர், இந்தியக் கதைகள், அறுபது மந்திரிகள் கதை. இவைகளில் எதுவும் இப்பொழுது கிடைக்கவில்லை.

இவர் 1897ல், தம் நாற்பத்தைந்தாம் வயதில் உதகமண்டலத்தில் உயிர் நீத்தார்.

நான் இந்நாடகத்தை ஒரு குறிப்பிட்டக் காலத்தியச் சமூகவரலாற்றுச் செய்தியாகத்தான்

பார்க்கிறேன். காலனி ஆட்சியின்போது, மேலைய நாட்டு நாகரிகப் பாதிப்பில் உருவாகிக்கொண்டிருந்த நகர்ப்புற மேல்தட்டுச் சமூகத்தைப் பற்றிய கண்ணோட்டம்

இது. நாடகம் என்ற அளவில், கலைரீதியாகப் பார்க்கும்போது, இது மிகவும் வெகு சாதாரண நாடகந்தான், ,சந்தேகமில்லை. ஆனால், சமுதாயக் கண்கொண்டு ஆராயும்போது, பல முக்கியமான வரலாற்றுத் தகவல்களைத் தருகின்றது என்பதால், இந்நாடகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமென்று எனக்குப் படுகிறது.

ஆசிரியர் கருத்தின்படி, மேல்நாட்டினரிடமிருந்து, நாம் கற்றுக் கொள்ளவேண்டிய அறிவு பூர்வமான விஷயங்கள் எத்தனையோ இருக்க, நாம் அவர்களுடைய புறத்து

நாகரிக வெளிப்பாடுகளாகிய ‘ஒயின், பிராந்தி குடித்தல், அல்ப ஆடம்பரங்கள், வேசை மாதர்களுடன் தொடர்பு கொண்டு டாம்பீகத்தைப் புலப்படுத்தல் போன்ற நடத்தைகளை பொன்னாகப் போற்றிக் குடும்ப வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்வதைக் கண்டிக்கத்தான் ‘ இந்த நாடகத்தை இயற்றியுள்ளதாகக் கூறுகிறார்.

இந்நாடகக்கதையை ஒரு தபால் தலைக்குள் எழுதிவிடலாம். கதநாயகன்,பணக்காரன்,இளைஞன், நல்லவன், தீயோர் நட்பு அவனைக் கெடுக்கிறது, உடல்நலம் கெடுகிறது, திருந்துகிறான். மிகைபடுத்தப்பட்ட பாணியில்( stylized ) எழுதப்பட்டிருக்கும் இந்நாடகம், ஆசிரியர் அக்காலத்திய படைப்பாக்கங்களைக் கிண்டல்(parody) செய்வதற்காகவேஎழுதியிருப்பாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. காரணம், இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள். விசுவாசக்காதகந்தான் வில்லன். அவணுடன் இருப்பவர்களுடைய பெயர்கள், குசும்பா மாஸ்டர்( குசும்பு என்றால் விஷமம்)சுண்டேமாஸ்டர்( அவன் ஞாயிற்றுக்கிழமைதோறுந்தான் நண்பர்கள் கண்ணுக்குப் படுவான், மற்றைய நாட்களில், கடன்கொடுத்தவர்களுக்கு பயந்து தலைமறைவாகஇருப்பான்), பத்தாயி மாஸ்டர்( பத்தாயி என்றால் அக்காலத்திய சென்னை cockneyல்சாராயம்), வெட்டுணி (துஷ்டன், இதுவும் சென்னை நகர்ப்புறத்து slang), இடிமுழுங்கி(முழு அயோக்கியன்), சட்பட், படால். கதாநாயகன் பிரதாபசந்திரன் கூட இருப்பவர்கள், விதியாசாகரர், நிபுணகோசர், குணாலயர், சுதேசமித்ரர், சமயோசிதர்,லெளகீகர்( நடைமுறைவாதி, philistine),புராதனர்(traditionalist)

இது பார்ஸி நாடக மரபைப் பின்பற்றி எழுதப்பட்டிருந்தாலும், தெருக்கூத்தில் வரும் கட்டியக்காரன், நாடகத்தொடக்கத்தில் தோன்றி, அவன் மனைவியுடன் நிகழ்த்தும் உரையாடல் மூலம், நாடகத்தையும், இதைப் பார்ப்பதினால் ஏற்படப்போகின்ற பலனையும், நாடக ஆசிரியர்பற்றியும் பாட்டு, ஆட்டம் மூலம் அறிமுக வார்த்தைகள்

பேசி நாடகத்தை ஆரம்பித்து வைக்கிறான். ‘வேனிற் பருவம் ஆதலால், நானிலம் புகழ்வதற்கோர் நாடகம் ‘ (இது சம்ஸ்கிருத நாடக பாணி) என்று அறிவிக்கிறான்.

