நான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

வே.சபாநாயகம்


சிஷெல்ஸ் தீவுக்கூட்டங்கள் பூமத்யரேகையை அண்மித்து இருப்பதால் சில சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன. எந்தவிதமான சூறாவளிக் காற்று, மற்றும் இயற்கை அழிவுகள் இல்லாத சூழல். சென்ற ஆண்டில் உலகையே அச்சுறுத்திய சுனாமியால் இங்கு பாதிப்பு ஏதும் இல்லை. இங்குள்ள மக்கள் உலகின் சலசலப்பான வாழ்க்கை முறையிலிருந்து ஒதுங்கி, அமைதியான சூழலில் வாழ்கின்றனர்.

சுற்றுலாத் துறையும், மீன் வளமும் முக்கிய பொருளாதார அடிப்படைகள். இங்கு வரும் உல்லாசப் பயணிகளில் எண்பது சதவீதம் ஐரோப்பியர்கள். இந்த நாட்டின் அரசியல் அமைதி, சிறந்த வெள்ளை மணல் கடலோரங்கள், பவளப் பாறைகள், இயற்கை எழில் மற்றும் செடி, கொடி, பச்சிலைகள், மீன்வளம், அபூர்வ பறவைகள் போன்ற

இயற்கை வளங்கள், உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாய்ப் பலரையும் ஈர்க்கின்றன.

தீவைச் சுற்றிலும் அழகிய ஆழமற்ற கடல். சுமார் ஒரு மைல் தூரத்திலேயே பவழப் பாறைகள் கடல் அலைகளைத் தடுத்து நிறுத்தி விடுகின்றன. எங்கு பார்த்தாலும் நீலக்கடல். இதன் இயற்கையழகில் மயங்கித்தான் இதனை ‘ஈடன் தோட்டம் ‘ என்கிறார்கள்.

ஆண்டுக்கு 130,000 பயணிகள் வருகிறார்களாம். அனுமன் சிரஞ்சீவி மலையைச் சுமந்து செல்கையில் சிதறி விழுந்த துண்டுகளால் இத் தீவுக்கூட்டங்கள் அமைந்ததாய் ஒரு ஐதீகம் இங்குள்ளது. அதனால் இப் பிரதேசத்தில் விஷ ஜந்துக்கள் என்றுமே காணப் படுவதில்லையாம். பாம்பு, தேளை இங்கு யாரும் கண்டதில்லையாம்.

` தேங்காய் உற்பத்தியும் மீன் பிடித்தலுமே முக்கியத் தொழில் என்றாலும் முன்பே சொன்னபடி சுற்றுலாப்பயணிகளின் வருகை மூலமே இந்நாடு பெரும் வருவாய் ஈட்டுகிறது. இங்கு கிடைக்கும் ‘டியூனா ‘ என்கிற ருசியான மீன் இந்நாட்டின் கடல் செல்வம் எனலாம். இது அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுவூட்டுகிறது. இந்த மீனைப் பிடிப்பதற்காக, சிஷெல்ஸ் நாட்டுடன் ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

சிஷெல்ஸின் மற்றொரு இயற்கை தந்த சீதனம் – தீவு முழுதும் உள்ள தென்னை மரங்கள். ஏறக்குறைய 2500 டன் கொப்பரைத் தேங்காய் இங்கு உற்பத்தி செய்யப் படுகிறது. அத்தொடு லவங்கப் பட்டை, சிறிதளவு தேயிலை முதலியனவும் கிடைக்கின்றன. லவங்கப் பட்டையும் பிரிஞ்சு இலைகளும் CINNAMAN என்ற மரத்திலிருந்து கிடைக்கின்றன. இது எல்லா வீடுகளிலும் தானாகவே நம்மூர் புளியமரங்கள் போல தென்படுகின்றன. இது தென்னைக்கு அடுத்த படியான இரண்டாவது பணப் பயிராகும்.