அடுத்த காட்சி பிரதாபசந்திரன் வீட்டு ‘சபாமண்டப ‘த்தில்( Drawing room) நடக்கிறது.

மேல் மட்டக் குடும்பங்களில் நிகழும் அறிவு பூர்வமான விவாதங்கள்(intellectual hair-splitting discussions), பிரதாபசந்திரனுக்கும்( 19 வயது) அவன் நண்பர்களுக்குகிடையே நடைபெறுகின்றன வசன உரையாடலிலும் சரி, பாட்டிலும் சரி, ஆங்கிலம் மிகச் சரளமாய்க் கலந்து வருகிறது. இது 1877ல் எழுதப்பட்ட நாடகமா அல்லது தற்காலத்து நாடகமா என்று சந்தேகம் வரும்படியாக, வித்தியாசாகரர் வேலையில்லாக் கொடுமையயைப் பற்றிப்பேசுகிறார், இல்லை, பாடுகிறார்.

‘பேர்பெறும் கல்விகற்றும் பிரபலமாய் பீ.ஏ என்னும்

சீர்பெறும் பட்டம் பெற்றும் சீவனம் ஒன்றும் இன்னும்

நேர்படும் வழியைக் காணேன் நித்தியம் அலைந்து ஓடி

சோர்வின்றி இங்கிலீஷு துரைமாரைக் கண்டு வாறேன் ‘.

தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாக இருக்கும்போது, தகுதிய்ல்லாத கயவர்களுக்கு உடனுக்குடனே வேலை கிடைத்துவிடுகிறது என்கிறான் பிரதாபசந்திரன். அதற்குப் பாட்டில் காரணம் சொல்லுகிறார் நிபுணகோசர் ( News Analyst).

‘அயர்வின்றி நீங்கள் எல்லாம் அதிகமாகய்ப் படிக்கும்போது அக்

கயவர்கள் துரைமார் வீட்டில் கவனமாயும் ஏது செய்து

நயவஞ்சகங்கள் பேசி நண்பர்போல் நடித்துக் காட்டித்

தயவையும் பூர்த்தியாகச் சம்பாதித்து இடுவதாலே ‘.

அந்தக்காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி, கால்கைப் பிடித்தல்(sycophancy) என்பது இந்தியாவின் தேசியப் பண்பாக இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது.

இராமசாமி ராஜு, அவருடைய அரசியல் கொள்கையைப் பொருத்த வரையில், பிரிட்டிஷ் ஆட்சியின் ஆதரவாளர்(royalist). பிரிட்டிஷ் ஆட்சியானால்தான், ‘இந்தியா ‘ என்ற அரசியல் அமைப்பாக ஒரு நாடு உருவாகியது என்பதை உறுதியாக அவர் நம்பினார். ஆங்கிலக் கல்விதான் மூட நம்பிக்கைகள் மறைந்து வருவதற்குக் காரணம் என்பதும் அவருடைய திடமான அபிப்பிராயம். இருந்தாலும், நாட்டுப்பற்று, சுய ஆட்சி போன்ற கருத்துக்களை மிக நுணுக்கமாக ஆங்காங்கே புலப்படுத்துவதனின்றும் அவர் தவற வில்லை.

அவர் நண்பர்களில் ஒருவர் சுதேசமித்திரர். அவர் ‘இந்தியா ‘ என்ற ஓர் ஆரணங்கின்மீது தீவீரக் காதல் கொண்டவர். இவள் குறைகள் நீங்கி மிக உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்பதுதான் அவருடைய கனவு. ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அவளுக்கு என்ன குறை இருக்க முடியும் ? ‘ என்று கேட்கிறார் லெளகீகர்.