அடுத்து, உலகத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத COCO-DE-MER என்கிற திருவோடு காய்க்கும் பனைமரங்கள் பிராலின் என்கிற இரண்டாவது பெரிய தீவில் 4000 ஆயிரத்துக்கும் அதிகமாக விளைகின்றன. மற்ற தீவுகளிலும் வீடுகளில் கூட இவை தானாக வளர்ந்தாலும் இது நம் சந்தன மரங்கள் போல பொது உபயோகத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இது முழுதும் அரசுக்குக்கே உரிமை உடையவை. தனிஉடமை அல்ல. உங்கள் வீட்டில் வளர்ந்ததாலும் அரசின் அனுமதி பெற வேண்டும். மிகப் பெரிய யாழ்ப்

பாணத் தேங்காய் அளவில் – மிகப் பெரிய பனம்பழம் போன்ற இதன் காயிலிருந்துதான் திருவோடு தயாராகிறது. இதனால் இதனைத் ‘திருவோடு காய்க்கும் திருநாடு ‘ என்று தமிழர்கள் பெருமிதத்துடன் அழைக்கிறார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் வர்த்தகர்களால் காய்ந்த திருவோடுகள் மலிவு விலையில் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது. தற்போது அரசுக் கண்காணிப்பில் ஏற்றுமதித் தடைப்பொருளாகப் பாதுகாக்கப் படுவதோடு, அனுமதியுடன் பெறுவதாயின், திருவோட்டுக் காய் ஒன்று ஏறக்குறைய 100 அமெரிக்க

டாலர் விலையாகும்.

இங்குள்ள நாணயம் ‘சிஷெல்ஸ் ருப்பி ‘ என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்டு ஒரு ரூபாய் நமது நாட்டின் எட்டு ரூபாய்க்குச் சமம். ஆகவே நமது நாட்டைப் போல எட்டு மடங்கு பொருளாதாரத்தில் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். விலைவாசி மிக அதிகம். ஆனால் நம் நாட்டுடன் ஒப்பிடுகையில் அது ஒன்றும் அதிகமல்ல. உதாரணத்துக்கு அங்கு ஐந்து ரூபாய்க்கு மூன்று முருங்கைக்காய் என்றால் நம் பணத்தில் ஒரு காய் எட்டு ரூபாய் ஆகிறது. ஆனால் அப்படி நம் பணத்துக்கு மாற்றிப் பார்க்கக் கூடாது என்று எங்கள்

மாப்பிள்ளை, நான் அடிக்கடி அப்படிக் கணக்கிட்டு ‘அம்மாடி! அவ்வளவு விலையா ? ‘ என்று வாய் பிளக்கும் போது சொல்லுவார். ‘அது சரிதான். நம்மூரிலும் ஐந்து ரூபாய்க்கு மூன்று முருங்கைக் காய்கள் தானே ? ‘ என்று நினைப்பேன். அதனால் அங்கு விலைவாசி

அதிகம் என்று சொல்வதும் சரியல்லதான். அங்கு நிறைய சம்பாதிக்கிறார்கள். அதே போல நிறைய- மிகத் தாராளமாகச் செலவும் செய்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. அங்கு சம்பாதிக்கும் பணத்தை டாலராகவோ யூரோவாகவோ தனிப்பட்டவர் மாற்ற முடியாது. சில குறிப்பிட்ட அனுமதிக்கப்படும் செலவினங்களுக்கு மட்டும் சொற்ப அளவில் மட்டும் ஒரு டாலருக்கு சிஷெல்ஸ் ருப்பி ஆறு வீதம் அரசு வங்கி முலம் அனுமதிக்கப் படுகிறது. இல்லையெனில் இரு மடங்கு விலையில் – அதாவது ஒரு டாலருக்கு 13 ரூபாய் கொடுத்து கருப்புச் சந்தையில் வாங்க வேண்டியதுதான். அது எல்லோருக்கும் சாத்யமில்லாததால் தாராளமாகச் செலவிடுவதில் அவர்கள் கவலை கொள்வதில்லை. ஆனால் உலகிலேயே மிக அதிக வாழ்க்கைச் செலவு பிடிக்கும் நாடு என்று சொல்லப்படுகிற

இலண்டன் நகரை விட அந்த நாட்டு வாழ்க்கை செலவு அதிகம் என்று அங்குள்ள சிலர் சொல்கிறார்கள்.

-(தொடரும்)

saba1935@sancharnet.in

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்