‘என்னவோய் சுதேசமித்ரா இங்கலீஷ் துரைத் தனத்தில்

மன்னுயிர்க்கு இனிய செல்வம் மதிப்புறும் உத்தியோகங்கள்

உன்னத மேடைமெத்தை ஒயிலான பக்கி கோச்சு

உன்னியபடி இருக்க உமக்குறு குறைகள் என்னோ ? ‘

‘சென்னை நகரத்திலிருந்தபடி நாட்டின்(கிராமங்கள்) சுகத்தைப் பற்றிப்

பேச இயலுமா ? ‘ என்று கேட்கும் சுதேசமித்திரர், இந்நாட்டில் இன்னும் ஜாதிக் கொடுமை போகவில்லையே என்று அங்கலாய்க்கிறார். இதைதவிர,

‘ஸ்வாதீனம்(சுய ஆட்சி) என்னுமொரு சுகித ஸ்திதியின் சேதி

துரும்பும் அறியாரே அண்ணே!

தீதறப் பலதேசச் சிறந்த வழக்கங்களைத்

தெரிந்து நடவாரே அண்ணே!

ஒருமைப் பாடென்னும் ஓர் உசித வழக்கந்தன்னை

ஒருக் காலும் அறியாரே அண்னே!

பெருமை குலைந்ததனால் புறத்தார்க்குக் கீழ்ப்பட்ட

பேதமை அறியீரோ அண்ணே!

சாண்கிணற்று ஆமை போல் தம்முடைய தேசத்தை

சகல லோகம் என்பாரே அண்ணே!

ஆண்மைக்குரிய தேசாபிமானத்தை

அறியாரே கனவிலும் அண்ணே! ‘

‘தனது நன்னாடு ஈதென்றும் தனது நற்சனங்களென்றும் மனதினில் எண்ணமிலா மனிதனுக்கு ஆத்மா இல்லை ‘ என்பது உண்மைதான்.ஆனால் தனது நாடே பிரபஞ்சம் என்று கொள்ளும் குறுகிய நோக்கு இருக்ககூடாது என்கிறார் சுதேசமித்திரர்.(இங்கு அவர் ஸர் வால்டர் ஸ்காட் கவிதை வரிகளை அப்படியே தமிழில் தருகிறார்.

‘ Breathes there a man with soul so dead, as to himself has not said, this is my own native land ‘) லெளகிகர்(philistine) அவரை மறுத்து, ‘ இந்த தேசாபிமனத்தால் நமக்கு என்ன பிரயோஜனம் ?இது வீண் வம்பு. இதனால் வயிற்றுக்குச் சோறா ? கட்டத் துணியா ?

நம்முடைய நாட்டை எவன் ஆண்டால் என்ன ? நாம் எப்படியாகிலும் பத்துப் பேருக்கு நல்லவன் என்று பேரெடுத்து நாலு பெரிய மனுஷியாள் நம்முடைய வீட்டுக்கு வரவும் போகவுமிருந்தால் போதும் ‘. என்கிறார். புராதனரும்(traditionalist) லெளகீகரை ஆதரித்து, ‘ நாட்டுக்குச் சீர்திருத்தங்கள் தேவையில்லை, நாம் நம்முடைய முன்னோர்களைக் காட்டிலும் புத்திசாலிகள் இல்லை ‘ என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்கிறார்:

‘ பஞ்சமா சாதி யாரைப் பணிவிடை செய்யக் கொண்ட

ரஞ்சக ஆங்கிலேய ராஜ்ஜியபாரத்தில் நீங்கள்

நெஞ்சுற இங்கலீஷ் ஓதி நிபுணராய்ப் பாசு செய்தால்

பஞ்சமிலாமல் உண்டு பணம் சேர்ப்பதற்கன்றோ! ‘

வித்தியாசாகரர் இதை மறுத்து, ஆங்கிலம் கற்பதது வேலைக்காக மட்டுமன்று, ஆங்கிலக் கல்வியினால் ஒருவன் எவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளமுடியும் என்று பட்டியலிட்டுச் சொல்கிறார். Metaphysics, Ethics ,Mathamatics, Logic, Medical Sciences, Economics, World History, Chronology, Geography, Navigation, Natural Sciences, Telegraphy என்று பல் வேறு பாடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியுமென்று பாடுகிறார். பாடங்களின் பெயர்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.ஆங்கில Musical theatreயை மனத்தில் கொண்டு நாடக ஆசிரியர் இவ்வாறு எழுதியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த முதல் அங்கத்தில் எல்லோரும் பேசிப் பாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, நிகழ்வு என்றும் எதுவும் நடைபேறவில்லை. கதாபாத்திரங்கள், அவரவர் உரையாடல்கள் மூலம் அறிமுகமாகிறார்கள்.

இரண்டாம் அங்கத்தில் நாடக வில்லன் விசுவாசகாதகனும் அவனுடைய நண்பர்களும் அறிமுகமாகிறார்கள். விசுவாசகாதகனின் மனைவியை அவன் மனைவி என்று அறிமுகமாகின்றாளேயன்றி, அவள் பெயர் குறிப்பிடப்படவில்லை. விசுவாசகாதகனால் துன்புறுத்தப்படும் ஜீவன் என்பதைதவிர அவளுக்கு வேறொரு அடையாளமுமில்லை என்பதால், அவள் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் அக்காலத்திய தமிழ்ச் சமூகத்தில் குடும்பப் பெண்கள் எப்படித் துன்பப்படுகிறார்கள் என்பதை அவள் அருமையாக எடுத்துரைக்கிறாள்.

‘ பருவம் அனைத்தும் பாயோடு போக்கி

உருவம் குலைந்தே உண்மையாய் என்றும்

சுகமெனும் பொருளைத் துரும்பும் தெரியாது

அகலும் பெண்கள் அனந்தங் கோடி! ‘

இந்நாடகத்தில் வரும் தீயவர்கள் யாவரும் தங்கள் தங்கள் தீயகாரியங்களை பெருமையாக அறிவித்துக் கொள்கின்றார்களேயன்றி, இதில் ஒளிவு, மறைவு எதுவுமில்லை. ஷேக்ஸ்பியர் நாடகமாகிய ‘ கிங் ரிச்சர்ட் III ‘ ல் ரிச்சர்ட் தன்னை முதல் காட்சியில் தான் எவ்வளவு கொடியவன் என்று இப்படித்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

விசுவாசகாதகனின் கோட்பாட்டு முத்திரை பாட்டு:

‘ எண்ணாத பொருளிருந்தும் எக்ஸ்பென்ஸுக்கு இல்லையென்றே

பிண்ணாக்கைத் தின்னும் டர்ட்டி பீஸ்டுகள் போல் அல்லாமல்

கண்ணாட்டிமாராம் டான்ஸிங் கேர்ல்களைக் கூடி நாமும்

அண்ணாத்தைமாரே இன்று ஹாப்பியாய் இருப்போம் வாரீரே! ‘

விசுவாசகாதகனின் நண்பர்கள் அனைவரும் அவரவர்களுதைய ‘பெருமை ‘யை விதந்தோதுகிறார்கள். இதில் உச்சம் வெட்டுணியின் செய்கைதான். அவன் கூறுகிறான்:

‘மைடியர் பிரதரே எங்கள் மதருக்குக் கூந்தல் நீளம்

ஐடிலா அவளும் தூங்க அறுத்ததை விற்று நானும்

ஸைடிலோர் லேடியாக ஜட்காவில் ஏறிக் கொண்டே

ஒய்டான ரோட்டின்மீதில் உல்லாசமாகப் போனேன் ‘

திருவேங்கடதானு, பாவாடைஜித்தர் என்று வைணவ, சைவப் பெண்தரகர்கள் இருவர் விசுவாசகாதகன் நண்பர்களில் அடக்கம். வேசியர் வீட்டில் இருவருக்கும் எப்பொழுதும் சைவமா, வைணவமா எது உயர்ந்தது என்பதைப் பற்றித் தத்துவார்த்த விவாதங்கள் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. திருவேங்கடத்தானு நாடகம் முழுவதும் தெலுங்கில்தான் பேசுகிறார்.

இந்நாடகம் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ சமூகத்தின் அருமையான படப்பிடிப்பு.கதைக் கரு எண்று சொல்வதற்கு ஏதுமில்லை என்றாலும், இராமசாமி ராஜுவின் சமூக பார்வை குறிப்பிடத்தக்கது. ஆங்கில-தமிழ் சொற்கள் விரவிய பாட்டு நடை ஒரு புதுப் பரிசோதனை.

—-

ps0710@yahoo.com

Series Navigation

இந்திரா பார்த்தசாரதி.

இந்திரா பார்த்தசாரதி.